காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு! தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்!

08 Aug 2019

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதனை தமிழக சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி ஆற்று மணல் குவாரிகளை மூடச் செய்ததில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது. இவ்வியக்கதின் வழியாகத்தான் தோழர் முகிலனும் ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிரானப் போராட்டத்தில் பங்குபெற்றார். தோழர் முகிலன் காணாமற் போன காலத்தில் முகிலனை மீட்பதற்கான போராட்டங்களைக் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் முன்னெடுத்தது.

இப்போது தோழர் முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை விசாரித்து வருகிறது தமிழக அரசின் சிறப்புப் புலனாய்வுத் துறை. அவ்வழக்கில் 164 பிரிவின் கீழ் ’ஒப்புதல் வாக்குமூலம்’ சொல்ல நேற்றுமுன் தினம் 6-8-2019  அன்று நீதிமன்றம் வருமாறு ஐயா விசுவநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. முன்னதாக அவரை அதே நாள் அன்று காலை விசாரணைக்கு என்று அழைத்திருந்த சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் முகிலன் வழக்கில் தாங்கள் சொல்லும்படி முகிலனுக்கு எதிராக சாட்சியளிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஐயா விசுவநாதன் அதற்கு உடன்பட மறுத்த நிலையில் அவரை மிரட்டியுள்ளனர். பின்னர், அதே நாள்(6-8-2019) மதியம் நீதிபதி முன்பு சாட்சியம் அளித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.  தாங்கள் வலியுறுத்தியபடி ஐயா விசுவநாதன் முகிலனுக்கு எதிராக சாட்சி சொல்லவில்லை என்ற ஆத்திரத்தில் நேற்று(7-8-2019) மாலை 4.30 மணி அளவில் புகழூரில் வேலாயுதம் பாளையத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்ற சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு என்று சிபிசிஐடி அலுவலகம் வருமாறு சொல்லியுள்ளனர். ’சம்மன் கொடுத்தால் தான் வருவேன்’ என்று ஐயா சொல்லியுள்ளார். உடனே அவரை குண்டுக் கட்டாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்றுள்ளது சிபிசிஐடி.

முழுக்க முழுக்கப் பழிவாங்கும் நோக்கில் தோழர் முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இவரையும் இணைத்து  கூட்டுச் சதி(120b),  சாட்சியங்களை அழித்தல்(202), குற்றவாளியைப் பாதுகாத்தல்(212) ஆகிய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு இரண்டாவது குற்றவாள்(A2) என சிறையில் அடைத்துவிட்டது.

ஐயா விசுவநாதனுக்கு அகவை எழுபதை தாண்டிவிட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அரும்பாடுபட்டவர். தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு தலைவர் அனைவரும் அவர் ஈழ விடுதலைக்காக ஆற்றிய தொண்டினை அறிவர். மேலும், அதன் பொருட்டு அவருக்கு ஏற்பட்ட பேரிழப்புகளையும் எல்லோரும் அறிவர். சென்னையில் இருந்து தன் சொந்த ஊரானப் புகழூருக்கு சென்றபின் வயது மூப்பு காரணமாக அயர்ந்துவிடாமல் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடத் துணிந்தவர். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைக் கட்டி அதில் கடுமையாக உழைத்து மணல் கொள்ளையர்களின் கொலை மிரட்டல்களுக்கும் தாக்குதலுக்கும் காவல்துறையின் வழக்குகளுக்கும் உள்ளானவர். தமிழர் உரிமை மீட்புப் போராட்டங்கள் அனைத்தையும் ஊக்கமுடன் ஆதரித்து நின்றவர். இவர்தான் நேற்று கரூர் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்!.

தோழர் முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தமிழக சிறப்புப் புலனாய்வுத் துறை இவ்வளவு அக்கறை செலுத்துவம் அந்த வழக்கின் பகுதியாக ஐயா விசுவநாதனைக் கைது செய்திருப்பது வழக்கமான ஒன்றுபோல் தெரியவில்லை. இந்த வழக்கைப் பயன்படுத்தி இன்னும் அவர்கள் என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்று ஐயுற நேர்கிறது. தமிழக அரசு நடுவண் அரசின் கைப்பாவையாய் மாறிவிட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சம், உளவு நிறுவனங்கள் வழிகாட்டுதலில் தமிழக காவல்துறை செயல்படுவதுபோல் தெரிகிறது. முகிலன் மீதான இவ்வழக்கைப் பயன்படுத்தி அடுத்துஅடுத்த கைதுகளையும் பரப்புரைகளயும் மேற்கொள்ள துடிப்பதுபோல் தெரிகிறது.

இந்த வழக்கின் பின்னணியில் ஆற்றுமணல் கொள்ளையர்கள் இருக்கக் கூடுமோ என்ற எண்ணமும் ஐயா விசுவநாதனின் கைதை ஒட்டி எழுகிறது. முகிலன் தொர்பான சர்ச்சைக்குரிய வழக்கின் பகுதியாக இந்த கைதைக் கருதி சனநாயக ஆற்றல்கள் விலகி நின்றுவிடல் ஆகாது. இந்த கைதைக் கண்டித்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் பொழுதே முகிலன் வழக்கைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சக்திகளையும் அரசின் நோக்கத்தையும் அம்பலப்படுத்த முடியும்.

முன்னதாக தோழர் முகிலன் எங்கே? என்ற முழக்கத்துடன் மார்ச் 02 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியவரகளில் எழுவர் மீது வழக்குப் பதிந்துள்ளது திருவல்லிகேணி காவல்நிலையம்.  தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக் குழு தோழர் வழக்கறிஞர் கென்னடி , தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமுஎகச செயலாளர் ஆதவன் தீட்சண்யா, தமிழக மக்கள் முன்னண்யின் தலைவர் தோழர் பொழிலன், விடுத்லை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன்  ஆகிய எழுவர் மீதும் கலவரத்தைத் தூண்டினார்கள் என்ற பெயரில் வழக்குப் போடப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் பேசியதற்காக நான்கு மாதங்கள் கழித்து வழக்கு தொடுக்கும் வேடிக்கையைக் கண்டு வருகிறோம். ஏதாவது ஒரு வழக்கைப் போட்டு அரசியல் செயற்பாட்டாளர்களை நீதிமன்றத்திற்கு அலைக்கழிப்பதன் மூலம் செயல்வேகத்தை குறைக்க முடியும் என்று காவி-கார்ப்பரேட் சர்வாதிகார அரசு கருதுகிறது. ’கோர்ட், கேஸுன்னு அலைய வேண்டி  வந்திரும்’ என்ற அச்சத்தை சமூகத்தின் பொது புத்தியில் ஏற்றி அரசியல் செயற்பாட்டில் இருந்து பெருந்தொகையான வெகுமக்களை விலக்கி வைப்பதற்கான ஓர் உத்தியாக இவ்வேலையை அரசு செய்கிறது.

இப்படி தோழர் முகிலன் மீதான வழக்கை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழக சிறப்புப் புலனாய்வு பிரிவும் உளவுத் துறையும் அடாவடித்தனங்களை செய்து வருகின்றன. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு. முதியவர், துணையில்லாதவர் என்று கிள்ளிக்கீரையாக நினைத்து கைது செய்திருக்கிறது தமிழக அரசு. காவிரி ஆற்றைப் பாதுகாக்கும் போராட்டத்திலும் பிற சமுதாயப் பிரச்சனைகளையும் அவர் ஆற்றிய தொண்டிற்காக அப்பகுதி வாழ் வெகுமக்களின் பேரன்பை வென்றவர். முதியவர் என்றும் பாராமல் அவரை சிறையில் அடைத்ததற்கானப் பலனை எடப்பாடி பழனிச்சாமி அறுவடை செய்வார். உலகெங்கும் உள்ள தமிழர்களின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.    தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக ஐயா விசுவநாதன் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW