தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்!

23 Jul 2018

தமிழ்நாட்டை வஞ்சிக்கும்

பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்!

பா.ச.க. அடிவருடிகளைத் தோற்கடிப்போம்!

காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்!

சூலை – 23 தாமிரபரணிப் படுகொலை நாள்! தொடங்கி, ஆகஸ்ட் – 09 வெள்ளையனே வெளியேறு நாள்! வரை

மக்கள் பரப்புரை இயக்கம்!

மோடியின் நான்கரை ஆண்டு ஆட்சி உழைக்கும் மக்களின் மீது மென்மேலும் துயரங்களை சுமத்திய சாதனையைத் தவிர வேறெதையும் நிகழ்த்திவிட வில்லை.

கார்ப்பரேட் சர்வாதிகாரம்:

“காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு” என்ற முழக்கம் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களுக்கு எதிராகவும், காவிரி நீர் உரிமைக்காகவும் காவிரிச் சமவெளியின் குரலாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் குரலாக எழுந்துள்ளது. இதற்கு நேர்மாறாக நாகை, கடலூர் மாவட்டங்களைப்  பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து, பூம்புகார் முதல் இராமநாதபுரம் வரை 150 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக்குழாய்கள் பதிக்க மோடி அரசு ஒப்பந்தம் போடுகிறது. 1988 முதல் கூடங்குளத்தில் அணுஉலை வேண்டாம் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். 2011 முதல் இரண்டாம் கட்டமாக இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடத்திவந்தனர். பாதுகாப்பற்ற அணுஉலையை தென் மாவட்டக் கடற்கரையோரம் அமைக்காதே எனப் போராடினால் மேலும அணுஉலைகளை அமைக்க ஒப்பந்தம் போட்டு 6 அணுஉலைகளைக் கொண்ட அணுஉலைப் பூங்கா அமைப்பேன் என அச்சுறுத்துகிறது மோடியின் பா.ச.க. அரசு.

1996 முதல் தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலை அமைக்காதே! எங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்காதே! என தூத்துக்குடி மக்கள் போராடி வந்தனர். ஆலையை மென்மேலும் விரிவாக்கத் தமிழக அரசு நிலம் ஒதுக்கித்தந்தது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு கிராம மக்கள் 99 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி நூறாவது நாள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் நோக்கி ஆயிரமாயிரமாய் அணி திரண்டனர். கார்ப்பரேட் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் குண்டர்களும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து திட்டமிட்டு 12 பேரை துப்பாக்கிச் சூட்டிலும், 2 பேரை அடித்தும் கொன்றுள்ளனர். இன்றுவரை பல்வேறு பொய்வழக்குகளைச் சித்திரித்து, போராடும் அமைப்புகளின் தலைவர்களை, போராட்டத்தில் முன்னணியில் வந்தவர்களை அடித்து ஊனப்படுத்தியதுடன், கைது செய்து சிறைக்கனுப்பி வருகிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட தூத்துக்குடி காவல்துறை அனுமதிக்காமல் மறுத்துவருகிறது. தூத்துக்குடி உட்பட தமிழ் நாடெங்கும் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு, உயர்நீதிமன்றம் சென்றுதான் அனுமதிபெறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

வேளாண்மையை அழிக்கும் வகையில் சென்னை – சேலம்  எட்டுவழிச்சாலை 10,000 கோடி ரூபாய் செலவில் அமைப்பது என திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம். வேலூர் மாவட்டங்களில் விவசாயிகளை மிரட்டி, கைது செய்து நில அளவையில் ஈடுபட்டுள்ளது. விவசாயிகளின் குறை அறியச் செல்லும் மக்கள் தலைவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கிறது. மோடி அரசின் நேரடிக் கைப்பாவையாக ஓ.பி.எஸ். இ.பி.எஸ் தலைமையிலான தமிழக அரசு அடக்குமுறை செலுத்தி வருகிறது.

ஊழல், கருப்புப் பண ஒழிப்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என ஆரவாரத்துடன் ஆட்சிக்கு வந்தது பா.ச.க. . கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரு தாள்களை செல்லாதென அறிவித்து 125 கோடி மக்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது மோடி அரசு. கருப்புப் பணம் ஒழிய வில்லை.  சிறு தொழில் செய்வோர், விவசாயம், கூலித் தொழிலாளர்கள் என பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதுதான் மிச்சம். வாராக் கடன் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. மல்லையா தொடங்கி நீரவ் மோடி, மெகுல் சோக்சி வரை என பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கிப் பணத்தை ஏப்பம்விட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்கள் எல்லோரும் மோடிக்கு நெருக்கமானவர்கள். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்ப்பு ஆகவில்லை. அமித் ஷா மகனின் வருமானம் 16000 மடங்கு உயர்ந்துள்ளது!

காவி பயங்கரமும் பார்ப்பனிய மேலாதிக்கமும்

மறுபுறம் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் காவி பயங்கரவாதச் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றது. பசு அரசியல் எனத் திட்டமிட்ட கலவரங்கள், தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றம், உயர்கல்வி நிலையங்கள் தொடங்கி அரசு நிறுவனங்கள் அனைத்தும் காவிமயமாக்கப்பட்டுவிட்டன. பெண்களின் மீதான, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வுகளும், சித்திரவதைகளும் தொடர்வதுடன், பா.ச.க, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களால் நியாயப்படுத்தப்படும் சாதிய – நிலவுடமைப் பண்பாடு தலைவிரித்தாடுகிறது. எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வழியாக நீர்த்துப் போகச் செய்துவிட்டது பா.ச.க. அரசு. நாடு முழுவதும் உணவு அரசியல்,  உழைக்கும் மக்கள் மீதான பார்ப்பனீயப் பண்பாட்டுத் தாக்குதல், சாதிய அமைப்புகளை தனது வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்தும் இழிசெயல் ஆர்.எஸ்.எஸ், பா.ச.க. வால் தொடர் செயலாகி வருகிறது.

மாநில உரிமைப் பறிப்பும் மைய அதிகார குவிப்பும்

மையப்படுத்தல் எனும் பெயரில் ஒரே கல்வி, ஒரே தேர்வு எனத் தாய்மொழிக் கல்வி பறிக்கப்படுவதுடன் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி உரிமைகள் தட்டிப்பறிக்கப்பட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்புமுறையைத் திணித்து மாநில அரசுக்கு இருக்கும் குறைந்தபட்ச வரிவிதிப்பு அதிகாரத்தையும் பறித்துவிட்டது மோடி அரசு. காவிரிச் சிக்கலில் தமிழ்நாட்டுக்குரிய நீரினளவை குறைத்ததோடு அதிகாரமற்ற ஆணையத்தை அமைக்க வழிவகுத்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை மறுத்தது. சட்டமன்றத் தீர்மானத்திற்கு மாறாக இனக்கொலை இலங்கையை நம்பிக்கைக்குரிய நட்பு நாடென்கிறது. ஓக்கிப் புயலின் போது தனது அலட்சியத்தால் சுமார் 200 மீனவர்களைச் சாகடித்தது.  ஆளுநரின் வழியாக பா.ச.க. ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் தனது அதிகாரத்தை திணித்து வருகிறது மோடி அரசு. நாடு முழுவதும் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே தேசம் என ஒற்றை ஆட்சியை ஏற்படுத்த முயல்கிறது மோடி அரசு.

மக்களுக்கான மாற்று அரசியலே தீர்வு:

காவி பயங்கரவாத அரசியலும், இயற்கை வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் சுரண்டல் ஆதிக்கமும் மோடி அரசின் முகங்களாகப் பவனி வருகிறது. கார்ப்பரேட் எதிர்ப்பு மக்கள் போராட்டங்களை அச்சுறுத்த கைது, சிறை, துப்பாக்கிச் சூடு, தேசப்பாதுகாப்புச் சட்டம் என சர்வாதிகார அடக்குமுறையைச் செலுத்தி வருகிறது. சாதி அரசியலும், காவிபயங்கரவாத மதவெறி அரசியலும் மக்களைப் பிளவுபடுத்த முனைப்புடன் செயல்படுகிறது. இவை அனைத்தும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது எனும் நோக்கத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.

“ஆனால் மக்கள் பிரச்சனைகளுக்கான உண்மையான, நிலையான தீர்வு ஆட்சி மாற்றத்தின் வழியாகக் கிடைக்காது; கொள்கை மாற்றத்தின் வழியாகவே அதனை எட்ட முடியும் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.”

இந்த நாசகார காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்!                                                                                                                      மக்களுக்கான மாற்று அரசியலை வளர்த்தெடுக்க பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்! பா.ச.க.வின் அடிவருடிகள் யாராயினும் அவர்களை வீழ்த்திடுவோம்! தோற்கடிப்போம்!

சாதி ஒழிந்த, மக்கள் சனநாயகத் தமிழ்த்தேசக் குடியரசு படைக்கச் சபதமேற்று முன் செல்லுவோம்!

 

– தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW