இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும்! கூட்டறிக்கை

28-9-2026
இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள இரு ஆணையர்கள் SIR நடைமுறைகள் பற்றிய தமது மாறுபாடுகளை எழுத்து வடிவில் அனுப்பியிருந்தமை செப்டம்பர் 21 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமை அமைச்சர் மோடியின் விருப்பத்திற்கிணங்க செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள மூன்று ஆணையர்களில் ஞானேஷ் குமார் தவிர்த்த ஏனைய இரண்டு ஆணையர்களும் ( சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோசி) கடந்த 10 மாதங்களில் 14 முறை SIR குறித்து எடுக்கப்பட்ட முடிவுகளில் தமக்கு இருக்கும் மாறுபாடுகளை எழுத்துவடிவில் வெளிப்படுத்தியுள்ளனர்.1. தமக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டு அவை தேர்தல் ஆணையத்தின் பெயரால் அறிக்கைகளாக வெளியிடப்படுகின்ன.2. புதிய வாக்காளருக்கான விண்ணப்பப் படிவம் 6 இல்,’விண்ணப்பதாரரின் பெற்றோர் பெயர் அல்லது பெற்றோர்களின் பெற்றோர் ( தாத்தா, பாட்டி) பெயர் முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததா? என்ற கேள்வியை தேர்தல் விதிகளைத் திருத்தாமல் எழுமாத்திரத்தில் சேர்க்க முடியாது என்று அவர்கள் சொல்லியுள்ளனர். அதை மீறியும் அக்கேள்வி சேர்க்கப்பட்டுள்ளது. இப்படி சேர்ப்பது அதிகார மீறல் என்றும் சட்டப்பகையானது என்றும் அவர்கள் சொல்லியுள்ளனர்.3. மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 16 இலட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு தீர்ப்பாயத்தின் முன்பு முறையிடப்பட்டுள்ளது. இப்படி முறையீடு செய்தது இவ்விரு ஆணையர்களுக்கும் மேற்கு வங்க தலைமை தேர்தல் ஆணையருக்கும் தெரியாது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பாக விண்ணப்பித்திருப்பது யார்? அதற்கு ஒப்புதல் கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.4. வாக்காளர் பட்டியல் பராமரிப்புக்கான தகவல் தொழில்நுட்பப் பிரிவு படிப்படியாக தில்லியில் மையப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பதிவு அலுவலர்கள் (ERO) மென்பொருளைக் கையாள்வதற்கான அனுமதியை தகவல் தொழில்நுட்பப் பிரிவே வழங்குகிறது. உரிய மற்றும் போதிய அனுமதி இல்லாததால் தேர்தல் தகவல் அலுவலர்கள் மென்பொருளுக்குள் சென்று வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய முடியாமல் போகிறது. இதன் காரணமாக கோவா மாநிலத்தில் ’ஏரணக் குளறுபடிகள்’ ( logical discrepancies) என்ற காரணத்தின் பெயரால் நீக்கப்பட்டவர்களில் 97 பேரது மேல்முறையீடு சரிபார்க்கப்பட்ட பின்பும் இறுதி பட்டியல் வெளியிடும் வரை கோவாவைச் சேர்ந்த தேர்தல் தகவல் அலுவலர்களால் சேர்க்க முடியாமலே போனது. தகவல் தொழில்நுட்பப் பிரிவை அதீதமாக மையப்படுத்தியதே இதற்கு காரணமாகும்.ஒரு கட்டத்தில், தமது மாறுபாடுகளை வெளிப்படுத்தி இவ்விரு ஆணையர்களும் அமைச்சரவை செயலருக்கு கடிதம் எழுதியிருப்பதும் தெரிய வந்துள்ளது. அமைச்சரவை செயலர் சட்ட நடைமுறைகளின்படி தலைமை அமைச்சர் மோடியிடம் அதை கொண்டு சென்றிருக்க வேண்டும். அதன் மீது மோடி எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.மாறுபட்ட கருத்துகள் நிலவுவது சனநாயகத்தின் குறியீடு என்று பாசக பசப்புகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே நியாயமான, வெளிப்படையான தேர்தல் நடைபெறவில்லை என்பது சிவில் சமூக செயற்பாட்டாளர்களல் அம்பலப்படுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில்தான் கடந்த 2023 திசம்பர் மாதம், தலைமை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூவரும் இணைந்து தேர்தல் ஆணையர்களை பணியமர்த்தும் நடைமுறையை மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாறாக அவ்விடத்தில் ஒரு கேபினட் அமைச்சரை வைத்துக் கொள்ளும் புதிய சட்டத்தை மோடி கொண்டு வந்தார். அச்சட்டத்தில், தேர்தல் ஆணையர்கள் மீது சிவில், குற்றவியல் வழக்குகள் நடத்த முடியாதபடி சட்டப் பாதுகாப்பு வழங்கும் பிரிவு 16 ம் சேர்க்கப்பட்டது.அந்த புதிய சட்டத்தின்படி தலைமை அமைச்சர் மோடியால்தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உள்ளிட்ட மூன்று தேர்தல் ஆணையர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஞானேஷ் குமார் தலைமையில்தான் 2024 மக்களவை தேர்தலும் நடைபெற்று மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தார்.அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத சிறப்பு தீவிர வாக்காளர் மீளாய்வு ( SIR) என்ற பெயரில் நாடு தழுவிய வாக்காளர் மீளாய்வு நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கியது. இந்த சட்டப்புறம்பான நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்து ஆசி வழங்கியது நீதிமன்றம். இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு என்பதே கேள்விக்கு உள்ளாகியுள்ளது.வாக்காளர்கள் இவ்வண்ணம் இலட்சக்கணக்கில் நீக்கப்பட்டதன் பின்புலத்தில்தான் பீகார், மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. குறிப்பாக மேற்குவங்கத்தில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களில் 22 இலட்சம் பேர் தீர்ப்பாயத்தின் முன்பு மேல் முறையீடு செய்துள்ளனர். அவற்றில் சுமார் 1 இலட்சம் பேருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அதில் சுமார் 93% பேர் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த முறையீடுகளை விசாரித்து முடிப்பதற்கு இன்னும் 12 ஆண்டு காலம் எடுக்கும் என்று தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் சொல்லியுள்ளனர். இதுதான் இன்றைய நிலை. மூன்றாம் கட்ட SIR இல் இலட்சக்கணக்கானோரது வாக்குகள் பறிக்கப்பட்டு வருகின்றன.இதன் மூலம் SIR க்கு பின்பு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கேள்விக்கு உள்ளாகின்றன. ஏராளமான வாக்காளர்களின் வாக்கு உரிமை பறிக்கப்பட்ட நிலையிலேயே தேர்தல்கள் நடத்தப்பட்டன; இத்தேர்தல் முடிவுகளை எப்படி மக்களின் முடிவாக கருத முடியும்?தேர்தல் ஆணையம் பாசிச பாசக அரசின் முழுமையான கைப்பாவையாக மாறிவிட்டது. நாடாளுமன்ற சனநாயக நிறுவனங்களை விழுங்கி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தலைமை அமைச்சர் அலுவலகத்தில் குவிக்கும் நிகழ்ச்சிபோக்கின் உச்சமாக பாசிச ஆட்சியால் தேர்தல் ஆணையம் முற்றாக விழுங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது. பாசிச பாசக ஆட்சி என்பது மதச்சார்பின்மை பற்றிய சிக்கல் மட்டுமல்ல, நாடாளுமன்ற அமைப்பு முறையை உள்ளுக்குள் இருந்தே ஒழித்துக்கட்டி அதை செயலிழக்கச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பாசிச மோடி – அமித் ஷா சிறுகும்பல் தமது உள்ளங்கையில் குவித்துக் கொள்வது பற்றியதும் ஆகும். பாசக அரசு பாசிச திசையில் முன்னேறுவதை தடுத்து, அரைகுறை நாடாளுமன்ற சனநாயக நிறுவனங்களை கைப்பற்றுவதை எதிர்த்துப் போராடி அவற்றை மீட்டெடுக்க வேண்டும். அதில் மிக முகன்மையானது இந்திய தேர்தல் ஆணையத்தையும் தேர்தல் சனநாயகத்தையும் மீட்பதாகும்.இந்த திசையில் மக்களின் விழிப்புநிலை வளர்க்கப்பட வேண்டும். இந்த திசையில் பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்களின் கவனம் குவிய வேண்டும். இன்றேல் பாசிச ஆட்சி மென்மேலும் வலுப்பட்டுக் கொண்டு போவதை தடுக்க முடியாது.1. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும்.2. SIR உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நடந்து முடிந்தவை மீது குற்றவியல் புலனாய்வு நடத்தப்பட வேண்டும். அனைவருக்கும் வாக்குரிமை உறுதிசெய்யப்பட வேண்டும்.3. SIR க்குப் பின்பு நடத்தப்பட்ட பீகார், மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலத் தேர்தல்கள் செல்லாதென அறிவிக்கப்பட வேண்டும்.4. 2023 தேர்தல் ஆணையர் பணி அமர்த்தல் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.பாசிச மோடி – அமித் ஷா சிறுகும்பலாட்சியை முடிவுக்கு கொண்டுவரும் திசையில் முன்னேறுவதற்கு சனநாயக ஆற்றல்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களிடம் கொண்டு செல்லவும் போராடவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு, தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் செந்தில், ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மனோகரன், மாநில செயலாளர், சிபிஐ(எம்-எல்) ரெட் ஸ்டார் மணி, மாநில அமைப்பாளர், பாட்டாளி வர்க்க சமரன் அணி மதியவன் இரும்பொறை, பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மார்க்சிய கழகம் ஆ. தேவதாசு, தமிழ்நாடு பொதுவு டமை இயக்கம். தொடர்புக்கு: 9941931499