பாஜகவின் பாசிசமும், காங்கிரசின் சர்வாதிகாரமும் பண்புவகையில் மாறுபட்டது

09 Jun 2026

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களிலும் அடுத்த ஆண்டின் பொதுத் தேர்தல்களிலும், பாசக ஆட்சிக்கு வராமல் தடுக்கவும், இந்தியாவை இந்துராஷ்டிரமாக (மதவழிப்பட்ட அரசாக) மாற்றும் ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கவும், அனைத்து சமூக மற்றும் அரசியல் ஆற்றல்களும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அண்மை காலமாக பாசிசம் குறித்து நடைபெறும் விவாதங்களில், பாசிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான பண்பு வகைப்பட்ட வேறுபாடு மங்கச் செய்யப்படுகிறது. பாசிசமும் ஒரு வகை சர்வாதிகாரம் . ஆனால் எல்லா சர்வாதிகாரமும் பாசிசம் அல்ல. பாசிசம், சமூகத்தில் உள்ள ஒரு பகுதியையோ அல்லது சில பகுதிகளையோ, குறிப்பாக சிறுபான்மை பிரிவுகளை, “அயலார்” என்று சித்திரிக்கிறது. அது சிறுபான்மையினரை “பெரும்பான்மை மக்களின் எதிரிகள்” என்று காட்டுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அவர்களை சித்திரிக்கிறது. பாசிச ஆற்றல்கள் — அதாவது அரசியல் அமைப்புகள் மற்றும் கட்சிகள் — பெரும்பான்மை மக்களை சிறுபான்மையினருக்கு எதிராக திரட்டுகின்றன. அவை இனத்துடைப்பு வரை செல்லக்கூடும்.

ஜெர்மனியில் 90 லட்சம் யூதர்களில் அறுபது லட்சம் பேரின் உயிர்களை பாசிசம் பறித்தது. உண்மையில், “சிறுபான்மை” மற்றும் “பெரும்பான்மை” என்ற கருத்தாக்கங்களின் உருவாக்கத்திலேயே ஒரு சதி உள்ளது. இந்தியாவில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், அதாவது ஆர்.எஸ்.எஸ். மட்டுமே, சிறுபான்மையினரை “வெளியாட்கள்” என்றும், “வளர்ச்சிக்கு தடைகள்” என்றும், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள்” என்றும், “எதிரிகள்” என்றும் சித்திரிக்கும் அமைப்பாக உள்ளது. கடந்த நூறு ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். தனது சித்தாந்தத்தையும் அமைப்பையும் இவர்களுக்கு எதிராகவே கட்டியெழுப்பியுள்ளது. இத்தகைய கோட்பாட்டை உருவாக்கி, அதற்கேற்ற அமைப்பு வடிவத்தையும் தயார் செய்த ஆர்.எஸ்.எஸ்.-ஐ மட்டுமே நாம் பாசிச அமைப்பு என்று அழைக்க முடியும்.

காங்கிரசு வேறுபட்டது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, பெரிய அளவில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் வெடித்தன என்பது உண்மை. 1984 அக்டோபர்–நவம்பர் மாதங்களில் நடந்த அந்த கலவரங்களை அன்றைய காங்கிரசு அரசு அனுமதித்ததோடு ஊக்குவித்ததும் உண்மை. ஆனால் அது ஒரு குறுகிய நோக்குடைய தேர்தல் மற்றும் அதிகார அரசியல் சூழ்ச்சி மட்டுமே. சீக்கிய எதிர்ப்பு என்பது காங்கிரசின் கோட்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்று நாம் கூற முடியாது. ஐதராபாத், அதாவது அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில், என்.டி.ஆர். அரசை கவிழ்க்க ஒருமுறை, சென்னா ரெட்டி அரசை கவிழ்க்க மற்றுமொரு முறை, காங்கிரசு மத மோதல்களை உருவாக்கிய அனுபவம் நமக்கு உள்ளது. அந்த மத மோதல்கள் சந்தர்ப்பவாதமானவையும் கண்டிக்கத்தக்கவையும் ஆகும். அவை உடனடி அரசியல் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால் ஓர் இந்து அரசை நிறுவுவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. ஆர்.எஸ்.எஸ்.–பாசக போன்ற ஆதிக்க சித்தாந்தத்தில் காங்கிரசு ஒருபோதும் நம்பிக்கை கொண்டதில்லை.

1975ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சி அவசரநிலையை அறிவித்து, சர்வாதிகார ( authoritarian) ஆட்சியை நடத்தியது. ஆனால் அது பெரும்பான்மை சமூகத்தை சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டவில்லை. அது அனைத்து மக்களுக்கும் எதிரான அரசின் வன்முறையாக இருந்தது. இன்றும் அரசின் வன்முறை பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. பாசக ஆட்சியிலோ அல்லது பிற கட்சிகளின் ஆட்சியிலோ இருந்தாலும், எல்லா அரசுகளும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் அரசியல் எதிர்ப்பையும் முற்றிலும் பலவீனப்படுத்துகின்றன. இருப்பினும், பாசக தவிர வேறு எந்தக் கட்சியும் ஒரு மதத்தைச் சேர்ந்த மக்களை மற்றொரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராகத் தூண்டவில்லை. பாசக தவிர வேறு யாரும் சமூகத்தின் ஒரு பகுதியை “அயலார்” என்றும் சித்திரிக்கவில்லை. ஆகவே ஏனைய கட்சிகளை பாசகவுக்கு இணையான பாசிசக் கட்சிகள் என்று அழைக்க முடியாது.

உரிமைகள் குறித்து பேசும்போது, புகழ்பெற்ற மார்க்சிய எழுத்தாளர் டேவிட் ஹார்வி ஒருமுறை கூறினார்: “முதலாளிய அமைப்பில் மக்கள் தங்கள் உரிமைகளைப் போராடாமல் பெற முடியாது; மக்கள் தங்கள் சொந்த போராட்டங்களின் மூலம் தங்கள் உரிமைகளை அடையவும் பாதுகாக்கவும் வேண்டும்.” இன்று பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்சிகளின் அரசியல் அமைப்புகள் சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்துகின்றன. மக்கள் சில காலமாக சர்வாதிகார ஆட்சிகளுடன் — அல்லது அவற்றின் கீழ் — வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்று நம் முன் பாசிசம் விரிகின்றது. அது பண்பில் வேறுபட்ட ஒரு ஆட்சி வடிவம். அதன் விதைகள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே விதைக்கப்பட்டுவிட்டன.

இப்போது ஆர்.எஸ்.எஸ்., அதாவது சங் பரிவாரின் தலைமையில் உள்ள பாசிசம், தனது இரண்டு முகங்களைத் தீவிரமாக வெளிப்படுத்துகிறது: மதவெறி மற்றும் மனு தர்மம். ஆதிக்க வெறியைக் களமாகக் கொண்டு சர்வாதிகாரம் கட்டியெழுப்பப்படும்போது, அது பாசிசத்தின் வடிவத்தை எடுக்கிறது. இன்று நாம் அனுபவிப்பது அதுவே. மேலும், “கார்ப்பரேட் மூலதன கொள்ளை” என்ற திட்டத்தை முன்னெடுத்தால்தான், சங் பரிவார் சக்திகள் தங்களின் “இந்து ராஷ்டிர” திட்டத்திற்கு ஆதரவைப் பெற முடியும். அதனால், தங்கள் இந்துத்துவ திட்டத்தை முன்னெடுக்க, அவை கார்ப்பரேட்டுகளின் பொதுவான நலன்களை பாதுகாக்கின்றன. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில  கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு ஆதரவாக அவை காட்டும் பாகுபாடு எல்லா வரம்புகளையும் கடந்துவிட்டது. அதன் விளைவுகளை இங்கு விரிவாக ஆராய இடமில்லை.

சங்க் பரிவாரின் வெறியூட்டும் நடவடிக்கைகள், கார்ப்பரேட் கொள்ளையால் உருவாக்கப்பட்டும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புகின்றன என்பது உண்மை. ஆனால் அதைவிட முக்கியமாக, அவை நாட்டை “இந்து ராஷ்டிரம்” எனும் மதவாத அரசுக்கு தள்ளிச் செல்கின்றன. சிலர் சங்க் பரிவாரின் நடவடிக்கைகளை “உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பும் முயற்சிகள்” என்று மட்டுமே புறந்தள்ளுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்காகும். ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு வெறித்தனமான கருத்தியலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட செயற்பாட்டாளர்களின் அமைப்பு. இந்த பகுத்தறிவற்ற, வெறித்தனமான கருத்தியல் அடிப்படையில் பயிற்சி பெற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டும் உள்ள தனிப்படை ஆர்.எஸ்.எஸ்.-க்கு உள்ளது. ஆகவே, சங் பரிவார அமைப்புகள் மேற்கொள்ளும் வெறியூட்டும் நடவடிக்கைகள் மக்களின் கவனத்தை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்ப உதவுகின்றன என்றாலும், அவை “இந்து ராஷ்டிரம்” என்ற இறுதி இலக்கிற்கு பாதை அமைப்பதற்கு உறுதியாக திசை வழிப்படுத்தப்பட்டு உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சங்க் பரிவாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் மதவெறி மற்றும் மனு தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட “இந்து ராஷ்டிர” நிறுவலையே நோக்கமாகக் கொண்டது. “இந்து அரசு” என்பது வெறும் தேர்தல் தந்திரமோ அல்லது பொதுமக்களின் அதிருப்தியை தவிர்க்கும் வழியோ அல்ல. அது அவர்களின் இலக்கு. அத்தகைய இலக்கை அடைவது சாத்தியமில்லாமல் இருக்கலாம். அடைந்தாலும், ஜெர்மனியில் நடந்ததுபோல் அது பின்னர் ரத்து செய்யப்படும். ஆனால் பாசிசத்தின் வளர்ச்சியை இப்போது தடுக்காவிட்டால், முன்பு எப்போதும் காணாத அளவிலான உயிரிழப்பை நாம் காண நேரிடும். அது குறைந்தது இரண்டு அல்லது மூன்று பத்தாண்டுகளாவது தடுக்க முடியாததாக இருக்கலாம். பாசிசம் ஒரு சமூகத்தை இருளில் தள்ளிவிட முடியும்.

பொருளியல் கொள்கையைப் பொறுத்தவரையில், காங்கிரசும் பாசகவும் கார்ப்பரேட் திட்டத்தையே நடைமுறைப்படுத்துகின்றன. ஆனால் இது அரசியல் தளத்தில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதில் பெரிய வேறுபாடு உள்ளது. ஆளும் வகுப்பு அரசியல் பெரும்பாலும் மக்கள் இயக்கங்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. மக்கள் இயக்கங்களைப் பலவீனப்படுத்த காங்கிரசு ஒரு வழியைப் பின்பற்றுகிறது; பாசக வேறொரு வழியைப் பின்பற்றுகிறது. அதுவே வேறுபாடு.

2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு, புதுத்தாராளியக் கொள்கைகளை மெதுவாக நடைமுறைப்படுத்தியது. அதேசமயம், பெரிய அளவிலான மக்கள் எழுச்சிகள் நிகழாமல் தடுக்க சில நலத்திட்டங்களையும் செயல்படுத்தியது. இதே மாதிரியான நடைமுறையையே பாசக அல்லாத பெரும்பாலான கட்சிகளும் பின்பற்றுகின்றன. இந்த நடைமுறை கெய்ன்ஸின் மக்கள்நல அரசை ஒத்திருக்கிறது. (இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட கெய்னிசிய நல அரசு (Keynesian Welfare State) என்பது, அரசு தலையீடு மற்றும் நிதிக் கொள்கைகள் மூலம் முழு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் கெய்னிசிய பொருளாதார மேலாண்மையையும், ஏற்றத்தாழ்வைக் குறைத்து பொது சேவைகளை வழங்கும் வலுவான சமூகப் பாதுகாப்பு வலைகளையும் இணைத்த ஒரு பொருளியல் மாதிரியாகும்) . ஆனால் பாசக, புதுத்தாராளியக் கொள்கைகளை மிகுந்த தீவிரத்துடன் நடைமுறைப்படுத்தி, அனைத்து நலத்திட்டங்களையும் பலவீனப்படுத்துகிறது. பாசக, மதவெறியையும் தேசிய வெறியையும் ஊக்குவிப்பதன் மூலம், தனது கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளால் உருவாகும் சாதாரண மக்களின் அதிருப்தியை திசைதிருப்புகிறது. இதன் செயல்முறையில், “இந்து ராஷ்டிர” கட்டமைப்பிற்கான அடித்தளங்களை அமைக்கும் தனது சொந்த திட்டத்தையும் முன்னெடுக்கிறது. தேர்தல் சூழலில் இந்த வேறுபாடு முக்கியத்துவம் பெறுகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால், காங்கிரசும் பிற ஆளும் வகுப்புக் கட்சிகளும் மக்களின் அதிருப்தியை நலத்திட்டங்கள் மூலம் “மேலாண்மை செய்ய” முயல்கின்றன. ஆனால் பாசக, மதவெறிப் பரப்புரை மூலம் மக்களைத் திசைதிருப்ப முயல்கிறது. ஆர்.எஸ்.எஸ். தனது கோட்பாட்டுக்கு “இந்துத்துவம்” என்ற பெயரைச் சூட்டியுள்ளது. சங்க் பரிவார் அமைப்புகளை விமர்சிப்பவர்கள், இந்த பாசிசக் கோட்பாட்டை அதன் படைப்பாளர்கள் விரும்பும் பெயரிலேயே அழைப்பது தற்கொலையினைப் போன்ற தவறாகும். மீண்டும் கூறுகிறோம்: சங்க் பரிவாரின் கருத்தியல் மதவெறி மற்றும் மனு தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் மதவெறியர்கள் மட்டுமல்ல; மனு தர்மத்தின் தீவிர ஆதரவாளர்களும் ஆவர். அவர்கள் இந்திய அரசியலமைப்பை வெளிப்படையாகவே பலவீனப்படுத்துகின்றனர். 1950ஆம் ஆண்டிலேயே இந்திய அரசியலமைப்பை மனு தர்மத்தின் அடிப்படையில் மறுபடியும் எழுத வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

“இந்து மதம்” பலப்பட வேண்டுமெனில், “சாதிய அமைப்பு” மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உறுதியாக நம்புகிறது. பெண்களை சமையலறைக்குள் மட்டுப்படுத்தினால்தான் குடும்பங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக மட்டும் அவர்கள் வெறியைக் கிளப்புவதில்லை. நமது சமூகத்தில் ஆதிக்கமிக்கதும் படிநிலைக் கட்டமைப்புடையதுமான ஒழுங்கை மீண்டும் நிறுவுவதற்காக பல்வேறு வகையான விலக்கி வைத்தலை வளர்த்து வருகின்றனர். அவர்களின் கருத்தியல், சிறுபான்மை சமூகங்களின் மீது பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கம், “கீழ் சாதியினரின்” மீது “மேல் சாதியினரின்” ஆதிக்கம், பெண்களின் மீது ஆண்களின் ஆதிக்கம், மற்ற மொழிகளின் மீது சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது.

பாசிசம் என்பது ஆதிக்க கருத்தியல். மேலும், சோசலிசத்தை நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டு வர முடியாது. ஆனால் பாசிசத்தை நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டு வர முடியும். அதனால் பாசிசத்தை உண்மையாக எதிர்க்க விரும்புபவர்கள் நாடாளுமன்றத்தையும் தேர்தல்களையும், அதாவது தேர்தல் செயல்முறைகளையும் புறக்கணிக்க முடியாது. தேர்தல் புறக்கணிப்பு, தேர்தல்களை வெறும் கருத்தியல் பரப்புரை வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்துவது, சில வாக்குகளும் இடங்களும் பெற முயல்வது — இத்தகைய அணுகுமுறைகள் அனைத்தும் ஆபத்தானதும், தவறானவையும் கூட. பாசிச சக்திகளின் முன்னேற்றத்தைத் தடுக்க சரியான தேர்தல் தலையீடு தேவை. கர்நாடகாவில் “Wake Up Karnataka” வெற்றிகரமாகச் செய்தது போலத்தான் அது இருக்க வேண்டும்.

இப்போதைய சூழ்நிலையின் நல்ல அம்சம் என்னவென்றால், இந்திய மக்கள் இன்னும் மத வெறியர்களாக மாறவில்லை. மக்கள் பாசகவின் தவறான ஆட்சியை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். அதனால்தான் பாசக பல மாநிலங்களில் தேர்தலில் தோற்றுள்ளது. பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய இடங்களில் பாஜக தொடர்ந்து தோல்வியடைந்தது. ஊடகங்கள் பாகுபாடு காட்டி பக்கச்சார்பு எடுக்காமல் இருந்திருந்தால், அவர்கள் இன்னும் அதிக தோல்விகளை சந்தித்திருப்பார்கள். வரவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களில், இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் எதிர்க்கட்சிச் சக்திகள் பாசகவும் அதன் கூட்டாளிகளும் ஆட்சிக்கு வராமல் தடுக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கர்நாடகாவில் நடந்ததுபோல, இம்மாநிலங்களிலும் குடிமைச் சமூக அமைப்புகள் பெரிய அளவில் செயல்பட வேண்டும்.

பாசக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முழு அரசு அமைப்பும் — நிர்வாகம், நீதித்துறை, இராணுவம், காவல்துறை — சங் பரிவார் சக்திகளால் நிரப்பப்படலாம். அப்போது நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் அல்லது முற்றிலும் அர்த்தமற்றதாக மாறலாம். தேர்தல்களில் பாசிசத்தைத் தோற்கடிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவில் பண்பாட்டுத் தளத்தில் சங் பரிவாரின் மதவெறி மற்றும் மனுவாத கலாச்சார வேர்களை வெளிப்படுத்துவதும் முக்கியம். பொருளாதார முன்னணியிலான போராட்டங்களும் தொடரப்பட வேண்டும்; மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

——————————

ஆசிரியர்: அகில இந்திய கல்வி உரிமை மன்றத்தின் — AIFRTE — பிரசிடியம் உறுப்பினர்.

இது ரமேஷ் பட்நாயக் எழுதிய தெலுங்கு கட்டுரையின் ஆங்கில வடிவத்தின் தமிழாக்கமாகும். அந்த தெலுங்கு கட்டுரை 2025 அக்டோபர் 25 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பரவலாகப் படிக்கப்படும் தினசரியான ஆந்திர ஜ்யோதியில் சிறிது மாற்றப்பட்ட வடிவில் வெளியிடப்பட்டது.

கட்டுரையாளர் – ரமேஷ் பட்நாயக்

மொழிபெயர்ப்பு – ராதா

கட்டுரை மூலத்தில் சுட்டி:

நன்றி: சபரங் இந்தியா

https://sabrangindia.in/bjps-fascism-is-qualitatively-different-from-congress-dictatorship

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW