தமிழகமே, மாவீரர்களை நினைவுகூர்வது எதற்காக? – செந்தில்

06 Dec 2023

2023 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்துவிட்டன.

ஈழ மண்ணில் திடீரென முளைத்துவரும் பெளத்த விகாரைகள் பற்றியோ  உயிருக்கு அஞ்சி தப்பியோடிய தமிழ் நீதிபதி சரவண ராஜா பற்றியோ வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தமது அன்புக்கு உரியவர்களைக் காணாமலே இறந்து போய்க்கொண்டிருப்பது பற்றியோ  வரவிருக்கும் மார்ச் மாதத்தோடு 51/1 தீர்மானத்தின் காலக்கெடு முடிவது பற்றியோ பன்னாட்டுச் சூழலில் ஏற்பட்டுள்ள சாதகமான நிலைமைகள் பற்றியோ பாலத்தீனப் போராட்டத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைப் பற்றியோ இந்திய – இலங்கை பெளத்த தொடர்புகளை வலுவூட்டுவதற்கென 15 மில்லியன் டாலர்கள் கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது பற்றியோ இந்திய – சிங்கள உறவைத் துண்டாட தமது கட்சி வகுத்துள்ள செயல்திட்டம் பற்றியோ எந்தவொரு தமிழ்நாட்டுத் தலைவரும் பேசியதாக தெரியவில்லை.

கடந்த மாவீரர் நாளுக்கும் இந்த மாவீரர் நாளுக்கு இடையில் ஈழத் தமிழருக்காக தமது அமைப்பு செய்தது என்ன? என்று எவரும் பேசவில்லை. ஏனெனில், அதற்குரிய வகையில் அவர்கள் எதுவும் செய்துவிடவில்லை.

இந்த மாவீரர் நாளுக்கும் அடுத்த மாவீரர் நாளுக்கும் இடையே தாம் ஈழத் தமிழர் நலனுக்காக செய்யப் போவதென்ன? என்று தமது கூட்டங்களுக்கு வருவோரிடம் சொல்ல வேண்டும் என்று எந்த தலைவரும் கருதவில்லை. தமது கட்சிக்காரர்களையும் உணர்வாளர்களையும் இப்படி ஆயிரக்கணக்கில்கூட்டி எதையாவது பேசி அனுப்புவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கொஞ்சமும் வெட்கப் படுவதில்லை. 

இனி அடுத்த மே மாதம் வரை ஈழத்தைப் பற்றி யாரும் பேசப் போவதில்லை. பின்னர் எழுச்சியோடு முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடக்கும்.  நல்ல தங்காள் புலம்பல், அர்ச்சுணன் தபசு போல் ஆண்டுதோறும் நடக்கும் சடங்காய் இந்நிகழ்வுகள் மாறிவிட்டன.  

பிறகு ஏன் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இந்நிகழ்வுகளை நடத்துகின்றன? மாவீரர்களையும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களையும் நினைவு கூர்வதற்கு ஆயிரமாயிரமாகவும் உணர்வுபூர்வமாகவும் மக்கள் திரள்கின்றனர்.

 மாவீரர் நாளுக்கோ அல்லது முள்ளிவாய்க்கால் நினைவுநாளுக்கோ நிகழ்வுகளை முன்னெடுக்காவிடில் அந்நிகழ்வுகளை முன்னெடுப்போர் பின்னால் தமது அணிகள் போகக்கூடும். தமது கட்சிக்கார்கள் அப்படி வேறு அமைப்புகளை நோக்கிப் போகாமல் தடுப்பதற்காக் இந்நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இக்கட்சிக்களுக்கு ஏற்படுகிறது.

போராட்டம் ஏன் இரத்த சகதியில் முடிந்தென்று ஈழத் தமிழர்கள் ஆராய வேண்டும் என்பது ஒருபுறம். தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பொருத்தவரை, சுமார் 40 ஆண்டு கால ஈழ ஆதரவு இயக்கத்தால் அந்த இக்கட்டான நேரத்தில் போரை நிறுத்தும் அளவுக்குப் போராட முடியாமல் போனதேன்? என்று நாம் ஆராய வேண்டும். 

 மக்களைத் தட்டியெழுப்பி போராடவல்ல கட்சிகளும் அமைப்புகளும் தலைவர்களும் அப்போது தமிழ்நாட்டில் இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு.

இந்திய அரசு இனவழிப்புப் போருக்கு துணைசெய்தது; இனவழிப்புக் குற்றவாளிகளைக் காத்து நிற்கிறது; தனி ஈழம் அமைந்துவிடக் கூடாதென்பதில் சிங்கள அரசுக்கு அடுத்தப்படியாக கவலைக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை மாற்றும் அளவுக்குப் போராடவல்ல கட்சிகளையும் அமைப்புகளையும் தலைவர்களையும் நாம் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் நடந்தது என்ன?

முள்ளிவாய்க்கால் சாம்பல் மேட்டின் மீதேறி நின்று இந்திய அரசு தமிழர்களுக்கு இழைத்த இரண்டகத்தை தோலுரித்துக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், ஒட்டுமொத்த சிக்கலும் தமிழ்நாட்டின் தேர்தல் பிழைப்புவாத அரசியலுக்குள் முடக்கப்பட்டுவிட்டது.

முள்ளிவாய்க்கால் அரசியல் என்பது கருணாநிதி எதிர்ப்பு, கருணாநிதி மீதான இரண்டகக் கறை துடைப்பு என்ற பேய்க் கூச்சல்களுக்கும் பொய்ப் பித்தலாட்டங்களுக்கும் இடையில் நாசமாகிக் கிடக்கிறது.

இனவழிப்பைச் சொல்லி தனக்கு வாக்களிக்குமாறும் அதன்மூலம் தமிழ்நாட்டில் தாம் ஆட்சியைப் பிடித்தால்தான் ஈழத்திற்கு விடிவு கிடைக்கும் என்ற ‘நாம் தமிழர்’ கட்சியின் கோமாளித்தனம்தான் இன்று தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு அரசியல்.  

முள்ளிவாய்க்காலை நினைவுப்படுத்தி திமுக – காங்கிரசு எதிர்ப்பு அரசியல் செய்ய முயலும் அதிமுக – பாசகவின் பிணந்தின்னி அரசியல்.

கருணாநிதியைக் காப்பாற்றுவதற்காக இந்திய அரசே நினைத்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாதென்று பேசும் பொய்ப் பித்தலாட்டம். கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்புக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாமல் ஈழ ஆதரவு அரசியலை ’ஏதிலி நலத்திட்ட’ அரசியலாக சுருக்கப் பார்க்கும் திமுகவின் ’விளம்பர நிறுவன’ உத்தி.

இதற்கப்பால் சிதறியும் குழம்பியும் கிடக்கும் பெரும்பாலான ஈழ ஆதரவு இயக்கங்கள். இதுதான் இன்றைய நிலை.

கட்சி கடந்து பரவிக் கிடக்கும் தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு ஆற்றல்கள் சிந்திக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது தமிழ்நாடு தன் கடமையை செய்ய தவறிவிட்டது. இதற்கு தமிழ்நாட்டில் மேலோங்கி இருக்கும் இந்திய ஆளும்வகுப்புக்கு வால்பிடிக்கும் பிழைப்புவாத அரசியலே காரணம். இந்த அரசியலை செய்யும் கட்சிகளில்தான் பெரும்பாலான தமிழர்கள் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் வாக்களிப்பவர்களாகவும் இருக்கின்றனர். எனவே, ஒரு கட்சியையோ அல்லது ஒரு தலைவரையோ பொறுப்பாக்குவதற்கு மாறாக தமிழ்நாட்டு ஆளும்வகுப்பு அரசியலைப் பொறுப்பாக்கி இதில் அக்கறை கொண்ட அனைவரும் அதை மாற்றியமைக்க முயல வேண்டும்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி அதற்கு பொறுப்புக்கூறக்கூட தமிழ்நாட்டுத் தலைவர்கள் முன்வரவில்லை என்பது இன்னொரு துயரமாகும். இப்போது கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பைத் தடுக்கவும் அவர்கள் வேலைத்திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு உண்மையாக இல்லாத எந்தவொரு தமிழ்நாட்டுக் கட்சியும் காசுமீரிகளுக்கோ தமிழ்நாட்டு மக்களுக்கோ உண்மையாக இருந்துவிட முடியாது.

இல்லையில்லை தமிழ்நாட்டு மக்களை அக்கட்சிகள் வாக்குகளுக்காக சார்ந்து இருக்கின்றன என்று சிலர் வாதிடக் கூடும். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு, முசுலீம்களுக்கு, தலித் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, உழவர்களுக்கு என்று பகுத்துப் பார்த்தால் எந்த அளவுக்கு இவர்களுக்கெல்லாம் இக்கட்சிகள் உண்மையாக இருந்துள்ளன என்பது புரிந்துவிடும்.

மாவீரர்கள் நினைவுகளைப் போற்றுவது அவர்களது கனவை நினைவாக்குவதற்கு உறுதியேற்கவே; செயல்திட்டங்களை வகுக்கவே, செயல்படவே, வெறும் சடங்குக்காக அல்ல. எல்லாவற்றையும் காயடித்து, சிறுமைப்படுத்தி, பெயளவுக்கானதாக மாற்றவல்ல தமிழ்நாட்டு  தலைமைகள் மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நாள் ஆகியவற்றையும் சடங்காக்குவதில் இலகுவாக வெற்றிக் கண்டிருப்பது வியப்புக்குரியது அல்ல.

ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்ட இலட்க்கணக்கான உணர்வாளர்கள் அறிவின் பாற்பட்டும் அறத்தின் பாற்பட்டும் தமது மெய்யான, நீண்டகால நலன்களின் பாற்பாட்டும்கூட இது குறித்து சிந்தித்துப் பார்ப்பார்களாக..

ஆயிரக்கணக்கானோரை ஓரிடத்தில் கூட்டி வாயளப்பத்தை விடவும் அக்கட்சிகள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ஒரு முறை ஓராயிரம் பேரைத் திரட்டி சிங்கள தூதரகத்தை முற்றுகையிடுவார்களாயின் அது ஈழத் தமிழர்களுக்கு செய்யக்கூடிய சிறந்த ஆதரவாக அமையக்கூடும்.

நன்றி: உரிமை மின்னிதழ்..

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW