இந்து தேசிய வெறி இயக்கத்திற்கு திமுக எதிரியா? – செந்தில் – பகுதி – 1

01 Jan 2026

பேராசிரியர் மருதமுத்துவின் கட்டுரைக்கு மறுவினை
பகுதி – 1

பேராசிரியர் மருதுமுத்து தொடர்ச்சியாக தாழி மடலில் எழுதி வருவதோடு அதே கடடுரையை தமது முகநூல் பக்கத்திலும் வெளியிடுகிறார். அவை சமகால அரசிய்ல் பற்றி அறிவூட்டத்தக்க பதிவுகள் ஆகும். . அந்த பதிவுகளில் கடந்த அக்டோபர் 4 ஆம் நாள் அன்று அவர் வெளியிட்ட கட்டுரைக்கு மறுவினை இது.
அந்த பதிவிலிருந்து,
”இந்து தேசிய வெறி இயக்கத்திற்கு இரண்டு வகை எதிரிகள் உள்ளனர்.

முதலாவது அனைத்திந்திய அளவில் இஸ்லாமியர் (உடன் கிறிஸ்தவர்களும் உண்டு).

இரண்டாவது தமிழகத்தின் திராவிடக் கருத்தியலும், திமுகவும்.

திராவிடக் கருத்தியல் என்பது பெரியாரின் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அது அம்பேத்கரியத்திற்கும் இணக்கமானதாகும்.”

இப்படி தொடங்கக் கூடிய இப்பதிவு திமுகவை வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முடிகிறது. தேர்தல் நிலைப்பாடு ஒருபுறமிருக்கட்டும். அவர் பதிவின் தொடக்கத்தில் சொல்வதைத்தான் திறனாய்வுக்கு உட்படுத்த விழைகிறேன்.

இக்கட்டுரைக்குள் நுழையும்முன், இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம் பாசிச எதிர்ப்பு மக்கள் முகாம் ஒன்று உருப்பெற வேண்டும் என்பதே ஆகும். அதற்கு தடையாக இருப்பது இந்துத்துவம் என்றால் என்ன? என்பது பற்றியும் திமுக மீதான மதிப்பீடு பற்றியும் உள்ள புரிதலே ஆகும்.

இந்து தேசிய வெறி இயக்கத்தின் எதிரியாக இசுலாமியர்களையும் கிறித்தவர்களையும் சொல்வதில் எனக்கு எவ்வித மாறுபாடும் இல்லை.
இந்து தேசிய வெறி இயக்கத்தின் எதிரியாக திராவிடக் கருத்தியலையும் திமுகவையும் சொல்வது சரியா? அப்படி சரி எனில், அதுவொரு நிலைத்த உண்மையா?

திராவிடக் கருத்தியல் மற்றும் திமுக என்று அவர் சொல்கிறார். ஆனால் ,எது திராவிடக் கருத்தியல் என்பதிலும் குழப்பம் இருக்கிறது. திமுகவின் கொள்கைகள் திராவிடக் கருத்தியலா? அல்லது திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவற்றின் கொள்கைகள் திராவிடக் கருத்தியலா?
அதாவது திமுக 1999 இல் பாசக கூட்டணியில் இருந்த போது திமுகவை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தது திக. கூட்டணி வைத்த திமுகவின் கொள்கை திராவிடக் கருத்தியலா? அதை எதிர்த்த திகவின் கொள்கை திராவிடக் கருத்தியலா?

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்துகொண்டிருந்த இன்வழிப்புப் போரை நிறுத்த வலியுறுத்தி நடைபெற்ற எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டத்தில் பேசியவற்றுக்காகவும் இராணுவ வண்டி தாக்குதல் வழக்குக்காகவும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் தா.செ. மணியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணனும் திமுக அரசால் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தேசப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியது திராவிடக் கருத்தியலா? சிறைப்பட்டது திராவிடக் கருத்தியலா? பெரியாரின் தனித்தமிழ்நாடு கொள்கை திராவிடக் கருத்தியலா? திமுகவின் இந்திய தேசியத்திற்குள் மாநில சுயாட்சி என்பது திராவிடக் கருத்தியலா?
இப்படியான கேள்விகள் இருப்பதால், திமுகவை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த விவாதத்தை நடத்தலாம் என்று எண்ணுகிறேன். எனவே, இக்கட்டுரைக்கு பேராசிரியர் எதிர்வினை ஆற்றுவார் எனில் மேற்படி கேள்விகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டாம் என்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன். இனிவரும் பகுதிதான் நான் விவாதப்படுத்த விரும்புவதாகும்.

இந்து தேசிய வெறி இயக்கத்தின் தலைமையகமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். எப்போதாவது திமுகவை தமது எதிரி என்று அறிவித்திருக்கிறதா? ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகளின் இலக்கியங்களில் அப்படியான வெளிப்படையான கூற்று இருக்கிறதா? அல்லது ”இந்துதேசிய வெறி இயக்கம்தான் எங்கள் முதன்மையான எதிரி, ஆர்.எஸ்.எஸ். தான் எங்கள் முதல் எதிரி? ஆ.ர்.எஸ்.எஸ். ஐ தடை செய்ய வேண்டும்” என திமுக எப்போதாவது சொல்லியதுண்டா?

ஆர்.எஸ்.எஸ். தமது முதன்மை எதிரியாக திமுகவை கருதுமாயின் 1999 காலத்தில் பாசக – திமுக கூட்டணி அமைந்தது எப்படி? அதுமட்டுமின்றி, திமுக தேசிய ஜன்நாயக கூட்டணியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்க முடிந்தது எப்படி? அப்போது பாசக பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டிய அளவுக்கு பலம் குன்றி இருந்ததும் திமுகவின் வகுப்பு நலனுக்கு இடையூறு இல்லாமல் இருந்ததால் அப்படி ஒரு கூட்டணி அமைய முடிந்தது. இன்று அத்தகைய கூட்டணி அமைய முடியாததற்கு காரணம் திமுகவின் பெருமுதலாளிய வகுப்பு நல்னுக்கு பாசிச பாசக அரசிடம் இருந்து நெருக்கடி வந்திருப்பது தான்!

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவுடன் பாசக கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.காரரான சுப்பிரமணிய சுவாமி பேசிக் கொண்டிருந்தது எப்படி?. தமது கொள்கை எதிரி என்று கருதக்கூடிய கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி வைத்ததும் இல்லை, கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர்கள் பேசியதும் இல்லை. உலகெங்கும் பரவி செயல்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படும் திமுகவை வீழ்த்த முடியாத எதிரியாக கருதுகின்றதா?

ஆர்.எஸ்.எஸ். கேரளத்தில் கம்யூனிஸ்ட்களையும் மேற்கு வங்கத்தில் மம்தாவையும் தோற்கடிக்க நினைப்பது போல் தமிழ்நாட்டில் திமுகவையும் தோற்கடிக்க நினைக்கிறது. இதை கொண்டே ஆர்.எஸ்.எஸ். திமுகவை எதிரியாக பார்க்கிறது என்ற முடிவுக்கு வர முடியுமா? அப்படியென்றால் திமுகவை போல் கம்யூனிஸ்ட்களையும் திரினாமுல் காங்கிரசையும் எதிரியாக பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ். என்று பேராசிரியர் ஏன் குறிப்பிடவில்லை?. பார்ப்பனிய எதிர்ப்பு என்பதை அடிப்படையாக கொண்ட திமுக என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த அடிப்படையில் இருந்துதான் இந்து தேசிய வெறி இயக்கத்தின் எதிரி திமுக என்கிறாரா?
பேராசிரியர் இந்த முடிவை வந்தடைவதற்கு காரணம் என்ன? ஒன்று இந்துத்துவா என்றால் என்ன? என்பது பற்றிய புரிதல், இரண்டு திமுக குறித்த மதிப்பீடு.

இந்துத்துவா என்றால் என்ன?

”இந்துத்துவா என்றால் என்ன?” என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் இன்று திராவிட இயக்கத்தவர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் போக்குகளைச் சேர்ந்த அரசியல் முன்னணிகளும் சனாதனம்/ பார்ப்பன ஆதிக்கம்/ ஆரியம்/ பார்ப்பனியம்/ வர்ணாசிரமக் கட்டமைப்பு என்று ஒரே பொருளை வெவ்வேறு சொற்களில் சொல்வார்கள். இடதுசாரிகளிடம் கேட்டால் ஒருபகுதியினர் கார்ப்பரேட் ஆட்சி என்று சொல்வார்கள். இசுலாமியர்களிடம் கேட்டால் இசுலாமிய எதிர்ப்பு வாதம் { islamophobia ) என்பார்கள்., தமிழ்த்தேசிய ஆற்றல்களிடம் கேட்டால் பெரும்பாலானவர்கள் சனாதனம், பார்ப்பன ஆதிக்கம் என்று பரிதாபமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சனாதனம், பார்ப்பனியம், இசுலாமிய எதிர்ப்பு வாதம், கார்ப்பரேட் சார்பு ஆகிய யாவும் அதன் குணங்கள்தான். ஆனால், இதில் எது இந்துத்துவத்தை/ ஆர்.எஸ்.எஸ். ஐ மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தும் குணம் என்பதுதான் கேள்வி.\

காங்கிரசின் மீதும் இந்திய தேசிய இயக்கத்தின் மீதும் பெரியாரும் அம்பேத்கரும் முன்வைத்த திறனாய்வு அக்கட்சி சனாதனத்தை எதிர்க்கவில்லை, பார்ப்பன ஆதிக்கத்தை ஆதரிக்கும் கட்சி என்பதுதான்.
காங்கிரசு திரினாமுல் காங்கிரசு, திமுக, ஆம் ஆத்மி என அனைத்தும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை கொண்ட கட்சிகள். பாசகவும் மேற்படி பொருளியல் கொள்கையை கொண்ட கட்சிதான்.
இருப்பினும் மேற்படி இருவிசயத்திலும்கூட பாசகவும் ஏனைய ஆளூம்வகுப்பு கட்சிகளும் ஒன்றல்ல.

பார்ப்பன ஆதிக்கம் என்பதிலும் கார்ப்பரேட் ஆதரவு என்பதிலும் ஏனைய கட்சிகளிடம் இருந்து இன்றைய பாசிச பாசக அரசு பண்பு வகையில் எப்படி வேறுபடுகிறது என்பதை விரித்துச் சொல்ல முடியும் என்றாலும் தேவை கருதி இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன்.

ஏனைய அனைத்துக் கட்சிகளிடமும் இருந்து வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். மாறுபடும் இடம் அதன் தேசியக் கொள்கைதான். காங்கிரசு இந்திய தேசியம் பேசுகிறது. ஆர்.எஸ்.எஸ். இந்து தேசியம் பேசுகிறது. தமிழ்நாடு, காசுமீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மொழிவழி தேசியங்கள் பேசப்படுகின்றன. இந்து தேசியம், இந்திய தேசியம், தமிழ்த்தேசியம் இவை மூன்றுக்கும் பண்பு வகையில் வேறுபாடு உண்டு. குறிப்பாக, இந்து தேசியமும் இந்திய தேசியமும் வேறு வேறாகும். இந்திய தேசியத்தில் இந்துப் பெரும்பான்மைவாதம் இருப்பினும் அது இசுலாமியர் விலக்கத்தை உள்ளடக்கமாக கொண்ட அரசியல் அல்ல.

எனவே, இந்துத்துவம் என்பதன் சாறம் அதன் தேசியக் கொள்கை. அதாவது இந்து தேசியம் ஆகும். இந்து தேசியத்திற்கு இரு பக்கங்கள் – ஒன்று இசுலாமிர்களை விலக்கி வைப்பது, இன்னொன்று – மொழிவழி மாநிலங்களை அடியோடு ஏற்க மறுப்பது.

– தொடரும்…

பகுதி – 2 படிக்க: https://peoplesfront.in/2026/01/03/dmk-rss-2/

RELATED POST
1 comments
  1. தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் மிக, மிகக் குழப்பமானவையாக உள்ளன. இது குறித்து தாங்கள் தோழர் தியாகுவிடம் கலந்துரையாடினால் ஒருவேளை நான் எழுதி வரும் பதிவுகள் குறித்த விளக்கம் பெற வாய்ப்புண்டு. அதற்கிடையில் நான் உங்களுடன் உரையாடுவது எனது முகநூல் பரப்புரைக்குக் குந்தகம் விளைவித்து விடும். (குறிப்பு– நான் தாழி என்பதில் இதுவரை எதுவும் எழுதியதில்லை) அன்புடன் மருதமுத்து

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW