தவெக ஆட்சியை தடுக்க பாசிச பாஜக சூழ்ச்சி? கூட்டறிக்கை பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் அடாவடி!
தமிழ்நாட்டு அரசியலைக் குழப்பும் பாசிச பாசக அரசின் சூழ்ச்சியை சனநாயக ஆற்றல்கள் முறியடிக்க வேண்டும்!
கூட்டறிக்கை
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த நிலையில், முதற்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டியது ஆளுநரின் அரசமைப்புச் சட்ட கடமையாகும். ஆனால் ஆளுநர் இராசேந்திர விசுவநாத் அர்லேக்கர், பெரும்பான்மையைத் தன்னிடம் மெய்ப்பித்துக் காட்டுமாறு கேட்கிறார். சட்டப்படி குறித்த காலவரைக்குள் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் மெய்ப்பித்தால் போதுமானது. பாசிச பாசக அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர், அரசமைப்புச் சட்டத்திற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் மரபுக்கும் எதிராக செயல்படுகிறார். குறிப்பாக தவெகவுக்கு அடுத்தபடி அதிக இடங்களைப் பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தவெக ஆட்சி அமைக்கும் உரிமைக்கு ஆதரவாக இருப்பதாக தெளிவுபடுத்திவிட்ட நிலையில், ஆளுநரின் இச்செயல் மிகுந்த கண்டனத்திற்கு உரியது.
இன்றளவும் தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாமல் இருக்கும் பாசக, ஏனைய மாநிலங்களில் செய்தது போல் தமிழ்நாட்டிலும் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்கி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எண்ணிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் நோக்கிலே பாசிச மோடி அரசு சூழ்ச்சிகளை செய்து வருகிறது;
பாசிச பாசக அரசுக்கு எதிரான அனைத்து சனநாயக ஆற்ற்ல்களும் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க விடாமல் குழப்பும் பாசிச பாசகவின் இந்த சூழ்ச்சியை முறியடிக்கப் போராட வேண்டும்,
பாசிச பாசகவின் சித்து விளையாட்டுகளுக்கு வழி ஏற்படுத்தித்தரும் வகையில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியைத் திணித்து அரசியல் நிலையற்றதன்மை உருவாகாமல் தடுக்கும் பொருட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.
குறிப்பாக திமுக, சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, ஐயூஎம்எல், மமக, மஜக, மதிமுக, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, மநீம உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளும் ஏனைய பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்களும் மக்கள் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு குறுக்கே நிற்கும் பாசிச பாசகவின் ஆளுநர் வழிப்பட்ட சூழ்ச்சிக்கு எதிரான கண்டனங்களை எழுப்பி போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
கொளத்தூர் தா.செ. மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
செந்தில், ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
மணி, மாநில அமைப்பாளர், பாட்டாளி வர்க்க சமரன் அணி
கே. பாலகிருஷ்ணன், இந்திய ஒற்றுமை இயக்கம்
மா.சேகர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
கண. குறிஞ்சி, தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை
தொடர்புக்கு: 9941931499