சிங்கம்போல் சிலிர்த்தெழுந்த கரப்பான் பூச்சிகள்! அஞ்சிய அஸ்வமேத யாகக் கும்பல்!

கரப்பான் பூச்சிகளைப் போலவே வாழ்க்கை நடத்தும் மக்கள் திரள்களை இழிவாக வாந்தியெடுத்ததற்கு எதிராக ‘கரப்பான் பூச்சிகள்’ எனும் பெயரிலேயே கட்சி தோன்றி சிங்கம் போல் டெல்லியில் சிலிர்த்து எழுந்ததை குள்ள நரிகள் எதிர்பார்த்திருக்கவில்லை.
அதனால் குள்ள நரிகள் உண்மையில் சற்று திணறித்தான் போயின.
குள்ள நரியான இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இத்தகைய ஜென் ஸீ போராட்டம் இந்தியாவில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக சென்ற ஆண்டிலேயே டெல்லி போலீஸை உஷார்படுத்தினார்.
இந்த ஆண்டிலோ அது நடந்தேவிட்டது.
அதனால் குள்ளநரித்தனத்துடன் மிருகத்தனமாகவே நடந்து வருகிறது மோடி-அமித் ஷா குள்ள நரிக்கூட்டம். போராடுவோர் மீது.
கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இணையத்தள சேவையை டெல்லியில் முடக்கிவிட்டது; டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்களை மூடிவிட்டது; அக்டோபர் 18வரை தடுப்புக் காவல் சட்டத்தை நீட்டித்துள்ளது டெல்லி போலீஸ்; அனைத்திற்கும் மேலாக கோல்கத்தாவிலிருந்து ஆயிரக்கணக்கான துணை இராணுவப் படைகளை டெல்லி முழுவதும் குவித்திருக்கிறது ஏற்கனவே குவிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான டெல்லி போலீஸ் படையுடன்.
நூற்றுக்கணக்கானோர் கைது; ஏராளமானோர் மீது பொய் வழக்குகள்.
டெல்லியில் திரும்பும் இடமெல்லாம் ஒன்றோடொன்று welding செய்யப்பட்ட Barricades; சாலைகளை நோக்கி செல்லாமல் இருப்பதற்கு.
செல்லாத குறுகலான தெருக்கள் வழியாகவும் சந்துகள் வழியாகவும் போராட்ட இடங்களை அடைந்துவிடுகிறார்கள் மக்கள்.
மக்கள் திரள்களில் முதன்மையாக மாணவர்களின் பங்கேற்புடன் டெல்லியில் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த மாணவர் போராட்டம் 20/07/2026 அன்று அதன் உச்சமாக ‘நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி’ எனும் முழக்கத்தின்பேரில் இந்திய நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறிச் சென்றவுடன் மோடி-அமித் ஷா தலைமையிலான தலைமையிலான குள்ள நரிக்கூட்டம் தன்னுடைய மிருகத்தனமான புத்தியை அன்று காட்டி ஆயிரக்கணக்கோனோர் ஒன்று கூடுவதை தடுப்பதற்கு பல்லாயிரக்கணக்கான போலீஸை குவித்தது; அதற்கு முன் டெல்லியில் இணையத் தள சேவை துண்டிக்கப்பட்டது.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் அன்று பல்லிளிக்கும் வண்ணம் நாடாளுமன்றத்தின் முன்னிலையிலேயே நடந்துகொண்டது பாசிசத்தை வழிகாட்டும் கருத்தியலாக உடைய இந்துத்துவ பாசிச மோடி-அமித் ஷா கும்பல்.
இக்கும்பல் போலீஸை ஈடுபடுத்தி போராட்ட மாணவர்களை ஆணிகள் நிறைந்த லத்திகளை சுழட்டி சுழட்டி அடித்தது; அதிர்வு லத்திகளையும்(electric batons)பயன்படுத்தியது; pellets நிறைந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி இருவர் கண் பார்வையே இழக்கும் நரவேட்டையாடியது. தவிர, ஏராளமானோர் காயம்; அவர்கள் மருத்துவமனை சிகிச்சையில் இன்னமும்; பெண் மாணவர்களிடம் பாலியல் வக்கிரத்துடன் போலீஸின் நடத்தை.
போராட்டக்காரர்களை மருத்துவமனைகளில் கைது செய்வதற்கு எதிராக மருத்துவர்கள் எதிர்ப்பு; வழக்கறிஞர்களும் எதிர்ப்பு.
மாணவர் போராட்டமாக தொடங்கிய இம்மகத்தான போராட்டம் அனைத்து தரப்பினரின் போராட்டமாகவும் இந்தியா தழுவிய போராட்டமாகவும் அடுத்த நாளே(21/07/2026) பரிணமித்து அடுத்தடுத்த நாட்களிலும் இத்தகைய பரிமாணத்துடனேயே இருந்துவருகிறது.
——–×———×———-×——–×———×——-
இந்தியா தழுவிய இப்போராட்டத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு சற்றும் குறைவில்லாமல்தான் விஜய்யின் ஆட்சியும் அடக்குகிறது. நீட் தேர்வை எதிர்ப்பதாக கூறிக்கொண்டாலுமே.
விஜய்யின் போலீஸானது கல்வி நிறுவன வளாகத்திற்குள்ளேயே(மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை-திருவொற்றியூர் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்டு) சீருடையூடன் அத்துமீறி நுழைந்து மாணவர்களை பிடித்துச் செல்கிறது; சென்னை மெரீனா கடற்கரையை மூடிவிட்டதுடன் அனைத்து கல்லூரிகள் வாசல் முன்பும் போலீஸை குவித்துள்ளது; விஜய்யின் அரசாங்கத்தை ஆதரிக்கும் சிபிஎம்மின் மாணவர் அமைப்பு(SFI) நடத்தும் போராட்டங்கள் கடுமையாக கையாளப்படுகின்றன.
விஜய்யின் அரசாங்கத்தை ஆதரிக்கும் CPI(Communist Party of India) தனது கட்சியின் தலைமை அலுவலக வளாகத்திலேயே(சென்னையில்) போராட்டத்தை நடத்த அனுமதித்துள்ளதால் அங்கு பல தரப்பினர்(கலைஞர்கள் போன்றோர் உள்ளிட்டு) சென்று பங்கேற்கின்றனர்.
——-×——–×———×——-×——–×——-×
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் சுமார் 25 நாட்களுக்கு முன் லடாக்(காஷ்மீர்) அமைப்பின் நிர்வாகி ஸோனம் வாங்சுக் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை டெல்லி போராட்டத் தளமான ஜந்தர் மந்தர் போராட்ட மேடையில் தொடங்கி 18 நாட்கள் கழிந்து அவரது உடல்நிலை மோசமடைந்தது கண்டு அச்சமடைந்த ஆட்சியாளர்கள் அவரை பலாத்காரமாக போராட்ட பந்தலிலிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர்
நாடாளுமன்றப் பேரணியும் அதன் மீது மேற்கொள்ளப்பட்ட அரசு அடக்குமுறையும் மாணவர்களின் தொடர் போராட்டத்தினாலும் எல்லை மீறிப் போவதாக கருதிய மோடி நீட் தேர்வு முறைகேட்டுக்கு காரணமானோர் விரைவு நீதிமன்றம் வாயிலாக தண்டிக்கப்படுவர் என்று வாய்ச் சவடாலை வீசினாலும் போராட்டம் தணியவில்லை.
அதனால் மாணவர்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படுகின்றனர்; ஆனால் மாணவர்களோ போராட்ட இடத்திற்கே வந்து பேச்சு வார்த்தையை நடத்துமாறு கோருகின்றனர்.
* நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் எனும் கோரிக்கையையும்
* நீட் தேர்வு முறைகேடுகள் மீதான நாடாளுமன்ற விவாதம் எனும் கோரிக்கையையும்
* நீட் தேர்வு முறைகேடுகளின் விளைவாக தற்கொலை செய்துகொண்டோரின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் எனும் கோரிக்கையையும்
முன்வைத்து தொடங்கிய இப்போராட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று இந்தியா தழுவியதாக பரிணமித்து அரசு அடக்குமுறையை எதிர்கொண்டிருப்பதால் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தல் எனும் கோரிக்கையுடனும் தொடர்கிறது.
பனிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல தகிடுதத்தங்களையும் சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு இந்துத்துவப் பாசிச ஆட்சியை நடத்திவரும் மோடி-அமித் ஷா கும்பல் தமது ஆட்சி நிலையானது எனவும் எவரும் தமக்கு எதிராக எதையும் செய்யமுடியாது என்ற மமதைக்கு சவால் விடுவது சிறிதளவாவது சாத்தியமே என்றே இப்போராட்டம் பறை சாற்றுகிறது என்பதே இப்போராட்டம வழங்கும் உதாரணம்/படிப்பினை.
தெற்காசியாவில் இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற ஜென் ஸீயின் போராட்டம் இந்தியாவையும் எட்டிவிட்டது.
‘மக்கள் அநீதியை ஏற்பதில்லை’
‘மக்கள் என்றும் தோற்பதில்லை’
இதுதான் உலக வரலாறு; ஸ்பார்டகஸ் காலம் முதலே.
ஹிட்லர்/முஸோலியின் சீடர்களான மோடி-அமித் ஷா கும்பல் அவர்களின் முடிவையே இந்தியாவின் மக்கள் வழங்குவார்கள்.
- தோழர் பாஸ்கர்