வந்தே மாதரம் பாடக் கூடாது – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோரிக்கை

17-03-2026
ஆளுநர் உரையோடு தொடங்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலைப் பாடக் கூடாது
தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோரிக்கை
நாளை (18-06-2026) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. கடந்த சனவரியில் உள்துறை அமைச்சகம் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடலில் உள்ள அனைத்துப் பத்திகளையும் பாடுவதைக் கட்டாயப்படுத்தும் வழிகாட்டு நெறிகளை ஓர் அரசாணையாக வெளியிட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய முதல் விஷயம் — வந்தே மாதரம் பாடலை அந்த அரசாணையில் சொல்லியிருப்பது போல் பாடுவதா? கூடாதா? என்பதுதான். வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? எந்தப் பாடலை முதலில் பாடுவது என்பது பற்றிய பிரச்சனை இல்லை இது.
விடுதலைப் போராட்டக் காலத்தில் ஜவகர்லால் நேரு, காந்தி, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் இணைந்து வந்தே மாதரம் பாடலில் பாட வேண்டிய பகுதியையும் தவிர்க்க வேண்டிய பகுதியையும் முடிவு செய்தனர். பின்னர் அரசியல் நிர்ணய சபையில் இது பேசப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இவ்வழியாக, மதச்சார்பின்மைக் கொள்கைக்கு இசைவாக வந்தே மாதரம் பாடலில் வரும் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்பட்டுவந்தன. பாரத மாதாவை இந்துப் பெண் கடவுளர்களாகச் சித்திரிக்கும் பகுதிகள் இதுவரை காலமும் பாடப்படவில்லை.
மோடி – அமித் ஷா சிறுகும்பலாட்சி தமது இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலின் பகுதியாக வந்தே மாதரம் பாடலில் நீக்கப்பட்ட ஆறு பத்திகளையும் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் உருவ வழிபாட்டை ஏற்பதில்லை என்ற நிலையில், நாட்டுப்பற்றின் பெயரால் இப்பாடலைப் பாடச் சொல்வது மதச்சார்பின்மைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானதாகும்.
நாளை தொடங்கவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலைப் பாடக் கூடாது. இத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுப்பதால் பாசிச பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நெருக்கடி கொடுக்குமாயின், அதை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அனைத்து மதச்சார்பற்ற அமைப்புகளும் தமிழக அரசுடன் கைகோர்த்து நின்று எதிர்கொள்வர் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.
எனவே, மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்து தமிழ்நாடு அரசு தமது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதில்லை என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாகக் கோருகிறோம்.
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
9941931499