தேர்தல் 2024 – தமிழ்நாட்டு அரசியல் களம் – செந்தில்

20 Jan 2024

2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. பத்தாண்டு கால மோடி ஆட்சி இந்தியாவில் கட்டமைப்புவகையிலான மாற்றங்களைச் செய்துள்ளது.

மதச்சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறிப்பாக இசுலாமியர்களுக்கு எதிரான அரசியல் என்பது அடுக்கடுக்காய் நடந்துள்ளது. அவர்கள் அமைப்பாவதற்கும் போராடுவதற்கும் உள்ள உரிமை மறுக்கப்பட்டு பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற அமைப்புகள் தடைசெய்யப்படுகின்றன. இசுலாமியர்களுக்கு எதிரான இனத்துடைப்பு, இனவழிப்பு நோக்கி மோடியின் ஆட்சி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நாம் இனி எப்படி வாழப் போகிறோம்? என்று கலங்கி நிற்கும் நிலை இசுலாமியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவநம்பிக்கையும் ஏமாற்றமும் கவலையும் விரக்தியும் நிரம்பி இருக்கிறது. ’மாநிலங்களையே ஒழித்துக்கட்ட வேண்டும்’ என்ற கொள்கை கொண்ட ஆர்.எஸ்.எஸ். ஆல் வழிநடத்தப்படும் மோடி அரசு, மாநிலங்களை எல்லா வகைகளிலும் செல்லாக் காசு ஆக்கும் வேலையை செய்து வருகிறது. ஜம்மு காசுமீர் மாநிலத்தை இரண்டாக துண்டாடி ஒன்றிய ஆட்சிப்புலமாக மாற்றி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழ்நாட்டை மூன்றாக உடைப்பதற்கும் சதித் திட்டம் தீட்டி வருகின்றனர். அரைகுறை கூட்டாட்சியைக்கூட ஒழித்துக்கட்டி ஒற்றையாட்சியாக மாற்றத் துடிக்கிறது. உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை அறுவடை செய்து ஆட்சிக்கு வந்த மோடி, பெருங்குழுமங்களின் வாராக் கடன் 16 இலட்சம் கோடியை ரத்து செய்தார். அதானி – அம்பானி ஆகிய இரு பெருங்குழுமங்கள் உலகப் பணக்காரர் வரிசையில் ஏறிப் போவதற்கு ஒத்தாசையாக இருந்தார். அதானியின் பங்கு சந்தை மோசடிகளை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிக்கொண்டு வந்தது. ஆனால், அது குறித்து சிறப்புப் புலனாய்வு ஆணையம் அமைப்பதற்கு மோடி இணங்கவில்லை. அதானியை எதிர்த்துப் பேசுபவர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். சிறையில் தள்ளப்படுவார்கள் என்ற நிலை இருக்கிறது. ‘மோதானி(MODANI)’ என்று ஊரே சிரிக்கும் அளவுக்கு மோடி – அதானி கூட்டணி நாடறிந்து கிடக்கிறது. நாட்டின் பொருளியல் அதானி – அம்பானி ஆகிய இருவர் கையிலும் குவிக்கப்படுகிறது. நாட்டின் அரசியல் அதிகாரம் மோடி – அமித் ஷா கையில் குவிக்கப்படுகிறது.நாட்டின் சனநாயக நிறுவனங்கள் மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டன. மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை, நாடாளுமன்ற நிலைக்குழு எல்லாம் டம்மி ஆக்கப்பட்டு முடிவுகள் அனைத்தும் தலைமை அமைச்சர் அலுவலகத்தில் எடுக்கப்படுகின்றன. நீதிமன்றம் வளைக்கபடுகிறது. ஆர்.பி.ஐ. நிட்டி ஆயோக், அமலாக்கத் துறை, என்.ஐ.ஏ., வருவாய் துறை, தேர்தல் ஆணையம் என அனைத்தும் மோடியின் செல்லப் பிராணிகள் ஆகிவிட்டன. நாடாளுமன்ற சனநாயகத்தின் மீதும் அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கையில்லாத ஆர்.எஸ்.எஸ். அந்த அமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டு அதை ஒழித்துக்கட்டும் வேலையை செய்து வருகின்றது.ஒரு பேரழிவை நோக்கி இந்த நாட்டை இவர்கள் நகர்த்திச் செல்கிறார்கள். நாட்டை ஒரு பாசிச இருள் சூழ்ந்து நிற்கிறது என்று இதைத்தான் சொல்கிறோம். இந்த ஆட்சி தொடர்ந்தால் இந்நாட்டு மக்கள் பேரழிவைச் சந்திப்பது நிச்சயம், எனவே, வருகின்ற தேர்தல் என்பது இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாகும். இதை மக்கள் தவறவிட்டுவிடக் கூடாது.இந்த தேர்தலின் ஒரே கேள்வி, மோடியின் ஆட்சி தொடர்வதா? கூடாதா? என்பதே ஆகும். பாசிசம் வேண்டுமா? வேண்டாமா? என்பதே ஆகும். இந்த ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப் பட்டால் எல்லாம் மாறிவிடுமா? தலைகீழ் ஆகிவிடுமா? பாலாறும் தேனாறும் பாய்ந்தோடுமா? என்று கேட்கிறார்கள். இந்த ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால், நடக்கவிருக்கும் பேரழிவைத் தடுக்கலாம், மக்களைப் பாதுகாக்கலாம், சனநாயக வெளியைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இவை இருந்தால் போராட்டத்தை நடத்திச் செல்வதற்கு அது பெரிதும் உதவும். இந்த தேர்தல் என்பது வாழ்வா? சாவா தேர்தலாக மாறி இருக்கிறது.

யாருக்கு வாழ்வா, சாவா தேர்தல்?

இந்து தேசியம் என்பது இசுலாமியர், கிறித்தவர்களை விலக்கி வைக்கிறது. மொழிவழித் தேசியத்தை மறுக்கிறது, மாநில இருப்பையே ம்றுதலிக்கிறது. எனவே, இந்த தேர்தல் என்பது இசுலாமியர் உள்ளிட்ட மதச்சிறுபான்மையினருக்கு வாழ்வா? சாவா/ தேர்தலாக அமைகிறது. மேலும் மொழிவழி மாநிலங்களுக்கும் அந்தந்த மாநிலங்களில் வளர்ந்துள்ள ஆளும்வர்க்கத்திற்கும் அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலக் கட்சிகளுக்கும் வாழ்வா? சாவா? தேர்தலாக மாறியுள்ளது. அந்த வகையில், இந்தப் பிரிவினர் தமது பேர வலிமையை இழந்துள்ளனர் என்பது கசப்பான உண்மை. அது இனி இந்திய அரசியலின் மெய்நிலையாக மாறிவிட்டது. எனவே, மாநிலக் கட்சிகள் தமக்கு இது வாழ்வா? சாவா? தேர்தல் என்பதைப் புரிந்து கொண்டால், மோடி ஆட்சியைத் தொடர்வதா? கூடாதா? என்பதே இத்தேர்தலின் முதன்மை கேள்வி என்ற இடத்திற்கு வந்துவிடுவர்; அதற்கேற்ப அரசியல் கூட்டணியிலும் பங்குபெறுவர். இசுலாமிய அமைப்புகளுக்கும் இந்த ஏரணம் பொருந்தக் கூடியதே.

மீண்டும் மோடி தான் வருவாரா?

இந்திய அளவிலான அரசியல் நிலைமைகள் பற்றி போதிய மதிப்பீடு இல்லாமலே பெரும்பாலானோர் மோடி தான் மறுபடியும் வருவார் என்று அடித்துவிட்டுக் கொண்டுள்ளனர். இதை ஓர் அரசியல் போராட்டமாகவும் செயல்போக்காகவும் கருதிப் பார்ப்பதில்லை. இது குறித்து தேர்தல் கள ஆய்வாளர் திரு யோகேந்திர யாதவ் ஒரு கட்டுரையை ‘தி பிரிண்ட்’ இணையதளத்தில் எழுதியுள்ளார்.தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், தெலங்கானா, பஞ்சாப், காசுமீர், நாகலாந்து, மிசோரம், இலட்சத்தீவு ஆகிய மாநிலங்கள் ஒருவகை. இதில் உள்ள 120 தொகுதிகளில் கடந்த முறை பாசக வென்றது ஆறு இடங்களில்தான். இந்த நிலைமையை தக்க வைத்தால் போதும் . கடந்த ஆண்டு தெலங்கானாவில் 4 இடங்களையும் , பஞ்சாபில் 2 இடங்களையும் பாசக பெற்றிருந்தது. அந்த இடங்களைக் கூட இம்முறை பெற்றுவிட முடியும் என்று சொல்ல முடியாது.இரண்டாவது,, பாசக வலுவாக இருக்கும் மாநிலங்கள் – இதில் 223 இடங்கள் உள்ளன. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், இராஜஸ்தான், தில்லி, குஜராத், அசாம், ஜம்மு, திரிபுரா, அருணாச்சல் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்கள் ஆகும். இவற்றில் மூன்று மாதங்களில் பெரிய மாற்றங்கள் வரப்போவதில்லை. இவற்றில் கடந்த முறை 190 இடங்களில் பாசக வெற்றிப்பெற்றுள்ளது. அதாவது 85% வெற்றி வாய்ப்பு. இவற்றில் ஏற்கெனவே வெற்றிப் பெற்ற தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டு , ஒரு 50 தொகுதிகளைக் குறி வைத்து எதிர்க்கட்சிகள் வேலை செய்ய வேண்டும். அதில் 20-25 இடங்களில் கூடுதலாக வெற்றிப் பெற்றாக வேண்டும்.மூன்றாவது, பாசக கடந்த முறை சிறப்பாக வெற்றி பெற்று இம்முறை பலவீனம் அடைந்துள்ள மாநிலங்கள். இதில் மொத்த இடங்கள் 200 ஆனால், இங்குதான் எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணியை அமைத்து கடும் முயற்சி எடுக்க வேண்டும். இதுதான் முக்கியமான களம். கர்நாடகா, மேற்குவங்கம், மராட்டியம், பீகார், அரியானா, ஒடிசா, சிக்கிம், மேகாலயா, லடாக், சண்டிகர், புதுச்சேரி. கடந்த முறை பாசக வெற்றிப் பெற்ற இடங்கள் 107. அதன் கூட்டணி கட்சிகள் பெற்ற இடங்களையும் சேர்த்தால் மொத்த இடங்கள் 147. இதில் பாசகவை 30 – 40 தொகுதிகளில் தோல்வி அடையச் செய்வதற்கு பாடுபட வேண்டும்.மொத்தத்தில் இரண்டாவது வகையில் 20 தொகுதிகளையும் மூன்றாவது வகையில் 30 தொகுதிகளையும் பாசகவுக்கு குறைத்தால் மொத்த எண்ணிக்கையில் 50 குறையும். பாசகவை 253 இடங்களுக்கு கொண்டு வர முடியும்.இதுதான் அவர் சொல்லும் கணக்கு. இனி தமிழ்நாட்டுக்கு வருவோம்.

தமிழ்நாட்டு தேர்தல் களம்:

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாசக கூட்டணி பெற்றது ஒரே ஒரு இடம். அதுவும்கூட அதிமுகப் பெற்ற இடம். பாசக ஓரிடத்தில்கூட வெற்றிப் பெறவில்லை. இத்தனைக்கும் அதிமுகவோடு பாசக கூட்டணி வைத்திருந்தது. ஆனாலும் பாசகவால் வெற்றி பெற முடியவில்லை. இம்முறையும் பாசக ஓரிடத்திலும் வெற்றிப்பெற முடியாமல் தடுக்க வேண்டும். இதுதான் தமிழ்நாட்டு பாசிச எதிர்ப்புக் களத்தின் இலக்காக இருக்க முடியும். 2014 ஆம் ஆண்டு கார்ப்பரேட் விளம்பரத்தால் ஊதிப் பெருக்கப்பட்ட மோடியை முன்னிறுத்திய போதும் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வெற்றியை அவர்களால் பெற முடியவில்லை. மதிமுக, தேமுதிக, பாமக, ஐ.ஜேக. புதிய நீதிக் கட்சி ஆகியோருடன் கூட்டணி வைத்துக் களம் கண்டது பாசக. காங்கிரசு , அதிமுக, திமுக – ஆகிய கட்சிகள் தனித்தனி கூட்டனியாக இருந்தன. சிபிஐ – சிபிஐ(எம்) தனிக் கூட்டணியாக இருந்தது. இத்தகைய மோடி அலையின் பின்னணியிலும் தமிழ்நாட்டில் கூட்டணிகள் சிதறியிருந்த பின்னணியிலும் கன்னியாகுமரியில் பாசகவை சேர்ந்த பொன்.இராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்றார்.2024 ஐ பொறுத்தவரை பாசக – அதிமுக கூட்டணி முறிந்துவிட்டது. திமுக அணி, அதிமுக அணி தனியாகவும் பாசக அணி தனியாகவும் போட்டியிடுகின்றன. எனவே, பொதுவில் பாசகவின் வெற்றி வாய்ப்பு மிக குறைவு. ஆனாலும், அவர்கள் சில தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பாடுபடுகின்றனர்.

பாசக குறிவைக்கும் தொகுதிகள்

கன்னியாக்குமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, ஈரோடு, திருப்பூர், நிலகரி, தென்சென்னை, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் பாசக முனைப்புடன் போட்டியிடக் கூடும். எனவே, இவற்றில் கவனம் செலுத்தி பாசகவைத் தோற்கடிக்க வேண்டும். இப்போது நம்முன் பல கேள்விகளை எழுப்பப்படுகின்றன. அவற்றுக்கான பதிலைக் காண்போம்.

  1. எப்படியும் தமிழ்நாட்டில் பாசக தோற்றுவிடும்? அதிகம் போனால் ஓரிரு இடங்களில் பாசக வெற்றி பெறக்கூடும். ஆனால், தமிழ்நாட்டின் முடிவைப் பொறுத்தா இந்திய அளவிலான நிலைமை மாறப் போகிறது. வட இந்தியாவில்தான் பாசக வலுவாக இருக்கிறதே?
    • ஓரிரு இடத்தில் பாசக வெற்றி பெற்றாலும் அது ஆட்சி அமைப்பதற்கு உதவுவதில் போய் முடிந்துவிடலாம் என்பதால் ஒரெ ஒரு இடமாக இருந்தாலும் அது முக்கியத்துவம். உடையது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு வாக்கோ, ஒரு இடமோ எதுவானாலும் அது முக்கியத்துவம் உடையதே. மேலும் பாசக ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வருவதாக இருந்தாலும் அதை தனிப்பெரும்பான்மைப் பெறவிடாமல் தடுப்பதுகூட தேர்தலுக்குப் பிந்தைய அரசியலுக்கு உதவும். கூட்டணிக் கட்சிகளை சார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டாலும் அதுவும் தேர்தலுக்குப் பிந்தைய அரசியலுக்கு உதவும். எனவே, ஓரிரு இடமானாலும் அதில் பாசகவை வெற்றிப் பெற்றுவிடக் கூடாது. அது தமிழ்நாட்டில் அவர்கள் ஊக்கம் பெற்று வளர்வதற்கு வழிவகுத்துவிடும்.
  2. தமிழ்நாட்டில் எப்படியும் தோற்கப் போகும் பாசகவுக்கு எதிராக வேலைத் திட்டம் எதற்கு?
    • பாசக தோற்கடிக்கப்பட வேண்டும். அதுவும் கட்டுப்பணம் கூட இல்லாமல் தோற்கடிக்கப்பட வேண்டும். எந்த அளவுக்கு பாசகவின் வாக்கு எண்ணிக்கையைக் குறைக்கிறோமோ அந்தளவுக்கு அக்கட்சி வலுவிழக்கும். கட்சியில் இருந்து நிறைய பேர் வெளியேற நேரிடும். எனவே, பாசக தோற்கடிக்கப்படுவதும் அந்த தோல்வி அவமானகரமாக அமைவதும் தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது.
  3. இது திமுக அணிக்கு ஆதரவு திரட்டும் வேலையா ?
    • நாட்டின் முதன்மைக் கேள்வி பாசிசம் வேண்டுமா? வேண்டாமா? என்பதே, அதாவது மோடி ஆட்சி தொடர வேண்டுமா? கூடாதா? என்பதே ஆகும். மாநில அரசு மீது கடுமையான விமர்சினங்கள் இருப்பினும் மக்களவை தேர்தல் என்பது ஒன்றிய அரசில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது பற்றியாகும். அரசியல் அதிகாரத்தில் இருந்தால்தான் பாசிசத்தை செயல்படுத்த முடியும். அரசியல் அதிகாரத்தைப் பறித்தால் பாசிச அரச வடிவம் எடுப்பதை தடுக்கவும் குறைந்தபட்சம் தள்ளிப் போடவும் முடியும். மேலும் ஒன்றிய அரசுக்கு இருக்கும் அதிகாரங்களோடு ஒப்பிடும் போது மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரம் சொற்பமே. எனவே, ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரம் தான் இந்திய அரசின் ஆட்சி அதிகாரத்தின் முதன்மை அலகாகும். மாநில அரசுக்கு 19 துறைகளில் மட்டும்தான் அதிகாரம் உண்டு. ஒரு மாநில அரசு நினைத்தால் இந்த 19 துறைகளின் வழியாகத் தான் நன்மையோ தீமையோ செய்ய முடியும். ஆனால், ஒன்றிய அரசிடம் குவிந்துகிடக்கும் அதிகாரம் அளவற்றது. ஒன்றிய அரசு தீங்கானது எனில் அதனால் விளையக் கூடிய தீமையும் அளவற்றதாக அமைந்துவிடும்.
    • எனவே, ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரம் என்பது மிகமிக முக்கியமானது. இன்றைய அரசியல் சூழலில் ஒன்றிய அரசில் அதிகாரத்தில் யார் இருக்க வேண்டும் என்பதைவிட யார் இருக்கக் கூடாது என்பதைப் பற்றி நாம் கவலைப்பட்டாக வேண்டும். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்ற மனநிலையும் சாதி, சமயக் குழு மன நிலையும், அரசு, அரசியல் அதிகாரம் பற்றிய புரிதல் இன்மையும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இந்தியாவில் செயல்படும் பாங்கு பற்றிய புரிதல் இன்மையும் பாசிச அபாயத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் பாசிச பாசக எதிர்ப்பை செயல்படுத்துவதற்கு தடையாக இருக்கிறது.
    • மோடி ஆட்சி ஏன் தொடரக் கூடாது? என்பது பற்றிய புரிதல் இல்லாததால்தான் திமுக அரசின் எதிர்ப்பை முதன்மைப்படுத்தும் நிலை உள்ளது.
    • பாசிசம் நாட்டில் ஏற்படுத்தக் கூடிய அழிவை, மக்களைப் பிளவுபடுத்தி ஆழமான காயங்களை ஏற்படுத்துவதை ஒரு பிரச்சனையாக உணராததன் விளைவு இது. மக்கள் பிளவுபட்டும் ஒருவர் மீது மற்றவர் நம்பிக்கையற்றும் ஆழமான காயங்களைச் சுமந்து கொண்டும் இருந்தால் அந்நாட்டில் சமூக மாற்றம்தான் சாத்தியமா?
  4. தேர்தலில் பாசிசத்தை வீழ்த்த முடியாது!
    • இது இப்போது தமிழ்நாட்டில் பேசப்பட்டு வரும் அரிய கண்டுபிடிப்பு. நினைத்த போதெல்லாம் பாசிச அபாயம் என்று சொல்லி ஐக்கிய முன்னணி கட்டிய கேலிக்கூத்தான வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. காவல் துறை ஒடுக்குமுறையைக் கூட பாசிசம் என்று வரையறுத்து கவலைக் கொள்ளும் நிலை நம்மிடையே உண்டு.
    • தேர்தல் வழியாக புரட்சி சாத்தியமில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை தேர்தல் வழியாகத்தான் பாசிசம் வருகிறது என்பதும். தேர்தல் வழியாக நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி பாசிச ஆட்சி அமைப்பு முறையை உருவாக்குகின்றனர் என்பதுதான் உண்மை. பாசிச ஆற்றல்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போது அந்நாட்டில் பாசிச ஆட்சி முறையை உருவாக்க முடியாது. எனவே, பாசிச ஆற்றல்களை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தினாலே பாசிச ஆட்சி முறை உருவாவதைத் தடுத்துவிட முடியும்.
    • பாசிச ஆட்சி முறையைத் தடுக்க முடியவில்லை என்றால் அது இந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும். பிறகு அதில் இருந்து மீள்வதற்கு சில பத்தாண்டுகள் ஆகும். அதாவது ஒரு சமூக மாற்றத்திற்கான இயக்கம் மேலெழுந்துவர சில பத்தாண்டுகள் இடைவெளி ஏற்பட்டுவிடும்.
    • பாசிச ஆற்றல்களை ஆட்சியில் வைத்துக் கொண்டு தெருச் சண்டையில் வீழ்த்துகிறேன் என்பது வாய்ச்சவடால். பாசிச ஆற்றல்களைத் தேர்தல் வழியாக ஆட்சியில் இருந்து கீழிறக்குவதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? கள நிலைமை என்ன? சக்திகளின் பலாபலன் என்ன? என்று பரிசீலித்துப் பார்த்து, நிலவுகின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்துவதுதான் மக்கள் மீது மெய்யான் அக்கறை கொண்டவர்களின் பண்பாக இருக்கும். மாறாக மக்களைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் கற்பனாவாதமும் தூய்மைவாதமும்மட்டும் மேலோங்கி இருந்தால் அது மக்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் வேலையாகும்.
    • பாசிச ஆற்றல்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் என்னும் மந்திரக் கோலைப் பறித்து எடுத்துவிட்டால் அவர்களின் பலம் பாதியாக குறைந்துவிடும். பின்னர் அவர்களை தெருக்களில் எதிர்கொள்வது இலகுவாக இருக்கும். மாறாக தேர்தலைப் புறக்கணித்துவ்ட்டோ அல்லது தேர்தலின் முக்கியத்துவத்தைக் குறைத்துப் பேசிக் கொண்டோ இருந்தால் அது முழுப்புரட்சியை முன்மொழியும் வேலை. ஆனால், அப்படியான முழுப்புரட்சிக்கு உரிய வலுவான அகநிலை சக்திகள் இல்லாத நிலையில் எப்படி அது சாத்தியம்? தேர்தலிலேயே அவர்களைத் தோற்கடிக்க முடியாதென்றால் எப்படி அவர்களுக்கு எதிரான முழுப்புரட்சிக்கு மக்கள் வந்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்? அப்படியென்றால் எப்போது மக்கள் அத்தகைய முழுப் புரட்சிக்கு தயார் ஆவார்கள்? அதற்கு என்ன வழி? அதுவரை மக்களுக்கு சின்ன மூச்சுவிடும் நேரம் கூட கிடையாதா? அதுவரை ஏற்படக்கூடிய அழிவுகளுக்கு யார் பொறுப்பு? அதிதீவிர இடதுசாரி வேடம் அணிந்து கொண்டு முழுப்புரட்சியையோ அல்லது முழுதேசிய இன விடுதலை வாதத்தையோ சிலர் முன்மொழிந்து கொண்டு குட்டையைக் குழப்பி வருகின்றனர். உண்மையில் மாற்று அரசியல் முகாமில் இருக்கும் ஆற்றலை சிதறடிப்பதில் மேற்சொன்ன போக்கு குறிப்பிடத்தக்க பங்கு வகித்து வருகிறது.
  5. ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பா? வெறும் பாசக எதிர்ப்பா? என்று கேள்வி கேட்பது
    • எப்படியும் ஆர்.எஸ்.எஸ். க்கு எதிராக சண்டைப் போடப் போகிறோம். எனவே, பாசக எதிர்ப்பு  முக்கியமல்ல, தேர்தல் முக்கியம் அல்ல என்ற இடத்திற்கு வருகிறார்கள். இதுவும் தேர்தல், அரசியல் அதிகாரம், பொருளியல் நிலைமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும். பாசகவைப் பலவீனப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ். ஐ பலவீனப்படுத்துதான். பாசகவை ஆட்சியில் இருந்து கீழிறக்காமல் ஆர்.எஸ்.எஸ். ஐ ஒன்றும் செய்துவிட முடியாது. பாசகவை எந்த அளவுக்கு பலவீனப்படுத்துகிறோமோ அந்தளவுக்கு ஆர்.எஸ்.எஸ். பலவீனப்படும். பாசக வேறு ஆர்.எஸ்.எஸ். வேறு அல்ல, பாசகவை எதிர்த்தால் அது ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்ப்பதுதான். பாசகவை வேரறுத்தால் அது ஆர்.எஸ்.எஸ். ஐ வலுவிழக்கச் செய்வதுதான்.
  6. அதிமுக, நாம் தமிழர் கட்சி பாசக கூட்டணியில் இல்லையே?
    • ஆம். இக்கட்சிகள் பாசக கூட்டணியில் இல்லை. ஆனால், அவை மோடி ஆட்சி தொடரக் கூடாது என்றோ பாசிசம் என்றோ நிலைப்பாடு எடுக்கவில்லை. அவை நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியைப் பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி வழமையான திமுக எதிர்ப்பு லாவணி அரசியலிலேயே மூழ்கியுள்ளன. மேலும் ’நான் பாசகவை எதிர்க்கவில்லையா?’ என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்கிறார். அவர் பாசக, காங்கிரசு, திமுக, அதிமுக ஆகிய அனைத்துக் கட்சிகளையும் சமப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
    • அதுமட்டுமின்றி, சமயச் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்து பாசகவின் வெற்றிக்கு உதவக் கூடிய வேலையையும் இவர்கள் செய்யக் கூடும். எடுத்துக்காட்டாக, கன்னியாகுமரியில் ஒரு கிறித்தவ மீனவ வேட்பாளர் ஒருவரை நிறுத்தி மீனவர்கள் வாக்குகளைப் பெற்று அது திமுக அணிக்கு போகாமல் தடுக்கும் வேலையை அதிமுக செய்ய இருப்பதாக செய்திகள் வெளிப்படுகின்றன. கன்னியாகுமரியில் பாசக வேட்பாளர் வெற்றிப் பெறச் செய்வதற்கு இது உதவும்.
    • கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்  தோழர் கே.எம்.செரீப் கூட்டணி வைத்திருந்தார். அப்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் செரீப் போட்டியிடுவதாக இருந்தால், அந்த தொகுதியைக் கொடுப்பதாக் திரு கமலஹாசன் மேடையில் அறிவித்தார். அதாவது பாசக சார்பாக குஷ்பூ அந்த தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் கனிசமான இசுலாமிய வாக்குகள் இருந்ததால் அந்த வாக்குகள் திமுக அணிக்கு செல்லாமல் உடைப்பதற்காக செரீப்பை களம் இறக்கினார் கமல். பாசக போட்டியிடக் கூடிய தொகுதிகளில் அதிமுகவும் நாதகவும் நிறுத்தக் கூடிய வேட்பாளரையும் அக்கட்சிகள் செய்யக்கூடிய பரப்புரையையும் உற்று நோக்கினால் அவர்கள் மோடி ஆட்சி அதிகார எதிர்ப்பு கொண்டிருக்கிறார்களா? இல்லையா? என்பது புலப்பட்டுவிடும்.

பாசிசம் என்பது பற்றிய புரிதல் இல்லாமல்தான் இது போன்ற கேள்விகள் பலவற்றைக் கேட்டுக்கொண்டு நம்மவர்கள் வருகிறார்கள். இது மட்டுமின்றி இந்தியாவில் பாசிசம் என்பது வல்லரசியத்தின் தேவை என்று ஒரு சாராரும் பொருளியல் அடித்தளத்தைப் பற்றிக் கவலையின்றி பார்ப்பனப் பாசிசம் என்று விளக்கும் இன்னொரு சாராரும் உள்ளனர். இவற்றின் மீதான விவாதத்தைத் தனியாக நடத்த வேண்டும். நிதிமூலதனத்தின் பெயராலும் தமிழ்த்தேசியத்தின்பெயராலும் பாசகவையும் காங்கிரசையும் சமப்படுத்தும் தரப்பினரும் உள்ளனர். இவையும் தனித்த விவாதத்தில் தீர்வு காண வேண்டியதாகும். இவை எல்லாம் தேர்தலின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டுவதற்கு செய்யப்படும் முயற்சிகளே ஆகும்.

2024 ஆம் ஆண்டு தேர்தல் இந்திய வரலாற்றின் திசைப்போக்கை நிர்ணயிக்கவல்ல தேர்தலாகும். அது தனித்துவமிக்க தேர்தலாக அமையப்போகிறது. எனவே, தமிழ்நாட்டில் பாசகவுக்கு பூஜ்ஜியத்தைப் பரிசளிப்பதை உறுதிசெய்தாக வேண்டும்.

பாசக போட்டியிடும் தொகுதிகளில் சில சாதிகளின் வாக்குகளைத் தன்வசம் ஆக்க முயல்கிறது பாசக. அதை முறியடிக்க வேண்டும். மதச் சிறுபான்மையினர் வாக்குகள் சிதறடிக்கப்பட வேண்டும் என்று பாசக விரும்புகிறது. அதற்குப் பல சதித்திட்டங்களைத் தீட்டி வருகிறது. அதையும் முறியடிக்க வேண்டும்.

தைப்புத்தாண்டுப் பிறந்துவிட்டது. இந்த ஆண்டின் ஒரே கேள்வி – மோடியின் ஆட்சி தொடர்வதா? கூடாதா? என்பதே ஆகும். மோடியின் ஆட்சியைத் தொடரவிடக் கூடாது என்பதுதான் உடனடி அவசர தேவை.

நன்றி: சாளரம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW