சொல்லில் பாசிச எதிர்ப்பு!  செயலில் பாயாசம் ! – செந்தில்

13 May 2026

பாசிசமாவது பாயாசமாவது என்று தவெக தலைவர் விஜய் சொன்ன போது அது பாசிச எதிர்ப்பை முனை மழுங்கச் செய்யும் வேலையாக பார்க்கப்பட்டது.

பாசிச பூச்சாண்டி காட்டி திமுகவுக்கு பல்லக்கு தூக்கும் வேலை என்ற பொருள்பட தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் சொன்ன போது அது கவலையளித்தது.

மதப் பாசிசத்தை மட்டும்தான் எதிர்ப்பீர்களா? சாதிப் பாசிசத்தை எதிர்க்க மாட்டீர்களா? என்று சில தலித் அரசியல் ஆற்றல்கள் கேட்கும்போது அதுவும் கவலை அளித்தது.

”பாசிசத்திற்கான பொருளியல் காரணிகளைக் காணத் தவறக் கூடாது” என்று சொல்லி காங்கிரசையும் திரினாமுல் காங்கிரசையும் பாசகவோடு நேர்படுத்தும் அரசியலை சிபிஐ(எம்) முன்னெடுத்த போது அது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தேர்தலில் பாசகவைத் தோற்கடிப்பது எப்படி? தேர்தலை புறக்கணிக்க வேண்டும்? நாதகவும் பாசகவும் ஒன்று, தவெகவும் பாசகவும் ஒன்று என்றெல்லாம் சந்தில் சிந்து பாடி, பாசிச எதிர்ப்புக் களத்தை குழப்புவதும் நடைபெற்றது..

பாசிச பாசக ஆட்சி தான் முதன்மை முரண்பாடு என்ற அடிப்படையில், சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக  கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுத்து செயல்பட்ட அமைப்புகள், கட்சிகள், அமைப்பு சாராத செயற்பாட்டாளர்கள் பாசிச பாசக எதிர்ப்பில் தெளிவையும் உறுதியையும் அர்ப்பணிப்பையும் வெளிபடுத்தினார்களா? என்றால் அந்த முகாமிலும் போதாமையே நீடித்துக் கொண்டிருக்கிறது. போதாமையில் இரண்டு அம்சங்களை மட்டும் இக்கட்டுரை பேசவிருக்கிறது.

 பாசிச பாசக தான் முதன்மை முரண்பாடா?

”நாடு பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. பாசிச பாசகவை ஆட்சியில் இருந்து கீழிறக்க வேண்டும். ஆளும் வகுப்புக் கட்சிகளான காங்கிரசு, திமுக போன்றவற்றை பாசகவோடு நேர்ப்படுத்தக் கூடாது, தேர்தலில் அக்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று தமிழ்நாட்டு அரசியல் களத்தில் வெவ்வெறு கருத்தியல் நீரோட்டத்தை சேர்ந்த அமைப்புகள், கட்சிகள் நிலைப்பாடு எடுத்தன. ஆனால், அவை தமக்குள் ஒன்றுபட்டு நின்று ஓரணியாக தம்மை ஒழுங்குப்படுத்திக் கொள்ளவில்லை என்பதுமட்டுமல்ல, அத்தகைய முயற்சியைக்கூட உறுதியாக மேற்கொள்ளவில்லை.

சாதி அரசியலை மேற்கொள்ளும் முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திமுக கூட்டணியை பாசிச எதிர்ப்பின் பொருட்டு ஆதரித்து, இக்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்குமாறு மேற்படி பாசிச எதிர்ப்பு அமைப்புகள் மக்களிடம் வலியுறுத்தின. குறிப்பாக தலித் மக்களிடம் ஏனைய முரண்பாட்டைப் பின்னுக்குத் தள்ளி, பாசிச பாசகவுடனான முரண்பாட்டை மட்டும் கருத்தில் கொண்டு தேர்தலை அணுகுமாறு வலியுறுத்தின.

சுமார் 1.5 இலட்சம் ஈழத் தமிழர்களின் இனவழிப்புக்குத் துணைநின்ற காங்கிரசு கட்சிக்கு பாசிச எதிர்ப்பின் பொருட்டு வாக்களிக்குமாறு மக்களிடம் வலியுறுத்திய இயக்கங்கள் தம்மிடையே நிலவும் முரண்பாடுகளைப் பின்னுக்கு தள்ளி பாசிச எதிர்ப்பின் பெயரால் தமக்குள் ஓர் ஒருங்கிணைவை ஏற்படுத்திக்கொள்ள அணியமாக இல்லை.

தொழிற்சங்க உரிமை கிடையாது நிரந்தர வேலையும் கிடையாது. போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன.  ஆனாலும் தொழிலாளர்கள் பாசிச எதிர்ப்பின் பெயரால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லும் இயக்கங்கள், பாசிச எதிர்ப்பின் பெயரால் கடந்த கால முரண்பாடுகளைப் பின்னுக்கு தள்ளி ஒரு கூட்டமைப்பாகக்கூட ஒன்றுபட்டு நிற்க முடியவில்லை. ஆனால், பாசிசத்தை வேரறுக்கப் போவதாகவும் இடைக்கால சனநாயக கூட்டரசு அமைக்கப் போவதாகவும் விண்ணதிரும் முழக்கங்களை எழுப்புகின்றன.

பாசிச எதிர்ப்பின் பெயராலும் மக்களின் நலனின் பெயராலும் ஆளும்வகுப்புக் கட்சிகளுடன் கைகோர்த்து நிற்க நீயா? நானா? என்று போட்டிப்போட்டுக் கொள்ளும் அமைப்புகள்,  புரட்சி, விடுதலை ஆகிய இலட்சியங்களுக்காக பாடுபடும் தம்மை ஒத்த அமைப்புகளோடு கைகோர்த்து நிற்க அணியமாகவில்லை.

சுருங்கச் சொன்னால், தமக்குள் முரண்பாடுகள் கொண்ட சாதிகள், வகுப்புகள், சமூகக் குழுக்கள் பாசிச பாசக எதிர்ப்புத்தான் முதன்மை முரண்பாடு என்பதை புரிந்துகொண்டு அதை எதிர்ப்பதற்காக ஓரணியில் திரள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் நிலவுகின்றன. இது நடைபெறாமல், பாசிச பாசகவை ஆட்சியில் இருந்து கீழிறக்க முடியாது. ஆனால், பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய – லெனினிய, தமிழ்த்தேசிய அமைப்புகள் பாசிச பாசகவின் பெயரால் ஒரு குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரணியில் நிற்க முடியவில்லை. இத்தனைக்கும் கடந்த 12 ஆண்டுகளாக இந்நாட்டை மோடி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்!

யார் தலைமையில் ஒன்றுபடுவது? எது சின்ன அமைப்பு? எது பெரிய அமைப்பு? யாருடைய அமைப்பின் பகுப்பாய்வு அறிக்கை மிகவும் சரியானது?  பெரியார் எதிர்ப்பா? ஆதரவா? திமுகவை விமர்சனம் இன்றி ஆதரிப்பதா? அல்லது விமர்சனத்தோடு ஆதரிப்பதா? தவெக வை எப்படி மதிப்பிடுவது? என்று பற்பல பரிசோதனைகளை நடத்தி ஒன்றுபட்டு நிற்பதற்கு முன்நிபந்தனைகள் பல விதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பாசிச பாசக எதிர்ப்பில் இவர்கள் காட்டும் அக்கறை இவ்வளவுதானா? அல்லது பாசிச ஆபத்து, பாசிச ஆட்சி என்பது பற்றி இவ்வமைப்புகள் கொண்டுள்ள புரிதல் இவ்வளவுதானா?

இன்றைய சூழலில்,  பாசிச பாசகதான் முதன்மை முரண்பாடு என்று ஓர் அமைப்பு கருதுமாயின் அந்த முதன்மை முரண்பாட்டுக்கு எதிரானப் போராட்டத்தில் எல்லாவிதமான கடந்தகால கசப்பான அனுபவங்களையும் பின்னுக்குத் தள்ளி சனநாயக ஆற்றல்களுடன் இணைந்து செயல்பட அணியமாக இருக்கவேண்டும்.

தேர்தலில் வாக்களிப்பது மட்டும்தான் பாசிச எதிர்ப்பு செயல்பாடா?

தேர்தல் களத்தில் திமுக வை ஆதரித்து நிற்காவிட்டால் அது பாசகவை ஆதரிப்பதே ஆகும் என்று சொல்லப்படுகிறது. திமுகவை நிபந்தனையின்றியும் விமர்சனம் இன்றியும் ஆதரிக்காவிட்டால் அவர்கள் எல்லோரும் பாசகவின் பீ டீம் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இப்படியாக 2016 க்குப் பின் 2019, 2021, 2024, 2026 என நான்கு தேர்த்ல்கள் கடந்துவிட்டன.

பாசிச எதிர்ப்பு மக்கள் முகாம் என்ற ஒன்று உருவாகவில்லை என்பது கவலை அளிப்பதுதான் என்றாலும் குறைந்தபட்சம் பாசிச எதிர்ப்புப் போராட்டங்களாவது உறுதியாகவும் விடாப்பிடியாகவும் முன்னெடுக்கப்படுகின்றனவா? என்றால் அதுவும் இல்லை.

பாசிச அபாயம் அல்லது பாசிச அரசு என்றால் என்ன? அது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தீமைகள் என்ன? இவற்றை ஏன் தடுத்தாக வேண்டும்? இவற்றை தடுப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எந்த எல்லை வரை சென்று போராட வேண்டும்? என்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை..

சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத நெருக்கடி இது!

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் வந்துவிட்டது. காசுமீருக்கான சிறப்புச் சட்டம் பிரிவு 370 நீக்கப்பட்டு விட்டது. துறைதோறும்  புதிய சட்டங்களும் சட்டத் திருத்தங்களும் இயற்றப்பட்டு வருகின்றன. மாநிலங்களே காணாமல் போய் அவ்விடத்தில் ஒன்றிய ஆட்சிப் புலங்கள் உருவாகின்றன. மாநில கட்சிகளும் காணாமல் போகின்றன,. ஸ்டேன் சாமிகள் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே கொல்லப்படுகிறார்கள். மாவோவியர்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டுவிட்டனர். நீதித்துறையை ஆர்.எஸ்.எஸ். விழுங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே விழுங்கப்பட்டுவிட்டது. முதல் முறையாக இவ்வாறெல்லாம் நடக்கிறது என்று ஒரு பட்டியலே போடலாம். ஆனால், எதிர்முனையில் இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் பரப்புரைகள், அரங்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடக்கின்றனவா? என்றால் இல்லை.

கடந்த பிப்ரவரி மாதத்தில் பெங்களூரில் நடைபெற்ற பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கு ஒன்றில் மொழியியல் அறிஞரும் காந்தியருமான திரு கணேஷ் டெவி, மோடியின் ஆட்சியில் வரவிருக்கும் ஆபத்துகள் பற்றி சற்றே நிதானத்துடன் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். ”2028 திசம்பர் 12 வரைதான் அவகாசம் இருக்கிறது, அதற்குள் மிக அடிப்படையான சீர்திருத்தங்கள் அனைத்தையும் மோடி அரசு செய்து முடித்துவிடும்” என்று விளக்கிக் கொண்டிருந்தார். தனது உரையின் முடிவில், இந்த அழிவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டக் களத்தில் தன் உயிரைக் கொடுக்கவும் அணியமாக இருப்பதாக அவர் உறுதியளித்தார். அதுவொரு உணர்ச்சிப் பெருக்கான கோசமாக முன்வைக்கப்படவில்லை. தீர்க்கமான மனநிலையில் இருந்து முன்வைக்கப்பட்ட உறுதிமொழியாகும்.

பாசிச பாசக எதிர்ப்பில் தீவிரம் காட்டிய இசுலாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டன. நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான இசுலாமியர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உழவர் போராட்டத்தில் 700 க்கும் மேற்பட்டோர் உயிரைக் கொடுத்தனர். பழங்குடிகள் அடக்குமுறை சட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காசுமீர் செயற்பாட்டாளர்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். லடாக்கியரக்ள் சிறைவாசத்திற்கு அஞ்சாமல், மாநிலத் தகுதி கேட்டு மோடி அரசை திணறடித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் நிலவும் சில போக்குகளை பார்ப்போம்.

மாநில அரசில் திமுக ஆட்சி செய்து கொண்டிருந்த போது, பாசிச பாசக எதிர்ப்பு என்றால்  வரிந்து கட்டிக் கொண்டு திமுகவை ஆதரிக்க வேண்டும்,  திமுக அரசின் மீதான விமர்சனங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஒருசாரார் செயல்பட்டனர். பாசிச பாசக எதிர்ப்பும் திமுக ஆதரவும் எல்லா நேரங்களிலும் ஒன்றல்ல என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

இன்னொருபுறம், தமிழ்நாட்டிலும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டு இசுலாமியர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இவர்களுக்கு அப்பால், ஒன்றிய பாசிச பாசக அரசின் அடக்குமுறைக்கு ஆளாகியிருப்பவர்களைத் தேடித்தான் பார்க்க வேண்டும். அதற்கு காரணம் என்ன?

பாசிச எதிர்ப்புக் காலத்திற்கு உரிய வீச்சான இயக்கங்கள் எதுவும் நடக்கவில்லை. இதுவும் கடந்துபோகும் அல்லது இது மற்றுமொரு காலம் என்பதுபோல் சம்பிரதாயமான இயக்கங்கள், அரங்கக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள், தனித்தனியான அடையாள செயல்பாடுகள், அடையாள போராட்டங்கள் என்பதாகத்தான் பாசிச எதிர்ப்பு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

பாசிசம்… அய்யோ பாசிசம்..என. இணையத்திலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் பேசப்படுகிறது. இசுலாமியர்களுக்கு எதிரான இனவழிப்பு நிகழ்ச்சிநிரல் என்று வரையறுத்துவிட்டு எவ்வித பதற்றமும் இன்றி வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை பெயரளவில் செயல்படுத்தப்படுகின்றன.

பாசிச அரசு ஏற்படுத்தக் கூடிய அழிவைத் தடுப்பதற்கு ஏற்ற வகையில் வழமையான காலங்களைவிட கூடுதல் அர்ப்பணிப்பு, கூடுதல் செயல்பாடு, கூடுதல் நிதிப் பங்களிப்பு என்ற அளவுரீதியான மாற்றங்கள்கூட தென்படவில்லை. விடுமுறை எடுத்துக் கொண்டு கள செயல்பாடுகளில் ஈடுபடுவது அதிகரிக்கவில்லை. அரசியல் முன்னணிகள்,  சின்ன சின்ன அன்றாட விசயங்களைக்கூட பாசிச எதிர்ப்பின் பொருட்டு விட்டுக்கொடுக்க முன்வருவதில்லை.

அடையாளப் போராட்டங்களுக்கு மாறாக தொடர் போராட்டங்களும் கிளர்ச்சிகளும் திட்டமிடப்படுவதில்லை. ஒருநாள் கைது போராட்டங்கள் கூட மிகவும் குறைந்துவருகின்றன. சிறை நிரப்பும் போராட்டங்களைப் பற்றி கேட்கவே  வேண்டியதில்லை.

உண்மையிலேயே பாசிச அபாயத்தை முறியடித்தாக வேண்டும் என்ற அக்கறை ஓர் அரசியல் செயற்பாட்டாளருக்கு இருக்கிறதென்றால் அதற்கான அளவுகோல் அவர் திமுகவையோ தவெகவையோ ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? என்பதல்ல, ஒருவர் தமது அர்ப்பணிப்பை உயர்த்தி, நேரம், உழைப்பு, நிதி ஆகியவற்றில் முன்னெப்போதையும் விட அதிகமாக செயல்படவும் ஈகம் செய்யவும் முன்வருகிறாரா? என்பதில்தான் இருக்கிறது.

பேச்சில் பாசிசம்.. பாசிசம் … என்று பதறிவிட்டு, செயலில் மந்தமாக இருப்பது என்பது பாசிசமாவது? பாயாசமாவது ? என்று கேட்பதற்கு ஒப்பானதுதான்.

பாசிசம் ஏற்படுத்தக்கூடிய அழிவுகள் இன்னதென்று அறிவுவழிப்பட்டு உள்வாங்கிய ஒருவர், அதை தடுப்பதற்கு தம்மால் இயன்ற வகையில் உழைக்கவும் ஈகம் செய்யவும் முன்வர வேண்டும்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW