மோடி 2.0 பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம் (Minimum Programme of Anti-fascist Movement in Modi 2.0)

26 Oct 2019

      அரசியல் சூழலும் – குறைந்தபட்ச செயல் திட்டமும்

  • மோடி – அமித் ஷா சிறுகும்பல் ஆட்சியின் மைய அதிகாரக் குவிப்பைத் தடுப்போம்!
  • காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை எதிர்ப்போம்! இந்துத்துவப் பாசிச அபாயத்தை முறியடிப்போம்!
  • தமிழகத்தின் சனநாயகம் காக்க இடதுசாரி, சனநாயக முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள்வோம்!

 

அறிமுகம்:

மோடி 2.0 ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல் நூறு நாட்களில் அனைத்துத் துறைகளிலும் முக்கியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வோம் என்று சொன்னபடியே பல அதிரடியான மாற்றங்களை இவ்வரசு செய்துள்ளது. கடந்த 2014-2019 வரையிலான ஐந்து ஆண்டுகால ஆட்சியிலும் இந்த இரண்டாம் பாகத்தின் முதல் நூறுநாட்களிலும் 50 க்கும் மேலான குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைச் செய்துள்ளதாகப் பா.ச.க.வினர் சொல்கின்றனர். இவற்றை சீர்திருத்தங்கள் என்று சொல்வதைவிட கட்டமைப்புரீதியான மாற்றங்கள் எனச் சொல்லலாம். இத்தகைய மாற்றங்களால் காசுமீர் போன்ற தேசிய இனங்கள் தொடங்கி தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுவணிகர்கள், சிறுதொழில் புரிவோர், மதச்சிறுபான்மையினர், தலித் மக்கள், பழங்குடிகள் என பலத்தரப்பினரும் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

  

பா.ச.க. வைப் பின்னால் இருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இந்தியாவை எப்படி மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்ற நீண்ட கால இலட்சியமும் தொலைநோக்குத் திட்டமும் உண்டு. இந்த மாற்றங்களை இத்துடன் தொடர்புடையதாகப் பார்க்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் தாம் மேற்கொள்ளும் சீர்திருத்தங்களை நியாயப்படுத்த சமத்துவம், சனநாயகம், வளர்ச்சி, தேசியம் என்ற சொற்களின் ஊடாக வெகுமக்களிடம் கருத்துகளை முன்வைத்து வருகிறது பா.ச.க. இதுவும்கூட பாசிச அரச வடிவம் எடுப்பதற்குத் தேவையான வெகுமக்கள் ஆதரவைப் பெருக்குவதற்கான முயற்சியே ஆகும். ஒரே தேசம், ஒரே சட்டம்என்ற ஒற்றையாட்சி இலட்சியம் இந்துத்துவ ஆற்றல்களுக்கு மட்டுமின்றி மிக அண்மைகாலத்தில் வளர்ந்துள்ள இந்தியக் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் இருக்கிறது.

சர்வதேச அளவில் உலகமயப் பொருளியல் நெருக்கடியின் பின்புலத்தில் வலதுசாரி அரசியல் ஆற்றல்களின் எழுச்சியைக் காண முடிகிறது. அந்த வலதுசாரிக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதோடு அவ்வரசுகளால் பாசிசக் கருத்துகள் வெளியிடப்படுவதும், சட்டத் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதும் ஒரு பொதுப்போக்காக இருக்கிறது.

 

இத்தகைய உலகளாவியப் போக்கின் பகுதியாகவும் இந்தியாவில் இந்துத்துவ ஆற்றல்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றன. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக உலகமய, தனியார்மய, தாராளமயப் பொருளியல் கொள்கை நடைமுறையில் உள்ளது. இந்தியாவிற்குள்ளும் உலகமயப் பொருளியல் ஒரு நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ஏறக்குறைய கடந்த ஒரு நூறாண்டாகச் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். கடந்த 30 ஆண்டுகளில் மிகத் தீவிரமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. உலகமயப் பொருளாதாரம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட காலத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். இன் வளர்ச்சியும் தீவிரமாக  நடந்துள்ளது. அதேபோல, உலகமயக் காலப் பொருளியல் சரிவு இந்துத்துவ ஆற்றல்களின் எழுச்சியைத் தீவிரபடுத்தியதோடு மட்டுமல்லாமல் அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் இடத்தை நோக்கியும் நகர்த்திச் சென்றுள்ளது. அவ்வகையில் இந்த இணைகோடான வளர்ச்சிகளையும்  நிலவிவரும் சமுதாய அமைப்பின் வேர்களில் பிற்போக்குப் பாசிச சக்திகள் வளர்வதற்கான நிலைமைகள் இருப்பதையும் ஒருங்கிணைந்த வகையில் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதைத் தொடர்ந்து, பாசிச அபாயத்தைத் தடுத்து நிறுத்தவேண்டிய உடனடிக் கடமைக்கு பாசிச எதிர்ப்பு ஆற்றல்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்கான உரையாடலை நடத்தும் நோக்கிலும் செயலொற்றுமைக்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தை வந்தடையும் நோக்கிலும் இவ்வறிக்கையை முன்வைக்கிறோம்.

 

முக்கியமாக, பாசிசம் முதலாளித்துவத்தின் கோரமான அரசு வடிவம் என்ற வகையில் அதை இந்தியாவில் தலைமை தாங்கக்கூடிய சக்திகள் யார்? அவர்களுக்கான சமுதாய வேர்கள் என்ன? இச்சக்திகள் எழுச்சி பெறுவதற்கு வழிவகுத்த அரசியல் பொருளாதார நிலைமைகள் என்ன? ஆகியவை பற்றிய ஒரு வரைபடத்தை வந்தடைவதே இவ்வறிக்கையின் குறிப்பான முயற்சியாகும்.

 

சர்வதேச அளவில் தீவிர வலதுசாரி எழுச்சிஇந்தியாவில் பாசிச அபாயம்

இரண்டாம் உலகப் போரில் இட்லர் , முசோலினியின் தலைமையிலான பாசிச முகாம் வீழ்த்தப்பட்ட பிறகு வெளிப்படையாக பாசிசத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் அரிதாகிப் போனார்கள். 1950, 60 களின் பொருளாதாரச் செழுமை வேலைவாய்ப்புகளை அதிகரித்தது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. மக்கள்நல அரசுகள் பல நடைமுறையில் இருந்தன. இதனால் பாசிசம் வளர்வதற்கு ஏதுவான சூழல் உலக அளவில் இல்லை. பாசிசப் போக்குகள் புதிய நிலைமைக்கு ஏற்றாற் போல் தம்மைத் தக்க வைத்துக் கொண்டு உயிர்த்து இருத்தல் என்ற நிலையிலேயே இருந்து வந்தன. 1980 – 90 களில் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் புதிய தாராளமய சீர்த்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. புதிய தாராளமய யுகத்தில் முதலாளித்துவ சனநாயகம் மென்மேலும் அடையாளப்பூர்வமாக மாறியது. மீண்டும் தொடங்கிய பொருளியல் நெருக்கடியும் சமூகப் பொருளியல் பாதுகாப்பின்மையும் பாசிச ஆற்றல்கள் வளர்வதற்கான அரசியல் வெளியை உருவாக்கின.

 

1990 களிலேயே ஐரோப்பாவின் சில பகுதிகளில் பாசிச ஆற்றல்கள் எழுச்சி பெறுவதும் ஆட்சியைப் பிடிப்பதும் நடந்தது. பிரான்சில் தேசிய முன்னணி, ஆஸ்திரியாவில் சுதந்திரக் கட்சி, ஜெர்மனியில் தேசிய ஜனநாயக கட்சி போன்ற பாசிசக் கட்சிகள் வளர்ச்சி பெற்று அந்தந்த நாடுகளில் ஆட்சியைப் பிடித்தன. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாசிசம் ஒரு வெகுமக்கள் இயக்கமாய் வளர்வதற்கேற்ற வகையில் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் அரசியல், பொருளியல் நெருக்கடிகள் தீவிரப்பட்டன. 2008 இல் தொடங்கிய உலகப் பொருளியல் மந்தநிலை உழைக்கும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகப் பாதித்தது. மத்தியகிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளில் நடந்துவரும் உள்நாட்டுப் போர்களும் ஏகாதிபத்திய இராணுவத் தலையீடுகளும் வரலாறு காணாத வகையில் மக்களை ஏதிலிகளாக்கி புலம்பெயரச் செய்தன. இன்னொருபுறம், பொருளியல் நெருக்கடிக்குப் பின்னான வேலையில்லாத் திண்டாட்டம் முன்னேறிய நாடுகளை நோக்கிப் பெருமளவிலான தொழிலாளர்களைப் புலம்பெயரச் செய்துள்ளது. 2001 செப் 11, இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிந்தைய ’பயங்கரவாத எதிர்ப்புப் போர்’ பரப்புரை மேற்குலக நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்புவாதத்தை அதிகமாக்கியது. புதிய தாராளமயப் பொருளியல் தாக்குதல்கள், பெருகும் ஏழைபணக்காரர் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்பட்ட அழுத்தங்களும் மானிய ஒழிப்பு போன்ற சிக்கன நடவடிக்கைகளும் புதிய தாராளமயத்தின் வானளாவிய வாக்குறுதிகளைக் காற்றில் கரைத்துவிட்டன. இந்தப் பொருளியல் நெருக்கடி ஓர் அரசியல் நெருக்கடியாக பரிணமித்து அந்தப் பொருளியல் கொள்கையின் வாகனமாகச் செயல்பட்ட கன்சர்வேட்டிவ் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் சமூக அடித்தளத்தை அசைத்துவிட்டன. அக்கட்சிகளின் தேர்தல் பரப்பையும் சுருக்கிவிட்டன. இந்த நிலைமைகள் உருவாக்கிய அரசியல் வெற்றிடத்தில் வெகுசனவாத அரசியலை(Populist) முன்னெடுக்கும் ஆற்றல்கள் முன்னுக்கு வந்தன. கிரேக்கம், ஸ்பெயின் போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் இடதுசாய்வு கொண்ட கட்சிகள் இவ்விடத்தை நிரப்ப முயன்றபோதும் அவற்றின் வளர்ச்சி விரைவாகவே கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அடிப்படைவாத வலதுசாரிகளும் புதிய பாசிச ஆற்றல்களும்  உழைக்கும் வெகுமக்களிடையே நிலவும் சமூகபொருளியல்பண்பாட்டு நெருக்கடிகளைப் பயன்படுத்தி, ஏதிலிகளையும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும், இஸ்லாமியர்களையும், யூதர்களையும் சர்வதேச தாராளமய அரசியல் மேட்டுக்குடியினரையும் தமது எதிரிகளாக அடையாளம் காணச் செய்தன. இத்தகைய அரசியல், பாசிச ஆற்றல்களின் தேர்தல் வெற்றிக்கு மட்டுமின்றி மேலே சொன்ன ’சித்திரிக்கப்பட்ட எதிரிகளுக்கு’ எதிரான தெருச் சண்டைகளுக்கும் மக்களை அணியமாக்கி வருகின்றது.

பல்வேறு நாடுகளிலும் தேர்தல் மூலமாக ஆட்சி அதிகாரத்தைப் பிடித்திருக்கும் பாசிச ஆற்றல்கள் இன்றளவில் தெருச்சண்டைக்கான முழுதயாரிப்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் அதற்கான கரு அளவிலான வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. ஒருபுறம் வெகுமக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்கு மதிப்புக்குரிய தோற்றத்தைப் பேண வேண்டிய தேவையும், தனது பாசிச ஆதரவு செயற்பாட்டாளர்களின் கோரிக்கைகளுக்கு முகம் கொடுப்பதும் அதை உரக்கப் பேசுவதும் அல்லது தமது அணிகளைப் பேச வைப்பதுமான தேவையும் என ஒன்றிற்கொன்று முரண்பட்ட தேவைகளுக்கு இடையில் இக்கட்சிகள் சிக்குண்டுள்ளன. ஆயினும் புதிய தாராளமயப் பொருளியல் கொள்கையின் பொருட்டு நாடாளுமன்ற சனநாயகம் மென்மேலும் நீர்த்துப்போன நிலையில் அத்தகைய நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலமாகப் பாசிச ஆற்றல்கள் கைப்பற்றுவது என்பது விளைவுகளைப் பொருத்தமட்டில் குறைமதிப்பீடு செய்யக்கூடியதல்ல.

              

2009 இல் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நாடாளுமன்றத்திற்குள் பாசிசக் கட்சிகள் அடியெடுத்து வைத்தன – ஹங்கேரியில் ஜோப்பிக்(Jobbik) 2010, ஜெர்மனியில்  ஆல்டர்னேடிவ் ஃபார் டொச்சுலாந்து(Alternative for Deutschland) 2017, சுவீடனில் டெமாக்ரட்கள்(Democrats) 2010, கிரேக்கத்தில் பொன்விடியல் (Golden Dawn) 2012 , சைப்ரசில் ELAM 2016 , இத்தாலியில் ’இத்தாலியின் சகோதரர்கள்’ ( Brothers of Italy) 2018, ஸ்லோவேகியாவில் மக்கள் கட்சி(People’s Party) 2016 மற்றும் பல. மேலும் அதிதீவிர வலதுசாரி மற்றும் புதிய பாசிச ஆற்றல்களான பிரான்சைச் சேர்ந்த மெரியன் லா பென் தலைமையிலான தேசிய முன்னணியும், ஹங்கேரியைச் சேர்ந்த விக்டர் ஓபன் தலைமையிலான பிடெஸ்ட் கட்சியும், இத்தாலியைச் சேர்ந்த சால்வினி தலைமையிலான வடக்கு லீக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த நிகல் ஃபராகே தலைமையிலான பிரெக்ஸிட் ஆதரவு யூகிப் கட்சியும் ஆகப்பெரும் அரசியல் கட்சிகளாக அந்தந்த நாடுகளில் வளர்ந்துவிட்டன. மேற்கு ஐரோப்பாவில் உள்ள மேலே கண்ட கட்சிகள் தமக்கிடையிலான வலைப்பின்னலுடன் அனைத்து ஐரோப்பிய தன்மையிலான ஒருங்கிணைவின்வழி ஊக்கம்பெற்று வருகின்றன. 1920, 30 களில் இட்லர், முசோலினி கொண்டிருந்த துணைப்படைகளைப் போன்று மேலே குறிப்பிட்ட கட்சிகள் தெருச் சண்டைகளையும் படுகொலைகளையும் செய்யக்கூடிய துணைப்படைகளைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் அத்தகைய படைகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள கட்சிகளும் உள்ளன.

கிழக்கு ஐரோப்பாவிலும் வெளியார் எதிர்ப்பு, புலம்பெயர் தொழிலாளர் எதிர்ப்பு, ஏதிலியர் எதிர்ப்பு, அதிதீவிர தேசியவாதம், சிறுபான்மையினர் எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட கட்சிகள் அதிகாரத்தைப் பிடித்து அந்தந்த நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளை நடத்திவருகின்றன. இந்தக் கட்சிகளும் புதிய தாராளமயக் கொள்கையோடு முரண்பட்டுக் கொள்வதில்லை. வட அமெரிக்காவிலும் இஸ்லாமிய எதிர்ப்பு, புலம்பெயர் தொழிலாளர் எதிர்ப்பு, அயலார் எதிர்ப்பு, அதீத தேசியவாதம் ஆகியவற்றை முன்னிறுத்தும் டொனால்ட் டிரம்ப் மக்கள் ஆதரவுடன் அதிபராகியுள்ளார் அவர் இனவாதக் கருத்துகளை மிக வெளிப்படையாகவே பேசி வருகிறார்.

 

பிரேசிலில் அண்மையில் அதிபராகியுள்ள பொல்சனரோ சமகால அரச தலைமைகளிலேயே ஆக அதிகபட்ச அதிதீவிர வலதுசாரித் தன்மைக் கொண்டவராவார். மரபான பாசிச ஆற்றல்களைப் போல் தீவிர இடது எதிர்ப்பு கொண்டவர். ஆயினும் டிரம்புக்கும் பொல்சனரோவுக்கும் ஏகபோக மூலதனத்தின் ஆதரவு இருந்தாலும் பாசிசக் கருத்தியல் பின்புலமும் பாசிசத்திற்குரிய வெகுமக்கள் அடித்தளமும் இல்லை என்பது கவனத்திற்குரியது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ், இலங்கை போன்றவற்றிலும் அதிதீவிர வலதுசாரி ஆற்றல்களின் எழுச்சியையும் பாசிசப் போக்குகளையும் காணமுடிகிறது. இந்தியாவில் பாசிசக் கருத்தியல் கொண்ட ஆர்.எஸ்.எஸ். இன் பின்புலத்தில் மோடி தலைமையிலான பா.ச.க. ஆட்சியைப் பிடித்துள்ளது.

 

இந்தியாவில் மோடி அரசின் அரசியல் பொருளாதார திசைவழி:

 

ஒரு நாட்டில் நிதிமூலதனத்தின் ஆதிக்கம் நிலைபெற்றவுடன் அது சமுதாய வாழ்வின் மற்ற அனைத்து விவகாரங்களையும் கட்டுப்படுத்த தொடங்கிவிடுகின்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கிற மோடி ஆட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் நிதிமூலதனத்தை ஒன்றுகுவித்து, திடப்படுத்தி, நிதியாதிக்க கும்பலின் கையில் அதிகாரத்தைக் ஒப்படைப்பதை நோக்கியே உள்ளன. இதைத் தெளிவுபடுத்தி, இந்த அரசியல் பொருளாதாரப் பாதை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, அது எவ்வாறு பாசிசத்திற்கு இட்டுச் செல்லும், அதை முறியடிக்க எப்படிப்பட்ட சனநாயக இயக்கம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பதைப் பொருத்தே செயலுத்தியை வகுக்க வேண்டும்.

 

  1.       நிதிமூலதன திடப்படுத்தலும் ஏகபோகங்களின் அதிகாரமும்:
  • மையப்படுத்தப்பட்ட நிதிமூலதனத்தின் ஆட்சிக்காக வங்கிமூலதனத்தை இணைத்து, ஒன்றுகுவித்து நிதிமூலதனத்தை திடப்படுத்துகிறார்கள். அதில் பொதுத்துறையின் ஆட்சி ஒழிக்கப்பட்டு தனியார் ஏகபோக நிதியாதிக்க சக்திகள் அதைக் கட்டுப்படுத்துவார்கள்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இணைப்பு அறிவிப்பு மற்றும் பாங்க் ஆஃப் பரோடா அறிவிப்பு ஆகிய முதல்  சுற்று வங்கி இணைப்பு அறிவிப்பு மற்றும் தற்போதைய இரண்டாம் சுற்று அறிவிப்பு ஆகிய இவ்விரு வங்கி இணைப்பு அறிவிப்புகளுக்குப் பிறகு வங்கிகளின் மூலதன வைப்பு இருப்பு வருமாறு

 

        வங்கி குவிக்கப்பட்டுள்ள மூலதனம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 52.05 லட்சம் கோடி
     பஞ்சாப் வங்கி 17.94 லட்சம் கோடி
பாங்க ஆப் இந்தியா 16.13 லட்சம் கோடி
    கனரா வங்கி 15.20 லட்சம் கோடி
யூனியன் பாங்க் ஆப் இந்தியா 14.59 லட்சம் கோடி
இந்தியன் வங்கி 8.08 இலட்சம் கோடி

 

இந்த அறிவிப்புகளின் மூலமாகப் பல்வேறு வங்கிகளில் சிதறுண்டிருந்த மூலதனம், ஆறு வங்கிகளில் 123.99  லட்சம் கோடியாகக் குவிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்கா, ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் இருக்கும் பெருமூலதனக் குவிப்புகொண்ட வங்கிகளுக்கு இணையாகப் போட்டியிடக்கூடியதாக இந்திய வங்கிகள் இல்லை. பெரும் நிதிமூலதனத்தைக் கொண்ட உலகின் முதல் சிலநூறு வங்கிகளின் பட்டியலில் ஒரேயொரு இந்திய வங்கிகூட கிடையாது.  வங்கிகளை இணைப்பதன் மூலம் பல்வேறு சிறுவங்கிகளில் சிதறிக்கிடந்த மூலதனம் ஒருசில வங்கிகளில் ஏகபோகமாக திரட்டப்பட்டுள்ளது. அது இந்தியாவில் ஏகபோக  தொழில்துறைப் பிரிவுகளை உருவாக்குவதற்கான கடன் வசதிகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வங்கி மூலதனமும் தொழில்மூலதனமும் இணைந்த நிதிமூலதனத்தைக் கொண்டுள்ள நிதியாதிக்க கும்பலின் ஆட்சிக்கும் வழிவகுக்கிறது.

                            

  • முந்தைய வாட் வரி (VAT), இன்றைய ஜி.எஸ்.டி. வரி(GST), செல்லாப்பணம், வங்கிக் கடன்முறை, டிஜிட்டல் பொருளாதாரம், காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு, PF, ESI பணங்களை மத்திய அரசின் ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டுவந்தது என அனைத்து நிதித்துறை, வரி அமைப்பு சீர்திருத்தங்களும் பண மூலதனத்தை திடப்படுத்துவதாகவும் நிதிமூலதனத்தை மையப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன. அவ்வகையில் நிதிமூலதனத்தின் பாய்ச்சல் புதிய ஏகபோக சக்திகளின் தனியாட்சிக்கு வழிவகுத்திருக்கிறது. வாராக் கடன் தள்ளுபடிக்கான மோடி அரசின் திவால் சட்டமும் கடனில் மூழ்கிப்போன நிறுவனங்களை ரிலையன்ஸ், டாடா போன்ற ஏகபோகங்கள் கைப்பற்றுவதற்கு வழிவகுத்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, ஆலோக் இண்டெஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் சுமார் 30,000 கோடி ரூபாய் வாராக் கடன் கொண்டது. தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் வெறும் 5,050 கோடி ரூ கடனை மட்டும் திருப்பி செலுத்தி ரிலையன்ஸ் நிறுவனம் இந்நிறுவனத்தைக் கைப்பற்றியது.  பூசன் ஸ்டீல் என்ற நிறுவனம் திருப்பிக் கொடுக்க வேண்டிய 56,000 கோடி ரூபாய் கடன் தொகையில் வெறும் 35,000 கோடி ரூபாயை மட்டும் டாடா நிறுவனம் கொடுக்க மீதித் தொகையைத் தள்ளுபடி செய்தது தீர்ப்பாயம். பூசன் ஸ்டீல் நிறுவனத்தின் 12% பங்குகளை டாடா தன்வசமாக்கிக் கொண்டது. பல இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனில் சராசரியாக வெறும் 25-30% மட்டும் திரும்பப் பெற்றுகொண்டு மீதியைத் தள்ளுபடி செய்துள்ளது தீர்ப்பாயம். இப்படி ஏகபோகங்களுக்கு ஆதரவாக மக்களுடைய செல்வமான வங்கி மூலதனத்தை சூறையாடி இருக்கின்றனர்.

 

  • தொழில் மற்றும் சேவை துறையின் ஒவ்வொரு துறையும் சில்லறை வர்த்தகம் தொடங்கி கனரக உற்பத்தி நிறுவனங்கள் வரை பெருவீத மற்றும் ஏகபோக சக்திகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன. சில்லறை வர்த்தகம், எண்ணெய்எரிவாயு, தகவல்தொடர்பு ஆகியவை ரிலையன்ஸிடமும், விமான நிலையம், துறைமுகம் போன்றவை அதானியிடமும், இராசயனம் மற்றும் சுரங்கங்கள் வேதாந்தாவிடமும் என சிறுவீத மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட சந்தையும் மூலதனமும் நிதிமூலதனத்தின் ஆதரவுடன் ஏகபோக சக்திகளின்கீழ் பெரிய உற்பத்திதுறைப் பிரிவுகளாக மாற்றப்படுகின்றன. அது பழைய தன்மையிலான தொழில் முதலாளிகளுடைய முன்முயற்சியினால் மட்டும் நடைபெறவில்லை. அரசின் சலுகைப் பெற்ற, சூறையாடக் கூடிய முதலாளித்துவத் தன்மையில்(crony capitalist) இந்நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. இவர்களின் வளர்ச்சியும் நிதிமூலதனத்துடைய ஒன்றுகுவிப்பும் இணைந்தே நடைபெற்று வருகின்றது. ஆட்சி வடிவங்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் சாயல்களும் இந்த முதலாளிகளின் வளர்ச்சியை ஒத்ததாகவே இருக்கின்றன.

 

  • நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெருமூலதனங்கள் கொண்ட சுரங்கம், எரிசக்தி, விமானம், சாலைப் போக்குவரத்து, துறைமுகங்கள், இரயில்வே, மருந்து உற்பத்தி, காப்பீட்டு நிறுவனங்கள், தகவல்தொடர்பு, இராணுவத் தளவாட உற்பத்தி என, பெரும் பொதுத்துறைகள் நிலவுகின்ற இடத்தில்,  அவற்றை ஒழித்து  சில புதிய தனியார் ஏகபோகங்களை உருவாக்குவதை நோக்கி நாட்டின் நிதித்துறையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.

 

ஆட்சிக் காலம் கட்சி பொதுத்துறை பங்கு விலக்கம் (கோடி ரூபாய்)
1991-1996 காங்கிரசு 9,962
1996-1998 ஐக்கிய முன்னணி 1,290
1998-2004 தேசிய ஜனநாயக கூட்டணி – 1 33,656
2004 – 2014 ஐக்கிய முற்போக்கு கூட்டணி 1, 2 1,07,883
2014-2019 தேசிய ஜனநாயக கூட்டணி – 2 2,09,896

 

தாராளயமத்திற்குப் பிந்தைய ஒட்டுமொத்த காலத்தில் (1991 – 2014 வரையான 24 ஆண்டுகளில்) பொதுத்துறைகளை விற்றதைவிட கடந்த ஐந்தாண்டுகால(2014 – 2019) மோடி ஆட்சியில் விற்றதன் மதிப்பு அதிகம். அவ்வளவு விரைவாக இந்த ’தேச பக்தர்கள்’ அன்னிய மற்றும் தனியார் ஏகபோக நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் நாட்டின் பொதுசொத்துகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

 

 

  • சிறுவீத உற்பத்தி தொழில் நிறுவனங்கள் மட்டுமல்ல  ஏகபோகங்களுக்கு இடையிலான போட்டியில் பல நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டு உலக அளவில் போட்டியிடத்தக்க விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிறுவனங்கள்  அவ்விடத்தைக் கைப்பற்றி இருக்கின்றன. தொலைத்தொடர்பு துறையில் இயங்கிவந்த பல்வேறு நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டு இன்றைக்கு ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். வெறும் 10,000 கோடி ரூபாய் கடனுக்காக இழுத்துமூடப்படும் நிலையில் இருக்கிறது. இத்துறையில் மட்டும் 4 இலட்சம் ரூபாய் வாராக் கடன் உள்ளது. அதில் பெரும்பகுதி ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்க வேண்டியதாகும். ஆனால், அரசின் ஆதரவும் வங்கிமூலதனத்தின் ஆதரவும் ரிலையன்ஸ் நிறுவனத்தை நோக்கி இருக்கிறதே ஒழிய பி.எஸ்.என்.எல். க்கு இல்லை. அதேபோல அதானியின் வளர்ச்சியும் மோடி-அமித் ஷாவின் வளர்ச்சியோடு இணைந்தே நடைபெற்றிருக்கிறது.  2017 இல் மட்டும் அதானி குழுமத்தின் மொத்த மதிப்பு 4.63 பில்லியன் டாலரில் இருந்து 10.4 பில்லியன் டாலராக வளர்ச்சியடைந்தது. அதாவது 124.6% வளர்ச்சியாகும். இராணுவத் தளவாட உற்பத்தியில் புதிதாக தனியாரை அனுமதித்தது மட்டுமல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு கைமாற்றிய முறையும் குறிப்பிட்ட சில ஏகபோகங்களுக்கும் சூறையாடக் கூடிய முதலாளிகளின்(crony capitalist) வளர்ச்சிக்கும் இந்த அரசின் ஆதரவு இருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் பெரும்பாலான நேரங்களில் உடனிருந்தவர்கள் அனில் அம்பானியும், அதானியும் ஆவர். மோடியின் கடந்த ஆட்சிக் காலத்தில் முதல்  நான்கு ஆண்டுகளில் வெளிநாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 13 ஐ அதானி குழுமமும் 5 ஐ அனில்அம்பானி குழுமமும் பெற்றுள்ளன. இவ்வாறாக, எல்லாத் தொழில்துறை பிரிவுகளிலும் சில ஏகபோக நிறுவனங்கள் வளர்ந்து பிறநிறுவனங்களை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

 

மேற்குறிப்பிட்ட நிதி, தொழில்துறை, பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கிற மாற்றம் சாரத்தில் சில விளைவுகளை உருவாக்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வங்கிகளில், காப்பீட்டுத் துறைகளில், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் உள்ள பண மூலதனத்தை ஒன்றாகத் திரட்டி திடப்படுத்துகிறார்கள். அது இதர தொழில்துறைப் பிரிவுகளில் ஏகபோகங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றது. தொழில்மூலதனம், வங்கிமூலதனம் இவ்விரண்டும் இணையும் நிகழ்வு நாட்டை நிதிமூலதனத்தின் கையில் ஒப்படைப்பது மட்டுமல்லாமல் இதன் உடன்நிகழ்வாக நிதியாதிக்க கும்பலினுடைய (சிலராட்சியை) அரசியலில் தோற்றுவித்திருக்கிறது.

 

ஆர்.எஸ்.எஸ். இன் அகண்ட பாரதமும் மோடியின் ஏக இந்திய மறுகட்டுமானமும்:

 

மேற்குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கைகள் அரசு மற்றும் அரசமைப்பு வடிவங்களில் ஏக இந்தியக் கோரிக்கையை வலியுறுத்துகின்றன. அது நாட்டை மறுகட்டுமானம் செய்வதை நோக்கி அழைத்துச் செல்கிறது.

 

  • மேற்கண்ட நிதி மற்றும் பொருளாதாரப் பாதையை முழுமையடையச் செய்வதற்காக ஏற்கெனவே மிச்சம்மீதி நிலவுகின்ற உலகமயப் பொருளாதாரக் காலத்திற்கு முந்தைய அரசக் கொள்கைகள், அரசு நிறுவனங்கள், அரசமைப்புச் சட்டம்  ஆகியவற்றில் நிதி, பொருளாதாரப் பாதைக்கு ஏற்ப தீவிர மாற்றங்கள் (ஜி.எஸ்.டி. கவுன்சில், நிதி ஆயோக், இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்றல், ரிசர்வ் வங்கியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருதல், நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கான ஒரே தேர்தல், மாநிலப் பட்டியல் விவகாரங்களை நடைமுறையில் அதிகாரம் இழக்கச் செய்தல்) கொண்டுவரப்பட்டு சிலராட்சியை அல்லது சிறுகும்பல் ஆட்சியைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

 

  • சிறுகும்பல் ஆட்சியை முழுமையாக நிறுவ வேண்டுமானால் நாட்டில் நிலவும் பல்தேசிய, மாநில, பழங்குடி இன அடையாளங்களையும் அதன் அடிப்படையிலான ஒன்றிய அரசமைப்பின் சட்ட வடிவங்களையும் ஒழிக்க வேண்டும். இரண்டாவது தேர்தல் பிரதிநித்துவச் சட்ட அவைகளைவிட (நாடாளுமன்றம், சட்டமன்றம்) நடைமுறையில் அதிகாரம் கொண்ட நிறுவனங்களை (நிதி ஆயோக், ஜி.எஸ்.டி. கவுன்சில்) உருவாக்க வேண்டும். இவற்றை நிர்வாக நடவடிக்கை அல்லது ஒடுக்குமுறை நடவடிக்கைகளால், கருப்புச் சட்டங்களால் மட்டும் உருவாக்க முடியாது. அதற்குத்தான் ஓர் இந்தியக் குடிமகனுக்கு அவசியமான ஒரே அரசுஒரே சட்டம், ஒரே தேசியம் தேவை என்ற பாசிசக் கருத்தியல் நிதிமூலதனக் குவிப்பு தோற்றுவிக்கும் சிறுகும்பல் ஆட்சியோடு சேர்த்து வளர்த்தெடுக்கப்படுகிறது.

                     

  • ஓரிந்திய அகண்ட பாரத பெருந்தேசியக் கோட்பாடு வெற்றிப் பெற வேண்டும் எனச் சொன்னால் அதற்கு வரலாற்றுரீதியாக ஒரே வழிதான் உள்ளது. அது இந்துத்துவ பார்ப்பனியக் கருத்தியல் அடிப்படையிலான இந்துத்துவ தேசியம்தான்ஆங்கிலேய எதிர்ப்பில் உருவான இந்திய தேசியத்தின் வரலாற்றுக் கட்டம் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. இந்த வரலாற்றுக் கட்டத்தில் மொழிவழி தேசியமாக, வளர்ந்துவரும் பழங்குடி தேசியமாக, மாநில உணர்வாக வேறுபட்டு இருக்கிற இந்த மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு( கருத்தினம் ) இந்துத்துவம் மட்டுமே. மேலும் மக்களை ஒருங்கிணைக்க மட்டுமின்றி, ஓரிந்தியப் பெருந்தேசியத்தைக் கட்டியமைப்பதற்கு எளிதான வழிமுறையாக ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக முன்னெடுக்கக் கூடிய பார்ப்பனியக் கருத்தியல், அடிப்படையில் முஸ்லிம்களையும், கிறித்தவர்களையும்  ’அந்நிய எதிரி’ என்று சித்திரிப்பதற்கு இந்துத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும். அத்துடன், இந்தியாவின் தோற்றமும், பிரிவினைக்கால வரலாறும், பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியலும், உலகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இஸ்லாமிய எதிர்ப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு அரசியலும் என யாவற்றையும் இந்துத்துவ தேசியத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 

iii.      ஒற்றைச் சந்தை ஒற்றைத் தேசியம்காவிகார்ப்பரேட் சர்வாதிகாரம்

 

  • சுதந்திரத்திற்குப் பிறகு அரச தேசியமாக பரிணமித்த இந்திய தேசியத்தை, பிற்போக்கு சக்திகள் விரும்பிய இந்துத்துவ தேசியமாகக் கட்டியமைக்க கடந்த எழுபது ஆண்டுகாலமாக முயற்சி நடந்துவருகிறது. பின்தங்கிய சாதிய நிலவுடைமை உறவின் மிச்சசொச்சங்களாலும், ஏகாதிபத்திய சார்புக் கொள்கையாலும், முதலாளித்துவப் பொருளுற்பத்திமுறையும் சந்தையும் எழுபது ஆண்டுகாலமாக விரிவடையாததால் ஒரு தேசியத்தை முழுமைப்படுத்த முடியவில்லை.   இந்து மதத்தையும் அரசுரீதியான ஒருங்கிணைப்பையும் மட்டும் காரணிகளாகக் கொண்டு தேசியத்தை முழுமைப்படுத்த முடியவில்லை. அதற்கு மேலான ‘ஒரே சந்தை’ என்ற பொருளாயத அல்லது பெளதீக அடிப்படைத் தேவைப்படுகிறது.

 

  • 1991 இல் உலகமய, தாராளமய, தனியார்மயப் பொருளியல் கொள்கைக்கான கதவுகளை நரசிம்மராவ் திறந்துவிட்டார்.  மன்மோகன் சிங் அரசமைப்புச் சட்டத்திலும், நிறுவனங்களிலும் தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கான வரைப்படத்தைப் போட்டுத்தந்தார். நாட்டை குறுக்கும்நெடுக்குமாக இணைக்கும் தங்க நாற்கரச்சாலைகளை, வாட் வரியை வாஜ்பாய் அறிமுகப்படுத்தினார். 2ஜி,3ஜி,4ஜி என தகவல்தொடர்பில் ஒரே வானத்தின் அலைவரிசையின்கீழ் நாடு கொண்டுவரப்பட்டது. 2014 இல் பா.ச.க. ஆட்சிக்கு வருவது – ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் இந்துத்துவத் தேசியமாக வளர்ச்சிப் பெறுவது – இந்தியாவிற்குள் கால் நூற்றாண்டுகாலமாக அமலில் இருக்கும் உலகமயப் பொருளாதாரம் விரிவடைவதற்கான தேவை – இவையாவும் ஒன்றுபடுகின்றன. ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் மூலம் ஒரே நாடு, ஒரே வரியின் வழியாக ஒரே சந்தைக்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இன்று வங்கி மூலதனத்தை ஒன்றுகுவிப்பதன் மூலமாக ஓர் அதிகார மையத்தின்கீழ் நாட்டின் ஒட்டுமொத்தப் பணமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

  • இன்றைக்கு ஒன்று குவிக்கப்படும் நிதிமூலதனம் இந்திய சந்தையை விரிவடையச் செய்யும் என்பதால் அதன்மேல் இவர்களின் பிற்போக்கான இந்துத்துவத் தேசியத்தை கட்டியமைப்பதற்கான வரலாற்று வாய்ப்பு இருப்பதாக இந்துத்துவ ஆற்றல்கள் கருதுகின்றன.

 

  • ஒற்றை இந்தியச் சந்தையை உருவாக்குவதுடன் அதற்கு இசைவாகபண்பாடு, கல்வி, மொழி, பண்டிகைகள், அரசின் திட்டங்கள், சாலைப் போக்குவரத்து, ஒற்றை அடையாளச் சீட்டு, பொதுவிநியோகம் என வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் ஒரே தன்மையைப் புகுத்துவதன் மூலம் இந்துத்துவத் தேசியத்திற்கும், அதற்கேற்ற ஒற்றையாட்சி(unitary) மாற்றத்திற்கும், ஓரிந்திய பொருளாயத அல்லது பெளதீக அடிப்படையை வழங்க முயற்சிக்கிறார்கள்.

              

  • நாடு தழுவிய அளவில் வெகுசன ஏற்புள்ள, உலகமயவளர்ச்சிஎன்ற அரசியல் பொருளாதாரக் கொள்கையும், ஏகபோக இந்தியப் பெருமுதலாளியச் சக்திகளின் நலனும், இந்துத்துவத் தேசியமும் ஒன்றிணைந்த வரலாற்றுக் கட்டமாக இது அமைந்துள்ளது. இந்தியச் சந்தை விரிவடைவதற்கான தடைகளை அரசியல் ரீதியாக இந்துத்துவ தேசியத்தின்வழி அகற்றுவதும், இந்துத்துவத் தேசியம் முழுமையடைவதற்கான பொருளாயத அல்லது பெளதீக அடிப்படையாக ஒரே இந்திய சந்தை விரிவாக்கமும் அமைந்துள்ளதால் இரண்டின் நலனும் ஒன்றோடொன்றுப் பொருந்திப்போயுள்ளது.

 

  • ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்த பெருமுதலாளிய காங்கிரசு மற்றும் மாநிலக் கட்சிகளின் தேசியக் கொள்கை அவற்றின் வரலாற்று இயல்பால், நிதிமூலதனச் சக்திகளுக்கான சந்தையை விரிவாக்குவதற்கான தடைகளை அகற்றுவதற்குரிய தீவிரத்தன்மையைக் கொண்டிருக்க முடியவில்லை. அந்தப் பணியை நிறைவேற்ற முயலும் வரலாற்றுச் சக்திகள்தான் இந்துத்துவ தேசியவாதிகள்; கோட்பாடுதான் இந்துத்துவம்; தலைமை அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.!

 

 iv   ஒற்றை ஆட்சிகும்பல் அதிகாரம்: பாசிச அபாயம்

  • காங்கிரசு இதில் நெளிவுசுழிவான மட்டுப்படுத்தப்பட்ட பாதையைக் கொண்டிருக்கிறது. மாநிலக் கட்சிகளுக்கு அகில இந்தியச் சந்தையின் பொருளாதார அனுகூலம் தேவைப்படும் அதேநேரத்தில், மாநில அரசியல் நலனை விட்டுவிடக் கூடாது என்ற இரட்டைநிலை இருக்கின்றது. நாடாளுமன்ற வரம்புடைய இடதுசாரிகளோ இதை கூலி, வேலைவாய்ப்பு, மூலதனம் என்ற பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு மட்டுமே அணுகுகிறார்கள், சாரத்தில் காங்கிரசை ஒத்த தேசியக் கொள்கையையே அவர்கள் கொண்டிருக்கிறார்கள். சனநாயக ஆற்றல்களோ தங்கள் சமூக, வட்டார, தேசிய ரீதியான நலன் சார்ந்த பிரச்சனையோடு மட்டுமே இந்திய அரசின் இந்தப் பாதையை எதிர்கொள்கிறார்கள். ஆனால், ஆட்சியில் அமர்ந்திருக்கிற இந்துத்துவ தேசியவாதிகளும், ஏகபோக நிதிமூலதன சிறுகும்பலும் ஒரு வரலாற்றுக் கட்டத்தை, அதற்கான முரண்பாட்டைத் தோற்றுவித்திருக்கிறார்கள். மேலே சொன்ன பல்வேறு வகைப்பட்ட அரசியல் ஆற்றல்களும்இந்தக் காலமும் கடந்து போகும்என்ற அளவில் பாசிசச் சக்திகளின் பண்புரீதியான வளர்ச்சி மற்றும்  தாக்குதலைப் பற்றிய எச்சரிக்கையின்றி இருக்கின்றன. வரலாற்று வளர்ச்சிப்போக்கில்ஏதோ தொடர்பற்ற திடீர்நிகழ்வுபோல இதைப் பார்ப்பதும், கடந்தகாலத்தின் தொடர்ச்சியையும், இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தில் நிலவும் கட்டமைப்புரீதியான சிக்கல்களையும் காணத்தவறிஅளவுரீதியான மாற்றங்களினூடாக இவை பண்புரீதியானொரு கட்டத்தை எட்டுகின்றன என்பதை ஏற்கமறுக்கின்றனர்.

  • இவ்விடத்தில்தான் நாம் நடந்து கொண்டிருக்கும் ஆட்சியை, அரசியல் மாற்றங்களை காவிகார்ப்பரேட் சர்வாதிகாரம் என அழைக்கிறோம். அதுதான் நாட்டின்  இன்றைய முதன்மை எதிரியாக மாறியிருக்கிறது. மேலும், அவர்களின் தங்குதடையற்ற முன்னேற்றத்திற்காகவும் எதிர்கொள்கிற அரசியல் பொருளாதார மந்த நிலைகளை, நெருக்கடிகளை கையாள்வதற்காகவும் சிறுகும்பலின் கையில் அதிகாரத்தை ஒப்படைக்கிற ஒற்றையாட்சியை, ஒரு கோரமான அரசு வடிவத்தை நோக்கி நகரவேண்டும். அதைத்தான் பாசிச அபாயத்தை நோக்கி நாடு நகர்வதாக நாம் சொல்கிறோம்.   

                                                 

  • இவ்வாறான வரலாற்று நிலைமைகளை எவரும் வேடிக்கை பார்க்கப் போவதில்லை. நாடு மாபெரும் அரசியல் நெருக்கடியை சந்திக்கும்பொழுது, சிறுகும்பல் சர்வாதிகாரத்தால் ஏகபோகப் போட்டியில் வீழ்த்தப்படுகிற முதலாளியச் சக்திகள், வலதுசாரி பொருளாதாரச் சுதேசிகள், மதவழிப்பட்ட தேசியத்தில் இருந்து விலகிநிற்கிற காங்கிரசைப் போன்ற இந்திய மையவாத ஆளும்வர்க்கக் கட்சிகள், மாநில அரசியல் அதிகாரத்தை இழக்க விரும்பாத, அதேசமயம் கடந்த 25 ஆண்டுகாலம் இந்திய அரசின் கூட்டணி அரசியலில் செல்வாக்கு செலுத்திய, இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டு சந்தையைப் பங்கு போட்டுக்கொண்ட மாநிலக் கட்சிகள், நாடாளுமன்ற வரம்புக்குட்பட்ட இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சோசலிஸ்ட்கள், சாதி-மத-மாநில-தேசிய இன சனநாயக உரிமைக்காகப் போராடும் சனநாயக ஆற்றல்கள் என வெவ்வேறு அணியினரும் பாசிசத்திற்கு எதிரான அரசியல் சண்டைக்குத் தயாராக வேண்டும்.

 

  • இந்த அரசியல்மோதல் தேர்தல் போராட்ட வடிவம் அல்லது அரசியல் போராட்ட வடிவம் என்ற எல்லைக்குள் மட்டும் இருக்கப் போவதில்லை. இன்றைக்கே பசுகுண்டர் படுகொலைகள், ’ஜெய் ஸ்ரீராம்’ எனச் சொல்லச் சொல்லி கும்பல் தாக்குதல்கள், ஆணவக் கொலைகள், காப் பஞ்சாயத்துக் கொலைகள் என இஸ்லாமியர்கள், தலித் மக்கள், பழங்குடிகள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் தாக்குதலுக்கு உள்ளாவது நடந்துவருகிறது. எனவே, இவை வளர்ச்சியடைந்து சிவில் வன்முறையாகவும் வடிவம் எடுக்கும்.  அது நிலவும் இந்திய நாடாளுமன்ற அரைகுறை சனநாயகத்தைக் காப்பதற்கான அல்லது அதைவிட மேலான ஒரு சனநாயக அரசமைப்புக்கான, பிரநிதித்துவ அமைப்புக்கான சண்டையாக மாறக் கூடும்.

பல்தேசிய இனங்களின், ஒடுக்கப்பட்ட சாதி, மத, பாலின, விளிம்புநிலை மக்களின் விரிவான வளர்ச்சிக்காகவும் சனநாயகத்திற்காகவும் அதன் அடிப்படையிலான சனநாயக தேசியத்திற்காகவும் போராடும் சக்திகள் ஒருபுறம், அகண்ட பாரத இந்துத்துவத்தேசிய நிதிமூலதன பாசிச சர்வாதிகாரத்திற்காக நிற்கும் சக்திகள் மறுபுறம் என இந்த முரண்பாடு தீவிரமடையப் போகிறது. எனவே இந்த வரலாற்று சண்டைக்கானப் போராட்டத்தின் உடனடி இலக்கு தில்லி மைய அரசில் குவிகிற நிதி, பொருளாதார, அரசமைப்பு அதிகாரத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான சனநாயகப் போராட்டமாகத் தோற்றம் கொள்ளவிருக்கிறது. இதன் அடிப்படையில் உடனடி குறைந்தபட்ச செயல்திட்டமும், கோரிக்கையும் வகுக்கப்பட வேண்டும்.

மைய அதிகாரக் குவிப்பும் நெருக்கடிக்கு உள்ளாகும் தமிழகமும் 

 

தமிழகம் இந்தியாவில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகும்; இந்திய அரசமைப்பிற்கு உள்ளாகவே ஒரு பேர வலிமையை உருவாக்கிக் கொண்டு தனக்கெனவொரு சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பாதையைக் கொண்டிருக்கிறது; 40,000 த்திற்கு மேலான பதிவுசெய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள், அவைசார்ந்த சிறுகுறு தொழில்கள் அதனால் உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள் என தொழில்துறையில் வளர்ச்சி கண்டுள்ளது; உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கையை முழு வீச்சில் அமல்படுத்தியதன் விளைவாக தகவல் தொழில்நுட்பத்துறை போன்ற சேவை துறைகளிலும் வாகன உற்பத்தித் துறையிலும் வளர்ச்சி கண்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளது; கிட்டத்தட்ட 50 விழுக்காடு நகரமயமாகியுள்ளது; விவசாயத் துறையில் நீர் மேலாண்மைச் சிக்கல், சிறுவீத உற்பத்தி, கிராமப்புற விவசாய நெருக்கடி ஆகியவை நீடித்துக்கொண்டிருந்தாலும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்விடத்து விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்தியுள்ளது. கல்வி, சுகாதாரம், சமூகநலத் திட்டங்கள், விரிவான பொதுவிநியோகக் கட்டமைப்பு என மக்கள்நலன்சார் சீர்திருத்தக் கொள்கைகளில் முதலீடு செய்ததன் வழியாக மனித வளத்தையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மாநிலம் தழுவிய பரவலான வளர்ச்சியையும் விரைவான நகரமயமாக்கலையும் எட்டியுள்ளது.

 

வரலாற்றுரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், பொருளியல்ரீதியாகவும் மூன்று காரணங்கள் இதற்கு வழிவகுத்துள்ளன. ஒன்றுஆங்கிலேயர் காலந்தொட்டே தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், வடவர் ஆதிக்க எதிர்ப்பு என சென்னை மாகாண அளவிலான நலன்களை முன்னிறுத்தும் அரசியல் போக்கு எழுவதற்கான வரலாற்று மட்டும் பண்பாட்டு வேர்கள் இருந்தமை. இரண்டுசமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றை முன்வைக்கக்கூடிய திராவிட  அரசியல் போக்கின் எழுச்சியும் அதைச் செழுமைப்படுத்திய இடதுசாரி மற்றும் ஒடுக்கப்பட்டோர் அரசியல் போக்குகளும் சமூக மற்றும் வட்டார அளவிலான பரவலான பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கு வழிவகுத்தமை. மூன்றுமத்திய அரசின் முதலாளித்துவ பொருளியல் சீர்திருத்தங்களை அப்படியே ஏற்றுக்கொண்டமை, குறிப்பாக உலகமய, தாராளமய, தனியார்மயப் பொருளியல் கொள்கைகளுக்கு தமிழகத்தை திறந்துவிட்டமை ஒருபுறம் தீவிரமான மனிதவளச் சுரண்டல், இயற்கை வளச் சுரண்டல் ஆகியவற்றிற்கு வித்திட்டதோடு கூடவே தொழில்துறை வளர்ச்சிக்கும், சேவைத்துறை வளர்ச்சிக்கும், நகரமயமாக்கலுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த மூன்று காரணங்களும் பின்னால் இருந்து இயக்க, மத்திய அரசிடமிருந்து போராடிப் பெறப்பட்ட நிதியும் மாநில அளவில் திரட்டப்பட்ட நிதியும் இந்தப் பொருளாதார வளர்ச்சிக்கு பாய்ச்சப்பட்டுள்ளது.

 

இந்தப் பொருளியல் வளர்ச்சி மாதிரியின் நீடித்த தன்மையைப் பற்றியும் அடிப்படை திசைவழியைப் பற்றியும் தமிழகத்தில் போராட்டங்களும் எதிர்ப்புகளும் இருந்துவருகின்றன. கார்ப்பரேட் வளர்ச்சிக் கொள்கையின் விளைவாய் ஏற்பட்டுள்ள விவசாய நெருக்கடி ஒருபுறமும் விளைநிலங்களையும் கடல்,மலை,காற்று, மண் வளங்களையும் பாழ்செய்யும் ஹைட்ரோகார்பன், சாகர்மாலா, பாரத்மாலா, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுஉலை எனப் பல்வேறு பேரழிவு திட்டங்கள் இன்னொருபுறமும் என இந்த வளர்ச்சி மாதிரிக்கு எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. இருப்பினும் பிறமாநிலங்களோடு ஒப்பிடும்பொழுது சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழகம் முன்னோடியாக இருந்துவருகிறது. இந்நிலையில்தான் மோடி தலைமையிலான பா.ச.க வின் மத்திய அரசு மையத்தில் அதிகாரத்தைக் குவிப்பதற்காக தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் வகையில் மூன்று வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    • இந்திய தேசியத்திற்குள் தமிழகத்தை உள்வாங்கிக் கரைத்துவிடும் நோக்கில் கருத்தியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு, வரலாற்றுத் திரிபுகள், இந்துத்துவ வரலாற்றுத் தொன்மங்களைத் தமிழகத்தின் மீது திணித்தல், கோடிக்கணக்கில் பணத்தைச் செலவுசெய்து இந்துப் பண்டிகைகளுக்கு செயற்கையான ஓர் எழுச்சியைக் கட்டமைத்தல், தமிழ் மொழி, இலக்கிய, பண்பாட்டுச் சிறப்புகளை இந்துமயமாக்குவதன் மூலம் தனதாக்குதல், ஆறுகளை மையமிட்டு புனித நிகழ்ச்சிகளை, வரலாற்றுத் தொன்மங்களை உருவாக்குதல், சாதிகளிடம் பார்ப்பனிய மேல்நோக்கிய  பெருமைவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் சாதிக் குழுக்களை இந்துத்துவத்திற்குள் உள்வாங்குதல் போன்ற  தொடர்ச்சியான தாக்குதல்கள்.
    • மொழிவாரி மாநிலங்கள் என்ற அடிப்படையிலான மொழி, கல்வி, ஆற்று நீர் உரிமைகள், சட்டமன்ற அதிகாரம் போன்றவற்றின் மீதான தொடர் தாக்குதல்கள் மூலம் அரசமைப்பு சட்ட ரீதியான உரிமைகளைப் பறித்து தில்லியை ஒற்றை அதிகார மையமாக வளர்த்தெடுத்தல்.

 

    • மாநில உரிமைகள், கூட்டாட்சி என்பவற்றிற்கு எல்லாம் மிக அடிப்படையாக இருக்கக் கூடிய பொருளியல் தளத்தில், மைய-மாநில வருவாய் பகிர்வில் தமிழகத்திற்கான நிதியை அடியோடுப் பறித்துக் கொள்கிறது மைய அரசு. ஏற்கெனவே ஜி.எஸ்.டி., செல்லாக் காசு நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் சிறுகுறு தொழில்கள் சிதைக்கப்பட்டு அழியும்நிலையில் இருக்க, இப்போதைய பொருளியல் சரிவு உலகமயக் கட்டத்தில் ஏற்பட்ட தொழில்துறை வளர்ச்சியைச் சீர்குலைத்து மாநில உற்பத்தியைப் பாதித்து இருக்கிறது. இந்நிலையில் மாநில வருவாயையும் நிதி மூலதனத்தையும் ஒன்றுதிரட்டி விரல்விட்டு எண்ணக்கூடிய சில கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதன் மூலம் சமூக நலத் திட்டங்களுக்கும் அரசு துறைகளைப் பாதுகாப்பதற்கும் கூட மத்திய அரசிடம் மண்டியிட்டு பிச்சை கேட்கும் நிலைக்குத் தமிழகத்தை மாற்றத்தக்க தாக்குதல்கள் நடந்துவருகின்றன.

 

இந்நிலையில்தான், கடந்த ஐந்தரை ஆண்டுகாலமாக மோடி அரசு முன்வைத்து வரும் ஒரே நாடு, ஒரே வரி, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்விக்கொள்கை, ஒரே தேர்தல், ஒற்றையாட்சி போன்ற முழக்கங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த தமிழகம், கடந்த ஆட்சிக் காலத்திலேயே மோடியைக் கடுமையாக எதிர்த்து பா...வை தேர்தலில் தோற்கடிப்பதில் முனைப்புக்காட்டியது. இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத வகையில் மோடி ஆட்சிக்கு எதிரான கோபமும் பரப்புரையும் கருத்துருவாக்கமும் தமிழகத்தில்தான் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த எதிர்ப்பு அரசியலை எப்படியேனும் முறியடித்துவிட வேண்டும் என்பதில் மைய அரசும் பா.ச.கவும் கடும் முனைப்புக் காட்டிவருகின்றன. ஆயினும் தமிழக மக்களிடையே இந்திய மைய அரசு பற்றியும் அதன் வளர்ச்சிப்பாதை பற்றியும் இன்னும் துல்லியமான புரிதல் ஏற்பட்டாக வேண்டும்.  இன்றைய எதிர்ப்பு ஒருவகையான மேலோட்டமான எதிர்ப்பாகவே இருந்து வருகிறது. இந்திய தேசியத்திற்குள் கரைந்துவிடக் கூடாது ; சமூக நீதி உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் போன்றவற்றில் இருக்கக்கூடிய கவனம் அரசமைப்பு சட்டரீதியான மைய அதிகாரக் குவிப்பையும் பொருளாதாரத் தாக்குதல்களையும் எதிர்கொள்வதில் இருப்பதில்லை.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் காலம் தொட்டே நிதி, பொருளாதாரத் திட்டமிடல், தொழில்துறை ஆகியவற்றின் மீதான அதிகாரம் பற்றிய கோரிக்கையும் உரையாடல்களும் இங்கு இருந்துவருகின்றன. அன்றைக்கு அது வடவர் எதிர்ப்பாக இருந்தது, இன்றைக்கு நிதி ஆதிக்கக் கும்பல் எதிர்ப்பாகவும் கார்ப்பரேட் எதிர்ப்பாகவும் இருக்க வேண்டிய தேவையுள்ளது. இத்தகைய ஒருங்கிணைந்த புரிதலில் இருந்து நடந்துவரும் மோடி-அமித் ஷா கும்பலாட்சிக்கு எதிரானப் போராட்ட  அரசியல் கட்டமைக்கப்பட வேண்டியுள்ளது. அதிகாரக் குவிப்பை முறியடிப்பதன் மூலம் பாசிச அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் தமிழகத்தின் சனநாயகத்திற்கும் இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங்களின் சனநாயகத்திற்கும் உதவமுடியும்.

 

 

செயல்திட்டத்திற்கான அரசியல் முழக்கங்கள்:

 

    • மோடி-அமித் ஷா சிறுகும்பல் ஆட்சியின்(financial Oligarchy) மைய அதிகாரக் குவிப்பைத் தடுப்போம்! காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை எதிர்ப்போம்! இந்துத்துவப் பாசிச அபாயத்தை முறியடிப்போம்!
    • ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றைச் சந்தை, ஒற்றைக் கல்விக் கொள்கை, ஒற்றைப் பண்பாடு, ஒற்றைத் தேர்தல், ஒற்றைத் தேசியம், ஒற்றையாட்சி என்ற கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கான ஆர்.எஸ்.எஸ். இன் அகண்ட பாரத இந்துத்துவத் தேசியத்தை எதிர்ப்போம்.
    • சமூகநீதி, மதசார்பின்மை, தற்சார்புப் பொருளாதாரம், தமிழகத்திற்கே முழு அதிகாரம் என்ற சனநாயக அரசியலை முன்னெடுப்போம்.

 

செயல்திட்ட முழக்கங்கள்:

    • மோடி-அமித் ஷா பாசிசக் கும்பலை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்!
    • ஆர்.எஸ்.எஸ். இன் அகண்ட பாரத இந்துத்துவத் தேசியத்தை எதிர்ப்போம்! தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்போம்!
    • தில்லியில் அதிகாரத்தைக் குவிக்கும் ஒற்றையாட்சியை எதிர்ப்போம்! கூட்டாட்சிக்காகப் போராடுவோம்! சமத்துவமற்ற பொதுப் பட்டியல், மத்தியப் பட்டியலை ஒழிப்போம்! ஆளுநர் பதவியை ஒழிப்போம்! தேசிய இனங்களின் விருப்பத்திற்கேற்ப அதிகாரப் பகிர்வை உருவாக்குவோம்!
  • இந்தி-சமஸ்கிருத ஆதிக்கத்தை ஒழிப்போம்! அனைத்து தாய்மொழிகளையும் ஆட்சி மொழியாக்கக் கோருவோம்!
  • மைய அரசில் அதிகாரத்தைக் குவிக்கும் ஒற்றை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை ஒழிப்போம்! சமத்துவமான வரிவிதிப்பு அதிகாரத்தைக் கோருவோம்!
  • அமெரிக்க ஆதரவு ஏகாதிபத்திய உலகமய கார்ப்பரேட் பேரழிவுப் பொருளியல் ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுவோம்!
  • தற்சார்பு, பசுமைதேசிய மக்கள் சனநாயகப் பொருளாதாரத்தை முன்னெடுப்போம்!
  • சங் பரிவாரங்களின் பார்ப்பனிய இந்துத்துவச் சமூக வன்முறைக்கும் கருத்தியல் ஆதிக்கத்திற்கும் முடிவுகட்டுவோம்!
  • மதச்சிறுபான்மையினரின் பாதுகாப்பான வாழ்வையும், சம உரிமையையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உறுதிசெய்வோம்!
  • ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகள், பாலினங்கள், விளிம்புநிலைப் பிரிவினர்தம் சமூகநீதி, சனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்! ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் விளிம்புநிலைப் பிரிவினர் மீதான சமூக வன்முறைக்கும் அநீதிக்கும் முடிவுகட்டுவோம்!

 

  

செயல்திட்டம்:

 

இச்செயல்திட்டம் மீதான சனநாயக விவாதங்களின் ஊடாக இடதுசாரி முற்போக்கு சனநாயகச் சக்திகளுடன் ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது முதலாவது கடமையாகும். பாசிசச் சர்வாதிகாரச் சக்திகளின் ஆட்சியில் ஆளும்வர்க்கத்தின் ஒரு முகாம் தொடங்கி ஆளப்படும் மக்கள் பிரிவினரில் அனைத்து தரப்பாரும் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இது மேலும் தீவிரப்படும். மோடி- அமித் ஷா கும்பலை ஆட்சியில் இருந்து கீழிறக்க வேண்டியதே உடனடி இலக்காக மாறும் கட்டத்தை நோக்கி அரசியல் நகரும். இவ்வாட்சியால் தாக்குதலுக்கு உள்ளாகும் அனைத்துத் தரப்பாரும் இந்த உடனடி இலக்கின் பொருட்டு ஒரு முகாமாக அணிதிரண்டு நிற்க வேண்டிவரும். அதே நேரத்தில், இவ்வாட்சியால் பாதிக்கப்படுவோரில் உள்ள வெவ்வேறு வர்க்கங்கள் தத்தமது நலனில் இருந்து பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தின் வளர்ச்சிப் பாதையையும் அதன் அலை ஏற்றஇறக்கத்தின் போதான உயரத்தையும் கட்டுப்படுத்தவும் மட்டுப்படுத்தவும் மடைதிறக்கவும் விரிவாக்கவும் முயலும்.

 

நடப்பிலுள்ள அரைகுறை சனநாயக எல்லைக்குள்ளும் ஆளும்வர்க்கத்தின் வரம்புக்குள்ளும் பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் எல்லையைச் சுருக்கிவிடாமல் ஆளப்பட்டுவரும் மக்களின் சனநாயக வேட்கைகள் நிறைவு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை இடதுசாரி முற்போக்கு சனநாயக சக்திகளுக்கு உண்டு. பாசிசக் கும்பலை ஆட்சியில் இருந்து கீழிறக்க வேண்டிய இலக்கில் இருந்து குறிதவறிவிடாமல் ஐக்கியத்திற்கு நிற்பதும் அதே நேரத்தில், பாசிச சக்திகள் எழுவதற்கு வழிவகுத்துள்ள அரசியல் பொருளாதார சமூகக் காரணிகளை அகற்றி மக்களுடைய விரிவான சனநாயக எல்லையின் வரம்பிற்கு பாசிச எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான போராட்டத்தை நடத்துவதும் அவசியமாகும்.

 

 

பாலன்,

பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

7010084440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW