திருப்பரங்குன்றம் இடைக்கால தீர்ப்பு – அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து!

21 Nov 2026

21-11-2026

திருப்பரங்குன்றம் இடைக்கால தீர்ப்பு – அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து! தமிழ்நாடு அரசு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

திருப்பரங்குன்றம் வழக்கில் இடைக்கால தீர்ப்பு என்ற பெயரில் தர்காவுக்கு அருகே உள்ள நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றச் சொல்லியுள்ளது உச்சநீதிமன்றம். தீர்ப்பு வழங்கியது அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு. இந்த தீர்ப்பு எவ்வித சட்ட அடிப்படையும் அற்றது என்ற வகையில் இத்தீர்ப்பை தமிழ்த்தேச மக்கள் முன்னணி எதிர்க்கிறது.

அந்த இடம் யாருக்கு சொந்தம் – தர்காவுக்கா? கோயில் நிர்வாகத்திற்கா?அந்த கல் நில அளவைக் கல்லா? தீபத் தூணா?அவ்விடத்தில் விளக்கு ஏற்றும் மரபு உண்டா? இல்லையா?

இது குறித்து எந்த முடிவும் எடுக்காத நிலையில், இடைக்கால ஏற்பாடாக நவம்பர் 24 ஆம் நாளில், கார்த்திகை தீபத் திருநாளில் அந்த கல்லில் மாவட்ட ஆட்சியர் சொல்லும் ஒரு குழுவினர் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படையான விசயங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்காத நிலையில், ஓர் இடைக்கால ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் அது இருக்கின்ற நிலைமையை தக்க வைக்கும் ( Status quo) தன்மையில் தானே அமைய வேண்டும். மாறாக, இருக்கின்ற நிலைமையை மாற்றி ஒரு தரப்பின் கோரிக்கையை ஏற்கும் வகையில் எப்படி இருக்க முடியும்?

எதற்காக இந்த வழக்கு? தர்காவுக்கு அருகே உள்ள அளவைக் கல்லைத் தீபத் தூண் என்று சொல்லி அங்கே தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவ வெறியர்கள் பூதத்தைக் கிளப்பி உள்ளனர். அங்கே, ஒருமுறைகூட தீபம் ஏற்ற முடியாது, அது மரபு அல்ல என்று கோயில் நிர்வாகமும் அது சட்டப்படியானதல்ல என்று அரசு தரப்பும் உரிமை மீறல் என்று தர்கா தரப்பும் எதிர்த்து நிற்கின்றன. இந்நிலையில், ஒருமுறை மட்டும் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள் என்பது யாருக்கு ஆதரவான நிலைப்பாடு? யாருக்கு எதிரான நிலைப்பாடு? என்பது தெளிவாக தெரியவில்லையா?இந்த தீர்ப்பு சட்ட அடிப்படைகள் அற்றது, மதச்சார்பின்மைக்கு எதிரானது, சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்கத்திற்கு துணை செய்வது, திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற துடிக்கும் சங்கிகளுக்கு உதவக் கூடியது.

இலட்சக்கணக்கானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது என்று முறையிட்ட போது ஒரு முறை வாக்களிக்காவிட்டால் என்ன? என்று அலட்சியமாக கேள்வி கேட்டு தேர்தல் ஆணையத்தோடு கூட்டுச் சேர்ந்து மேற்குவங்கத்தில் பாசக ஆட்சிக்கு வருவதற்கு துணை நின்ற உச்சநீதிமன்றம்தான், இந்த முறை அளவைக் கல்லில் விளக்கேற்ற முடியாமல் போனால் இனி எப்போதுமே ஏற்ற முடியாமல் போய்விடும் என்று கண்ணீர் வடித்துள்ளது!

பாபர் மசூதி வழக்கு, காசுமீர் 370 வழக்கு, குடியுரிமை திருத்தச் சட்ட வழக்கு, SIR வழக்கு என பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் பாசிச மோடி – அமித் ஷா கும்பலாட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு அரசமைப்பு சட்ட கவிழ்ப்பு வேலையை செய்து வந்துள்ளது. இப்போது திருப்பரங்குன்றம் தீர்ப்பிலும் அதுதான் நடந்துள்ளது.

மொத்தத்தில், பாசிச மோடி – அமித் ஷா கும்பலாட்சி இந்தீய நீதித்துறையை விழுங்கிவிட்டது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. எதற்கும் அஞ்சாமல் தமிழ்நாடு அரசு இந்த உண்மையை மக்களிடம் முன் வைக்க வேண்டும்.அளவைக் கல்லில் தீபம் ஏற்றிவிட்டால், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்குவதற்கான அடிப்படையாக அதுவே அமைந்துவிடக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதைவிடவும் கவலைக்குரியது இசுலாமிய மக்களின் மனங்களில் ’தமிழ்நாட்டிலும் இப்படி நடக்கின்றதே!’ என்று ஏற்படக் கூடிய அவநம்பிக்கையாகும். முந்தைய திமுக ஆட்சி இந்துத்துவ பெரும்பான்மைவாதத்திற்கு அடிபணிந்து தர்காவில் ஆடு,கோழி பலியிடுவதற்கு தடை விதித்து தர்கா வழிபாட்டில் நம்பிக்கை கொண்டோரின் உரிமையைப் பறித்தது.

இப்போது உச்சநீதிமன்ற ஆணையின் பெயரால் நிகழ்த்தப்படும் இந்த அட்டூழியத்தை தமிழ்நாடு அரசு எதிர்த்து நிற்க வில்லை என்றால் தர்கா வழிபாட்டினருக்கும் தமிழ்நாட்டு இசுலாமியர்களுக்கும் இது மேலும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். அத்தகைய அவநம்பிக்கை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தமிழ்நாடு அரசும் மதச்சார்பற்ற கட்சிகளும் அமைப்புகளும் அனைத்து வகையிலும் செயல்பட வேண்டும்.தமிழ்நாடு அரசு உடனடியாக இடைக்கால தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த தீர்ப்பு ஏன் நியாயமற்றது என்பதையும் உச்சநீதிமன்றம் ஒன்றியத்தில் ஆளும் பாசக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பதையும் வெளிப்படையாக தமிழ்நாட்டு மக்களிடம் முன்வைக்க வேண்டும்.

இதுவே தமிழ்நாட்டு இசுலாமிய மக்கள் அடைந்துள்ள ஏமாற்றத்திற்கு ஆறுதல் அளிக்கும், தில்லி அதிகாரம் தமக்கு எதிராக இருப்பினும் தமிழ்நாட்டு மக்கள் இவ்விசயத்தில் மதச்சார்பின்மையின் பக்கம் நிற்கின்றனர் என்பதை உணர்த்துவதாக அமையும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன், தி. செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேச மககள் முன்னணி 9941931499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW