பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினால் ஐ.நா. வையே மிரட்டுகிறது இசுரேல்!

08 Nov 2023

விடுதலைப் போராட்டங்களை ’பயங்கரவாதம்’ என்று முத்திரையிட்டு அதை ஒடுக்குவதற்கு ’பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்று பெயரிட்டு படுகொலைகளை நடத்துவது கடந்த இருபது ஆண்டுகால உலக வரலாறாக இருக்கிறது. ஐ.நா. மன்றமும் இந்த உலகப் போக்குக்கு துணை நின்று வல்லரசியத்தின் வாலாக செயல்பட்டு வருகின்றது. இத்தகைய உலக பொதுப் போக்கில் ஒரு கீறல் போடுவது போல் ஐநா பொதுப்பேரவையின் செயலர் அண்டோனியா குட்டர்சு, ”ஹமாசு நடத்திய தாக்குதல் வெற்றிடத்தில் நடந்துவிட வில்லை. கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” என்றொரு கருத்தை சொல்லிவிட்டார். இதை கண்டித்து இசுரேல் அரசின் தரப்பில் பேசப்பட்டவை அதன் அரம்பத்தனத்தை வெளிக்காட்டியுள்ளது.

கடந்த அக்டோபர் 7 ஆம் நாள் ஹமாசு இசுரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடத்திய அதிரடி தாக்குதலில் இருந்து பாலஸ்தீனப் பிரச்சனை மறுபடியும் பேசு பொருளாகியுள்ளது. இந்த தாக்குதலை சாக்காக்கிக் கொண்டு இசுரேல் காசாவின் மீது வான்வழி குண்டு வீச்சுகளைத் தொடங்கிற்று. அன்றாடம் ராக்கெட் குண்டுகளை வீசி காசாவை அழிப்பது, கடல்வழி தாக்குதல், தரைவழித் தாக்குதல் என எல்லா முனையிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 9000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் காயம்பட்டுள்ளனர்; கொல்லப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கில் குழந்தைகளும் அடக்கம்.

ஹமாசு நடத்திய தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் என்றும் ஹமாசை முடித்துக்கட்டாமல் தான் ஓயப்போவதில்லை என்றும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான தனது இனவழிப்பு நிகழ்ச்சிநிரலுக்கு இசுரேல் நியாயம் கற்பிக்கிறது. இதற்கு எதிராக காசாவில் நடந்துவரும் மனிதப் பேரவலத்தைப் பற்றியோ இசுரேலின் பன்னாட்டுச் சட்டமீறல்கள் பற்றியோ யாரேனும் பேசினால் அவர்கள் பக்கச் சார்பானவர்கள் என்று அவர்களை  விமர்சித்து மிரட்டிப் பார்க்கிறது இசுரேல்.

இந்நிலையில் அக்டோபர் 17, செவ்வாய் அன்று அல்-அகலி-அல்-அரபி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசாவின் நலவாழ்வு அமைச்சகம் சொன்னது. இசுரேல் படை இதற்கு பொறுப்பேற்க மறுத்து, பழியை இசுலாமிய ஜிகாத்ப் படையினர் மீது போட்டது. மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது பன்னாட்டு சட்ட மீறல், போர்க்குற்றம் என்பதால் உலகெங்கும் கண்டனங்கள் எழுந்தன.

அக்டோபர் 18 அன்று சீனாவின் நடைபெற்ற ஒரு பொருளியல் கூட்டத்தில் பங்குபெற்றிருந்த ஐ.நா. செயலர் அண்டோனியா குட்டரசு, உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தினார். ஹமாசு நடத்திய தாக்குதலை, ”பாலஸ்தீனர்களுக்கு கூட்டுத் தண்டனை கொடுப்பதற்கான சாக்காக பயன்படுத்தக் கூடாது” என்று சுட்டிக்காட்டினார். ஹமாசு படையினர் பணையக் கைதிகளாக வைத்திருப்பவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். காசா எல்லைகளை அடைத்துவைத்து அங்கு உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்கள், எரிபொருள் என எதுவும் செல்ல முடியாமல் பார்த்துக் கொண்டது இசுரேல். இப்படி நீரின்றி, மருந்தின்றி, உணவின்றி தவிக்கவிட்டு கூட்டம் கூட்டமாய் மக்களை சாகடிப்பது மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றம் ( Crimes against humanity) என்று பன்னாட்டுச் சட்டங்களால் வரையறுக்கப்படுகிறது. 

எகிப்து காசா எல்லையான சினாய் தீபகற்பத்தில் இருக்கும் ரஃபா எல்லையில் 200 க்கும் மேற்பட்ட சரக்கு உந்துகள் காசாவுக்குள் நுழைய முடியாமல் காத்துக் கிடந்தன. கடந்த அக்டோபர் 20 அன்று எகிப்து வெளியுறவு அமைச்சர் சமேகு சவுக்ரியுடன் ( Sameh Shoukry) ரஃபா எல்லைக்குப் போன ஐ.நா. செயலர் அண்டோனியா குட்டர்சு, “ இவை வெறும் சரக்கு உந்துகள் மட்டுமல்ல, உயிர்பாதையாகும். காசாவில் இருக்கும் மக்களுக்கு அவை வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான வேறுபாடாகும்.  இதற்கு மேல் நகர முடியாமல் இவை தடுக்கப்பட்டிருப்பது எனக்கு ஒன்றை மட்டும்தான் உணர்த்துகிறது. இப்போது உடனடி தேவை இந்த சரக்கு உந்துகள் முன்னே செல்ல வேண்டும், இந்த சுவரைக் கடந்து அந்தப் பக்கம் செல்ல வேண்டும். முடிந்தவரை விரைவாக, கூடுமானவரை அதிகமாக இந்த சரக்கு உந்துகள் முன்னே செல்ல வேண்டும்.  என்று உணர்ச்சிப் பெருக்குடன் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக அக்டோபர் 18 அன்று இசுரேல் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஃபா எல்லை வழியாக நாளொன்றுக்கு 20 சரக்கு உந்துகள் காசாவிற்குள் செல்வதற்கு உடன்டாடு கண்டிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அக்டோபர் 7 க்கு முன்பு 450 சரக்கு உந்துகள் அவ்வழியாக காசாவுக்குள் போய் வந்தன. காசாவுக்குள் மக்களின் தேவை மிக அதிகம், எனவே 20 சரக்கு உந்துகள் என்பது போதுமானதல்ல, குறைந்தது 100 சரக்கு உந்துகளாவது அனுமதிக்கப்பட வேண்டும் என்றது ஐ.நா.

இதற்கு இடையே ஐ.நா. பாதுகாப்பு அவையில் போர் நிறுத்தம் தொடர்பில் இரசியா நகர்த்திய தீர்மானம் அமெரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 23 அன்று ஐ.நா. பொதுப் பேரவையின் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறது என்று ஐ.நா. பொதுப்பேரவைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அறிவிப்புக் கொடுத்தார்.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்களின் வெளியுறவு அமைச்சர்கள் பங்குபெற்றிருந்த போது, ஐ.நா. செயலர் அண்டோனியா குட்டர்சு, “ஹமாசின் தாக்குதலைக் கண்டித்த அதேநேரத்தில், அந்த தாக்குதல் வெற்றிடத்தில் ஒன்றும் நடந்துவிடவில்லை. பாலஸ்தீனர்கள் கடந்த 56 ஆண்டுகளாக மூச்சு திணறும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், பாலஸ்தீன மக்களின் துயரங்களின் பெயரால் ஹமாசு நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. ஹமாசு நடத்திய தாக்குதலின் பெயரால் பாலஸ்தீன மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்குவதையும் ஏற்க முடியாது.” என்று பேசினார். மேலும், இசுரேலின் பெயரைக் குறிப்பிடாமல், “ பத்து இலட்சம் பேரை உணவும், தண்ணீரும், மருந்து பொருட்களும் வீடும் எரிபொருளும் இல்லாத தெற்கை நோக்கி இடம்பெயரச் சொல்வது, பின்னர் அந்த தெற்கிலும் குண்டு வீசுவது என்பதற்கு மக்களைப் பாதுகாப்பது என்று பொருள் அல்ல” என்று விமர்சித்தார்.

பன்னாட்டுச் சட்டங்களை மீறிக் கொண்டு இனவழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கும் இசுரேல் ஐ.நா.வுக்கு எதிரான தனது அரம்பத்தனத்தை உடனே வெளிக்காட்டியது. ஐ.நா.வுக்கான இசுரேல் தூதர் கிலாட் மெனாசே எர்டன், ”ஐ.நா. செயலரின் பேச்சு வெட்கக்கேடானது. ஐ.நா. தோற்றுப் போய்விட்டது. செயலர் அனைத்து அற அடிப்படைகளையும் நடுநிலையையும் இழந்துவிட்டார். ஏனெனில், அந்த கொடூரத் தாக்குதல்கள் வெற்றிடத்தில்  நடந்துவிட வில்லை என்ற பயங்கரமான வரிகளை சொன்னதன் மூலம் பயங்கரவாதத்தை அவர் சகித்துக் கொள்கிறார், அவர் கட்டாயம் பதவி விலக வேண்டும். அவர் தான் பேசியதை திரும்பப் பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேல் அவர் இந்த கட்டிடத்தில் நீடிக்கும்வரை இந்த கட்டிடத்தின் இருப்புக்கான எந்த நியாயமும் இல்லை” என்று பேசினார்.

இன்னொருபுறம் இசுரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோகன் ( Eli Cohen), “ நான் இனி ஐ.நா. செயலரை சந்திக்க மாட்டேன். அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு நிதானமான அணுகுமுறையை மேற்கொள்ள முடியாது. இப்புவிப் பரப்பில் இருந்து ஹமாசு முற்றாக அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.“ என்று அதே கூட்டத்தில் பேசினார். மேலும் அன்று ஐ.நா. செயலருடன் திட்டமிடப்பட்டிருந்த கூட்டத்தை கோகன் இரத்து செய்தார்.  

 ஐ.நா.வுக்குப் பாடம் கற்பிக்கும் தருணம் வந்துவிட்டதாக ஐ.நா.வுக்கான தூதர் எர்டன் சொன்னார். ஐ.நா. அதிகாரிகளுக்கு இனி உள் நுழைவுச் சீட்டுக் கொடுக்கப்பட மாட்டாது என இசுரேல் அறிவித்தது. ஐ.நா. செயலரை யூதர்களின் மத்திய காலப் புராணம் ஒன்றில் வரும் ”யூதர்களுக்கு எதிரான இரத்தக் காட்டேரி” என்று இசுரேல் சாடியது.

ஐ.நா. செயலர் அண்டோனியா குட்டர்சு அடுத்த நாளே தன் பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார். தான் ஹமாசின் தாக்குதலை நியாயப்படுத்தியதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் தான் அதை நியாயப்படுத்தவில்லை என்றும் சொன்னார். ஆனால், இசுரேல் அதை ஏற்க மறுத்தது.

 ஐ.நா.வுக்கான தூதர் எர்டன், ”ஐ.நா. செயலரை மெய்நடப்பை திரித்தும் திசைதிருப்பியும் பேசுகிறார். நேற்று அவர் பேசியது தெட்டத் தெளிவானது. ஹமாசு தாக்குதல் வெற்றிடத்தில் நடந்துவிடவில்லை. அந்த தாக்குதலுக்கு காரணம் இசுரேல்தான் என்று குற்றஞ்சாட்டினார் அல்லது குறைந்தபட்சம் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கான முயற்சியாக அவரது பேச்சு இருந்தது” என்று சொன்னார்.  அவர் தன் பேச்சை திரும்பப் பெறாமலும் மன்னிப்புக் கோராமலும் இருப்பது ஐ.நா.வின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவது. அவர் பதவி விலக வேண்டும்” என்றார் எர்டன்.

இவ்விசயத்தில் இங்கிலாந்து இசுரேல் பாடிய பல்லவியைப் பாடியது. போர்ச்சுகலும் ஜெர்மனியும் ஐ.நா. செயலர் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பதாக சொன்னது. அமெரிக்காவும் இரசியாவும் இதன் தொடர்பில் வாய்திறக்கவில்லை.

 இசுரேலும் மேற்குலகம் தக்க வைக்க நினைக்கும் கதையாடலுக்கு வெளியே வேறெதுவும் பேசப்படக் கூடாது என்று இசுரேல் நினைக்கிறது. ஐ.நா. செயலர் 56 ஆண்டுகால ஆக்கிரமிப்பு என்றார். ஆனால் அது 75 ஆண்டுகால ஆக்கிரமிப்பாகும்.

ஹமாசு தாக்குதல் வெற்றிடத்தில் நடந்துவிட வில்லை என்று சொன்னதை தவிர அவர் பேசிய அனைத்தும் வழக்கமான வல்லரசிய நெறிகளுக்கு உட்பட்டுத்தான் இருந்தது. இசுரேலை மறைமுகமாக கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒவ்வொருமுறையும் ஹமாசைக் கண்டிப்பதை உறுதி செய்து கொண்டார் அவர்.

ஐ.நா. மெய்நடப்பை அல்லது உண்மையைத் திரிப்பதாகவும் திசைதிருப்புவதாகவும் இசுரேல் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், உண்மையில் இவற்றைச் செய்து கொண்டிருப்பது இசுரேல்தான். படுகொலையாளர்களைப் பாதிக்கப்பட்டவர்களாகவும் குழந்தைகளைப் படுகொலை செய்வதைத் தற்காப்பு நடவடிக்கையாகவும் இடப்புறத்தை வலப்புறமாகவும் மேட்டுப்பகுதியைப் பள்ளமாகவும் கறுப்பை வெள்ளையாகவும் கதைக்கட்டிக் கொண்டிருப்பது இசுரேல்தான். 

ஐநா. பிறந்ததோடுதான் இசுரேல் என்ற நாடும் இந்த உலகில் பிறந்தது. ஆனாலும் ஐ.நா.வுடனான இசுரேலின் உறவு இணக்கமாக இருந்ததே இல்லை. பாலஸ்தீனத்திற்கு எதிரானக் குற்றங்களுக்கு எதிராக ஐ.நா.வில் போடப்பட்ட தீர்மானங்களை இசுரேல் எப்போதும் மீறியே வந்துள்ளது. பாலஸ்தீனத்திற்கு எதிராக மட்டுமின்றி ஐ.நா. வின் நிறுவனங்களுக்கு எதிராகவும் தாக்குதலை நடத்தியுள்ளது இசுரேல்.

ஜூலை 2006 இல் லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள கியாம் சிறுநகரத்தில் உள்ள ஐ.நா. நிலையத்தின் மீது இசுரேல் படை தாக்குதல் நடத்தியது. முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைப் புறக்கணித்து நடத்தப்பட்ட இந்த் குண்டு வீச்சில் கனடா, ஆஸ்திரியா, சீனா,பின்லாந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு ஐ.நா. மேற்பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர். 34 நாட்கள் லெபனான் மீது இசுரேல் நடத்திய போரின் போதும் போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்கா எதிர்த்துக் கொண்டிருந்தது.

2023 அக்டோபர் 11 அன்று காசாவிலும் 11 ஐ.நா. அதிகாரிகளும் ஐ.நா. வால் நடத்தப்படும்  பள்ளி ஒன்றில் படிக்கும் 30 மாணவர்களும் இசுரேல் படையின் தாக்குதலால் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலையும் ஐ.நா. கண்டித்திருந்தது.

மே 2021 ஆம் ஆண்டு காசாவின் மீது இசுரேல் நடத்திய 11 நாள் தொடர் தாக்குதலில் 67 குழந்தைகள் உள்ளிட்ட 260 பேர் கொல்லபட்டனர். அப்போது ஐ.நா. செயலர் அண்டோனியா குட்டர்சு, “ இவ்வுலகில் நரகம் என்றொன்று இருக்குமாயின் அது காசாவில் வாழும் குழந்தைகளின் வாழ்வுதான்” என்று சொன்னார்.

இப்போது காசாவில் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இசுரேல் பன்னாட்டுச் சட்டங்களை மதிக்காத போர்க்குற்றகள், மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்களைச் செய்துவரும் அரசாக குற்றஞ்சாட்டப்படுகிறது. கூடவே, அமெரிக்கா தனக்கு கட்டுப்படாத தனக்கு அடிபணியாத அரசுகளை ‘Rogue State” “அரம்ப அரசு” என்று முத்திரையிட்டு அரசுகளின் அமைப்பில் இருந்து அதை தனிமைப்படுத்துவது அமெரிக்காவுக்கு வழக்கமாக இருந்தது இப்போது அமெரிக்காவின் கூட்டாளி இசுரேல் ஐ.நா.வுக்கு எதிராக கொக்கரித்துக் கொண்டிருக்கும் அரம்ப அரசாக நடந்து வருகிறது.

இந்த காரணங்களுக்காகவே இசுரேல் அரசு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அந்தஅந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் இசுரேலுடனான அரசியல், பொருளியல், பண்பாட்டு உறவுகளைத் துண்டித்துக் கொள்ளுமாறு தம்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புக்கு எதிரானப் போராட்டங்களை பயங்கரவாதம் என்று முத்திரையிட்டு தப்பித்துக் கொண்டிருந்த அரசுகளுக்கு ஐ.நா. செயலரின் அக்டோபர் 24 ஆம் நாள் பேச்சு கண்டிப்பாக அதிர்ச்சியூட்டி இருக்கும். ஆனால், பாலஸ்தீனத்திற்கு எதிரான ஆக்கிரமிப்புக்கும் படுகொலைகளுக்கும் எதிராக அரபு உலகிலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவாகிவரும் பொதுக்கருத்து வல்லரசியம் உருவாக்கி வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு பூச்சாண்டியைக் கேள்விக்குள்ளாகும்படியான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாத அரசுகள் முள்ளிவாய்க்கால்களை உருவாக்கி அதில் குருதியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்வதற்கு கிடைத்த வாய்ப்பாக ’பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற பல்லவியைப் பாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. ஐ.நா. செயலரின் பேச்சும் ஐ.நா. பொதுப்பேரவையில் அக்டோபர் 27 அன்று ஹமாசின் பெயரைக் குறிப்பிடாத தீர்மானமும் இந்த வாடிக்கையின் மீது ஒரு கீறலைப் போட்டுள்ளன.

ஆக்கிரமிப்பாளர்கள் அவ்வளவு சீக்கிரம் திருந்திவிடப் போவதில்லை. ஆனால், ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடுபவர்கள் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்பதை நடந்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீன ஆதரவு இயக்கங்கள் காட்டி நிற்கின்றன. அந்த உலகளாவிய பொதுக் கருத்து ஐ.நா.வின் மீதும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW