இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு தரும் இரு படிப்பினைகள்

02 Jun 2026

இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் பிரிட்டிஷ் காலனி எதிர்ப்புதான் முதன்மை முரண்பாடு என்ற வரையறையின்கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும்.                                    

அதேநேரத்தில் இந்த முதன்மை முரண்பாட்டுக்கு எதிராக சாதி, மதம், மொழி அடிப்படையில் பிரிந்தும் ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் அடக்குமுறைகளையும் கொண்ட சமூக குழுக்களை ஓரணியில் திரட்ட வேண்டிய இமாலயப் போராட்டத்தை அது எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

இந்த பின்புலத்தில்தான் இந்திய தேசிய  காலப் பகுதியில் பல்வேறு போக்குகள் முகிழத் தொடங்கின. முஸ்லிம் லீக, சுயமரியாதை இயக்கம், அம்பேத்கரிய இயக்கம், கம்யூனிச இயக்கம், இந்துத்துவ இயக்கம் ஆகியவை எழுந்து வந்தன.

கம்யூனிச இயக்கம் அக்காலப் பகுதியில் எத்தகைய நிலைப்பாட்டை எடுத்தது. பின்னாட்களில் அது குறித்து எத்தகைய திறனாய்வுக்கு வந்தது என்பதைப் பார்ப்போம்.

படிப்பினை 1:

1920 ஆம் ஆண்டு எம்.என்.ராய் ரசியாவில் லெனினை சந்தித்தார். காந்தி தலைமையிலான காங்கிரசு இயக்கத்தோடு எப்படி கூட்டுச் சேர முடியும் என்ற பொருளில் எம்.என்.ராய் கேட்டார். காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசுடன் இணைந்து பங்கேற்குமாறும் அதேநேரத்தில் தொழிலாளர்கள், உழவர்கள் இடையே சுதந்திரமான புரட்சிகர இயக்கத்தை கட்டியெழுப்புமாறும் அறிவுறுத்தினார். மேலும் காலனிய எதிர்ப்பின் பொருட்டு காந்தியின் பின்னால் வெகுமக்கள் திரட்டப்பட்டுள்ளனர் என்றும் சொன்னார். பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்பு இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசுடன் ஐக்கியம் – போராட்டம் என்ற வழிமுறையை பின்பற்றுவதே கம்யூனிச இயக்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், ஐக்கியம் – போராட்டம் என்ற நிலைப்பாட்டை செயல்படுத்துவதில் கம்யூனிச இயக்கம் காங்கிரசுக்கு வாலாகப் போய்விட்டது என்றொரு திறனாய்வு உண்டு. இருப்பினும் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திலும் அதற்குப் பின்னர் இந்திய தேசத்தைக் கட்டமைப்பதிலும் கம்யூனிச இயக்கத்திற்கு குறிப்பாக சிபிஐ, சிபிஐ(எம்) ஆகிய இருபெரும் கட்சிகளுக்கும் தனிச்சிறப்பான பாத்திரம் உண்டு.

இந்திய தேசிய காங்கிரசு தலைமையிலான முதலாளிய வகுப்பு பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய ஆற்றல் என்றாலும் அன்றைய சூழலில் காலனிய எதிர்ப்பு தேசிய போராட்டமே முதன்மையானது என்ற அடிப்படையில் காங்கிரசு கட்சியை முற்றுமுழுதாக எதிர்ப்பதற்குப் பதிலாக அத்துடன் ஐக்கியம் – போராட்டம் என்ற அணுகுமுறையை மேற்கொண்டதே பொருத்தமுடையது என்பதே இங்கு படிப்பினையாகும்.

சமகாலப் போராட்டத்தில் பாசிச பாசக அரசுக்கு எதிரானப் போராட்டமே முதன்மையானதாகும். அன்றைக்கு காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் காங்கிரசு வகித்த பாத்திரத்தை இன்றைக்கு பாசிச பாசக எதிர்ப்புப் போராட்டத்தில் திமுக, காங்கிரசு போன்ற ஆளும் வகுப்பு கட்சிகள் வகிக்கின்றன. பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முரணற்ற சனநாயக கோரிக்கைகளுக்காக இக்கட்சிகள் நிற்பதில்லை என்பதால் இக்கட்சிகளை சமரச ஆற்றல்கள் என்று வரையறுக்கிறோம். முரணற்ற சனநாயக கோரிக்கைகளாவன – என்.ஐ.ஏ வை கலைத்தல், ஊபா சட்டத்தை ரத்து செய்தல், அதானி சொத்துகளை பறிமுதல் செய்து கைது செய்தல், ஜி.எஸ்.டி ஐ ரத்து செய்தல், காசுமீருக்கான சிறப்பு தகுதியை வழங்கும் உறுப்பு 370 ஐ மீண்டும் செயல்படுத்துதல், மதமாற்ற தடை சட்டங்களை நீக்குதல்) இக்கட்சிகள் சமரச ஆற்றல்கள் என்பதாலேயே இவற்றுடன் ஐக்கியம் – போராட்டம் என்ற அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, எக்காரணம் கொண்டும் காங்கிரசு, திமுகவை பாசகவுடன் சமப்படுத்தக் கூடாது. அதேநேரத்தில், சுதந்திரமான பாசிச எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவற்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். இவ்விரண்டிற்கும் மாறாக பாசகவுடன் திமுக/ காங்கிரசை சமப்படுத்துவதும் அல்லது சுதந்திரமான வேலைத் திட்டமின்றி திமுக/ காங்கிரசின் நிழலில் உயிர்வாழலாம் என்பதும் அதன் இறுதியான பொருளில் பாசிசத்தை வலுப்படுத்துவதில் போய் முடியும்.

படிப்பினை – 2:

இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கு தலைமை தாங்கிய காங்கிரசு கட்சி சாதியடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரானப் போராட்டத்திற்கு உரிய கவனம் தரவில்லை என்ற அடிப்படையில் தமிழ்நாட்டில் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும் மராட்டியத்தில் அம்பேத்கரின் தலித் விடுதலை இயக்கமும் முகிழ்த்து வந்தது. காங்கிரசு கட்சி பிரிட்டிசாருக்கு எதிரானப் போராட்டமே முதனமையானது என்றது, இத்தகைய உள்நாட்டுப் பிரச்சனைகளை எழுப்புவது பிரிட்டிஷ் ஆதரவு நடவடிக்கை என்றது. காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப்  போராட்டம் தங்களுக்கு முதன்மையானது கிடையாது என்று மேற்படி சாதி ஆதிக்க எதிர்ப்பு நீரோட்டம் அறிவித்தது.

அதாவது மேற்படி இரு தலைவர்களும் இந்திய சமூகத்தில் மிக முகன்மை வாயந்த சாதிய சிக்கலை முன்னரங்குக்கு கொண்டு வந்தனர் என்பதால் இவர்களுக்கு வரலாற்றில் தனிச்சிறப்பான பாத்திரம் உண்டு. அதேநேரத்தில், அன்றைய காலப்பகுதியில் நாட்டின் முதன்மை முரண்பாடாக விளங்கிய பிரிட்டிஷ் காலனியத்திற்கு எதிரானப் போராட்டத்தைவிடவும் தமக்கு உள்நாட்டு சனநாயகப் போராட்டமே முதன்மையானது என்று வேறு திசையில் பயணித்தனர். இது பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்புப் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தியது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் இவர்களுடைய இயக்கங்களை தடை செய்யவில்லை; இவர்களை கொடுஞ்சட்டங்களின் கீழ் கைதுசெய்து சிறைபடுத்தவும் இல்லை . 

சீனத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் நிலவுடைமை எதிர்ப்புப் போராட்டத்தில்தான் ஈடுபட்டிருந்தது. பின்னர் ஜப்பான வல்லரசிய எதிர்ப்புப் போராட்டம் எழுந்தது. ஜப்பான் வல்லரசிய எதிர்ப்புப் போராட்டத்திற்கும் உள்நாட்டு நிலவுடமை எதிர்ப்புப் போராட்டத்திற்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே தலைமை தாங்கியது. ஆனால், இந்தியாவிலோ பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்புப் போராட்டமே முதலில் எழுந்து வந்தது. பின்னர்தான் உள்நாட்டு சாதி, நிலவுடைமை ஆதிக்க எதிர்ப்பு முன்னரங்குக்கு வந்தது. இவ்விரு போராட்டங்களும் ஒரே தரப்பினால் இந்தியாவில் முன்னெடுக்கப்படவில்லை.

காலனிய எதிர்ப்பு இந்திய தேசிய விடுதலைப் போராட்டமும் உள்நாட்டு சாதி எதிர்ப்புப் போராட்டமும் தனித்தனி தலைமைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இவ்விரு இயக்கமும் ஒன்றுடன்ஒன்று மோதிக் கொண்டதால் ஒன்றின் மேல் மற்றொன்று செல்வாக்கு செலுத்தின என்றாலும் இவ்விரு இயக்கமும் இணை கோடுகளாகவே பயணித்து வந்தன. சாதிய நிலவுடைமை எதிர்ப்புப் போராட்டத்தையும் பிரிட்டிஷ் வல்லரசிய எதிர்ப்புப் போராட்டத்தையும் இணைக்கவல்ல திட்டத்தை கம்யூனிஸ்ட்கள் கொண்டிருந்த போதும் இவ்விரு போக்குகளையும் இணைக்க முடியவில்லை. இன்றுவரை இந்த இடர்பாடு நீடித்து வருகிறது.

எது எப்படியோ காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டம் என்ற முதன்மை முரண்பாட்டிற்கு முகம் கொடுத்த காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் வரலாற்றின் செல்நெறியோடு பொருந்திப் போயினர். பிரிட்டிஷ் காலனியர்கள் வெளியேறியதற்குப் பின் காங்கிரசு தலைமையில் இந்திய தேச அரசு கட்டமைக்கப்பட்டது. அதுவரை காலமும் காங்கிரசையும் பிரிட்டிசாரையும் சமப்படுத்தியும் காங்கிரசை முதன்மை எதிரியாக சித்திரித்தும் வந்த பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், அம்பேத்கர் இயக்கமும் வரலாற்று செல்நெறிக்கு உட்பட்டு காங்கிரசு தலைமையிலான இந்திய தேச அரசுடன் ஐக்கியம் – போராட்டம் என்ற அணுகுமுறையைக் கடைபிடிக்க   வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரசும் மேற்படி இருப்போக்குகளுடன் ஐக்கியம் – போராட்டம் என்ற அணுகுமுறையை கடைபிடிக்க முன்வந்தது. இத்தகைய ஓர் அணுகுமுறையை காங்கிரசு( தேசிய விடுதலை) தரப்பும் – சாதி ஒழிப்பு தரப்பும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே மேற்கொண்டிருந்தால் இந்திய சமூக வளர்ச்சி என்பது இன்னும் வேகமானப் பாய்ச்சலில் முன்னேறி  இருக்கும் என்பது நம்முடைய மதிப்பீடு ஆகும். ஆயினும் வரலாற்றை இனி திருத்தி எழுதவா முடியும்!

காந்தியார் சாதி, சமய, மொழி அடிப்படையிலான முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்து இந்திய தேசியத்தை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றினார். காந்தியாரின் அகத் தூய்மைக்கு ஈடுகொடுக்கும் நிலையில் காங்கிர்சு தலைவர்கள் இல்லை. சவகர்லால் நேருகூட 1932 க்குப் பின்னான காந்தியாரின் அரிசன இயக்கத்தை சலிப்புடன்தான் பார்த்து வந்தார்.

காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடாமல் சாதிநாயக எதிர்ப்பு சனநாயக போராட்டத்தை முதன்மைப்படுத்திய போக்குகளை கம்யூனிச இயக்கம் வல்லரசிய சார்பு போக்காக திறனாய்வு செய்தது. அன்றைக்கு பெரியார், அம்பேத்கர் இயக்கங்களை வல்லரசியக் கைக்கூலிகள் என்று திறனாய்வு செய்தனர். அதாவது பிரிட்டிஷ் வல்லரசியத்தின் B டீம் என்று சாடுவது போன்றதாகும்.

பிற்காலத்தில், கம்யூனிச இயக்கம் தனது நிலைப்பாட்டை திறனாய்வுக்கு உட்படுத்திக் கொண்டது. எப்படி காங்கிரசோடு ஐக்கியம் – போராட்டம் என்ற அணுகுமுறையை மேற்கொண்டதோ அதுபோல் சுயமரியாதை இயக்கம், அம்பேத்கரிய இயக்கம்  போன்ற உள்நாட்டு சனநாயகப் போராட்டத்தை முதன்மைப்படுத்திய போக்குகளோடு ஐக்கியம் – போராட்டம் என்ற அணுகுமுறையைக் கடைபிடித்திருக்க வேண்டும் என்று திறனாய்வு செய்து கொண்டது.

அந்தப் படிப்பினையை உள்வாங்கி சமகாலத்தோடு பொருத்திப் பார்ப்போம்.

பாசிச பாசக அரசுடனான முரண்பாடே முதன்மை முரண்பாடாகும். ஏனைய அனைத்து முரண்பாட்டின் வாழ்வையும் வளர்ச்சியையும் இந்த முதன்மை முரண்பாடே தீர்மானிக்கப் போகிறது. பாசிச பாசகவுடன் வேறெந்த ஆளும் வகுப்புக் கட்சியையும் ( எடுத்துக்காட்டாக காங்கிரசு, திமுக ) சமப்படுத்துவது என்பது விளைவு அளவில் பாசிச பாசகவுக்கு சேவை செய்வதே ஆகும்.

அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கடந்த மக்களவை தேர்தலாகும். பாசகவையும் மம்தா தலைமையிலான திரினாமுல் காங்கிரசையும் சமப்படுத்தி மேற்கு வங்கத்தில் சிபிஐ(எம்) மும், பாசகவையும் காங்கிரசையும் சமப்படுத்தி உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுசன் சமாஜ் கட்சியும் பாசகவையும் காங்கிரசையும் நேர்ப்படுத்தி மராட்டியத்தில் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வன்சித் பகுசன் அகாதி கட்சியும் போட்டியிட்டன. மொத்தமாக இக்கட்சிகள் பெற்ற வாக்குகள் கனிசமான தொகுதிகளில் பாசகவின் வெற்றிக்கு வழிவகுத்தது. ஒருவேளை இக்கட்சிகள் முதன்மை முரண்பாட்டுக்கு எதிராக இந்தியா கூட்டணியுடன் ஒன்றுபட்டிருந்தால் பாசகவை ஆட்சிக்கு வராமல் தடுத்திருக்க முடியும். இன்னொருபுறத்தில் இந்தியா கூட்டணி  மேற்படி கட்சிகளை வென்றெடுக்க தவறிவிட்டது என்ற திறனாய்வு இக்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பாசிச பாசக அரச எதிர்ப்பைப் பற்றி பொருட்படுத்தாமல் அல்லது பாசகவையும் திமுகவையும் சமப்படுத்தி அல்லது பாசக எதிர்ப்பைவிட திமுக எதிர்ப்பை முதன்மைப்படுத்தி அரசியல் செய்யும் கட்சிகளான நாம் தமிழர் கட்சி, தவெக போன்ற கட்சிகள் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை பலவீனப்படுத்தியே வந்துள்ளன. இக்கட்சிகள் முன்வைக்கும் திமுக மீதான விமர்சனங்கள் புறஞ்சார்ந்த அடிப்படைகளை கொண்டிருக்கின்றன என்பதாலேயே மக்களில் ஒரு பிரிவினர் இக்கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர் என்பதாலேயே இப்படி வாக்களிக்கும் மக்களுக்கு சனநாயக விருப்பங்கள்/ கோரிக்கைகள் இருக்கின்றன என்பதாலேயே இக்கட்சிகள் பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஊறு செய்வதன்மூலம் பாசிச பாசகவுக்கு சேவை செய்து  கொண்டிருப்பதை குறைத்து மதிப்பிட முடியாது.

பெரியார், அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்களோடு விஜய், சீமான் போன்றவர்களை ஒப்பிடுவதாக தவறாகப்  பொருள் கொள்ளக் கூடாது. முதன்மை முரண்பாட்டை மறுத்து ஏனைய முரண்பாட்டை முன்னுக்கு கொண்டுவரும் வகையில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெரியார், அம்பேத்கர் முன்னெடுத்த அரசியலும் பாசிச முதன்மை முரண்பாட்டை மறுத்து தவெக, நாதக போன்ற கட்சிகள் முன்னெடுக்கும் அர்சியலும் ஒத்த தன்மை உடையது ஆகும்.

அகத்தூய்மை என்ற வகையில் பெரியாரும் அம்பேத்கரும் மலையை ஒத்தவர்கள்! சீமானும் விஜய்யும் மடுவை ஒத்தவர்கள்! இத்தகைய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு முதன்மை முரண்பாடு , இரண்டாம் நிலை முரண்பாடு என்ற விதிகளுக்குள் மட்டும் ஒப்பிட்டு, கடந்த கால படிப்பினைகளைக்  கருத்தில் கொண்டால், அன்றைக்கு பெரியார், அம்பேத்கர் முன்னெடுத்த இயக்கத்தை வல்லரசிய சார்பு இயக்கமாக வரையறுத்த தவறுக்கு இணையானதுதான் இன்றைக்கு நாதக, தவெக போன்ற அமைப்புகளை பாசிச பாசகவின் B டீம் என்று சொல்வதாகும்.

மாறாக, கம்யூனிஸ்டுகள்  இந்திய தேசிய விடுதலைப் போராட்டக் காலத்தில் மேற்படி பெரியார், அம்பேத்கர் இயக்கங்களோடு ஐக்கியம் – போராட்டம் என்ற அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று மீளாய்வு செய்ததன் அடிப்படையில் பாசிச எதிர்ப்புப் போராட்ட நோக்கில் தவெக, நாதக  வுடன் ஐக்கியம் – போராட்டம் என்ற அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்.

இப்போது தவெகவுடன் கூட்டணியில் இணைந்திருக்கும் விசிகவும் ஐயூஎம்எல் உம் ஆட்சியிலும் அதிகார்த்திலும் பங்கு என்பதன் பெயரால் தவெக வழியைப் பின்பற்றி பாசிச பாசக அரசு எதிர்ப்புப் போராட்டத்தைப் புறந்தள்ளி, திமுகவை முதனமை முரண்பாடாக்கினால் அக்கட்சிகளுடனும் ஐக்கியம் – போராட்டம் என்ற அணுகுமுறையைத்தான் கடைபிடிக்க வேண்டும்.

மாறாக, திமுகவினரும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் பாசிச எதிர்ப்புப் போராட்டமே முதன்மையானது என்பதை முற்றாக மறந்துவிட்டு நாதக, தவெக தொடங்கி காங்கிரசு, விசிக, ஐயூஎம்எல் போன்ற இயக்கங்களுடன் நிலவும் முரண்பாட்டைப் பகை முரண்பாடாக்கினால் அது தவறுக்கு பதில் தவறு என்ற சங்கிலித் தொடராக மாறி பாசிச பாசகவுக்கு மகத்தான சேவை செய்வதில் போய் முடியும்.

அத்தகைய அழிவுப் பாதையை பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் மெய்யான அக்கறை கொண்ட சனநாயக ஆற்றல்கள் முன்னெடுத்துவிடக் கூடாது.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW