தவெக அரசே! பாசிச பாசக அரசின் கொள்கை வழியில் செயல்படும்தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமாரைபொறுப்பில் இருந்து நீக்கிடுக!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
பாசிச பாசக அரசின் கொள்கை வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு
அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமாரை அப்பொறுப்பில் இருந்து உடனடியாக
நீக்க வேண்டும்.
சிபிஐ, சிபிஐ(எம்), கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்தும் போராட்டங்களில் மாணவ,
மாணவியர், இளைஞர் பங்கேற்பதை தடுக்கும் வகையில் கல்லூரி நிர்வாகமும்
மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கூட்டாக செயல்படுமாறு அறிவுறுத்தும்
சுற்றறிக்கை கல்லூரி கல்வி துணை இயக்குனரால் அனுப்பப்பட்டது. கடந்த ஜுலை 27
ஆம் தேதி தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை
இதுவாகும்.
கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்குபெறுவது அரசமைப்பு சட்டம்
வழங்கியிருக்கும் உரிமைகளில் ஒன்றாகும். எவர் ஒருவரும் அரசின் கொள்கைகளுக்கு
எதிராகப் போராடுவதற்கு உரிமை உண்டு. அந்த உரிமையை மறுப்பதும் அதை
குற்றமாக சித்திரிப்பதும் பாசிச பாசக அரசின் கொள்கையாகும்.
ஏற்கெனவே கரப்பான் பூச்சி கட்சியினரின் முன்னெடுத்த போராட்டத்தில்
இலட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கெடுத்து பாசிச மோடி அரசை நடுநடுங்கச்
செய்துள்ள பின்னணியில்தான் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் தமது
சுதந்திர தின உரையில் ’கருத்தியல் நக்சல்கள் ( dimagi naxal) என்று இளைஞர்
எழுச்சியை ஒடுக்கும் நோக்கில் புதிய சொற்றொடரை அவிழ்த்துவிட்டுள்ளார். இந்தப்
பின்னணியிலும் கல்லூரி மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான
திட்டமிடல்களைப் பார்க்க வேண்டியுள்ளது.
இன்னொருபுறம், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் உள்ள சிபிஐ,
சிபிஐ(எம்) கட்சி உறுப்பினர்களை அடையாளம் காணச் சொல்லும் சுற்றறிக்கையும்
போராட்டங்களை குற்றமாக சித்திரிக்கும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டதாகும்.
மேற்கண்ட இரு சுற்றறிக்கைக்கும் பொறுப்புக் கூற வேண்டியது தலைமைச் செயலரே
ஆவார். போராடும் உரிமையை குற்றமாகவும் தேச விரோதமாகவும் சித்திரிக்கும்
பாசிச மோடி அரசின் கொள்கைகளோடு இந்நடவடிக்கைகள் பொருந்திப் போகின்றன.
எம்.சாய்குமார் சட்டப்பேரவை தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையத்தால் தலைமைச்
செயலராகப் பணியமர்த்தப்பட்டவர். பொதுவாக தேர்தல் ஆணையத்தை தன்
கைப்பாவை ஆக்கிவிட்ட மோடி அரசு, தேர்தலை நியாயமற்ற முறையிலும்
வெளிப்படைத்தன்மையின்றியும் பாசகவுக்கு சாதகமாகவும் நடத்தும் நோக்கில் உயர்
அதிகாரிகளை மாற்றுகிறது. அப்படி பாசகவின் விருப்பம் போல் தேர்தல் நடத்துவதற்கு
ஏதுவாக கொண்டுவரப்பட்டவர்தான் இந்த சாய்குமார்!
தேர்தல் முடிந்து தவெக தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகும் இவரது பதவிக்
காலம் முடிந்த பிறகும் தலைமைச் செயலர் பொறுப்பில் இவரையே தக்க
வைத்திருப்பது ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் வழக்கமான செயல்பாட்டு முறைக்கு
மாறானது. தேர்தல் ஆணையத்தால் அதாவது பாசிச மோடி அரசால் நியமிக்கப்பட்ட
ஒருவரை மாநில அரசின் அதியுயர் பொறுப்பில் தொடர்ந்து வைத்திருப்பது ஏன்? என்ற
கேள்வி எழுகிறது. இதன் மூலம் பாசகவின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு
மறைமுகமாக வழியமைத்துக் கொடுக்கிறதா தவெக அரசு என்ற கேள்வியும்
எழுகிறது.
பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில்/ அனுமதி பெறாத இடங்களில் பசு
அல்லது கன்று வெட்டுவதற்கு தடை விதிக்கும் தீர்ப்பு, இசுலாமியர்களுக்கான இட
ஒதுக்கீட்டை கேள்விக்குள்ளாக்கும் தீர்ப்பு உள்ளிட்ட அடுத்தடுத்த சட்டப் போராட்ட
களங்களில் தமிழ்நாடு அரசு இந்துத்துவக் கும்பலிடம் மண்ணைக் கவ்வி வரும்
நிலைமையும் இவற்றை எல்லாம் கண்காணித்து அரசின் கொள்கைக்கு ஏற்ப
செயல்பட வேண்டிய தலைமைச் செயலரின் செயல்பாட்டை
கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
எனவே, தவெக சமூகநீதி, மதச்சார்பின்மை உள்ளிட்ட சனநாயக கொள்கைகளை தமது
கொள்கையாக அறிவித்திருக்கும் நிலையில் அவற்றுக்கு நேரெதிரான பாசிசக்
கொள்கைகளை செயல்படுத்திவரும் சாய்குமாரை தலைமைச் செயலர் பதவியில்
இனியும் நீடிக்க விடக்கூடாது, உடனடியாக பொறுப்பில் இருந்து அவரை நீக்க
வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி