பெரியாரா? பிரபாகரனா?அண்ணாவா? என்ற விவாதம் பாசிச எதிர்ப்புக்கு உதவுமா? தோழர் செந்தில், பகுதி – 1                                                    

03 Mar 2025

பெரியாரா? பிரபாகரனா? அண்ணாவா? என்றொரு விவாதம் நடந்து வருகிறது. இன்னொருபுறம் பாசிச மோடி-ஷா கும்பலின் மூன்றாவது ஆட்சிக் காலம் நடந்துகொண்டிருக்கிறது.

சுமார் 34.96 டிரில்லியன் ரூபாய் வரவு, 50.65 டிரில்லியன் ரூபாய் செலவு, 15.69 டிரில்லியன் துண்டு என வரவுசெலவு அறிக்கை திட்டமிடப்பட்டு இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் தமிழ்நாட்டில் இவ்விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

”காசாவை நான் எடுத்துக் கொள்கிறேன், உக்ரைனை இரசியா வைத்துக் கொள்ளட்டும்” என பாலத்தீனத்தினதும் உக்ரைனினதும் தேசிய இருப்பை வட அமெரிக்க அதிபர் டிரம்ப் துச்சமென மதித்துக் கொண்டிருக்கும்போது நம்மவர்கள் இந்த விவாதத்தை நடத்திவருகின்றனர்

உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாறத் துடிக்கும் ஒரு தேச அரசின் கீழ் வாழ்ந்து கொண்டுதான் இந்த விவாதம் முன்னெடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் வகுப்பு(வர்க்க) நலன்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த விவாதத்திற்குள் ஒளிந்து இருக்கும் வகுப்பு நலன்களை அடையாளம் காண வேண்டும்.

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரைக்கு முன்பு; பெரியாரா? பிரபாகரனா? என்று பற்ற வைத்தார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.  இதன் உள்ளடக்கம் திராவிடமா? தமிழ்த்தேசியமா?,  ’பிறமொழி’ பெரியாரா? தமிழ்ப் பிரபாகரனா?, என்ப்தே ஆகும். இந்தப் பின்புலத்தில் பெரியாரை மறுத்து பிரபாகரனை உயர்த்திப் பிடிக்கிறாரகள். பொருளிய்லில் சில துறைகளிலும் அரசியலில் பிரதிநிதித்துவத்திலும் சில சாதிகளுக்கு இடையே நிலவு முரண்பாட்டை இனப் பிரச்சனையாக பேசும் ஒரு சாராரின் குரலாகத்தான் மேற்படி கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

உடனே, பெரியாரையும் பிரபாகரனையும் நேரெதிராக நிறுத்தக் கூடாது என்று பலரும் கருத்துகளை முன்வைத்து வாதம் புரிந்தனர். ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை பிரபாகரனின் பெயரால் தமிழ்நாட்டில் இப்படி நடப்பது தமிழ்நாட்டில் ஈழ  ஆதரவுக்கு  ஊறு விளைவித்துவிடும் என்று கவலை தெரிவித்தனர். ஈழத் தமிழர்கள் திராவிடர்கள் என்று விடுதலைப் புலிகளே எடுத்துக் காட்டியதை சுட்டிக்காட்டி சான்றுகள் தந்தனர். இதில் ந்டைமுறை சார்ந்த ஒரு நோக்கம் இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்ட நலனும் இனவழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தின் நலனும் இந்த முரண்பாட்டில் உள்ள ஒற்றுமையை அடையாளம் காணப் பணித்தது. அதேநேரத்தில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை பிரபாகரனையும் பெரியாரையும் ஒருசேர ஏற்றுக்கொள்ளும் ஒரு சாராரின் குரலாக இது பேசப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவும் பெரியார் சிந்தனைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருக்கும் ஒருசாரார் சீமானின் வாதங்களை முறியடிக்க முனைந்தனர். குறிப்பாக, பெரியாரின் தனித்தமிழ்நாடு கொள்கையை ஏற்றுக் கொள்வோரும் பிரபாகரனின் தமிழீழ விடுதலை இலட்சியத்தை ஏற்றுக் கொள்வோரும் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.

இன்னொரு தரப்பு, நாதகவின் எதிரடிப்புப் போல் காட்சி தந்தது. பெரியாரா? பிரபாகரனா? என்ற விவாதத்தில் பெரியார்தான் என்று சொல்லக் கூடிய தரப்பு. பெரியாரை உயர்த்திப் பிடித்து பிரபாகரனை சிறுமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இவர்கள் பொதுவில் தமிழீழ விடுதலையை ஏற்காதவர்கள். தமிழ்நாட்டுக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் தந்தது எதுவும் இல்லை என்று கருதுபவர்கள். தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு இயக்கம் தேவையற்றது என்று கருதக் கூடியவர்கள். ஈழ ஆதரவு இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புபவர்கள். ஆனால், இவர்களால் இம்முயற்சியில் அதிகம் வெற்றி பெற முடியவில்லை. பெரியார் வழியா? பிரபாகரன் வழியா? என்று விவாதித்து வெற்றிப் பெற முடியாது என்று அவர்கள் புரிந்து கொள்கின்றனர். திமுக ஆதரவாளர்களில் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காத சிலர்,. அனைத்திந்திய ஆளும் வகுப்போடு பேரம் பேசும் அளவுக்கு வளர்ந்துள்ள தமிழ்நாட்டு ஆளும் வகுப்பின் குரலாகப் பேசுபவர்கள்..

இந்த நேரத்தில்தான், பிப்ரவரி 3 ஆம் நாள் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவுநாள் வந்தது. அப்போது தோழர் தமிழ் காமராசன் பெரியாரா? பிரபாகரனா? என்ற  கேள்விக்குப் பதிலாக பெரியாரும் அண்ணாவும் என்ற தலைப்பில்  ஒரு பதிவை முகநூலில் எழுதியிருந்தார். அது உண்மையில் பெரியாரா? அண்ணாவா? என்ற விசாரணைதான். அந்த பதிவில் இருந்து விவாதத்திற்கு உரிய பகுதியை கீழே போடுகிறேன். இது பெரியார் இயக்கத்தீன் தொடர்ச்சி குறித்தும் அண்ணா தோற்றுவித்த இயக்கம் குறித்தும் தோழர் தமிழ் காமராசன் முன்வைத்துள்ள மதிப்பீடு ஆகும்.

” பெரியாருக்குப் பின்னர் பெரியாரைப் பின்தொடர அவரது இயக்கத்தினருக்கு மிகச் சிரமமாக உள்ளது. பெரியார் மறைவுக்குப் பின்னர் – மணியம்மையார் மறைவுக்குப் பின்னர் திராவிடர் கழகம், பெரியார் கருதியது போன்ற தீவிரமான – பலமான சாதி ஒழிப்பு இயக்கமாகவும், குறிப்பாக சாதி ஒழிப்புக் களத்தில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் முரண்பாட்டைப் போல, இப்போது மிகவும் கூர்மையடைந்துள்ள தலித் – தலித் அல்லாதார் முரண்பாட்டை சீரிய முறையில் கையாளும் இயக்கமாகவும் தொடர முடியவில்லையோ என்கிற ஐயப்பாடும், அதன் விளைவாகத்தான் திமுகவும்கூட அதிகமாகச் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோ என்கிற ஐயப்பாடும் எனக்கு உள்ளது.

அண்ணா மறைவுக்குப் பின்னர் – பலவிதமான பலவீனங்கள் – குறைபாடுகள் எவ்வளவு இருப்பினும் திமுக, அண்ணா கருதியதுபோலவே, தீவிரமான – பலமான – வெற்றிகரமான அரசியல் கட்சியாக இன்றும் விளங்கி வருகின்றது.”

பின்னர் தேசியவாதமும் தமிழ் அனுபவமும் என்ற தலைப்பில் ஊடாட்டம் குழுவால் நடத்தப்பட்ட கருத்தரங்கமும் இதன் தொடர்ச்சியே ஆகும். அக்கருத்தரங்கில், மிக தெளிவாக அண்ணாவா? பிரபாகரனா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆகவே, பெரியாரா? பிரபாகரனா? என்று தொடங்கிய விவாதம் பெரியாரா? அண்ணாவா? என்று வளைந்து அண்ணாவா? பிரபாகரனா? என்ற இடத்திற்கு வந்துள்ளது.

இவை பாசிச எதிர்ப்பைப் பின்னுக்கு தள்ளும் விவாதங்கள் என்பது நமக்கு கவலை அளிக்கிறது. ஆயினும், தவறான திசைக்கு கொண்டு செல்லப்படும் இவ்விவாதங்களை வேடிக்கைப் பார்ப்பதாக ஆகிவிடக் கூடாது என்பதால் சுருக்கமாக எதிர்வினை ஆற்ற வேண்டியுள்ளது.

தொடரும்….

                      

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW