மதுராந்தகம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: பாசிச எதிர்ப்பு நோக்கில் இடதுசாரி, குடியாட்சிய, தமிழ்த் தேசிய ஆற்றல்கள் என்ன செய்யலாம்?

01 Oct 2026

நாள்: 29.09.20262024

மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்குடன் பாசிச எதிர்ப்பு அணிக்கு ஆதரவளிக்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான அணியின் வெற்றிக்குத் துணை நிற்க வேண்டியிருந்தது. நரேந்திர மோதி மூன்றாவது முறை ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாவிட்டாலும், பாசகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அது கேட்ட 400க்கு மேல் இடங்கள் பெற வழியில்லை. அரசமைப்பைச் சீர்குலைக்கும் அதன் முயற்சிகளில் இது ஒரு முட்டுத் தடை ஆயிற்று. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு தொகுதியில் கூட பாசக வெற்றி பெறவில்லை.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை 2024 மக்களவைத் தேர்தலின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியிருந்தது. திமுக தலைமையும் இந்தத் தேர்தலை தில்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான அரசியல் போராகவே வர்ணித்த போதிலும், அதனை திமுகவும் அதன் தலைமையிலான கட்சிகளும் முழு அளவிலான தேர்தல் முழக்கமாக எழுப்பத் தவறி விட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் மாநில அரசின் நலத் திட்டங்களைச் சொல்லி வாக்குக் கேட்பதில் பிழையில்லை என்றாலும், சட்டமுறைப்படியும் அதற்கப்பாலும் வாக்காளர்களுக்கு ஆசை காட்டி வாக்குத் திரட்டும் அறக்கேடு நம்மை முகஞ்சுழிக்கச் செய்தது.

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட தேசிய சனநாயகக் கூட்டணி தோற்றது. அதிலும் பாசக படுதோல்வியடைந்தது. ஆனால் திமுக தலைமையிலான அணியும் தோற்றது. திமுக ஆட்சியிழந்தது. விசய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும் கட்சியாக 108 இடங்கள் வென்றது. எனவே இப்போதுள்ள சட்டமுறைப்படி அக்கட்சி ஆட்சியமைக்க எவ்வகைத் தடையுமில்லை. அறுதிப் பெரும்பான்மை இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்பதில்லை. ஆனால் ஆளுநர் ஆட்சி வடிவில் பாசக ஆட்சி வராமல் தடுப்பது என்ற காரணத்தின் பேரில் விசிக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சிகள் விசய் தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து, திமுக தலைமையிலான அணி உடையக் காரணமாயின.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக ஆட்சி அமைக்கத் தடையாக இருக்க மாட்டோம் என்று தொடக்கத்தில் அறிவித்த போதிலும், தவெக ஆட்சியமைக்க விடாமல் தடுக்கும் நோக்கில் அது மேற்கொண்டதாகச் சொல்லப்பட்ட வாய்ப்பு வேட்டை உத்திகள் பற்றிய ஐயங்களுக்கு திமுகவிடமிருந்து தெளிவான விளக்கங்கள் இதுவரை இல்லை. ஆக, சட்டப் பேரவைத் தேர்தலில் ஒன்றுபட்டு நின்ற பாசக எதிர்ப்பு அணியை திமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், இ.யூ.மு.லீக், மதிமுக ஆகிய கட்சிகளே உடைத்து விட்டன. இந்த நிலைப்பாட்டுக்கு அறிவார்ந்த (முன்பின் முரணற்ற) விளக்கம் ஏதும் தர முடியாத இக்கட்சிகள் வரவிருக்கும் இடைத்தேர்தலில் சிதறி நின்று களத்தைக் குழப்பி வருகின்றன. இந்தக் கட்சிகளில் எதுவும் தமிழ்த் தேசத்தின் முதற்பெரும் பகையாற்றலாக பாசகவை இனங்காட்டி அதன் அடிப்படையில் தங்கள் தேர்தல் நிலைப்பாட்டை விளக்க முன்வரவில்லை.திராவிட முன்னேற்றக் கழகம் சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களைப் பொறுமையாகவும் ஆழமாகவும் திறனாய்வு செய்யத் தவறி விட்டது. பெரும்பாலும் திமுக ஆட்சிக்கு எதிரான எதிர்மறை வாக்குகளே தவெகவுக்கு வெற்றி வாய்ப்பைத் தேடிக் கொடுத்தன என்பதை ஏற்க மறுத்து, தவெகவுக்கு வாக்களித்த மக்களிடம் குற்றங்காண்பதே திமுக தலைமையில் பெரும்பாலோரின் அணுகுமுறையாக உள்ளது. பாசகவை முதன்மைப் பகையாக வரையறுத்ததே தவறு என்று கருதும் அளவுக்கு இவர்கள் சென்றுள்ளனர். பாசகவையும் பாசக அடிமை அதிமுகவையும் எதிர்க்காமல் விசயை மட்டும் குறிவைத்து எதிர்த்திருந்தால் வென்றிருக்க முடியுமாம்!பாசகவை உறுதியாக எதிர்த்து நிற்கும் சிந்தனை மெல்ல மெல்ல திமுக தலைமையிடம் குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்திய அளவில் பெருகி வரும் பாசிச ஆபத்தின் பகைப்புலத்தில் தமிழ்நாட்டு அரசியலை வைத்துப் பார்க்கும் பார்வையை திமுக தலைமை இழந்து விடுமானால் அது திமுகவுக்கு ஆதாயமாக முடிந்தாலும், முடியா விட்டாலும் இந்திய அளவிலும் தமிழ்நாட்டளவிலும் பாசிச எதிர்ப்பு இயக்கத்துக்கு இழப்பாகவே முடியும். எனவே தமிழக மக்களை பாசிச ஆட்சியாளர்களின் கொடும்பிடியில் ஒப்படைப்பதாகவே முடியும். திமுக தலைமை என்ன தவறு செய்தாலும் தேர்தலில் கண்ணை மூடிக் கொண்டு திமுகவை ஆதரிப்பது என்பது அது தற்குற்றம் காண்பதற்கு உதவுதல் ஆகாது.தவெக விசய்க்கு பாசிசமும் பாயாசமும் ஒன்றுதான் என்பது வெறும் உளறல் அன்று. தவெகவின் அடிப்படையான அரசியல் நீண்ட கால நோக்கில் ஆர்எஸ்எஸ் பாசகவுக்கு வழியமைத்துக் கொடுப்பதாகவே இருக்கும் என அஞ்சுகிறோம். கட்சியளவிலோ பொதுச் சமூகத்திலோ குடியாட்சிய நோக்கில்லாமல் ஒற்றை நாயக வழிபாட்டை நம்பியுள்ள ஒரு கட்சி… பாசிச ஆதரவுப் போக்கிற்கே வளமான நாற்றங்காலாக அமையும். ஆனால் தவெக பின்னால் திரண்டுள்ள இளையோரையெல்லாம் தற்குறிகளாகத் தூற்றி, அதைத் தோற்கடிக்க யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கும் பார்வை குடியாட்சியத்துக்கு வலுச் சேர்க்காது.மொத்தத்தில் 2026 பொதுத்தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாசிச ஆதரவுக்கும் பாசிச எதிர்ப்புக்குமான எல்லைக்கோடு கலைந்து போய், களம் தளும்பலாகியுள்ளது. இந்திய அரசில் கோலோச்சும் பாசிசம் மேலும் மோசமாகி வரும் நிலையில், அதற்கு எதிரான போராட்ட அரசியல் இம்மாநிலத்துக்குரிய பதவி அரசியலால் குழம்பிக் கிடப்பது வருந்தத்தக்க நிலவரமாகும். இது இப்படியே நெடு நாள் தொடர முடியாது. மிசாவினால் ஆகப்பெரிதும் காயம்பட்ட திமுக இப்போது ஊபா எதிர்ப்பில் கவனம் செலுத்தக் காணோம். கடைசியாகப் பதவி வகித்த திமுக ஆட்சி சில தெளிவான அரசியல் வழக்குகளைக் கூட ஊபாவில் தொடுத்து, தேசியப் பாதுகாப்பு முகமையிடம் கையளித்தது பற்றி இன்றளவும் வருந்தவில்லை. மீள்வரை (delimitation) தொடர்பான பாசக சூழ்ச்சிகளை அம்பலமாக்கும் திமுகவின் பழைய உறுதியான அணுகுமுறை நீர்த்துப் போகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அமித்சாவின் கையாள் ஞானேஸ்வர் குமார் தலைமையிலான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை எதிர்த்துத் தமிழகத்தின் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களைத் திரட்டிக் களம் காண்பது தன் கடமை என்று திமுக தலைமை உணர்ந்தமைக்கான அறிகுறி நாளது வரை இல்லை. மொத்தத்தில் திமுக தலைமை பாசிச எதிர்ப்பில் சறுக்கிச் செல்லும் போக்கைக் கண்டு கொள்ளாமல் அது என்ன செய்தாலும் தேர்தலில் முட்டுக் கொடுக்கும் அணுகுமுறை இந்திய அளவிலும் தமிழ்நாட்டளவிலும் பாசிச எதிர்ப்புக்கு உதவாது. இது திமுகவின் மீட்சிக்கும் கூட உதவாது.அரசியல் நிலைமையில் காணப்படும் தளும்பல் நீங்கி, கட்சிகளின் நிலைப்பாட்டில் இளக்கம் மாறி சற்றேனும் உறுதிப்படுவதற்குச் சிறிது காலமாகும். இப்படியொரு சூழலில் இடைத்தேர்தலில் எவரையும் ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது எதிர்காலப் போராட்டங்களுக்கு நம் ஆற்றலைச் சேமித்துக் கொள்ள உதவாது. இப்போதைக்குத் தேர்தல் அரசியலில் கலந்து கொள்ளாமல் விலகி நிற்பது முனைப்பான தேர்தல் புறக்கணிப்பு ஆகாது. வாக்காளர்களின் மன நிலையை ஓரளவு உய்த்தறிய இந்தத் தேர்தல்களும் பயன்படும். அது நம் எதிர்கால நிலைப்பாடுகளைத் தீர்மானிக்க மட்டுமல்லாமல், அரசியல் நிலைமையிலான தளும்பல் மாறி எல்லைக் கோடுகள் தெளிவாவதற்கும் உதவக் கூடும்.இடைக்காலத்தில் நாம் சோம்பியிருக்கத் தேவையில்லை. பாசிச எதிர்ப்பு ஒற்றுமை முன்னணிக்கான கோரிக்கைகளை முன்வைத்து முனைப்புடன் இயங்குவோம். உள்ளியலான பாசிச எதிர்ப்பு ஆற்றல்களோடு கொள்கை சார்ந்து ஒற்றுமையும் போராட்டமும் என்ற இயங்கியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம்.

குடியாட்சியக் கடமை ஆற்றுவோம்.

கையொப்பமிட்டோர்:

தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

செந்தில், ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

மனோகரன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்-எல்) ரெட் ஸ்டார்

மணி, மாநில அமைப்பாளர், பாட்டாளி வர்க்க சமரன் அணி

மதியவன் இரும்பொறை, பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மார்க்சியக் கழகம்

ஆ. தேவதாசு, தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம்

தொடர்புக்கு: 9941931499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW