2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் – சிறு குறிப்பு

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன.
முதன்மையாக இத்தேர்தலில் நான்குமுனைப் போட்டி நடைபெற்றது.
- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ( காங்கிரசு, சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, தேமுதிக, மமக, ஐயூஎம்எல், மஜக, எஸ்.டி.பி.ஐ., மநீம, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி, கொங்கு மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 21 கட்சிகளின் கூட்டணி)
- அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ( பாசக, பாமக, அமமுக, தமாக, ஐ.ஜே.கே,, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள்)
- தமிழக வெற்றிக் கழகம் ( TVK)
- நாம் தமிழர் கட்சி.
தேர்தலுக்கு முன்பு சிறப்பு தீவிர வாக்காளர் மீளாய்வு ( SIR ) நடைபெற்று அதில், இறுதிசெய்யப்பட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67,07,380 கோடி, நீக்கப்பட்ட வாக்காளர் 74,07,207 இலட்சம் ஆகும்.
ஒன்றிய அரசில் பாசிச மோடி – அமித் ஷா சிறுகும்பல் ஆட்சி நடந்து வரும் பின்னணியில் இந்த சட்டப்பேரவை தேர்தலை பாசிச இயக்கத்திற்கும் பாசிச எதிர்ப்பு இயக்கத்திற்கும் இடையிலான போராட்டக் களமாக கருதிப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாசக வெற்றி பெறுவது என்பது பாசிச பாசக அரசை மேலும் வலுபடுத்த உதவுமே ஒழிய தமிழ்நாட்டு மக்களின் சன்நாயகத்திற்கு உதவப் போவதே இல்லை.
பாசிச பாசக – அதிமுக –கூட்டணியின் ஆட்சி அமைவது என்பது பாசிச ஆட்சியை வலுப்படுத்திவிடும் என்பதே முதற்பெரும் கவலையாகும்.
திமுக ஆட்சி தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதல்ல இந்த தேர்தலின் மையக் கேள்வி. இந்த தேர்தலின் மையக் கேள்வி என்பது பாசிச பாசக – அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதா? கூடாதா? அல்லது பாசிசம் வலுபெறுவதா? வலுக்குன்றுவதா என்பதே ஆகும். இந்த தேர்தலில் நமது முதல் பெரும் அறைகூவல் என்பது பாசிச பாசக – அதிமுக கூட்டணி நேரடியாகவோ மறைமுகமாகவோ தனித்தோ கூட்டாகவோ ஆட்சியில் பங்குபெற்றுவிடக் கூடாது என்பதால் அக்கூட்டணி அடியோடு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.
யாருக்கு வாக்களிப்பது? என்பது எது சரியான கொள்கை உடைய அணி, எது சமரசமற்ற அணி என்பதில் மட்டும் தங்கி இருக்கவில்லை. சமரசப் போக்குடன் குறைந்தபட்ச பாசிச எதிர்ப்புக் கொண்ட அணிதான் வலிமையாக இருக்கிறது என்றால் அதைதான் ஆதரித்தாக வேண்டும் என்ற கள யதார்த்ததில் இருக்கிறோம். அவ்வகையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் பாசக அணியைத் தோற்கடிக்கும் வலிமையைக் கொண்டிருக்கிறது என்று மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த அடிப்படையில் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களால் பின்வரும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்!
திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்!
கூடவே, பாசக இல்லாத சட்டப்பேரவையை உருவாக்குவோம் என்பது துணை முழக்கமாக முன்வைக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள்:
தவெக – 108 ; திமுக – 59 ; அதிமுக – 47 ; காங்கிரசு – 5; பாமக 4 ; ஐயூஎம்எல் – 2, சிபிஐ – 2, சிபிஐ(எம்) – 2, விசிக – 2, மதிமுக – 1, தேமுதிக – 1, அமமுக – 1, பாசக 1
வாக்கு விழுக்காடு:
தவெக – 34..92%
திமுக – 24.19 %
அதிமுக – 21.21%
27 இடங்களில் போட்டியிட்ட பாசக ஒரே ஒரு இடத்தில் ( உதகை) மட்டுமே வெற்றி பெற்றது.
தவெக தனிப்பெரும் கட்சியாக வாக்குகளைப் பெற்றது.
பாசக – அதிமுக கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
திமுக கூட்டணி இரண்டாவது இடத்திற்கு வந்தது.
தேர்தல் முடிவுகள்:
இத்தகைய தேர்தல் முடிவு முற்றிலும் எதிர்பார்க்கப்படவில்லை. அதிகபட்சமாக 25% வரை விஜய் வாக்குகளைப் பெறுவார் என்றே மதிப்பிடப்பட்டது. ஆனால், விஜய் 34.92 % வாக்குகள் பெற்றுவிட்டார்.
விஜய் திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து திமுகவின் வெற்றிக்கு வழிவகுப்பார் என்றும் மதிப்பிடப்பட்டது. ஆனால், அனைத்து தரப்பு வாக்குகளையும் ஈர்த்து அவரது கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக இலகுவில் வெற்றி பெறும் என்ற கணிப்புகள் பொய்யாகிப் போயின.
தேர்தல் முடிவுகள் இப்படி அமைந்ததற்கான காரணங்கள்:
- விஜய் ஆதரவு அலை ஒன்று தமிழ்நாட்டில் வீசியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பே இதை கணிக்க முடியாமல் போனதற்கு காரணம் களத்தில் வீசிய இந்த அலையை கட்சி ஆதரவு ஊடகங்களில் ( அச்சு, காட்சி, இணையம்) மட்டுப்படுத்திக் காட்டியதுதான்.
- பாசிச பாசக எதிர்ப்பை மையமிட்டு இத்தேர்தலை வெகுமக்கள் அணுகவில்லை. மாறாக வழக்கமான மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலாகப் பார்த்தே மக்கள் வாக்களித்துள்ளனர். தில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான போர் என்று திமுக முன்வைத்தது. பாசிச எதிர்ப்புக் களமாக தேர்தலைப் பாவிக்கும் முடிவுவை வந்தடைவது முற்போக்கு இயக்கங்களுக்கே கூட கடினமான ஒன்றாக இருக்கும் போது, வெகுமக்கள் வெறுமனே மாநிலத் தேர்தலாக பார்த்து வாக்களித்ததில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. நம்முடைய அகநிலைப் பார்வை காரணமாகத்தான் தேர்தலுக்கு முன்பே இதை மதிப்பிட முடியாமல் போனது.
- பெரிய கூட்டணியாக திமுக காட்சி அளித்தாலும் தேர்தலில் இடங்களைப் பங்கிடும் நேரத்தில் அது பசையற்றுப் போனது. காங்கிரசின் பேரம், கம்யூனிஸ்ட்களுக்கு திமுக இடங்களைக் குறைத்தது, விசிகவுக்கு ஒப்பீட்டளவில் குறைவான இடங்கள் ஒதுக்கியமை அல்லது அத்தகைய கருத்துருவாக்கம்,
- கிறித்தவர், இசுலாமியர் உள்ளிட்ட சமய சிறுபான்மையினர் வாக்குகளில் ஒரு பகுதி தவெகவிற்கு போயுள்ளது.
- விஜய் உடைய சினிமா கவர்ச்சியின் காரணமாக வாக்களித்த ஓர் இளம் தலைமுறை வாக்காளர்கள்.
- மக்களுடைய மெய்யான வாழ்க்கைப் பிரச்சனைகளில் இருந்து ஒரு மாற்று எனக் கருதி வாக்களித்தவர்கள்
- போதிய அரசியல் பிரதிநிதித்துவம் தமக்கு இல்லை என்பதால் மீனவர்கள் கணிசமாக வாக்களித்தமை
- அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், தற்காலிக பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், 5 ஆண்டுகள் பணி செய்தாலே பணி நிரந்தரம், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட வாக்குறுதிகள் இப்பிரிவினரை ஈர்த்து வாக்களிக்க வைத்துள்ளது.
- கிராம்ப்புறத்தை விடவும் ஒப்பீட்டளவில் நகர்ப்புற வாக்குகள் அதிகமாக விழுந்துள்ளன. உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தி கொண்டே சமூக நீதியை நிலைநாட்டுவதாக கூறிக் கொள்வதில் உள்ள முரண்பாடு. நகர்ப்புற நடுத்தர, கீழ் நடுத்தர, அடித்தட்டு மக்களின் தலையில் ஏற்றப்பட்டுள்ள பொருளியல் சுமைகள் அப்பிரிவினரை தவெகவுக்கு வாக்களிக்க நிர்பந்தித்து உள்ளன
- போதை புழக்கம், குடிப்பழக்கம், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை திமுக ஆட்சியோடு நேர்க்கோட்டில் தொடர்புபடுத்திய பரப்புரையின் மூலம் ஒரு தோற்றப்பட்டை (Perception) உருவாக்கி, இதன் பெயராலும் திமுக எதிர்ப்பு வாக்குகள் தவெகவுக்கு போயுள்ளன.
- அரசியல் பிரதிநிதித்துவம், வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் திராவிட கட்சிகள் நீண்ட காலமாகவே காட்டிவரும் அலட்சியம் பட்டியலின மக்களில் ஒரு சாராரை தவெகவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மொத்தத்தில் தவெகவுக்கு விழுந்த வாக்குகள் சினிமா கவர்ச்சிக்காக விழுந்துள்ளன என்பது பகுதி உண்மையே. மற்றபடி முந்தைய ஆட்சிகளால் பாதிக்கப்பட்டு, திட்டவட்டமான கோரிக்கைகளை கொண்ட சாதிக் குழுக்கள், வர்க்கப் பிரிவினரின் மாற்றை நோக்கிய 30 ஆண்டு கால ஏக்கம் தவெக வுக்கு வாக்குகளாக விழுந்துள்ளன 1990 களில் இருந்து வைகோ தலைமையிலான மதிமுக, விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கமலஹாசன் தலைமையிலான மநீம, 2016 இல் அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி என மூன்றாவது கட்சியாக / கூட்டணியாக அரசியல் களத்திற்கு வந்தன. எப்போதும் மூன்றாவது கட்சி / அணிக்கு 15 – 17% வாக்குகள் விழுந்து கொண்டிருந்தன. இன்றைய அரசியல் சூழலைப் பொறுத்தவரை கருணாநிதி ஜெயலலிதா போன்ற அனுபவமிக்க ஆளுமைகள் உயிருடன் இல்லாதது, அதன் விளைவாக, அதிமுக சிதறுண்டு பலவீனமடைந்திருப்பது, மாற்று என்று புறப்பட்டு வந்த கட்சிகளான மதிமுக, தேமுதிக, மநீம உள்ளிட்டவை அம்முயற்சியைக் கைவிட்டு கரைந்து போனமை, தேர்தலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்தாத பாசிச பாசக அரசின் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் சேர்ந்து விஜய்க்கு இந்த பாய்ச்சலை வழங்கியிருக்கிறது. அதாவது, சாதாரணமாக ஒரு மூன்றாவது கட்சி பெற்று வந்த 15 – 17% வாக்குகள் என்பதற்கு மாறாக சுமார் 35% வாக்குகளை வாரி எடுத்தது தவெக.
வாக்கு திருட்டு, வாக்காளர் மீளாய்வு ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளனவா? என்பது பற்றி அறுதியிட்டு சொல்வதற்கு திமுக, அதிமுக போன்ற கட்சிகளால்தான் முடியும். அவர்கள் ஆய்வு செய்து இது குறித்து முன்வைக்க வேண்டும்.
மொத்தத்தில் தமிழக அரசியல் திமுக எதிர் அதிமுக என்ற நிலையில் இருந்து திமுக எதிர் தவெக என்ற நிலைக்கு மாறி கொண்டிருக்கிறது. தவெக அதிமுகவைவிடவும் முற்போக்காக இருப்பின் பொதுவில் அது தமிழ்நாட்டுக்கு நல்லது. திமுகவைவிடவும் தவெக முற்போக்காக இருக்குமா? அல்லது ஒப்பீட்டளவில் திமுகவைவிடவும் குறைவாக தவெக சமரசம் செய்து கொள்ளுமா? என்பதை தவெக ஆட்சி நடத்தும் போதுதான் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியும்.
இதேநேரத்தில் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து காங்கிரசு கட்சி மதச்சார்பற்ற மக்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. வகுப்புவாத ஆற்றல்களோடு கூட்டணி வைக்கக் கூடாது என்று நிபந்தனை வைத்துள்ளது.
இது மட்டுமின்றி, அடுத்தடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளது. திமுக காங்கிரசு இரண்டகம் செய்துவிட்டது என்று தீர்மானம் போட்டுள்ளது. அனைத்திந்திய அளவில் பாசிச எதிர்ப்பு அணிசேர்க்கைக்கு இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!
சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, ஐயுஎனெல் ஆகிய மதச்சார்பற்ற கூட்டணியில் தொடர்ந்து கொண்டே தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளன.
திமுக எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அறிவித்துவிட்டது. அதேநேரத்தில், திராவிடக் கட்சியின் ஆட்சி என்ற ஏரணத்தின் பெயரால் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து ஓர் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சி நடைபெற்றிருப்பது அம்பலமானது. இது தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை காலில் போட்டு மிதிப்பது என்ற திறனாய்வு எழுந்தது. கூடவே, காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழம், நீட் விலக்கு, இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற தமிழ்நாட்டுப் பிரச்சனைகளில் ஓரணியாக நிற்க முன்வராத இக்கட்சிகள் பதவி அரசியலுக்காக ஒரணியில் நிற்க முன்வருந்திருப்பது இக்கட்சிகளின் கொள்கை பிடிப்பை படம்பிடித்து காட்டியது.
அதிமுகவில் தெளிவான விரிசல்கள் தெரிய தொடங்கிவிட்டன. சிவி சண்முகம் தலைமையில் ஓர் அணி உருவாகிவிட்டது. தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் அதிமுக கிட்டத்தட்ட ஒரு வட்டாரக் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தப் பட்டதை திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இத்தகைய தேர்தல் முடிவுகளில் ஆர்.எஸ்.எஸ். இன் பங்கும் இருக்கக் கூடும்.
மொத்தத்தில், தவெக பெற்ற வாக்குகள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
எப்போதும்போல், அமித் ஷா ஆளுநர் வழியாக தவெக ஆட்சி அமைப்பதற்கு முட்டுக்கட்டைப் போட்டுக்கொண்டிருந்தார். இறுதியில், காங்கிரசு ( 5 ) + சிபிஐ ( 2 ) + சிபிஐ(எம்) ( 2 ) + விசிக ( 2 ) + ஐயூஎம்எல் ( 2 ) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ( 107) ஆட்சி அமைக்கிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். பதவி ஏற்பு மேடையில் காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விஜய் உடன் அமர்ந்திருக்கிறார்.
பாசிச பாசக அரசு இந்திய அரசியலில்ன் மையம். அது ஒரு கருத்தியல் கட்சி, தமது கருத்தியல் அடிப்படையில் இந்த நாட்டின் அரச கட்டமைப்பை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சந்தை என்ற அடிப்படையில் இந்நாட்டை இந்து, இந்தி, இந்துராஷ்டிரம் என்று மாற்றிக் கொண்டிருக்கிறது.
எந்தக் கட்சியானாலும் பாசிச பாசக அரசை முதன்மை முரண்பாடாக கருதிப்பார்த்து எதிர்ப்பு அரசியல் செய்யத் தவறினால் அது அக்கட்சியின் அழிவில்போய் முடியும். அதிமுக பாசக எதிர்ப்பைக் கைவிட்டதால்தான் இருத்தலுக்கான தனது பொருத்தப்பாட்டை படிப்படியாக இழந்து வருகிறது.
தவெக, அதிமுக, திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியானாலும் அது பாசிச பாசக அரசை எதிர்க்க மறுத்தால் இருத்தலுக்கான தமது ஏரணத்தை இழந்துவிடும்.
பாசிச பாசகவை ஆட்சியில் இருந்து கீழிறக்காமல், இந்தியாவில் மாற்றத்திற்கோ சனநாயகத்திற்கோ மாநிலத்தில் நல்லாட்சிக்கோ, மாநில கட்சிகளின் இருப்புக்கோ வழியில்லை!