காசாவில் தொடரும் இனவழிப்புப் போர் – தோற்றுப்போகும் உலக ஒழுங்கு – செந்தில்

10 Jan 2024

இன்று 23-12-2023 – காசா மீதான இனவழிப்புப் போரின் 78 ஆவது நாள்.

23 ஐநா மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் காசாவில் உணவுப் பொருட்கள் இல்லாத காரணத்தால் நிலவிவரும் பட்டினி சூழல் பற்றிய அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த காசா மக்களும் உணவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர்; அதில் 5,76,000 பேர் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர். எந்நேரத்திலும் தொற்று நோய் வெடித்து பேரழிவுக்கு இட்டுச்செல்லக் கூடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

காசா மீதான இசுரேலின் இனவழிப்புப் போர் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ”நாங்கள் காசாவைப் படைநீக்கம் செய்கிறோம். அதுவரை நிறுத்தமாட்டோம்” என்கிறார் இசுரேலின் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு.

அமாசு நடத்திய தாக்குதல்

அக்டோபர் 7 ஆம் நாள் அமாசு இசுரேலின் மீது சரமாரியாக 5000 எறிகணைகளை ஏவியது. காசாவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் இருக்கும் டெல் அவிவ் என்ற இசுரேலின் தலைநகரம் வரை அமாசு ஏவிய எறிகணைகள் எட்டிப்பார்த்தன. ஒரேநேரத்தில் தரைவழி, வான்வழி, கடல்வழியாக அமாசு போராளிகள் தெற்கு இசுரேலில் ஊடுறுவி இசுரேல் படையினருக்கு எதிரானத் தாக்குதலை நடத்தினர்.

அல்-அக்சா என்பது கிழக்கு ஜெருசலேத்தில் உள்ள இசுலாமியர்களின் மூன்றாவது புனிதத் தலமாகும். இந்த மசூதியை அவமதிக்கும் வகையில் இசுரேலியப் படையினர் செய்த அட்டூழியங்களுக்கு பதிலடி கொடுப்பதும் இத்தாக்குதலின் நோக்கங்களில் ஒன்றாகும். இந்நடவடிக்கைக்கு அல்-அக்சா வெள்ள நடவடிக்கை என அமாசு பெயரிட்டிருந்தது.  

முதலில் அமாசின் தாக்குதலால் 1405 பேர் கொல்லப்பட்டதாக இசுரேல் சொன்னது. இப்போது கொல்லப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 1139 என்றும் எண்ணிக்கை காயம்பட்டோர் எண்ணிக்கை சுமார் 8730 என்றும் கணக்கு சொல்லியுள்ளது.

இசுரேல் படையினர், காவலர்கள் மட்டும் இன்றி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதன் பெயரால் இதை ’மோசமான பயங்கரவாத குற்றமாக’ உலகுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது இசுரேல்.

அமாசு 240 பேரை பணையக் கைதிகளாக தூக்கிச் சென்றது.

நெதன்யாகு தலைமையிலான அதிதீவிர வ்லதுசாரி இசுரேலிய அரசின் ஆதரவில் மேற்குகரையில் உள்ள வன்பறிப்பு குடியேறிகளின் அட்டூழியங்கள், அல் அக்சா மசூதியைத் தொடர்ச்சியாக அவமதிப்பது, 17 ஆண்டு காசாவை முற்றுகைக்குள் வைத்திருப்பது, ஆபிரகாம் உடன்படிக்கை என்ற பெயரில் சவுதியும் இசுரேலும் இயல்பாக்க உடன்படிக்கை காண இருந்தமை, ஈரானுடன் அமாசுக்கு இருந்த முரண்பாடு முடிவுக்கு வந்தமை ஆகியவை இத்தகைய தாக்குதலை இந்நேரத்தில் மேற்கொள்ள  காரணங்களாக இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. 

அமாசின் செய்தி தொடர்பாளர் காலித் குவாதாமி பல பத்தாண்டுகளாக பாலத்தீனர்கள் எதிர்கொண்டு வரும் கொடுமைகளுக்கு எதிரான தாக்குதல் இதுவாகும். காசாவில் பாலத்தீன மக்களுக்கு எதிரான கொடுமைகளையும் அல்-அக்சா போன்ற புனித தலங்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் பன்னாட்டுக் குமுகம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

இசுரேல் தொடங்கிய போர்:

காலையில் 6:30 மணிக்கு அமாசு தன் தாக்குதலைத் தொடங்கியது என்றால் சரியாக 9:45 மணிக்கெல்லாம் காசாவின் வான்பரப்பில் இசுரேல் குண்டுகளை வீசத்தொடங்கிவிட்டது.

இந்த போருக்கு இசுரேல் வைத்திருக்கும் பெயர் ”இரும்பு வாள்” நடவடிக்கை.

வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், ஏதிலி முகாம்கள், வாழ்விடங்கள் என்ற எந்த வேறுபாடும் இன்றி குண்டுகளை வீசியது இசுரேல் படை.. திசம்பர் 22 ஆம் நாளின் முடிவில் குறைந்தது 20,057 பேர் காசாவில் கொல்லப்பட்டிருப்பதாகவும் அதில் 8000 பேர் குழந்தைகள், 6200 பேர் பெண்கள் என்று காசா கணக்கு வெளியிட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் 53,320 க்கும் மேற்பட்டவர்கள். அதில் குழந்தைகள் 863 பேர் , பெண்கள் 6327 பேர். சுமார் 6700 பேர் காணவில்லை. அதாவது அவர்கள் கட்டிடக் குவியிலுக்குள் சிக்குண்டிருக்க வேண்டும் அல்லது இறந்திருக்க வேண்டும்.

மேற்கு கரையிலும் பாலத்தீனர்களுக்கு எதிரான கொலைகளை இசுரேலிய படையும் அங்குள்ள யூதக் குடியேறிகளும் செய்து வருகின்றனர்.  அங்கு 76 குழந்தைகள் உட்பட 303 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். காயம்பட்டவர்கள் 4655 பேர் என மேற்கு கரையின் நலவாழ்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கண்மூடித்தனமான குண்டுவீச்சினால் 60% குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.  சுமார் 3,06,500 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 352 கல்வி நிறுவனங்கள், 27 மருத்துவமனைகள், 102 இயங்கு மருத்துவகங்கள் (ஆம்புலன்சு), 197 வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 73 ஊடகவியலாளர்கள் இதுவரை இப்போரில் கொல்லப்பட்டுள்ளனர். எல்லைகள் கடந்த செய்தியாளர்கள் ( Reporters without borders) என்ற அமைப்பு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை முன் வைத்து ஏக்கில் ( Hague) உள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டு முறை ( அக் 31, திச 22) போர்க்குற்றங்களுக்கானப் புகார் தந்துள்ளது.

வெறும் 24 மணி நேரத்தில் காசா நகரத்தில் உள்ள பத்து இலட்சம் மக்களை  வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து செல்லுமாறு அக்டோபர் 12 அன்று இசுரேல் அரசு சொன்னது. காசாவில் இருந்து பாலத்தீனர்களை முற்றாக வெளியேற்றிவிட்டு காசாவையும் விழுங்க வேண்டும் என்பது இசுரேலின் நோக்கம். 

வான்வழித் தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் தரை வழியாகவும் இசுரேல் காசா மீது படையெடுத்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.

குண்டு மழை பொழியத் தொடங்கியவுடன் காசாவுக்குள் உணவு, மருந்து, குடிநீர், எரிபொருள் என எதுவும் நுழையவிடாமல் தடுத்தது எகிப்து காசா எல்லையான சினாய் தீபகற்பத்தில் இருக்கும் ரஃபா எல்லை வழியாக சரக்கு உந்துகள் வருவதற்கு இசுரேல் அனுமதிக்காமல் இருந்த நிலையில், ஐ.நா. செயலர் அண்டோனிய குட்டரசு நேரடியாக இதில் தலையிட்டு சில வண்டிகளாவது உள்ளே செல்வதற்கு இசுரேலை இணங்கச் செய்தார்.

இத்தனை இழப்புகளுக்கும் இடையில் பாலத்தீனர்கள் தமது விடுதலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இசுரேலின் தலைமையமைச்சர் நெதன்யாகு செல்வாக்கு இழந்த தலைவராக மாறிக் கொண்டிருக்கிறார்இசுரேலிய மக்கள் நெதன்யாகு அரசைவிடவும் படைத் துறையை நம்புவதாக செய்திகள் வருகின்றன; அக்டோபர் 7 தாக்குதல் நடத்தப்பட்டவுடன் ஆளுங் கட்சி, எதிர்க்கட்சியை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை நெதன்யாகு அமைத்துக் கொண்டார். பணையக் கைதிகளை மீட்க வலியுறுத்தி இசுரேலுக்குள் போராட்டங்கள் நடக்கின்றன.

போர் நிறுத்தம் வந்தால், நெதன்யாகு அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள்திரள் போராட்டங்கள் வெடிக்கக் கூடும் என்று இசுரேலின் உள்நாட்டு அரசியல் சூழல் மதிப்பிடப் படுகிறது. எனவே, போரை நீட்டிப்பது நெதன்யாகு அரசுக்கு ஓர் உள்நாட்டு அரசியல் தேவையாகவும் இருக்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரானப் போரா?

அமாசின் தாக்குதல் ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்றும் தமக்கு தற் பாதுகாப்புக்கான உரிமை இருக்கிறது என்றும் சொல்லிக் கொண்டு இப்போரை நடத்துகிறது இசுரேல். வழமைபோலவே பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர் என்ற பெயரில் போராடும் மக்களுக்கு எதிரானப் போராகவே இது நடத்தப்பட்டு வருகிறது. ஈழத்தில் 2009 ஆம் நடந்தவற்றின் மறுமதிப்பாக காசாவில் இப்போது நடந்துவருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்களை இயன்றவரை இல்லாதொழிக்கும் இனவழிப்புப் போரை சிறிலங்கா அரசு நடத்தியது போல் அமாசுக்கு எதிரானப் போர் என்ற பெயரில் பாலத்தீனர்களுக்கு எதிரானப் போரை இசுரேல் நடத்திவருகிறது.

அக்டோபர் 7 அன்று அமாசு நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றது இசுரேல். கூடவே, குழந்தைகள் கழுத்தறுத்துக் கொல்லப்படுவதாகப் பரப்புரை செய்தது. ஆனால், அது பொய் என்று மெய்ப்பிக்கப்பட்டது.

அமாசு தாக்குதல் நடவடிக்கையின் போது இசுரேல் படை நடத்திய எதிர்தாக்குதலில் தான் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தியும் இசுரேலிய காவல்துறை நடத்திய முதல் கட்டப் புலனாய்வில் வெளிவந்துள்ளது.

நோவா இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தும் திட்டம் அமாசுக்கு கிடையாது என்பது புலனாய்வில் தெரியவந்துள்ளது. அங்கு இசுரேலிய படை தனது அப்பாச்சி திருகிறக்கையில் ( Apache Helicopters) நடத்திய தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிப்புட்சு பீரி என்ற இடத்தில் பணையக் கைதிகள், அமாசு போராளிகள் என்ற வேறுபாடின்றி இசுரேலிய படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது; வீடுகள் மீது குண்டு வீசு அழித்துள்ளது. மகிழுந்துகள் மீது குண்டு வீசி அதற்குள் இருந்தவர்களை கரித்துண்டாக்கியுள்ளது இசுரேல்.

எதிரியிடம் தம்மவர்கள் பணையக் கைதிகளாக சிக்காமல் தவிர்க்கும் பொருட்டு இப்படி சொந்த மக்கள், படை வீரர்கள், எதிரிப் படையினர் என்ற வேறுபாட்டின்றி கொல்வதை ஒரு போர் செயல்பாடாக வகுத்து 1986 இல் இருந்து செயல்படுத்தி வருகிறது இசுரேலியப் படை. அந்த செயல்பாட்டுக்கு வைத்துள்ளப் பெயர் ’அனிபல் செயல்பாடு’ ( Hannibal Directive) . பொது ஊழிக்கு முந்தைய காலத்தில் ரோமாபுரி படையிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது எனத் தற்கொலை செய்து கொண்ட யூதத் தளபதி ஒருவரின் பெயர்தான் அனிபல்.

அமாசைப் பொருத்தவரை அதன் நோக்கம் என்பது படையினர், காவல்துறையினரைத் தாக்குவது, எவ்வளவு இயலுமோ அவ்வளவுக்கு பணையக் கைதிகளைத் தூக்கிச் செல்வதே ஆகும். அதன் மூலம் இசுரேலியச் சிறைகளில் வாடும் 7000 த்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்களை மீட்பதும் பாலத்தீனச் சிக்கலுக்கான அரசியல் தீர்வில் முன்னேற்றம் காண்பதும் அதன் நோக்கங்களாக தெரிகின்றன.

 அமாசு பயங்கரவாதம் என்றும் தமது படுகொலைகளையும் பன்னாட்டு சட்டமீறல்களையும் நியாயப்படுத்தும் நோக்கிலும் இசுரேல் உருவாக்க முனைந்த கதையாடல் நொறுக்கப்பட்டுள்ளது.

இசுரேல் படையினர் போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் இழைத்து வருகின்றன என்பதும் கேள்விக்கிடம் இன்றி அம்பலப்பட்டுள்ளது.

இனவழிப்புக் குற்றங்களைப் பொறுத்தவரை அவற்றை வரையறுப்பதற்கு குற்றமிழைக்கும் அரசின் நோக்கம் அதுதான் என்பதை மெய்ப்பிக்க வேண்டும். இசுரேலிய அரசத் தலைவர்களாக இருப்போர் தமது பேச்சுக்களால் இனவழிப்பு நோக்கத்தை வெளிக்காட்டியுள்ளனர். பாலத்தீனர்கள் ’மனித மிருகங்கள்’ என்றும் காசா மீது அணு குண்டைப் பயனபடுத்த வேண்டும் என்றும் ’யூதப புராணக்கதையில் வருவது போல் குழந்தைகள், பெண்கள் என்ற வேறுபாடின்றி கொன்று குவியுங்கள்’ என்றும் பலவாறு இசுரேல் அரசத் தலைவர்கள் பேசியுள்ளனர். உடனடியாக உலக நாடுகள் தலையிட்டு இனவழிப்பை நிறுத்த வேண்டும் என்று அக்டோபர் 12 அன்று இனவழிப்புத் தொடர்பான சட்டம், கல்விப்புலம்சார் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் 800 பேர் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு உலகத்தை விழித்துக் கொள்ளச் செய்தனர்.

பாலத்தீன ஆதரவும் பன்னாட்டுச் சூழலும்:

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாலத்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரபு நாடுகளில் மட்டுமின்றி ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆசியாவிலும் போரை நிறுத்த வலியுறுத்திய போராட்டங்கள் நடக்கின்றன. இவை மூன்று செய்திகளை உலகிற்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

  1. சிக்கலை  அக்டோபர் 7 அமாசு தாக்குதலோடு மட்டும் சுருக்கப் பார்க்கும் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. அமாசின் தாக்குதல் ஒன்றும் வெற்றிடத்தில் நடந்துவிட வில்லை.  பாலத்தீனம் குடியேற்ற காலனியத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் வரலாற்றோடு குறிப்பாக கடந்த 17 ஆண்டுகளாக காசா முற்றுகையிடப் பட்டிருப்பதோடும் ( Contextualize) பொருத்திப் பார்க்க வேண்டும்.
  2. பாலத்தீனர்களைப் பயங்கரவாதிகளாக சித்திரித்து படுகொலைகளை ஏற்கச் செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பாலத்தீனர்களுக்கு எதிரானப் படுகொலைகள் மாந்தக் குலத்திற்கு எதிரானப் படுகொலைகளாக ( Humanise) உலகத்தின் முன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
  3. உணர்வூட்டக் கூடிய வகையில் பெயரிடுவதன் ( Naming) மூலம் போர் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அழிவை விளக்கப்படுத்தி உலகத்தை விழிப்படையச் செய்த பாங்கு. எடுத்துக்காட்டாக, இது மற்றுமொரு நக்பா/ பேரழிவு ( 1948 இல் நடந்த பாலத்தீனர்களுக்கு எதிரானப் படுகொலைகளும் இடப்பெயர்வும் இப்படி அழைக்கப்படுகிறது) என்ற கூற்று, ’குழந்தைகளின் கல்லறை’ என்று ஐ.நா. செயலர் சொன்னக் கூற்று, இசுரேலிய சட்டங்கள் யூதர்கள், பாலத்தீனர்கள் என்று பாகுபாடு காட்டும்விதம் ’கட்டமைப்பு வகைப்பட்ட நிறவேற்றுமை’ என்ற ஒப்புமை, ”காசா போர் இனவழிப்புக்கான பாடநூல் எடுத்துக்காட்டு’ என்ற கூற்று ஆகியவற்றை சொல்லலாம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை மேற்காசியாவில் இசுலாமிய உலகத்திற்கு எதிரான அதன் போரின் தொடர்ச்சிதான் இது. மேற்காசியாவில் இசுரேல் அமெரிக்காவின் பதிலியாகும். அதன் அமைவிடத்தைப் பொருத்த படையியல் முக்கியத்துவமும் செறிவான ஐட்ரோகார்பன் வளமும் கொண்ட பகுதி இசுரேலாகும். இது முதலாவது பொருளில் பாலத்தீனத்தின் விடுதலைப் போராகவும அதன் எதிர்ப்பக்கத்தில் இசுரேலின் குடியேற்ற காலனியப் ( settler colonialism) போராகவும் இருக்கும் அதே வேளையில் அமெரிகாவினது ஈரானை சுற்றி வளைக்கும் வட்டாரம் சார்ந்த போராகவும் மேற்காசியாவில் அமெரிக்காவின்  படர்ச்சிக்கும் சீனாவின் தலையெடுப்புக்கும் இடையிலான வல்லரசியப் பதிலிப் போராகவும் அமைகிறது. அமெரிக்க குடியரசு தலைவர் ஜோ பைடன், “இசுரேல் என்ற நாடு இருந்திருக்கவில்லை என்றால் அப்படி ஒன்றை கண்டுபிடித்தாக வேண்டும்” என்று சொன்னதில் இருந்து இசுரேலுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க நலன்களை விளங்கிக் கொள்ளலாம். எனவே, ஆண்டொன்றுக்கு 2 பில்லியன் டாலர் படைசார் உதவிகளை இசுரேலுடனான கூட்டு நடவடிக்கைகளுக்காக செலவிடும் அமெரிக்கா, இந்த போர் தொடங்கியவுடன் 1 பில்லியன் டாலர் பெறுமதியான உதவிகளை செய்ய உறுதிக் கொடுத்தது.  

இது நடுக்கிழக்கு வட்டாரப் போராக விரிவடைந்து செல்லுமாயின் அதாவது, ”பாலத்தீனத்திற்கு ஆதரவாக இசுபுல்லாவோ அல்லது ஈரானோ  இசுரேலுக்கு எதிரானப் போரில் அமாசுடன் இணைந்து கொண்டால், நான் களம் இறங்குவேன்” என்றபடி அமெரிக்கா மத்தியதரைக் கடலில் வீற்றிருக்கிறது. படையுதவி மட்டுமின்றி ஐ.நா. வின் வழியாக போர் நிறுத்தத்திற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கும் தடையாக பாதுகாப்பு அவையில் அமெரிக்கா தனது வெட்டதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது.

கடந்த நவம்பர் 11 அன்று அரபுக் கழகமும் ( 22 அரபு நாடுகள்) இசுலாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு ( OIC – 57 இசுலாமியர் பெரும்பான்மை கொண்ட நாடுகள்) சவுதியில் காசா போர் குறித்து பேசுவதற்காகக் கூடின. போர் நிறுத்தம், காசாவில் நடந்துவரும் பன்னாட்டு சட்டமீறல்கள் உள்ளிட்டவற்றில் உடன்பாடு காண முடிந்தாலும் இசுரேல் மீது திட்டவட்டமான அரசியல், பொருளியல் தடை விதிப்புகளை நோக்கிச் செல்வதற்கு முடியவில்லை. தீர்மானத்தில் இசுரேலுக்கு எதிரான தடை குறித்த வரிகளை நீக்கச் சொல்லி சவுதி இரண்டக வேலையை செய்தது. மற்ற நாடுகளும் அதற்கு இணங்காமல் இல்லை!

அதேநேரத்தில், உலகின்  எண்ணெய் வள இருப்பில் 48% ம், சூயசு கால்வாய் வழியான கடல் வணிகப் போக்குவரத்தில்  30% கொண்ட இந்தப் பகுதியில் கடுங்கோன்மை ஆட்சிகளும் தமக்குள் மிக கடுமையான முரண்பட்ட அரசுகளும் உண்டு. ஆயினும், பாலத்தீன ஆதரவு மக்கள் திரள் போராட்டங்களின் காரணமாக அவ்வரசுகள் நேர்க்கோட்டில் வந்துள்ளன. போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் மேற்குலககத்தின் இரட்டைத் தனத்தை திறனாய்வு செய்கின்றன. கடந்த காலத்தில் அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டார்ன், துருக்கி ( நேட்டோ அணியில் இருக்கிறது), ஓமான், குவைத், பக்ரைன், அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் மூலவுத்தி வகையிலான கூட்டணியும் அவற்றின் மீது செல்வாக்கும் இருந்ததுண்டு. ஆனால், இப்போது தனது படைவலுவைக் காட்டுவதற்கு அங்கே போர்க்கப்பல்களை நிறுத்தி உறுமிக் கொண்டிருக்கும் நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த  21-11-2022 அன்று ( BRICS – பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ) கூட்டமைப்பின் தலைவர்கள் இணையவழியில் சந்தித்தனர். மேற்படி நாடுகள் மட்டுமின்றி எகிப்து, எத்தியோபியா, அர்ஜெண்டினா, சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர். ஐநா செயலர் அண்டோனியா குட்டரசும் இதில் கலந்து கொண்டார். ஜி20 நாடுகளின் கூட்டமும் இணையவழியில் நடைபெற்றது. இவை எல்லாவற்றிலும் போர் நிறுத்தமும் இரு நாட்டுத் தீர்வும் வலியுறுத்தப்பட்டன.

தென்னாப்பிரிக்கா, ஓன்டுராசு, கொலம்பியா, சிலே, துருக்கி, பக்ரைன், ஜோர்டான் ஆகிய நாடுகள் இசுரேலுடனான தூதரக உறவுகளைத் துண்டித்துள்ளன.

நடுகிழக்கில் உள்ள ‘எதிர்ப்பியக்க அச்சு ( Axis of Resistance)’ ஐ பொருத்தவரை, ஈரான் பாலத்தீனப் போராட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில், அதன் தலைவர் அயதுல்லா கம்மேனி, இத்தாக்குதல் குறித்து அமாசு தமக்கு முன்பே தெரிவிக்கவில்லை என்றும் இதில் நேரடியாக தலையிட முடியாது என்றும் சொல்லியுள்ளது. லெபனானில் இருந்து செயல்படும் இசுபுல்லா போராளிக் குழு அமாசை ஆதரித்து தனது எல்லைப் பகுதியில் இருந்து சில தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தாலும் நேரடியாக தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதன் தலைவர் அசன் நசருல்லா, ”இது அமாசின் போர்” என்று சொல்லியுள்ளார். ஏமனில் இருந்து செயல்படும் அவுதி போராளிக் குழு, செங்கடலில் இசுரேல் நோக்கிச் செல்லும் சரக்கு கப்பல்களைத் தாக்குவோம் என அறிவித்து ஒரு சில தாக்குதலை நடத்தியது. இப்போது அமெரிக்கா தனது ஐரோப்பிய நண்பர்களோடு இணைந்தபடி செங்கடலில் கடல் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டிருக்கிறது. இவையன்றி ஈராக், சிரியாவிலும் போராளிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் ஈரான் ஆதரவாக இருக்கிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

அக்டோபர் 7 இல் போர் மூண்டதிலிருந்து மேற்சொன்ன போராளிக் குழுக்கள் நடுக்கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது 60 க்கு மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவும் குண்டு வீச்சுகளை நடத்தியுள்ளது. இந்த வட்டாரத்தில் போர் விரிவடைந்து விடுமோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. அதேநேரத்தில் அந்த வட்டாரத்தில் உள்ள அரசுகளும் உலகளாவிய வல்லரசிய நாடுகளும் நடுகிழக்கு அளவிலான போராக இது விரிவடைந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கின்றன.

மேற்காசியாவில் இரசிய – சீன இருப்பு அமெரிக்கா செல்வாக்கை மட்டுப்படுத்தியுள்ளது. சிரியாவில் அமெரிக்கா முனைந்த ஆட்சி மாற்றம் தடுக்கப்பட்டு இரசிய ஆதரவு பெற்ற ஆசாத்தின் ஆட்சிப் பாதுகாக்கப்பட்டது. இருநாட்டு தீர்வு என்ற நிலைப்பாட்டுடன் பாலத்தீனத்துடனும் இசுரேலுடன் உறவைப் பேணி வருகிறது இரசியா. துருக்கியுடனான உடன்படிக்கைகளுக்கு முயன்று வருகிறது இரசியா. கடந்த மார்சு மாதம் சீனாவின் உதவியுடன் சவுதி – ஈரான் உடன்படிக்கை காணப்பட்டது. இதன் மூலம், ஈரான் – சவுதி இடையிலான ஏழாண்டு பகை முடிவுக்கு வந்தது. மேற்காசியாவில் சீனா வளையச் சாலை (betl and road) 19 நாடுகள் வழியாகச் செல்வதை ஒட்டிய உள்கட்டமைப்பு உருவாக்குதல், வளைகுடா எண்ணெய் வாங்குவதில் முதலாவது இடத்தில் இருப்பது, டாலருக்குப் பகுதிலாக யுவானிலும் அந்தந்த நாட்டு தேசிய நாணயங்களிலும் வணிகத்தை மேற்கொள்வது, ஈரானுடன் 25 ஆண்டுகளுக்கான மூலவுத்திவகையிலான ஒத்துழைப்பு ஆகியவை சீனாவினது மேற்காசிய செல்வாக்குக்கான பொருளியல் அடிப்படைகளாகும்.  ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, எத்தியோபியா, அரபு அமீரகம் ஆகியவை பிரிக்சில் இணைக்கப்பட்டுள்ளன. ஈரான் சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளிலும் அங்கம் வகிக்கிறது.

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த 2003 ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரக்கணக்கானப் போராட்டங்கள் அந்த ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக உலகெங்கும் நடந்தன. ஆயினும், அப்போரை நிறுத்த முடியவில்லை.  அன்றைய உலகம் என்பது சீனா ஒரு பெரும் ஆற்றலாக தலையெடுக்காத உலகமாகும். ஆனால், மேற்காசியாவில் சீனாவின் தலையெடுப்பின் காரணமாக அமெரிக்காவின் செல்வாக்கு அடிவாங்கியுள்ள காலமாக இது இருக்கிறது. எனவே, பாலத்தீனத்திற்கு ஆதரவான மக்கள் போராட்டங்களும் வல்லரசியங்களுக்கு இடையிலான நலன்களுக்கான போட்டியும் சில வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.

மக்கள் போராட்டங்களும் அதற்கு செவிசாய்க்க வேண்டிய நிலையில் அரபு அரசுகளும் உள்ளன. அரபு அரசுகளுடனான உறவும் உள்நாட்டுப் போராட்ட அழுத்தங்களும் ஐரோப்பாவில் உள்ள பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகளின் நிலைப்பாட்டில் தாக்கம் செலுத்துகின்றன. அரபு அரசுகளை முழுவதும் பகைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு வணிக நலன்களைக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளும் காசாவில் போர் நிறுத்தம் கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தோற்றுப் போன உலக ஒழுங்கு:

அக்டோபர் 7 முதல் ஐ.நா.வில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அரபுலகம் –  ஈரான் – இரசிய – சீன அணி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு வருகின்றது.

போர் தொடங்கியதில் இருந்து நான்கு தீர்மானங்கள் பாதுகாப்பு அவையில் முன்வைக்கப்பட்டு அவை தோற்றுப் போன நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் நாள் மால்டா முன் மொழிந்த, மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இடைக்கால போர்நிறுத்த தீர்மானம் ஒன்று நிறைவேறியது. அதில் அமெரிக்கா, இரசியா, இங்கிலாந்து ஆகியவை வாக்களிக்காமல் விலகிக் கொண்டன. ஏனைய 12 நாடுகள் ஆதரித்து வாக்களித்திருந்தன. அத்தீர்மானத்தில் அமாசு நடத்திய அக்டோபர் 7 தாக்குதல் பற்றியும் இசுரேல் நடத்தும் வான்வழிக் குண்டு வீச்சுகள் பற்றியும் குறிப்பு இல்லை என்பதை காரணமாக காட்டியே அமெரிக்கா விலகி நின்றது.

இதற்கிடையே அக்டோபர் 27 அன்று ஐ.நா. பொதுப் பேரவையில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது கட்டாயப்படுத்தும் தீர்மானம் (non-binding) அல்ல. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 121 நாடுகள் வாக்களித்திருந்தன; 14 நாடுகள் எதிர்த்து வாக்களித்திருந்தன; 44 நாடுகள் வாக்களிக்காமல் விலகி நின்றன.  இந்திய அரசும் வாக்களிக்காமல் விலகி நின்றது.

இப்போது திசம்பர் 13 அன்று ஐ.நா. பொதுப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 153 நாடுகள் வாக்களித்துள்ளன; அமெரிக்கா, இசுரேல் உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன; 23 நாடுகள் வாக்களிக்காமல் விலகி நின்றுள்ளன. இந்திய அரசு போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இந்த இரண்டு மாத கால அழிவுகளும் அரபுலகத்தின் அழுத்தமும் நாடுகளின் நிலைப்பாட்டில்  தாக்கம் செலுத்தியுள்ளன.

இம்மாத தொடக்கத்தில் பாதுகாப்பு அவையில் முன்மொழியப்பட்ட தீர்மானம் அமெரிக்காவால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், ஓர் உருப்படி இல்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்காத வகையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று சில நாட்கள் முயன்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் இது. அரபு அமீரகம் முன்மொழிந்த இத்தீர்மான வரைவின் மீதான வாக்கெடுப்பு  3 நாட்களில் ஏழு முறை ஒத்திவைக்கப்பட்டது. இடைக்கால போர்நிறுத்தத்திற்கான நிலைமைகளை உருவாக்குவது என்று வரைவு மாற்றப்பட்டது. மனிதாபிமான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு ஐ.நா.வுக்கு வாய்ப்பளிக்கும் வரியும் நிக்கப்பட்டது.

எந்த தீர்மானத்தையும் மதிக்காமல், பணையக் கைதிகளை மீட்கும் வரையிலும் அமாசை பூமிப் பந்தில் துடைத்தழிக்கும் வகையிலும் போரை தொடர்வோம் என்று சொல்கிறது இசுரேல்.

கடந்த திசம்பர் 22 ஆம் நாளில் 4 நாள் போர்நிறுத்தத்திற்கான உடன்பாடு எட்டப்பட்டு அது 7 நாட்களாக விரிந்து சென்றது. பிடித்து வைக்கப்பட்டுள்ள அமாசிடம் இருந்த 240 பணையக் கைதிகளில் பாதி பேர் வரை விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதிலீடாக இசுரேல் சிறையில் ஆண்டுகணக்கில் வாடுவோரில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய பணையக் கைதிகளை மீட்க வேண்டிய அழுத்தத்தில் இசுரேல் இருக்கிறது. கடந்த திசம்பர்  16 அன்று இசுரேலிய பாதுகாப்புப் படை  ( IDF) நடத்திய தாக்குதலில் மூன்று பணையக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். அது தவறுதலாக நடந்துவிட்டதாக அது தெரிவித்துள்ளது. நெதன்யாகு அரசு பணையக் கைதிகள் விடுவிப்பது தொடர்பில் இசுரேலுக்குள் மக்கள் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது.

அக்டோபர் 7 இல் இருந்து இதுவரை சுமார் 20000 பேர் காசாவில் கொல்லப்பட்டது அவர்களின் மக்கள் தொகையில் 1% ஆகும். அதாவது தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடி என்றால் அதில் 1% மக்கள் தொகை என்பது 80 இலட்சமாகும் என்பதில் இருந்து தகவின் அளவைப் புரிந்து கொள்ளலாம். சுமார் 85% மக்கள் காசாவுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர். புதுமக் கால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கான அழிவை காசா சந்தித்துள்ளது.

இத்தனைக்கும் இடையில் ஓர் அரம்ப அரசாக ( Rogue State) நடந்து கொண்டிருக்கும் இசுரேலைக் கட்டுக்குள் கொண்டு வந்து போரை நிறுத்தி இந்த இனவழிப்பைத் தடுக்க முடியாத நிலையிலேயே இன்றைய உலக ஒழுங்கு இருக்கிறது.

பாலத்தீனர்கள் நடத்திவரும் போராட்டம் என்பது தமது இறைமைக்கும் விடுதலைக்குமானப் போராட்டம் மட்டுமல்ல, இந்த நீதியற்ற உலக ஒழுங்கை மாற்றியமைப்பதற்கான போராட்டமும் ஆகும்.

”வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ” என்பதற்கிணங்க பாலத்தீனர்களின் விடுதலை வேட்கையும் களப்படையாத போர்க்குணமும் இன்றைக்கு அமெரிக்கா எதிர் சீனா என வளர்ந்துவரும் இருமுனை வல்லரசிய போட்டியை நோக்கிய வளர்ச்சிப் போக்கும் நம்பிக்கையளிக்கக் கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு ( அகமும் புறமும்) சூழலாகும்.

உடனடிப் போர் நிறுத்தம், தங்குதடையற்ற மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் செல்வதற்கான ஏற்பாடு, இசுரேல் அரசு செய்துவரும் போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்களுக்கு எதிரானப் பன்னாட்டுப் புலனாய்வு, சுதந்திர , இறைமையுள்ள பாலத்தீனக் குடியரசு ஆகிய கோரிக்கைகளை பாலத்தீனர்களுக்கு ஆதரவாக சனநாயக ஆற்றல்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டும், அவர்களுக்காக போராட வேண்டும். தத்தமது அரசுகளை நோக்கி இக்கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

இதை வென்றெடுப்பதற்கான வழியென்பது இசுரேலுடனான அரசியல், பொருளியல், பண்பாட்டு உறவுகளைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற புறக்கணிப்பு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். ஜயோனிச இசுரேல் அரசுக்கு ஆதரவாக திரும்பிக் கொண்டிருக்கும் இந்துத்துவ இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு எதிராக இம்முழக்கத்தை வைக்க வேண்டும். இந்த போர்க்களத்தில் கைதிகள் பரிமாற்றத்திற்கு அப்பால் திட்டவட்டமான அரசியல் ஈட்டங்களை வென்றெடுத்தாக வேண்டும், ஏனெனில் பாலத்தீனர்கள் சிந்திய குருதியும் பலியிடப்பட்டுள்ள உயிர்களும் மிக் அதிகம். அதற்கு ஈடுசெய் நீதியென்பது சுதந்திர பாலத்தீனமே.  

நன்றி வையம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW