டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 3) – தோழர் சமந்தா

திரும்பவும் மனுசனை குரங்கா கூட மாத்தலாம், ஆனா சத்தியமா சொல்றேன் அமெரிக்காவை மறுபடியும் டிரம்ப் நெனைக்கிற மாதிரி ஒலகத்தோட உற்பத்தி மையமா மாத்தவே முடியாதுங்க. ஏன்னா அமெரிக்க முதலாளித்துவத்துக்கு ரொம்ப வயசாயிருச்சு இல்லையா அதுனால லாபத்திறனும் கொறைஞ்சு போச்சு. அமெரிக்காவோட மொத்த ஜிடிபியில உற்பத்தித் துறையோடப் பங்கு 10 சதவீதமா கொறைஞ்சு போச்சு. ஆனா அமெரிக்காவுல உற்பத்தித் திறன் இல்லாத நிதித் துறையோட பங்கு 21.2%ஆக அதிகரிச்சுருச்சு. அமெரிக்காவுல முதலீடுகளின் பங்கு (2023) 20.7%ஆக இருக்கு. ஆனா நீங்க சீனாவை பாருங்க. சீனாவுல உற்பத்தித் துறையின் பங்கு 29%ஆக இருக்கு. முதலீடுகளின் பங்கு 42.4%ஆக இருக்கு.
அமெரிக்காவுக்கு முன்னாடி வல்லரசுகளின் தலையா இருந்த ஐக்கிய முடியரசு இப்போ உற்பத்தித் திறனல்லாத நிதிமூலதனத்தை நம்பி வாழுற பொருளாதாரமா “rentier economy” மொடங்கிப் போச்சு இல்லையா, அதே நெலைமை தான் இப்போ அமெரிக்காவுக்கும் வந்துருக்கு. ஐக்கிய முடியரசு, அமெரிக்கா ரெண்டுமே இப்போ “rentier economy”ஆகத் தான் இருக்கு.
இப்ப அமெரிக்காவோட உற்பத்தித்துறையை விரிவுபடுத்துறதுக்கு அமெரிக்க முதலாளிகள் தயாரா இல்லங்க. ஏன்னா அவங்க அமெரிக்காவுல லாபம் கம்மியானதால தான் கடந்த 40 வருசங்களுக்கு மேல மூன்றாம் உலக நாடுகள்ல பன்னாட்டு நிறுவனங்கள் மூலமா லாபம் சம்பாதிக்கிறாங்க. அவங்களையெல்லாம் அமெரிக்காவுக்கே திரும்பி வாங்கண்ணு மெரட்டுறாரு டிரம்ப். அமெரிக்காவுல லாபத்திறனும் கொறைஞ்சு போச்சு, கூலியும் அதிகமாயிருக்கு லாபம் கெடைக்காம அவுங்க என்ன தர்மத்துக்கா வந்து அமெரிக்காவுல தொழில் பண்ணமுடியும். அப்போ அமெரிக்காவோட உற்பத்தித் துறையை விரிவுபடுத்தனும்ணா என்ன பண்ணனும்? அமெரிக்க அரசு தான் பெருமளவு முதலீடுகளைப் பண்ணனும். இது அமெரிக்க அரசின் புதிய தாராளமயக் கொள்கை நடவடிக்கைகளுக்கு நேர்மாறானது. ஏண்ணா அமெரிக்க அரசும், பாஜகவோட மோடி அரசு மாதிரி அரசு செலவினங்களை வெட்டிக்கிட்டே வருது.
அதுசரி ஏன் அமெரிக்கப் பொருளாதாரத்தோட லாபம் கொறைஞ்சுபோச்சு தெரியுமா? நம்ம கார்ல்மார்க்ஸ் கண்டுபிடிச்ச முதலாளித்துவ இயங்கியல் விதி (இலாப விகிதம் குறையும் போக்கு (TRPF)) செயல்படுறதுனால தான். முதலாளித்துவ பொருளாதாரம் மேலும் மேலும் வளர்ச்சியடையும் போது எந்திரங்கள் தொழில்நுட்பங்களுக்கான மூலதன செலவினம் (C- constant capital), கூலிக்கான செலவினத்தை விட (V-variable capital) கணிசமா அதிகரிக்கும். ஏண்ணா முதலாளித்துவ அமைப்புல தொழில்நுட்பங்களும், எந்திரங்களும் தொழிலாளர்களை வேலையை விட்டுத் தூக்கி பதிலீடு செய்யுது இல்லையா. ஆனா தொழிலாளர்களால மட்டும் தான் உபரி மதிப்பை (S-surplus value) உற்பத்தி செய்யமுடியும். அதுனால எந்திர தொழில்நுட்பங்களின் பங்கு அதிகரிக்கும் போது, உபரிமதிப்பும் ஒப்பீட்டளவுல கொறைஞ்சுபோயிடும். அதுனால லாபவிகிதமும் (S/C+V) கொறைஞ்சு போயிடும். உழைப்புச்சுரண்டலை (S/V) அதிகப்படுத்துவதன் மூலமா லாபவிகிதத்தை (S/C+V) அதிகப்படுத்தலாம். ஆனாலும் கூட உழைப்புச்சுரண்டலை (S/V) விட மூலதனத்தின் அங்கக மதிப்பு (C/V) அதிகரிக்கும் போது (C/V > S/V) லாபவிகிதம் கொறைஞ்சு போயிடும். அதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது டிரம்பு. (மூலதனத்தின் மதிப்புக்கும் (C), கூலியின் மதிப்புக்கும் (V) இடையிலான விகிதத்தைத்தான் மூலதனத்தின் அங்கக மதிப்புண்ணு சொல்றோம்).
ஏஐ தொழில்நுட்பத்தால கூட அமெரிக்க லாபத்துல எந்த “புரட்சியையும்” கொண்டுவரமுடியாது. ஏண்ணா ஏஐ தொழில்நுட்பத்துக்கு செலவு தான் அதிகரிக்குமே தவிர அதுக்கேத்த மாதிரி லாபம் அதிகரிக்காது.
வால்ஸ்டிரீட் பத்திரிக்கையே என்ன சொல்லுது தெரியுமா? “அமெரிக்க உற்பத்தி ஏற்றுமதிகள் வர்த்தக பற்றாக்குறையை மூடும் அளவுக்கு அதிகரித்தாலும் – இது மிகவும் சாத்தியமில்லாத நிகழ்வு – வேலைவாய்ப்பும் அதற்கேற்ப வளர்ந்தாலும், நமது உற்பத்தி-பணியாளர்களின் பங்கு (manufacturing-Workforce) 8% இலிருந்து 9% ஆக மட்டுமே உயரும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது”ண்ணு சொல்லிருக்கு. அதுனால டிரம்ப் என்ன தான் காப்பு வரிகளால கோட்டைக் கட்டுனாலும் அமெரிக்க பொருளாதாரத்தின் லாபத்திறனையும் அதிகப்படுத்த முடியாது, அமெரிக்காவை மறுபடியும் உற்பத்தி கேந்திரமாவும் மாத்த முடியாது. வேணும்னா நிதி மூலதனத்தால ஒலகத்தையே சுரண்டி மூட்டைப்பூச்சிகளா பொழைக்கலாம். அதுனால டிரம்ப் நீங்க சும்மா சீனாவைப் பாத்து பொறாமையில பொகைஞ்சு, வயித்தெரிச்சல் பட்டு காப்புவரிகளை அடுக்குறதால சீனாவோட வளர்ச்சியைத் தடுக்கமுடியாது. முடிஞ்சா சீன அரசு பண்ணுற மாதிரி நீங்களும் பொருளாதாரத்துல அரசு முதலீடுகள் மூலமா உற்பத்தித்துறையை பொதுத்துறையா விரிவுபண்ணுங்க. அதை விட்டுட்டு யானை தன் தலையில மண்ணை வாரிப் போட்டுக்குற மாதிரி அமெரிக்கப் பொருளாதாரத்துக்கே ஆப்பு வெச்சுட்டீங்களே டிரம்பு.
(தொடரும்)