மாநிலத்தில் புதிய ஆட்சி! புதிய அமைச்சரவை! பாசிச பாசக அரசுக்கு எதிராக தமிழ்நாட்டை ஒன்றுபடுத்தப் போவது எப்படி?

24-3-2026
தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
சட்டப்பேரவை தேர்தல் முடிந்து புதிய அரசு தமது அமைச்சரவையை உருவாக்கிவிட்டது. இதை ஒட்டி , ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த கட்சிகளுக்கு இடையிலும் ஒரே இலக்குக்காக தேர்தல் காலத்தில் உழைத்த சனநாயக ஆற்றல்கள் இடையிலும் தீவிரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
ஆளுநர் ஆட்சியின் வழியாக மோடி தமிழ்நாட்டை ஆள்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தவெக ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் குறுக்கே நிற்கக் கூடாது என்ற கருத்து பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்களால் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, தமிழ்த்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட சனநாயக அமைப்புகள் இணைந்து இக்கருத்தை ஒரு கூட்டறிக்கையாக வெளியிட்டன.
திமுக – அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயலும் செய்திகள் வெளிவரத் தொடங்கியதுமே பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்கள் மக்கள் தீர்ப்பை மீறலாகாது என திமுகவைக் கடிந்துக் கூறின.
இப்போது அமைச்சரவை உருவாகிவிட்டது.
ஆளுநர் ஆட்சியைத் தவிர்க்க தவெக ஆட்சி அமைத்தாக வேண்டும். அதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் குறுக்கே நிற்க கூடாது என்பதுதான் தவெக ஆட்சி பற்றிய நிலைப்பாடு. சனநாயக ஆற்றல்களின் குரல்களுக்கு காது கொடுத்து சிற்சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்வது வரவேற்கத் தக்க ஒன்று. அதே நேரத்தில், ஆலயங்களில் பார்ப்பன ஆதிக்கத்தை மட்டுப் படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட அறநிலையத்துறைக்கு ஒரு பார்ப்பனரையே துறை அமைச்சராக பணியமர்த்துவது தற்செயலான ஒன்றாக பார்க்க முடியாது. மேலும், பாசகவை கொள்கை எதிரி என்று சொல்லிக் கொண்டே இதுவரை தவெக ஒன்றிய பாசக அரசுடன் ஒரு மென்போக்கையே கடைபிடித்து வருகிறது. இந்நிலையில் இவ்வாட்சி பற்றிய ஒரு தெளிவான மதிப்பீட்டுக்கு வருவதற்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஆளுநர் ஆட்சியைத் தவிர்க்க வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலையில் சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகள் தொடர்கின்றன. அதேநேரத்தில், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை தவெக பெற்றுக் கொண்டால், சிபிஐ(எம்) வழங்கியுள்ள ஆதரவைப் பரிசீலிக்க வேண்டிவரும் என்று ஆட்சிக்கு கடிவாளம் போடும் பணியையும் செய்து வருகிறது.
காங்கிரசு
தேர்தல் முடிவுகள் வெளிவந்த கையோடு காங்கிரசு தவெகவை ஆதரித்தது மட்டுமின்றி அடுத்தடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி, மக்களவை தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடப் போவதாக தெரிவித்தது. தேர்தலுக்கு முன்பே யாருடன் கூட்டணி திமுகவுடனா? தவெகவுடனா? என்ற கேள்வி காங்கிரசுக்குள் எழுந்துவிட்டது. திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்ற போக்கு வெற்றி பெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் தவெக அடைந்த வெற்றியைக் கண்டவுடன் தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற போக்கு வெற்றி பெற காங்கிரசு தவெக கூட்டணிக்கு தாவியது.
கடந்த 2019 இல் இருந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற் முற்போக்கு கூட்டணியில் பாசிச பாசக எதிர்ப்பு என்பதை முதன்மைப்படுத்தி தேர்தலை எதிர்கொன்டு வந்த காங்கிரசு திடீரென்று அணி மாறியிருக்கிறது. பாசிச பாசக அரசு எதிர்ப்பு என்ற நோக்கு நிலையில் இருந்து இந்த கூட்டணி மாற்றம் குறித்து காங்கிரசு கொண்டிருக்கும் பார்வை என்ன என்பது பற்றி இதுவரை காங்கிரசு கட்சி எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் தவெகவுக்கு தாவி இருப்பது என்பது பாசகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதற்கு மாறாக குழப்புவதும் நிலையற்ற ஒன்றாக மாற்றுவதும் ஆகும்.
விசிக – ஐயூஎம்எல்
ஆளுநர் ஆட்சியைத் தடுக்க வெளியில் இருந்து ஆதரவு என்றே இக்கட்சிகள் கூறின. இப்போது அமைச்சரவையில் பங்குபெற்றுள்ளன. இக்கட்சிகள் தேர்தல் நேரத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்றன. காங்கிரசைப் போல் தேர்தலுக்கு முன்பே கூட்டணி மாறும் போக்கை கொண்டிருக்கவில்லை. தேர்தல் முடிந்த பிறகும் காங்கிரசைப் போல் செயல்படவில்லை. நிதானமாகவே தமது அடுத்தடுத்த அடிகளை வைத்து வருகின்றன.
இப்போதுவரை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளும் கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெறும் அதே நேரத்தில் அக்கட்சிகளுக்கு ஆட்சியில பங்கு கொடுப்பதை மறுத்து வருகின்றன. ஒருவகையில் இக்கட்சிகள் பண்ணையார் அல்லது பெரியண்ணன் தன்மையிலான அணுகுமுறையைக் கூட்டணி கட்சிகளுடன் கொண்டிருந்தன. கூடவே பட்டியல் சாதியினர் இசுலாமியர் உள்ளிட்ட விளீம்பு நிலை சமூகப் பிரிவினருக்கு அமைச்சரவையில் உரிய பிரதிதிநித்துவம் வழங்காமலே ஆட்சி செய்தன. காலந்தோறும் அதிகாரத்தில் பங்குபெற்ற சமூகப் பிரிவினரும் ஒரு சில குடும்பங்களும் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருந்தன. இதில் இருந்து மாறுபட்டு, கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர்வையில் பங்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் என்ற செயல்பாடு வரவேற்புக்கு உரியதுதான். ஆனால், விசயம் இத்துடன் முடிந்துவிடவில்லை!
கடந்த 2019 இல் இருந்து மேற்படி கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்தன. கடந்த தேர்தலிலும் திமுக கூட்டணியில் இருந்தே போட்டியிட்டன.
அரசியலில் பாசகவைத் தவிர ஏனைய அனைத்து கட்சிகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும், பாசகவுடன் சமப்படுத்தக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் பற்றுறுதியாக இருந்த தமித்த்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட ஒரு சில அமைப்புகள் தவெகவை பாசகவின் B டீம் என்று சொல்லக் கூடாது என்று அறிவுறுத்திவந்தன. ஆனாலும், தவெகவை சந்தேகத்திற்கு உரிய கட்சியாகவும் ஒருபடி மேலே சென்று தவெக ’ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை’ என்ற அளவுக்கு மேற்படி கட்சிகளால் தவெக திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தேர்தலுக்கு முன்பே கூட்டணி ஆட்சி என்ற கருத்தை தவெக முன்வைத்து, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு கூறியது. அதிமுகவும் கூட விசிகவுக்கு அதிக இடங்கள் கொடுப்பதாக ஆசை காட்டியது. ஆனால், இக்கட்சிகள் ஆர்.எஸ்.எஸ். – பாசக எதிர்ப்பு என்ற அடிப்படையிலேயே திமுக கூட்டணியில் தொடர்வதாக இக்கட்சிகள் அறிவித்துக் கொண்டன.
திமுக கூட்டணியை ஆதரிப்பதை முன்னிட்டு சனநாயக ஆற்றல்கள் கடுமையான திறனாய்வுகளை எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால், அவை எல்லாவற்றையும் மீறி, பாசிச பாசக அரசை எதிர்ப்பதில் குறைந்தபட்ச சமரசங்களைக் கொண்ட வலுவான கூட்டணி என்ற அடிப்படையில் திமுக கூட்டணிக்கு சனநாயக ஆற்றல்கள் ஆதரவு தெரிவித்தன; தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டன. இந்நிலையில், விசிகவும் ஐயூஎம்எல் உம் தேர்தலுக்கு முன்பு தாம் மக்களிடம் முன்வைத்த கருத்துகளுக்கும் இப்போது தேர்தலுக்குப் பின்னான தமது முடிவுகளுக்கும் இடையே நிலவும் முரண்பாட்டுக்கான விளக்கத்தை தர வேண்டிய கடமை உள்ளது. இல்லையென்றால் தங்களுடைய கட்சி அணிகளும் வெகுமக்களும் தாங்கள் இதுகாறும் பேணி வந்த பாசக எதிர்ப்பு/ ஆதரவு ஆகிய நிலைப்பாடுகளை ஒரு சந்தர்ப்பவாதமாக புரிந்து கொள்ள நேரிடும்.
பாசிச பாசக அரசு இந்நாட்டின் அரசியல், பொருளியல் கட்டமைப்பை அடியோடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இதைதடுத்து நிறுத்தும் போராட்டமே முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. மாநில அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் அந்த ஆட்சி அதிகாரத்தில் பல்வேறு சமூக குழுக்கள் பங்கு பெறுவதற்காகவும் நடைபெற்ற போராட்டத்தில் பாசிச பாசக எதிர்ப்புக்காக ஒன்றுபட்டு நின்ற சனநாயக ஆற்றல்கள் சிதறடிக்கப்பட்டும் ஒருவருவக்கொருவர் பகை போற்றும் நிலைக்கும் மாறியுள்ளன. இந்நிலையில் பாசிச பாசக எதிர்ப்புப் போராட்டம் என்ன ஆகப் போகின்றது என்ற உடனடி, அவசர கேள்வி நம் முன்னால் இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்து, இசுலாமியர்களை இரண்டாம் நிலை குடிமக்களாக்கி, மாநிலங்களை செல்லாக்காசாக்கி, நாட்டை அதானிக்கு தாரை வார்க்கும் இந்துராஷ்டிர வேலைத் திட்டம் வெற்றி பெற்றால் மாநில அரசதிகாரமும் அந்த அரசதிகாரத்தில் விளிம்புநிலை மக்கள் பங்குபெறுவதும் பொருளற்றதாகிவிடும் என்ற உண்மையை 75 ஆண்டுக் கட்சியான திமுக தொடங்கி நேற்றைக்கு வந்த தவெக வரையான அனைத்துக் கட்சிகளும் அறிந்தேற்க வேண்டும்.
ஒருபக்கம் தவெக ஆட்சியமைக்க குறுக்கிட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே இன்னொருபுறம் அதிமுக கூட்டணிக்கு முயல்வது, ஆளுநரைக் கண்டிக்க மறுப்பது, ஒருபக்கம் அமைச்சராக பொறுப்பேற்கும் தோழர் வன்னி அரசுவை வாழ்த்திக் கொண்டே இன்னொருபுறம் விசிக தவெக அமைச்சர்வையில் அங்கம் வகிப்பதை அ.ராசாவின் வழியாக வசைபாடுவதும் ஒரு பக்கம் சனாதன எதிர்ப்பு பேசிக் கொண்டே இன்னொரு பக்கம் பாரதிய சனாதாவோடு போனால் என்ன என்று பேசுவதும் என இரு நேரெதிர் போக்கு திமுகவிடம் வெளிப்படுகிறது.
இது திமுகவின் பாசிச பாசக எதிர்ப்பு என்பது மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான சந்தர்ப்பவாத அரசியல் என்ற மதிப்பீட்டுக்கு வரச்செய்து பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் மீதே அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது.
திமுக பாசிச பாசக எதிர்ப்பை முதன்மைப்படுத்தாமல் தவெக ஆட்சியின் அன்றாடப் பிரச்சனைகளை முதன்மைப்படுத்திக் கொண்டிருக்கப் போகிறதா? பாசிச மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதன் முகன்மையை மறுத்து தவெகவின் மாநில ஆட்சி எதிர்ப்பை முதன்மைபடுத்தப் போகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தவெக பாசகவை கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு, மாநில ஆட்சி யதிகாரத்தைக் கைப்பற்ற திமுகவை அரசியல் எதிரி என்று வரையறுத்து பாசக அரச எதிர்ப்பில் மென் போக்கையே கடைபிடித்து வருகிறது. இப்போது மாநில ஆட்சிக்கும் வந்துவிட்டது. முன்பு திமுக தலைமையிலான தமிழக அரசு பாசிச பாசக அரசை எதிர்த்து ஓரளவுக்கேனும் செயல்பட்டு வந்தது. அது போலவோ அல்லது அதைவிடவும் அதிகமாகவோ பாசிச பாசக அரசிடம் தவெக தலைமையிலான தமிழக அரசு எதிர்ப்புக்காட்டப் போகிறதா? என்பதில்தான் அதன் கொள்கை என்ன என்பது தெளிவாகப் போகிறது.
விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட அமைப்புகள் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து திமுகவோடு தோளோடு தோள் நின்று பாசிச பாசக எதிர்ப்பில் உறுதிகாட்டி வந்தன. இப்போது பாசக அரச எதிர்ப்பில் மென்போக்கை கடைபிடிக்கும் தவெகவுடன் அமைச்சரவையில் பங்குபெற்று வருகின்றன. இந்நிலையில் பாசிச பாசகவுடன் மென்போக்கை கடைபிடிக்கும் தவெகவுக்கு எத்தகைய அழுத்தத்தைக் கொடுக்கப் போகின்றன என்ற கேள்வி இக்கட்சிகள் முன் இருக்கிறது.
மேலும் தேர்தல் முடிந்த நிலையில் ஆட்சியிலும் பங்கும் அதிகாரத்திலும் பங்கு என்ற அடிப்படையில் தவெகவுடன் கூட்டணி அமைச்சரவையில் பங்குபெற்றிருக்கின்றன. தான பங்கு பெறும் இந்த மாநில அதிகாரத்தைக் கூட தக்க வைப்பதற்குப் பாசிச பாசக அரசை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தியாக வேண்டும் என்ற கருத்துக்கு கட்சியையும் மக்களையும் எப்படி தயார்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வி இருக்கிறது.
பாசிச பாசக எதிர்ப்பில் பதவி அரசியலுக்கு அப்பாலான இடது சனநாயக அணியின் உடனடி, அவசர தேவையை 2026 சட்டப்பேரவை தேர்தலும் தேர்தலுக்குப் பின்னான நிகழ்வுகளும் உணர்த்தி நிற்கின்றன. பாசிச பாசக எதிர்ப்புப் போராட்டம் களத்தில் தீவிரமடைந்தால்தான் பதவி அரசியலைப் பின்னுக்கு தள்ளி மக்களை ஒன்றுபடுத்துவதற்கான புறநிலை அடிப்படைகள் உருவாகும். மேற்சொன்ன அனைத்துக் கட்சிகளையும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் நிலை கொள்ளச் செய்யும்.
பாசிச பாசக அரசு எதிர்ப்பில் தமிழ்நாட்டு மக்களை எப்படி ஒன்றுபடுத்தப் போகிறோம் என்ற உடனடி கேள்வி நம் எல்லோர் முன்பும் உள்ளது என்பதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி சுட்டிக்காட்டுகிறது.
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மககள் முன்னணி
9941931499