பாசிச மோடி ஆட்சியில் தொகுதி மறுவரையறையே கூடாதென்பதுதான் மாநில உரிமைக்கு ஊறு செய்யாத நிலைப்பாடாகும்!
கூட்டறிக்கை
13-8-2026
நியாயமான தொகுதி மறுவரையறையா? அல்லது தொகுதி மறுவரையறையே கூடாதா? என்ற விவாதம் தமிழ்நாட்டில் முன்னுக்கு வந்துள்ளது..
கடந்த ஏப்ரல் மாதத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பில் ஒரு அரசமைப்பு சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்த பாசக, மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாததால் அது தோற்கடிக்கப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தும் சட்டவரைவு அது.
பிறகு, மழைக்காலக் கூட்டத் தொடரைக் குறிவைத்து மீண்டுமொரு சட்டவரைவை கொண்டு வந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முனைப்புக் காட்டியது பாசக. வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உருட்டியும் மிரட்டியும் விலை பேசியும் தன் பக்கம் வளைக்கத் தொடங்கியது பாசக.
பாசக ஆதரவு ஊடகங்கள் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வந்துவிடக் கூடும் என்றும் திமுக தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை ஆதரிக்கக் கூடும் என்றும் பேசத் தொடங்கின. அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் உயர்த்தப்படும் நிலையில், அந்த சட்ட வரைவை ஆதரித்து திமுக வாக்களிக்கக்கூடும் என்று ஆங்கில தி இந்து நாளேடு முதல் பக்கச் செய்தியாக எழுதியது.
மக்களவை இடங்களில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்கெனவே இருக்கக் கூடிய பெயராண்மை ( பிரதிநிதித்துவம்) தகவொழுங்கு பேணப்பட்டாலே மாநில உரிமை பாதுகாக்கப்பட்டுவிடும் என்ற பொருளில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரமான 7.2% விழுக்காடு மாறாமல் இருந்தால் அதாவது தமிழ்நாடு – புதுச்சேரி இணைந்த 40 இடங்களில் இருந்து 60 இடங்கள் உயர்த்தப்பட்டு அதேநேரத்தில் உத்தரபிரதேசத்தில் 80 இல் இருந்து 160 இடங்கள் உயர்த்தப்படுவதால் மாநிலங்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை என்ற முடிவு எட்டப்படுகிறது. இத்தகைய மறுவரையறை நியாயமான மறுவரையறை என்று முன்வைக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாமல் அது நியாயமான மறுவரையறையாக இருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று சொல்லத் தொடங்கியுள்ளது திமுக.
ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு. ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்பும் தொகுதிகளை மறுவரையறை செய்யக் கோருகிறது அரசமைப்புச் சட்டம். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் ஒரு சில மாநிலங்கள் குறிப்பாக தென் மாநிலங்கள் வெற்றியடைந்திருப்பதும் இன்ன பிற மாநிலங்கள் அதிகம் முன்னேற்றம் இல்லாமலும் இருந்தன. இதனால் மொத்த கருவுறுதல் தகவில் ( Total Fertility Ratio ) மாநிலங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி நிலவியது. இந்த இடைவெளி குறைவதும் ஆமை வேகத்திலேயே ஏற்பட்டுவந்தது.
இந்த சூழமைவில்தான் 1976 இலும் 2002 இலும் தொகுதி மறுவரையறை சட்டம் திருத்தப்பட்டு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியான தொகுதி நிலைமைகளையே 25 ஆண்டுகளுக்கு தொடர்வது என்று முடிவுசெய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய அரசியல் சட்டத்தில் நிலவும் மாநிலங்களுக்கு இடையிலான சமத்துவமின்மை மேலும் மோசமடையாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.
1976 இல் இந்திராகாந்தியும் 2002 இல் வாஜ்பாயும் இந்திய தலைமையமைச்சர்களாக இருந்த போது இந்த சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டன. 2002 இல் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின் படி 2026 இல் 25 ஆண்டுகள் முடிவடைகிறது. இனியெடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
2021 இல் எடுத்திருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கோவிட் பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. ஆனால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பெருந்தொற்று நெருக்கடி முற்றுபெற்ற போதும் எவ்வித காரணமும் இன்றி 2026 ஆம் ஆண்டு வரை அதை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தது மோடி அரசு.
மொத்த கருவுறுதல் தகவில் இன்றைக்கும் மாநிலங்களுக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பதால் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்வது தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் 1976 இலும் 2002 இலும் முடிவு செய்தது போலவே அடுத்த 25 ஆண்டுகளுக்கு உள்ளது உள்ளபடி தொகுதிகளின் நிலையை உறையச் செய்ய வேண்டும் என்பதே திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மோடி அரசோ இப்போதுள்ள நிலையை 25 ஆண்டுகளுக்கு அப்படியே தொடர்வதற்கு அணியமாக இல்லை.
பல்வேறு மாநிலங்களும் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. ஆனாலும், அவ்வெதிர்ப்பையும் மீறி ஏப்ரல் மாதம் அத்தகைய ஒரு சட்டத்திருத்தத்திற்கான வரைவைக் கொண்டு வந்து தோல்வி அடைந்தது பாசக. தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதில் இருந்து பாசக ஓரடிக் கூட பின் வாங்காது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில்தான், எல்லா மாநிலங்களுக்கும் 50% இடங்களை உயர்த்துவதாகவும் ( 543 இல் இருந்து 850 இடங்கள் வரை) இதனால் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் ஒரு கருத்துருவாக்கத்தை செய்து தேசியவாத காங்கிரசு, திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மறுவரையறை சட்டத்தை இயற்றத் துடிக்கிறது பாசக. இதன் மூலம் ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்ற கோட்பாட்டை செயல்படுத்துவதில் ஒரு சிறிதளவு முன்னேற்றம்கூட இருக்கப் போவதில்லை.
இப்போதிருக்கும் எண்ணிக்கையை மாற்றாமல் விட்டாலும் அல்லது 50% உயர்த்தினாலும் ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு என்பதில் முன்னேற்றம் இல்லை என்ற நிலையில் மாநிலங்களின் பெயராண்மை தொடர்பிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்ற நிலையில் இத்தகைய ஓர் எண்ணிக்கை உயர்த்தலை முன்வைப்பதால் ஏற்படக்கூடிய விளைவு என்ன? என்பதே இங்கு முகன்மையான கேள்வி.
தொகுதி மறுவரையறை என்பது எண்ணிக்கை உயர்த்துவது/ மாற்றுவது மட்டுமல்ல, தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைப்பதும் தனித்தொகுதிகளை முடிவு செய்வதும் ஆகும்.
தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைப்பதில் மோடி அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் எத்தகைய மோசடிகளை செய்தது என்பதற்கு அசாமும் சம்மு காசுமீருமே சான்று. இசுலாமியர்கள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க முடியாதபடியும் எதிர்க்கட்சிகளுக்கு வாக்கு அளிக்கக்கூடிய பகுதிகளை வெவ்வெறு தொகுதிகளில் சிதறடித்தும் ஒரு மறுவரையறையை செய்தது பாசக. 2029 மக்களவை தேர்தலில் தமக்கு சாதகம் ஏற்படும் வகையில் தொகுதிகளின் எல்லைகளை பாசக மாற்றியமைக்கும் என்பதில் எந்த ஐயமும் வேண்டாம்.
ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு என்பதை செயல்படுத்தும் நோக்கில் செய்திருக்க வேண்டிய தீவிர வாக்காளர் மீளாய்வு ( SIR ) என்ற நடவடிக்கையை அதன் நோக்கத்திகு நேரதிராக கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாக செய்து கொண்டிருக்கிறது மோடி அரசின் தேர்தல் ஆணையம். இதன் மூலம் இசுலாமியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வேலை நடந்து வருகிறது. இதில் தப்பித்து வாக்குரிமைப் பெற்ற இசுலாமியர்களும்கூட தேர்தலில் வாக்களித்தாலும் அந்த வாக்கு வெற்றி, தோல்வியை தீர்மானிக்க முடியாத செல்லாக்காசாக மாறுவதற்கு ஏற்ப தொகுதி மறுவரையறையை செயல்படுத்துவார் மோடி. இந்த விளைவை ஏற்படுத்தக்கூடிய தொகுதி மறுவரையறை எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?
தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் அதன் மூலம் பாசக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 10% வரை உயர்த்த முடியும் என்று சங் பரிவார ஆற்றல்களால் மதிப்பிடப்படுகிறது. இந்த பின்னணியில் பார்த்தால், தொகுதி மறுவரையறை என்பது விளைவளவில் 2029 தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவதற்கு உதவக்கூடிய ஒரு நடவடிக்கையாக அமையப்போகிறது.
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநில உரிமைகளுக்கான பரிந்துரையை வழங்கும் பொருட்டு அமைத்த குரியன் ஜோசப் ஆணையம் நியாயமான தொகுதி மறுவரையறைக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அப்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் குரியன் ஜோசப் ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு ஏற்பதாக எழுதியுள்ளார்.
மொத்த கருவுறுதல் தகவில் மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடு குறைந்துவருவதற்கு சுமார் 100 ஆண்டுகள் ஆகக் கூடும் என்ற அறிவியல் மதிப்பீட்டில் இருந்து அடுத்த 100 ஆண்டுகளுக்கு இன்றைய தொகுதி எண்ணிக்கை நிலையை உறையச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது ஆணையம்.
குரியன் ஜோசப் ஆணையம் தொகுதி மறுவரையறைக்கான ஆணையத்தில் இடம்பெறும் எம்.பி.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை வேண்டும், அதில் தலையிடுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டும், மாநில சட்டப்பேரவை இடங்களை மறுவரையறை செய்யும் பணியை மாநில தேர்தல் ஆணையமே மேற்கொள்ள வேண்டும் என நியாயமான மறுவரையறையை உறுதிசெய்வதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அதேகட்டுரையில் இதே காரணத்தின் பொருட்டு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ( 2051) இப்போதிருக்கும் நிலையையே பேண வேண்டும் என ஸ்டாலினும் எழுதியுள்ளார்.
மேலும், மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தை பேணுகிற பெயரில் பொத்தாம் பொதுவாக 550 இல் இருந்து 850 ஆக இடங்களை உயர்த்துவது சனநாயகத்தை செயல்படுத்துவதற்கு உதவாது என்பதை விளக்கும் வகையில் அமெரிக்கா, இத்தாலி, சப்பான் ஆகிய நாடுகளில் எப்படி மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்குப் பதிலாக அதை குறைத்துள்ளனர் என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
எனவே, 50% இடங்களை அனைத்து மாநிலங்களுக்கும் உயர்த்துவது, ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்பதை உறுதி செய்யாது. மறுவரையறை செய்ய வேண்டிய கட்டாயமே இந்த தேவைக்குதான் எழுகிறது. எனவே, அடிப்படையான அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதவிடத்து, இருக்கும் எண்ணிக்கையை அப்படியே தக்க வைப்பதற்கு மாறாக 50 விழுக்காடு உயர்த்துவது ஏற்படுத்தக்கூடிய ஒரே ஒரு விளைவு தொகுதியின் எல்லைகளை பாசக தம் விருப்பம் போல் மாற்றியமைப்பது மட்டும்தான். இதன் மூலம் 2029 இல் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் கூடுதலான இடங்களைப் பெறுவதற்கான வழிவகைகளை பாசக உருவாக்கிக் கொள்ள முடியும்.
தீவிர வாக்காளர் சரிபார்ப்பும் தேர்தலும் நியாயமாக நடக்கவில்லை என்பது நாடறிந்த உண்மையாக மாறியிருக்கும் இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தமது நம்பகத்தன்மையை முற்றாக இழந்துவிட்டது. இந்நிலையில் நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டுமா? என்ற கேள்வி அதன் நடைமுறை பொருளில் மோடியின் ஆட்சி தொடர வேண்டுமா? கூடாதா? என்ற கேள்வியாக மாறிவிடுகிறது.
பாசிச மோடி – அமித்ஷா சிறுகும்பலாட்சி நீடித்துக் கொண்டே இருந்தால் மாநில கட்சிகளோ, மாநில அதிகாரமோ, மாநிலங்களோகூட நீடிப்பதற்கு வழியில்லை. பாசிச மோடி – அமித்ஷா சிறுகும்பல் ஆட்சியில் தொடர்வதற்கு உதவக்கூடிய தொகுதி மறுவரையறைக்கு வழியமைத்துக் கொடுப்பது என்பது அதன் இறுதியான பொருளில் மாநில உரிமைகளை மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் சமூகப் பிரிவினரின் உரிமைகளை பலியிடுவதே ஆகும்.
நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்ற கேள்வியோடு பாசிச மோடி ஆட்சி தொடரலாமா? என்ற கேள்வியையும் இணைத்துப் பார்த்தால் மோடி அரசால் தொகுதி மறுவரையறை செய்ய முடியாத வகையில் தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத்தை தோற்கடிப்பதே மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்.
மோடி – அமித்ஷா சிறுகும்பலாட்சி நீடிக்கும் வரை எவ்வித கட்டமைப்பு வகைப்பட்ட மாற்றங்களுக்கும் இடம் கொடுக்க கூடாது என்பதே பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்களின் கோரிக்கையாகும்.
வட இந்தியாவில் வெடித்துக் கிளம்ப்பும் மாணவர் – இளைஞர் போராட்டங்கள் வெகுமக்களிடையே மோடி அரசு செல்வாக்கு இழந்துவருவதை காட்டுகிறது. இத்தகைய சூழலில் மோடி – அமித்ஷா சிறுகும்பல் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு எந்த வகையிலும் தமிழ்நாடடுக் கட்சிகள் உதவிவிடக் கூடாது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் செய்தது போல், 50% இடங்களை உயர்த்துவதாக சொல்லிக்கொண்டு வரும் தொகுதி மறுவரையறை சட்டத்தை எவ்வித குழப்பமுமின்றி தோற்கடிக்க வேண்டும்,
தொகுதி மறுவரையறையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக் கூடாது என்பதிலும் மோடி ஆட்சி தொடரக் கூடாது என்ற நிலைப்பாட்டிலும் திமுக, காங்கிரசு, விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் வழுவி விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
செந்தில், ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
மனோகரன், மாநில செயலாளர், சிபிஐ(எம்-எல்) ரெட் ஸ்டார்
மணி, மாநில அமைப்பாளர், பாட்டாளி வர்க்க சமரன் அணி
மதியவன் இரும்பொறை, பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மார்க்சிய கழகம்
ஆ. தேவதாசு, தமிழ்நாடு பொதுவுடமை இயக்கம்.
தொடர்புக்கு: 9941931499