படமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்!

15 Aug 2019

பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலைப் பெற்றதோடு அரச தேசியமாக பரிணமித்த இந்திய தேசியத்தின் பயணம் பாசிச அரச வடிமெடுப்பதற்கு அடிப்படையாய் நிற்கிறது. மாநிலங்களின் ஒன்றியம் என்ற பாசாங்குகளின் திரை விலகி ஒரே தேசம், ஒற்றையாட்சி என்ற கொக்கரிப்புகள் கேட்கின்றன. இது இப்படி முடியக்கூடும் என்று சனநாயகத்தில் பற்று கொண்டோர் அரசியல் நிர்ணய சபையிலேயே எச்சரித்தனர். கூட்டாட்சி குறித்த விவாதத்தின் போது,

” மகாத்மா காந்தி தமது வாழ்நாள் முழுவதும் அதிகபட்ச அதிகாரக் குவிப்பு சர்வாதிகாரத்திலும் பாசிசக் கொள்கைகளை நோக்கியும் கொண்டு போய்விடும் என்று வலியுறுத்துயதை நாம் மறந்துவிட்டோம். சர்வாதிகாரத்திற்கும் பாசிசத்திற்கும் எதிராகப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான். ஆனால், சட்டத்தின் வாயிலாக அதிகாரத்தைக் குவித்து வைப்பதன் இயற்கையான விளைவாக நம் நாடு படிப்படியாக பாசிசத்தை நோக்கிச் சென்றுவிடும்” என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தாமோதர் சொரூப் சேட் அரசியல் நிர்ணய சபையில் தீர்க்கதரிசனத்தோடு கருத்துச் சொன்னார்.

”எல்லா முக்கியமான விவகாரங்களிலும் மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்தால், மத்திய அரசின் கொள்கைக்கே பணிந்துபோகுமாறு மாகாணங்கள் வற்புறுத்தப்பட்டால் இந்த நாடு சர்வாதிகாரத்தால் விழுந்துவிடக் கூடிய கொடுமையான ஆபத்து ஏற்படும்.” என்று பண்டிட் இருதயநாத் குன்ஸ்ரூ எச்சரித்தார்..

”இந்த அரசாங்கம் கூட்டரசாக இருக்க வேண்டும், ஒற்றையாட்சியாக இருக்கக் கூடாதென்று நீங்கள் கருதுவீர்களானால், எதிர்காலத்தில் ஒரு அதிகார வெறிப்பிடித்தக் கட்சி இந்த அரசை ஒற்றையாட்சியாக மாற்றி, பாசிச, எதேச்சதிகார அரசாக மாற்றுவதைத் தடுக்க எண்ணினால், யூனியன்(union) என்பதற்குப் பதிலாக ‘கூட்டாட்சி’(federation) என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்” – என்று சொன்னார் மக்பூப் அலி பைக் சேக் பகதூர். அவர் எச்சரித்த அந்த ’எதிர்காலம்’ வந்துவிட்டது. அவர் வரக்கூடும் என்று கருதிய அதிகார வெறிப்பிடித்தக் கட்சி என்ற இடத்தைப் பா.ச.க. பிடித்துவிட்டது. அது முழு ஒற்றையாட்சியாக மாற்றி பாசிச அரசாக உருப்பெற்று வருகிறது.

இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரே பிரதிநிதியாக அரசியல் நிர்ணய சபை அரசமைப்பு சட்டத்தில் காங்கிரசு போட்ட நச்சு விதைகள் இன்று பெருமரமாய் கிளைப் பரப்பி நிற்கிறது. உலக நிதி மூலதன நெருக்கடியின் பின்புலத்தில் இந்தியாவில் இந்துத்துவ பாசிசமாய் உருப்பெற்று கொண்டிருக்கிறது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற மோடியின் வாக்குறுதி கடலில் வீசப்பட்டது. 500 ரூ, 1000 ரூ தாள்கள் செல்லாதென அறிவித்து நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு தொழில் சிதைக்கப்பட்டது. அதற்கு ’ஒரே தேசம், ஒரே வரி’ என்று விளக்கம் சொல்லப்பட்டது. வேலையற்ற இளைஞர் பட்டாளத்தை நோக்கி பக்கோடா விற்றுப் பிழைக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. நாடெங்கும் இஸ்லாமியர்கள் மீதான வன்முறை அன்றாட செய்தியானது. மாநில உரிமைகள் ஒவ்வொன்றாய்ப் பறிக்கப்படும் பொழுதும் ’ஒரே நாடு, ஒரே நாடு’ என்று ஓங்கி ஒலித்தது. ’வளர்ச்சி நாயகன்’ என்ற மோடியின் பட்டம் புயற் காற்றில் அடித்து வீசப்பட்டது போல் ஆனது. இத்தனைக்குப் பிறகும் இரண்டாம் முறையாகப் பா.ச.க. ஆட்சிக் கட்டிலில் ஏறியது.

மிருகப் பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பா.ச.க. அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு கூடாக இந்தியாவின் அரசியல் வரலாற்றின் திசைப் போக்கை தீர்க்கமாக செலுத்தி வருகிறது. திசைப் போக்கில் எந்த தடுமாற்றங்களும் தலம்பல்களும் பின்வாங்கல்களும் இல்லை. ஆணியடித்தாற் போல் ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே குடும்ப அட்டை, ஒரே ஆற்றுநீர் தீர்ப்பாயம் என அடுத்து அடுத்த சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரல்கள் கடலலையில் மூழ்கும் இரைச்சல் ஆகிவிடுன்றன. மோடி-அமித் ஷா- அஜித் தோவல் கூட்டணி பெருவேகத்தில் வரலாற்றுப் படகை ஒரு திசையில் ஓட்டிச் செல்கின்றது.

கடந்த ஐந்தாண்டுகளில் தலித் மக்கள் மீதான வன்முறை பெருகியிருக்கின்றது. பெண்கள் மீதான வன்முறையும் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளின் நிதி அறிக்கையிலும் தலித் மக்கள் மற்றும் பெண்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியைக் கணிசமாக குறைத்துவிட்டது நடுவண் அரசு. போராட்டக் களங்களில் துப்பாக்கிச் சூடுகள் இயல்பானதாகிவிட்டன. தானியங்கி தொழில்துறையில் இலட்சம் பேருக்கு மேல் வேலையிழந்துள்ளனர். ஆலையில் வேலையில்லை ஆகையால் விடுப்பு எடுத்து செல்லுமாறு தானியங்கி ஆலை நிர்வாகங்கள் சொல்கின்றன.இரயில்வே மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கச் சொல்கிறது நிதி அறிக்கை. 99% கார்ப்பரேட் நிறுவனங்களை 25% வரி ஏற்பாட்டிற்குள் கொண்டு வருகிறது நிதி நிலை அறிக்கை. அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் குழுமங்களின் சொத்துக் கணக்கு உயர்கின்றது, அவர்கள் மோடியின் ஆட்சியில் குதூகலிக்கின்றனர்.

என்.ஐ.ஏ. ஊபா, மோட்டார் வாகன சட்ட திருத்தம், ஆர்.டி.ஐ., அணைப் பாதுகாப்பு மசோதா என மக்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் பலவும் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆயினும் பெருமுதலாளிகளைப் போலவே மக்களும் வெற்றிக் களிப்புடன் இருக்கின்றனர். காஷ்மீருக்கான சிறப்பு  அந்தஸ்து நீக்கப்பட்டதில் இந்திய மக்கள் மோடி-அமித்ஷா கூட்டணியைப் பாராட்டி மகிழ்கின்றனர். எல்லாத் தரப்பின் மீதான தாக்குதலுக்குப் பின்னாலும் இந்திய தேசியக் கயிற்றின் வழியாக மக்களை இறுக்கிக் கட்டிவிடுகிறது பா.ச.க. புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கல்வி அமைப்பில் இருந்து பெருந்திரளான மக்களை விரட்டியடிக்கப் போகிறதே என்றால்  ’ஒரே தேசம், ஒரே கல்விக் கொள்கை’ என்ற பதிலில் எதிர்ப்புகள் அடங்கிப்போகின்றன.  அணைப் பாதுகாப்பு மசோதா தமிழ்நாட்டிற்கு முல்லைப் பெரியாறு அணை மீது இருக்கும் உரிமையைப் பறிக்கின்றது என்றால் ’ஒரே தேசம்’ என்று பதில் தரப்படுகிறது. தலித் மக்கள் மீதான வன்முறையைப் பற்றி கேள்வி எழுப்பினால், எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தை வலுப்படுத்தக் கோரினால் தேச ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்று சொல்லப்படுகிறது. உழவர்களின் துயரம், தொழிலாளிகளின் அவலம், சரியும் பொருளாதாரம், மாநில உரிமைகள் மீதான தாக்குதல்கள் என எல்லாவற்றையும் ’இந்திய தேசப் பற்று’ என்பதன் பெயரால் புதைத்துவிடப் பார்க்கிறார்கள்.

நீட் தேர்வில் விலக்கு கேட்ட சட்ட மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்ட சேதி கூட தெரியாத நிலையிலேயே இரண்டாண்டு காலமாக தமிழகம் இருந்தது. இன்னும் பத்து பதினைந்து ஆண்டுக் காலத்தில் பொதுப் பட்டியல் என்பது நடுவண் அரசின் பட்டியலாக மாறிவிடும்” என்று 6-11-1948 இல் அரசியல் நிர்ணய சபையில் கே.சந்தானம் பேசினார். கல்விப் பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதால் சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டம் இந்திய தேசியத்தின் பெயரால் பொருளில்லாமல் ஆக்கப்பட்டது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தின் மீதேறி ஆளுநர் அமர்ந்து கொண்டார். மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வந்தாலும் ஆளுநரைக் கொண்டு அதையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது நடுவண் அரசு. மாநில அரசின் முடிவுக்கு ஒப்புதல் தரலாம், மறுக்கலாம் அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால், மூன்றில் எதை செய்கிறேன் என்று சொல்லாமலே எந்த  மசோதாவையும் கால வரம்பின்றி ஆளுநர் கிடப்பில் போடலாம். அப்படி அவர் இராஜ்பவனத்திலே அந்த மசோதாவை வைத்திருந்தால், அவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம், இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இதைத் தான் இப்போது எழுவர் விடுதலையிலும் ஆளுநர் பன்வாரி லால் புரோகித் செய்துவருகிறார். ஆளுநரிடம் மாநில அரசின் முடிவுகளுக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்ற அரசமைப்பு சட்ட விதியை எதிர்த்து “மாநில அதிகாரத்துக்கு இத்தகைய அவமதிப்பு வேறு எந்தக் கூட்டாட்சியிலும் கிடையாது. 1935 ஆம் ஆண்டுச் சட்டத்தில் கூட கிடையாது” என இந்தியாவில் கூட்டாட்சியியல் என்ற நூலின் ஆசிரியர்  அசோக் சந்தா விளக்குகிறார். இன்று மக்களால் தெரிவு செய்ய சட்டப் பேரவை மதிப்பற்று இருக்கிறது. வாக்களித்த மக்களும் அவர்தம் விருப்பங்களும் மதிப்பற்று இருக்கின்றன. மக்களின் வாக்குகளுக்கும் விருப்பங்களுக்கும் மதிப்பில்லாத இடத்தில் சனநாயகம் உயிருடன் இருக்குமா? தமிழர்களின் முடிவெடுக்கும் உரிமையை, தமிழர்களின் சனநாயகத்தைப் படுகுழியில் புதைக்கிறது இந்திய தேசியம்!

சட்டசபை தீர்மானங்களுக்கு மதிப்பில்லை.  பா.ச.க. வை தமிழக மக்கள் நிராகரித்தார்கள். தமிழக மக்கள் மட்டுமல்ல, கேரளாவும் பஞ்சாப்பும் மேற்கு வங்கமும் ஆந்திரமும் நிராகரித்தது. ஆனாலும் பா.ச.க. வால் ஆட்சி அமைக்க முடியும் என்பதுதான் இந்தியக் கூட்டாட்சி! தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் தேர்வு திணிப்பதை எதிர்த்தனர்; உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுப்பதை எதிர்த்தனர்; ஒரே ஆற்றுநீர் தீர்ப்பாயத்தை எதிர்த்தனர், ஆனாலும் அவை சட்டத் தகுதியைப் பெற முடிகிறது. அமெரிக்கா போன்ற கூட்டாட்சி நாடுகளில் இருப்பதைப் போல் இந்தியாவின் மாநிலங்களவையில் எல்லா மாநிலங்களுக்கும் சமப் பிரதிநித்துவம் கிடையாது. மாநிலங்கள் அவைக்கு உத்தர பிரதேசம் 31 உறுப்பினர்களை அனுப்புகிறது, அஸ்ஸாம் 7, தமிழ்நாடு  18, கேரளா 9. ”உலகத்திலே இருக்கிற இரண்டாவது அவைகளிலேயே மிகவும் பலவீனமானது நம்முடைய மாநிலங்கள் அவைதான்.  ”நமது அரசியல் அமைப்புச் சட்டப்படி மாநிலங்கள் பூஜ்ஜியமாக இருக்கும் போது மாநிலங்களின் அவை மட்டும் எப்படிப் பலம் வாய்ந்ததாக இருக்க முடியும்” என்று எம்.எம்.சங்க்தீர் என்ற அரசியல் துறை பேராசிரியர் 1969 இல் கேள்வி எழுப்புகிறார். ஆனால், இப்போதும்கூட நம்முடைய தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி-அமித் ஷாவைக் குறை சொல்கிறார்களே ஒழிய இந்திய தேசியத்தின் பெயரால் கூட்டாட்சியைக் கொலை செய்திருக்கும் அரசமைப்புச் சட்டத்தை நோக்கி விரல் நீட்ட மறுக்கின்றனர்.

370 ஐ ரத்து செய்ததோடு ஜம்மு-காஷ்மீரை ’லடாக்’ என்றும் ’ஜம்மு-காஷ்மீர்’ என்றும் இரு துண்டங்களாக வெட்டிப் பிளந்து ஜம்மு-காஷ்மீரை ஒன்றியப் பிரதேசமாக கீழிறக்கிவிட்டது மோடி-அமித் ஷா-அஜித் தோவல் கூட்டணி. அந்த மாநில அரசு கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடக்கும் போது எப்படி இது சாத்தியமானது? அரசமைப்புச் சட்டத்தில் இதற்கு இடம் உண்டா? என்றால் உண்டு. அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றி ஒரு மாநிலத்தில் இருந்து கொஞ்சம் பிராந்தியத்தை எடுத்தோ, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் பகுதிகளை இணைத்தோ ஒரு புதிய மாநிலத்தை உருவாக்கலாம். ஒரு மாநிலத்தின் பரப்பளவை விரிவாக்கலாம் அல்லது குறைக்கலாம், எந்த மாநிலத்தின் எல்லையையும் மாற்றி அமைக்கலாம், எந்த மாநிலத்தின் பெயரையும் மாற்றலாம். அந்த மாநிலத்தின் சட்டசபையிடம் இது குறித்து கருத்து கேட்கலாம். ஆனால், அம்மாநில சட்டசபை ஏற்காவிட்டாலும் நடுவண் அரசால் இதை செய்ய முடியும். ஒன்றிய-மாநில உறவுகள் பற்றி எழுதும் கே.சந்தானம் , ‘நாடாளுமன்றத்தில் ஒரு சாதாரண மெஜாரிட்டியால் ஒரு மாநிலத்தின் பிராந்தியம் ஒழிக்கப்பட்டுவிடக் கூடிய நிலை இருக்கும் போது, நடுவண் அரசுக்கு, மாநில அரசுகள் கீழ்ப்படிந்தவை என்கிற தத்துவம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முழுவதிலும் இழையோடிக்கொண்டிருப்பதில் என்ன வியப்பு இருக்கிறது?’ என்று கூறுகிறார். இது பற்றி மாநில சுயாட்சி நூலில் அதாவது 1973 ஆம் ஆண்டில் விளக்கும் முரசொலி மாறன், “எடுத்துக்காட்டாக, நாளை தமிழ்நாடு முழுவதும் துண்டு துண்டாகப் போடப்பட்டு பக்கத்து மாநிலங்களுடன் இணைக்கப்படலாம், அல்லது தமிழ்நாடு இனி ஒரு மாநிலமே அன்று, பாண்டிச்சேரி போல மத்திய அரசிற்குட்பட்ட பிராந்தியம் என்றும் ஆக்கப்படலாம். அரசியல் பகைமை காரணமாக இப்படியெல்லாம் நடக்காது என்பதற்கு என்ன உறுதி?’ என்று கேட்கிறார். இன்றைக்கு இதுதான் காஷ்மீருக்கு நேர்ந்துள்ளது. நாளை தமிழகத்திற்கும் மேற்கு வங்கத்திற்கு நேரலாம். முதலில் இந்திய தேசியத்தின் பெயரால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கத்தை ஆதரித்தவர்கள்கூட மாநிலத்தை உடைத்ததையும் ஒன்றியப் பிரதேசமாக அறிவித்ததையும் எதிர்க்க காண்கிறோம். முதலில் ஆதரித்த  நவ நிர்மாண் சேனா பின்னர் ஓரிரு நாள் கழித்து மராட்டியத்தையும் இப்படி பிளந்துவிட்டால் என்ன செய்வது? என்று பதறியது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியது போல் சிக்கிமுக்கான 374 பிரிவையும் ரத்து செய்துவிட்டால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியது சிக்கிம்.  இந்திய தேசியத்தின் பெயரால் ஜம்மு-காஷ்மீர் மீதான அடக்குமுறையை ஆதரித்தவர்கள் அது நாளைக்கு நம் கண்ணையும் குத்தக் கூடும் என்று உணர்ந்தவுடன் பதறுகின்றனர்.

ஓக்கிப் புயலில் மீனவர்களைக் காப்பதற்கு முன் வராத இந்திய தேசியம், கஜா புயலின் துயரத்தில் பங்கு பெறாத இந்திய தேசியம், தமிழ்நாட்டு வரிப் பணத்தைப் பல்லாயிரம் கோடிக்கணக்கில் சுருட்டிச் செல்லும் இந்திய தேசியம் காஷ்மீர் மக்களின் கழுத்தை நெரிப்பதற்கு தமிழர்களை அறைகூவி அழைக்கின்றது. காஷ்மீர் மக்களை நசுக்குவதில் பங்காளியாகச் சொல்லி கேட்கின்றது.

பா.ச.க.வின் ஆட்சிக்கு எதிராக மக்களிடம் உருப்பெற்றிருப்பது ஒரு மேலோட்டமான எதிர்ப்பே. ஆனால், பா.ச.க. தனது நிகழ்ச்சி நிரலை நாடாளுமன்றப் பெரும்பான்மையோடு அரசமைப்புச் சட்டத்தின் துணையோடு அதில் திருத்தங்களை மேற்கொண்டு முன்னேறுகின்றது. 134 கோடி பேர் வாழும் நாட்டின் அதிகாரம் நடுவண் அரசில் மென்மேலும் குவிக்கப்படுவதன் வழியாக மோடி-அமித் ஷா-அஜித் தோவல் என்ற சிறு குழுவின் கைக்கு மாறுகிறது. அக்குழு அம்பானி, அதானி, அனில் அகர்வால் போன்ற விரல்விட்ட எண்ணக்கூடிய கார்ப்பரேட்களின் நிதி மூலதனப் பெருக்கத்திற்கு தொண்டாற்றுகிறது. அரசு பாசிசம் என்ற வடிவமெடுப்பதை நோக்கி நகர்வது தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது.

மோடி மற்றும் பா.ச.க.வின் பிம்பத்தின் மீதுதான் தமிழ்நாட்டில் கீறல் விழுந்திருக்கிறதே அன்றி அந்த பாசிசத்தின் அடித்தளமாக இருக்கும் ’இந்திய ஒரு தேசம், இந்திய தேசியவாதம், தேச பக்தி, தேசப் பாதுகாப்பு’ என்ற கருத்தாக்கங்களோ எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. வீராவேச மேடைப் பேச்சுகளிலும் நாடாளுமன்ற உரைகளிலும் தமிழ் மக்களுக்கு சுவாரஸ்யங்களை வழங்கிவரும் தலைவர் பெருமக்கள் இந்த எல்லைக்கோடுகளைத் தாண்டுவதில்லை. காஷ்மீரின் உரிமையைப் பற்றி பேசும் போதுகூட கார்கில் போரில் தமிழர்கள் பலியானதைச் சொல்லி இந்திய தேசப் பற்றுண்டென்று நெஞ்சைக் கிழித்து காண்பிப்பது; மோடியைப் பாசிஸ்ட் என்று சொல்லிக் கொண்டே என்.ஐ.ஏ. சட்டத் திருத்தத்தை ஆதரிப்பதும் காஷ்மீர் பிரச்சனையை வெறும் ‘எல்லைப் பிரச்சனையாக-border management பிரச்சனையாகப் பேசுவதும் என்று நமது சூரப்புலிகள் ‘அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ’ என்று மக்களுக்கு களிப்பூட்டும் புலிவேசக்காரர்களாக ஆகிவிடுகின்றனர். இந்தியக் கம்யூனிஸ்ட்களோ பாசிசம் பற்றிப் பக்கமாய் பக்கமாய் விளக்கவுரை எழுதிவிட்டு மதச்சார்பின்மைக்கானப் போராட்டத்தின் மூலமாகவே பாசிசத்தை வீழ்த்திவிட முடியும் என்று கனவு கண்டபடி களமாடி வருகின்றனர்.  காஷ்மீரில் குடிகொண்டிருக்கும் இந்திய இராணுவத்தை திரும்பப் பெறச் சொல்லும் சனநாயக உணர்வுகூட இல்லை!

கடந்த ஆட்சியில் மோடி அரசின் தோல்வியால் எழுந்த விவசாயிகளின் விசும்பலையும், தொழிலாளர்களின் முனுமுனுப்பையும் புல்வாமா குண்டுச் சத்தம் அடித்துக் கொண்டு சென்றுவிட்டது. பாலகோட்டு தாக்குதல் பாகிஸ்தானில் நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது நமக்கு தெரியாது. ஆனால், ’பாலகோட் தாக்குதல் நடத்திவிட்டோம் என்று’ சொல்லி எதிர்க்கட்சிகள் நான்கரை ஆண்டுகளாக கட்டியெழுப்ப முயன்ற ஆட்சி எதிர்ப்பு மனநிலையை சிதறடித்துவிட்டது பா.ச.க.

இப்போது இரண்டாவது சுற்றின் தொடக்கத்திலேயே காஷ்மீரைக் கையில் எடுத்துவிட்டது. இனி காஷ்மீரிகள் ஆக்கிரமிப்பு இந்திய அரசை எதிர்த்துப் போராடினாலும் உச்சநீதிமன்றம் சட்டத் திருத்தங்களை எதிர்த்து தீர்ப்பளித்தாலும் பாகிஸ்தானோ சீனாவோ இந்திய அரசின் முடிவை எதிர்த்துப் பேசினாலும் வெற்றிக் கனிகள் என்னவோ பா.ச.க.வின் கூடையை நிரப்பப் போகின்றன.

’தேசத்தின் பக்கம் நிற்க வேண்டுமானால் மோடி-அமித்ஷாவின் பக்கம் நில்லுங்கள்’ என்று இராணுவ வீரர்களின் பிணங்களைக் காட்டி அரசியல் செய்யப் போகிறார்கள். இந்திய தேசப் பற்றாளர்கள் வேறு வழியின்றி பாசிஸ்ட்களின் பக்கம் நின்றாக வேண்டிவரும்.

இந்துத்துவப் பாசிசம் இந்திய தேசியத்தின் நிழலில் பதுங்கிக் கொள்கிறது. இந்திய தேசியம் பன்னாட்டு மூலதனத்திற்கும் உள்நாட்டுப் பெருமுதலாளியத்திற்கும்  முதலாளித்துவத்திற்கு முந்தைய பொருளாக்க உறவுகளுக்கும் சேவை செய்துகொண்டிருக்கிறது. காஷ்மீர் தேசியம், தமிழ்த்தேசியம், கேரள தேசியம், தெலுங்கு தேசியம், வங்காள தேசியம், சீக்கிய தேசியம், கன்னட தேசியம் ஆகியவற்றிற்கு எதிராக தேசிய இனங்களின் சனநாயகத்திற்கும் இறையாண்மைக்கும் எதிராகவிருக்கும் இந்திய தேசிய மயக்கத்தில் இருந்து மீளாவிட்டால் பாசிச சக்திகள் மக்களைப் பலிபீடத்தில் ஏற்றி தம்மை தாமே அழித்துக் கொள்ள வைத்து விடுவார்கள்.

அரசை பாசிச வடிவமாக்கி, அரசமைப்பு சட்டத்தில் சர்வாதிகார திருத்தங்களை மேற்கொண்டு பன்னாட்டு மூலதனத்திற்கு சேவை செய்வதற்கு கோட்பாட்டு அடித்தளத்தை வழங்கிக் கொண்டிருக்கும் இந்திய தேசியத்தை அம்பலப்படுத்தாமல் பாசிச சக்திகளை எதிர்கொள்ள முடியாது. இந்திய தேசிய மயக்கத்திலும் அதன் மீதான கடந்த கால நன்னம்பிக்கை சிக்கித் தவிக்கும் மக்களைப் புறநிலை உண்மைகளை உணரச் செய்து சனநாயகத்தின் பக்கமும் மெய்யான வாழ்க்கை நலன்களின் பக்கமும் திருப்பாமல் பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு அடித்தளமிட முடியாது.

 

– செந்தில், இளந்தமிழகம்

நன்றி: ‘மாநில சுயாட்சி’ – முரசொலி மாறன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW