தர்மேந்திர பிரதான் பதவி விலகல்! பாசிச எதிர்ப்புக் களத்தில் மகத்தான வெற்றி! பாசிச மோடி – அமித்ஷா சிறுகும்பலாட்சிக்கு முடிவு கட்டுவதே உடனடி அவசர இலக்கு!கூட்டறிக்கை

31 Jul 2026

ஊடக அறிக்கை

                     31-7-2026    

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்! பாசிச எதிர்ப்புக் களத்தில் மகத்தான வெற்றி! பாசிச மோடி – அமித்ஷா சிறுகும்பலாட்சிக்கு முடிவு கட்டுவதே உடனடி அவசர இலக்கு!
கூட்டறிக்கை

வறண்ட நிலத்தில் பெருமழை ஒன்று கொட்டித் தீர்த்தது போல் பாசிச எதிர்ப்பு இயக்கம் சரிந்து கொண்டிருந்த நிலையில் கரப்பான்பூச்சி கட்சியினர் ( CJP) முன்னெடுத்த போராட்டமும் அது ஈட்டிய வெற்றியும் நம்பிக்கையைத் துளிரச் செய்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் 240 இடங்களை மட்டுமே பெற்று ஒன்றியத்தில் ஆட்சியை இறுகப் பற்றி கொண்ட பாசக, அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களில் வெற்றியைக் குவித்து தம்மை மீண்டும் வலுப்படுத்தி கொண்டது. குறிப்பாக மராட்டியத்திலும் பீகாரிலும் வங்கத்திலும் ஈட்டிய வெற்றிகளும் கேரளத்தில் கால் பதித்ததும் தமிழ்நாட்டில் அரசியல் களத்தைக் குழப்பியதும் பாசிஸ்டுகளை இறுமாப்பில் திளைக்க வைத்துக் கொண்டிருந்தது.

ஆம் ஆத்மி, சிவசேனா, திரினாமுல் காங்கிரசு, தேசிவாத காங்கிரசு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களை விலைககு வாங்கிவிட்டு, திமுக , ஆம் ஆத்மி கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் மழைக்கால கூட்டத் தொடரில் 3 இல் 2 பெரும்பான்மையைத் தொட்டுவிடுவோம் என சங்கிகள் கொக்கரித்துக் கொண்டிருந்தனர்.

தொகுதி மறுவரையறை சட்டம், பொதுசிவில் சட்டம், ஒரே தேசம் ஒரே தேர்தல் சட்டம் ஆகியவற்றை இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றிவிடுவோம் என்று அவர்கள் முரசறைந்து கொண்டிருந்தனர்.

இந்த காலச் சூழலில்தான், கரப்பான்பூச்சி கட்சியினர் முன்னெடுத்த இப்போராட்டம் பாசிஸ்டுகளின் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு முட்டுக்கட்டைப் போட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மே மாத தொடக்கத்தில் வேலையில்லாத இளைஞர்களை ’கரப்பான் பூச்சிகள்’ என நீதிமன்றத்திலேயே வசை பாடியதன் எதிர்வினையாக மே 16 ஆம் தேதி தோன்றியதுதான் கரப்பான் பூச்சி கட்சி! அமெரிக்காவில் போஸ்டன் நகரில் ஆராய்ச்சிக் கல்வி படித்துக் கொண்டிருந்த இளைஞர் அபிஜித் தீப்கே இக்கட்சியைத் தோற்றுவித்தார்.

இணையத்தில் பெருகிய ஆதரவு இளைஞர்களிடம் ஆட்சியாளர்களுக்கு எதிராக நிலவிய கொந்தளிப்பைக் காட்டியது. இணையத்தில் ஒன்று திரண்டவர்கள் களத்திற்கு வரவா போகிறார்கள்? என்று பாசிஸ்டுகள் இதை அலட்சியப்படுத்தினார்கள்.

இதற்கு இடையே, சிபிஎஸ்இ உடைய 12 ஆம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்ட தவறுகள், வினாத் தாள் கசிவினால் நீட் தேர்வு இரண்டாவது முறை நடத்தப்பட்டது ஆகியவை உயர் நடுத்தர, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் கவலையையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியது.

கல்வி துறையின் சீர்கேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜூன் 20 அன்று தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமது முதல் போராட்டத்தை கரப்பான் கட்சியினர் தொடங்கினர்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு இரண்டாவது முறை நடத்தப்பட்டதற்கு இடையே மன அழுத்தம் காரணமாக நாடெங்கிலும் சுமார் 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கரப்பான்கள் முன்வைத்தனர்.

ஜூன் மத்தியில் அபிஜித் இந்தியாவுக்கு திரும்பினார். காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் லடாக்கை சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் லடாக மாநில உரிமைச் செயற்பாட்டாளரான சோனம் வாங்சுக் இறங்கினார். அனைத்திந்திய மாணவர் சங்கத்தைச் ( AISA ) சேர்ந்த மூவரும் பட்டினிப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

இதை கிஞ்சிற்றும் மதிக்காமல் புறந்தள்ளியது பாசக.

மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நாளன்று ( ஜுலை 20) நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி என்று கரப்பான்கள் அறிவித்தனர். ஜுலை 17 அன்று தில்லி காவல் ஆணையராக புலனாய்வுத் துறை பின்னணி கொண்ட அநுராக் தாகூர் என்பவரை பணியமர்த்தினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஜூலை 17 அன்று சோனம் வாங்சுக்கை குண்டுக்கட்டாக தூக்கி மருத்துவமனையில் அடைத்தது தில்லி காவல் துறை. அதே நாளில், அபிஜித்தும் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் குதித்தார்.

கல்வித் துறை சார்ந்த முறைகேடுகளுக்கு எதிராகத்தான் இப்போராட்டம் தொடங்கியது என்றாலும் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண வீக்கம், குறைந்த கூலி ஆகிய சிக்கல்களால் துயருற்ற மக்கள் பிரிவினரும் இதில் இணைந்து கொண்டனர்.

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல இலட்சக்கணக்கான கரப்பான்கள் தில்லி ஜந்தர் மந்தரை நோக்கிப் படையெடுத்தனர். மெட்ரோ இரயில் நிலையங்கள் மூடப்பட்டன; இணையச் சேவைகள் முடக்கப்பட்டன. 5000த்திற்கும் மேற்பட்ட படையினர் குவிக்கப்பட்டனர்.

கண்ணீர் புகைக் குண்டு, தண்ணீர் பிய்ச்சி அடித்தல், தடியடி, ஆணி அடிக்கப்பட்ட தடியடிகள், மின்சாரம் பாய்ச்சும் தடிகள், பெல்லட் குணடுத் துப்பாக்கிச் சூடுகள், பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் என இசட் தலைமுறை இளைஞர்களிடம் தமது கோர முகத்தை பாசிச ஆட்சி காட்டியது. அடக்குமுறைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தெறித்து ஓடி விடுவார்கள் என்ற பாசிஸ்டுகளின் கணக்குப் பொய்த்துப் போனது.

”பச்சை ஊன் இயைந்த வேற் படைகள் வந்த போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை” என்று நாடாளுமன்றம் நோக்கி மாணவர்களும் இளைஞர்களும் முன்னேறினர். அடக்குமுறை போராட்டத்தை முடக்குவதற்கு மாறாக நாடெங்கிலும் விரிவாக்கியது. ஜந்தர் மந்தரை நோக்கி உணவுப் பொட்டலங்கள் அணி வகுத்தன. ஜூலை 20 முதல் ஒன்று, இரண்டு, மூன்று என ஐந்து நாட்கள் இரவு பகல் பாராமல் அடக்குமுறையைத் தாங்கிய இசட் தலைமுறையினர் பாசிஸ்டுகள் கட்டியெழுப்பிய அச்சமெனும் இரும்புக் கோட்டைகளைத் தூள்தூளாக்கினர்.

கடந்த 25-7-2026 சனிக்கிழமை அன்று வேறு வழியில்லாமல் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை, நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், மாநில சட்டப்பேரவைகள் ஆகியவற்றை செல்லாக் காசாக்கி, ஆளுநர் வழியாக இரட்டை ஆட்சி நடத்தி, தேர்தல் ஆணையம், நீதித்துறை, ஆர்.பி.ஐ. , நிதி ஆணையம், அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, தொல்லியல் துறை என நாடாளுமன்ற சனநாயக நிறுவனங்கள் அனைத்தையும் கைப்பற்றி, ஊடகங்களை தமது ஊதுகுழல்களாக மாற்றி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டியும் உருட்டியும் விலைபேசியும் கட்சித் தாவச் செய்வதன் மூலம் தேர்தல் முடிவுகளை பொருளற்றதாக்கி இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலை நோக்கி தங்கு தடையின்றி முன்னேறிக் கொண்டிருந்தது பாசிச பாசக அரசு. அரைகுறை நாடாளுமன்ற சனநாயகத்தை ஒரு மலைபாம்பு போல விழுங்கி கொண்டிருந்த நிலையில்தான் கரப்பான் பூச்சிகள் பற்ற வைத்தப் போராட்டம் மக்களிடம் பொறுப்புக் கூற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மேந்திர பிரதான் பதவி விலகியமை மோடி -அமித் ஷாவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. ”ஆட்சியைப் பிடித்துவிட்டோம் மக்கள் ஆணை இருக்கிறது எதிர்க்கட்சிகள் கேள்விகேட்கப் போவதில்லை, நாங்கள் வைத்தது தான் சட்டம்” என்று நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்க முடியாது என்று அறிவித்துள்ளது இப்போராட்டம்.. இப்போது தில்லியில் கட்டவிழ்க்கப்பட்ட காவல் வன்முறைகளுக்கு அமித் ஷா பொறுப்புக் கூற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இப்போராட்டமும் இது ஈட்டிய வெற்றியும் பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்களிடையே ஏற்படுத்தியுள்ள உளவியல் ஊக்கம் வேறு எதைவிடவும் பெறுமதியானது.

பாசிச மோடி-அமித் ஷா சிறுகும்பலாட்சி வெல்லற்கரிய ஒன்றல்ல, கரப்பான் பூச்சியினர் மட்டுமின்றி எதிர்க்கட்சியினர் அனைவரும் ஓரணியில் நின்று பாசிச எதிர்ப்பு சனநாயக கோரிக்கைகளின் அடிப்படையில் மக்களை திரளாக்கிவிட்டால் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற படிப்பினையை இப்போராட்டம் வழங்கியிருக்கிறது.

இப்போராட்டம். தேர்தலுக்காக மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பாசிச ஆட்சிக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களிடம் இருக்கும் சீற்றத்தையும் துணிவையும் ஈகத்தையும் தோழமையையும் ஆற்றலையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

இப்போராட்டம் பாசகவிடம் கள்ளக்கூட்டு வைப்பதற்கு காலம் பார்த்துக் கொண்டிருந்த இரண்டகக் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

கடந்த 12 ஆண்டுகளில் 152 தேர்வுகளில் வினாத் தாள் கசிவு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், இது தொடர்பான விசாரணைகள் எதுவும் உருப்படியாக நடைபெறவில்லை. கவ்லித் துறையில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு எதிராக எழுந்த போராட்டமே இது.

இப்போராட்டம் நீட் தேர்வை மையமிட்டது கிடையாது. எனவே நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும் என்ற கோரிககை நிறைவேறவில்லை என்பதாலேயே இப்போராட்டத்தையும் அது ஈட்டியுள்ள மகத்தான வெற்றியையும் புறந்தள்ளிவிட முடியாது.

தர்மேந்திர பிரதானைப் பதவி விலகச் செய்ததன் மூலம் மக்களுக்கு பொறுப்புக்கூறாமல் ஆட்சியில் இருப்போர் தப்பிவிட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த வெற்றியும் பலனுமாகும். பாசிஸ்டுகள் பலவீனமடைவது தமிழ்நாட்டுக்கும் நன்மை பயக்கக் கூடியதுதான்.!

மேலும் 8 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் இரண்டு சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் கொடுக்காமல் வஞ்சித்துக் கொணடிருக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை நாம் ஏன் முன்னெடுக்கவில்லை என்ற கேள்வியையும் இந்த போராட்டம் எழுப்பியுள்ளது. அதேநேரத்தில் , இந்தப் போராட்டமானது நீட் விலக்கு உள்ளிட்ட கல்வி தொடர்பான தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

நெருக்கடிகள் வரும் போது ஓர் அடி பின்னே சென்று முன்னோக்கிப் பாய்வதில் வல்லவர்களான ஆர்.எஸ்.எஸ் – பாசகவினர் அடுத்தக் கட்ட அடக்குமுறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்பதால் அவற்றை முறியடிப்பதற்கு நாம் அணியமாக வேண்டும்

போராட்டத்தில் ஈடுபட்டு பட்டினி இருந்து உடல் நலிவுற்றவர்களுக்கும் வெயிலிலும் மழையிலும் காய்ந்தவர்களுக்கும் தடியடி, கண்ணீர் புகைக் குண்டு ஆகிய அடக்குமுறைகளை சந்தித்து காயமுற்றவர்களுக்கும் வழக்குப் போடப்பட்டவர்களுக்கும் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும் எமது அன்பை வெளிபடுத்துகிறோம்.

நீட் விலக்கு உள்ளிட்ட துண்டு துண்டான கோரிக்கைகளை விடவும் மாநில அரசில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதையும் விடவும் அமைச்சர், எம்.எல்.ஏ. எம்.பி. பதவிகளை விடவும் தனிப்பட்ட கட்சி நலனை விடவும் தனிநபர் நலன்களை விடவும் பாசிச மோடி – ஷா கும்பலாட்சியை முடிவுக்கு கொண்டு வருவதும் அவர்கள் அடுத்தடுத்து இந்நாட்டின் அரசியல் பொருளில அரசமைப்பு சட்டக் கட்டமைப்பில் ஏற்படுத்திவரும் மாற்றங்களைத் தடுத்து நிறுத்துவதும்தான் முதன்மையான கடமை என்பதை சனநாயகத்தின்பால் மெய்யான அக்கறை கொண்டோர் இமைப் பொழுதும் மறந்துவிடக் கூடாது.

இதன் பொருட்டு பாசிச எதிர்ப்புக் களத்தில் போராட்டத்தை விரிவாக்குவதற்கும் போராடும் ஆற்றல்களிடையே ஒற்றுமையைப் பேணுவதற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

உயிர்                                                                 இப்படிக்கு,
                                                                            தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
                                                                     செந்தில், ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி 
                                                                          மனோகரன்,                     மாநில செயலாளர், சிபிஐ(எம்-எல்) ரெட் ஸ்டார்                                                                                           
                                                                            மணி,                                  மாநில அமைப்பாளர், பாட்டாளி வர்க்க சமரன் அணி
                                               மதியவன் இரும்பொறை, பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மார்க்சிய கழகம்
                                                                                                ஆ. தேவதாசு, தமிழ்நாடு பொதுவுடமை இயக்கம்.
                                                                                                                                                                    தொடர்புக்கு: 9941931499
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW