உமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்?
ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய இரண்டு நிகழ்ச்சிகள் நேற்று(13-8-2918) நடந்தன.
முதலாவது நேற்று மதியம் இந்நாட்டின் தலைநகர் தில்லியில் மையப் பகுதியில் இருக்கும் அரசமைப்பு மன்றம் என்று அழைக்கப்படும் இடத்தின் வளாகத்தில் நாடறிந்த மாணவ செயற்பாட்டாளர் தோழர் உமர் காலித்தை அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பார்த்ததாகும். பின்புறமாக இருந்து அவரைத் தாக்க முயல உமர் நிலைதடுமாறிப் போனார். அந்த ஆள் உமர் காலித்தைச் சுடக் குறி வைத்து அவர் வயிற்றில் துப்பாக்கியை வைத்தார். உமர் காலித் இதை உணர்ந்து கொண்டு அவரைத் தள்ளினார். அக்கணத்தில் அவருடன் இருந்த தோழர்கள் காலித் சயிஃபி, சாரிக் உசைன், பனோஜ்யோட்சனா லாஹிரி அவரைத் தள்ளிவிட்டனர். அவர் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். அவரை சாரிக் உசைன் விரட்டிப் பிடிக்கப்பார்த்தார். அந்நேரம் அவர் குறியின்றி ஒருமுறை சுடவும் செய்தார். ஆனால் சாரிக் மீது அது படவில்லை. நாடாளுமன்றத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள அந்தப் பாதுகாப்பு வளையப் பகுதியில் இருந்து அந்த ஆள் தப்பிவிட்டார். சுதந்திர தினத்திற்கு இரு நாட்களுக்குமுன் என்பதால் அப்பகுதி வழக்கத்தைவிட உயர்பாதுகாப்பில் இருந்ததாகும். பின்னர் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு சென்று உமர் காலித் ஒரு புகார் தந்துள்ளார்.
இரண்டாவது இந்த செய்தி முகநூலில் வந்து பரபரத்துக் கொண்டிருந்த வேளையில் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ள மெரினா காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளரிடம் இருந்து என் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. ”கடந்த ஆண்டு நீங்கள் நடத்திய காந்தி சிலைப் போராட்டம் தொடர்பாக உங்களுக்கு ஒரு சம்மன் தர வேண்டியிருக்கிறது” என்றார். எனக்கு விசயம் புரிந்தது. அவரிடம் இருந்து சம்மனைப் பெற்றுக்கொண்டேன். கடந்த ஆண்டு அக்டோபர் 2 காந்திப் பிறந்த நாள் அன்று ”காந்தியைக் கொன்றவர்களே கெளரியைக் கொன்றார்கள்” என்ற பதாகைகளுடன் காந்தி சிலையை நோக்கிச் சென்ற நாங்கள் அப்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டோம். ஏனெனில் அன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு செப்டம்பர் 5 ஆம் நாள்தான் கெளரி லங்கேஷ் பத்திரிக்காவின் ஆசிரியரும் அரசியல் செயற்பாட்டளருமான கெளரி லங்கேஷ் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இரத்த வெள்ளத்தில் மிதந்தது எவரது மனதைவிட்டும் அகன்றிருக்க. 2015 ஆகஸ்ட் 30 இல் வட கர்நாடகாவில் பகுத்தறிவுவாதியும் வரலாற்று ஆய்வாளருமான எம்.எம்.கல்புர்கி(77), 2015 பிப்ரவரி 16 இல் பகுத்தறிவுவாதியும் இடதுசாரி சிந்தனையாளருமான கோவிந்த பன்சாரே(81), 2013 ஆகஸ்ட் 20 இல் பகுத்தறிவாளரும் மருத்துவருமான நரேந்திர தபோல்கர்(52) ஆகியோரைக் சுட்டுக் கொல்லப் பயன்படுத்திய அதே துப்பாக்கித்தான் கெளரியையும் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகும். அது 7.65 மி.மீட்டர் நாட்டுத் துப்பாக்கியாகும். சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கெளரியின் மரணத்தைக் கொண்டாடினார்கள். ’கெளரி தேச விரோதி’ என்ற ஊடகப் பரப்புரையில் குழம்பிப் போயிருக்கும் இந்நாட்டு மக்களுக்கு ஓர் உண்மையை உரத்துச் சொல்வதற்காக நாடெங்கும் ஒரு வேலை திட்டமிடப்பட்டது. ”காந்தியைக் கொன்றவர்கள்தான் கெளரியைக் கொன்றார்கள்” என்ற முழக்கத்துடன் காந்தி சிலை முன்பு திரண்டு மாலை அணிவிப்போம் எனவும் குருதிதாகம் அடங்காத ஆர்.எஸ்.எஸ். தோட்டாக்களால் அதுவரை கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வோம் எனவும் முடிவுசெய்யப்பட்டது. அக் 2 அன்று தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் இதை செய்ய முடிந்தது. ஆனால், தமிழ்நாட்டிலோ பா.ச.க.வின் எடுபிடி அரசின் காவல்துறை அங்கு போவதற்கே அனுமதி மறுத்தது. அதை மீறி நாங்கள் சென்றோம். ’மெளனமாக நீங்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்’ என்றது காவல்துறை. அதை மீறி நாங்கள் முழக்கமிட்டோம். காந்தி சிலைக்கு சில அடிகள் முன்பு கூடியிருந்த நாங்கள் குண்டாங் கட்டாக காவல் வாகனத்திற்குள் தூக்கியெறியப்பட்டோம். அதே மெரினா சாலையில் இருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் வீ.அரசு அங்கிருந்தார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அங்கிருந்தார். இந்த சமூக தகுநிலையை ஒத்த எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள் அங்கிருந்தனர். ஆனால், இவர்களெல்லோரும் எவ்வித வேறுபாடுமின்றி காவல்துறையால் கரடுமுரடாகக் கையாளப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பெங்களூருவிலோ, பூனேவிலோ, தில்லியிலோ யாரை வேண்டுமானாலும் கொல்ல ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு எவ்வித தடையுமில்லை. ஆனால், இந்த உண்மையைச் சொல்வதற்குகூட நமக்கு தடை விதித்து தடுக்க முயன்றது காவல்துறை. ஆர்.எஸ்.எஸ். விரும்பாத ஓர் உண்மையை இந்நாட்டு மக்களிடம் உரக்க சொல்ல முயன்றக் குற்றத்திற்காகத்தான் இந்த சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புத் தரப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், அதன் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆகியோரும் இதே ’குற்றத்திற்காக’ நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் தலைநகரிலும் சென்னையின் தலைநகரிலும் நடந்த இவ்விரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையவை; உறுதியாக தற்செயலானவை. ஆனால், காவி-கார்ப்பரேட்களின் சர்வாதிகார ஆட்சியின் செயல்முறையில் மிக நேர்த்தியாக கோர்க்கப்பட்ட சங்கிலியாகும். ஒரு சித்தாந்தப் போர் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அதில் தமக்கு எதிரான சித்தாந்தத்தைக் கொண்டவர்களை ஆர்.எஸ்.எஸ். சகித்துக் கொள்வதில்லை. சட்டத்தின் பெயரால் காவல்துறை மிரட்டலாலும் பொய் வழக்குகளாலும் மக்களின் வாயை அடைத்துவிடுவது. இதையும் மீறி துணிந்து பேசுவர்கள் யாராயினும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு தடையாக வருபவர்கள் யாராயினும் அவர்களை ’முடித்துவிட’ ஆர்.எஸ்.எஸ். தயங்குவதில்லை. இந்து காந்தியோ, லிங்காயத் கல்புரிகியோ, கம்யூனிஸ்ட் உமரோ யாராயினும் அவர்களுக்கு பொருட்டல்ல. அவர்களுக்கு மரணத்தைப் பரிசாக தருகின்றனர். காக்கிகளின் வழியாக சட்டமும் காவிகளின் வழியாக சட்ட விரோதமும் கைகோர்த்தப் படி சர்வாதிகார ஆட்சி இந்நாட்டில் எப்படி நடக்கிறது என்பதை விளக்குவதற்கு நேற்று தில்லியில் நடந்த கொலை முயற்சியும் சென்னையில் பதியப்பட்ட வழக்கும் போதுமானதாகும்.
’,‘நாங்கள் பாரதத் தாயின் தவப்புதல்வர்கள்; எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடிய சனநாயக காவலர்கள்’; இந்தியாவை வல்லரசாக்குவோம்’ என்பவர்கள், இந்து மதத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள், புண்ணிய நாட்டின் பெருமையில் மயங்கிக் கிடப்பவர்கள் கெளரிகளை, உமர் காலித்களை கொல்லத் துடிப்பதேன்? எனப் பேசித்தான் ஆக வேண்டியுள்ளது.
தேநீர் அருந்திவிட்டு தன் நண்பர்களுடன் அந்த வளாகத்திற்குள்ளே வந்து கொண்டிருந்த உமர் காலித் ஒருவேளை வெற்றிகரமாக கொல்லப்பட்டிருந்தால் இரண்டு விதமான செய்திகள் உலா வந்திருக்கும். ஒன்று, ஓர் இளம் மாணவ செயற்பாட்டாளர் கொல்லப்பட்டார் என ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகமும் நாடெங்கும் உள்ள சனநாயகப் பற்றாளர்களும் கலங்கி நின்றிருப்பர். மற்றொன்று, ஒரு ’தேச விரோதி’, ’நக்சல்’ நாட்டின் தலைநகரத்தில் நாயைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று சங் பரிவாரங்கள் கொண்டாடியிருக்கும்.
இவர் தேச விரோதியான கதை என்ன? உமர் காலித் ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவர். 2011 இல் நடந்த நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 2013 இல் தூக்கில் போடப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குருவுக்கு 2016 இல் ஜே.என்.யூ வளாகத்தில் நினைவுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் பங்குபெற்ற முன்னணியாளர்களான கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் மீது தேச துரோக வழக்குப் பதியப்படுகிறது. ”இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக முழக்கமிட்டவர்கள்” என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இது நாடெங்கும் விவாதப் பொருளானது. ’தேச விரோதிகள் யார்? தேசப் பற்றாளர்க்ள் யார்?’ என்ற காரசாரமான பட்டிமன்றம் நடந்தது. இவர்களுக்கு சங் பரிவார ஆற்றல்களால் கொலைமிரட்டல் விடப்பட்டது. ஆனால், இவர்கள் பின்வாங்கிவிட வில்லை. பொய்ப் புனைவுகளால் வழிநடத்தப்படும் இந்தியாவின் இன்றைய இருண்ட நாட்களில் உண்மையெனும் அகல் விளக்கோடு இவர்கள் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றனர்.
உமர் காலித் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவர்தான். Resist அமைப்பு ‘துப்பாக்கிகளும் கற்களும்’ என்ற தலைப்பில் காஷ்மீர் போராட்டம் பற்றி நடத்திய கருத்தரங்கில் உரையாற்ற வந்திருந்தார் உமர் காலித். ”இந்தியாவில் நான் எங்கு சென்றாலும் எனக்கு எதிரான முழக்கங்களைக் கேட்க முடியும்; பதாகைகளைக் காண நேரிடுகிறது. ஆனால், விமான நிலையத்தில் இருந்து இந்த அரங்கத்திற்கு வரும்வரை அப்படி எதையும் இங்குநான் எதிர்கொள்ளவில்லை. இது பெரியார் மண்ணல்லவா?” என்று அகம் மகிழ்ந்தார். காஷ்மீரிகளுக்கு இருக்கும் சுயநிர்ணய உரிமைப் பற்றி அழுத்தம் திருத்தமாக உரையாற்றினார்.
கெளரி லங்கேஷ் தன் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல் பற்றி அறிந்திருந்தைப் போல் உமர் காலித்தும் அதை தெரிந்தே வைத்திருந்தார். உண்மையில் தன் உயிரைவிட தன் பிள்ளையாய் நேசித்த கன்னையா குமார், உமர் காலித் பாதுகாப்புக்குத்தான் கெளரி அதிகமாகக் கவலைப்பட்டார். பலரும் வலியுறுத்திய பிறகே தன் வீட்டு வாயிலில் சி.சி.டி.வி கேமரவைப் பொருத்தினார் அவர். அந்த கேமராவில் அவர் இரத்த வெள்ளத்திலே மூழ்கடிப்பட்டது பதிவானது. கெளரி படுகொலை உமர் காலித் தேர்வு செய்த பாதையை மாற்றிவிட வில்லை. உண்மைக்காகவும், நீதிக்காகவுமான அவர் பயணம் தொடந்தது. எனவே, அவர் ஆர்.எஸ்.எஸ். ஸின் தோட்டாக்களை எதிர்ப்பார்த்திருந்தார். நேற்று அது நடந்தேவிட்டது. ஆனால், இன்னும் உமர் காலித் சாகவில்லை.
1948 சனவரி 20 அன்று வெடிகுண்டை வெடிக்கச் செய்து ஆர்.எஸ்.எஸ். காந்தியைக் கொல்ல முயன்றது தோல்வியில் முடிந்த்து. ஆனால், எந்த பின்வாங்கலும் இன்றி அடுத்த பத்தே நாட்களில் சனவரி 30 அன்று காந்தியின் கதையை முடித்தது ஆர்.எஸ்.எஸ். விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா ஆகிய இருவரும் இவ்விரண்டிலும் பங்கேற்றவர்கள். ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் கொலைப்பணியில் இருந்து பின்வாங்குவதில்லை! கெளரி கொல்லப்பட்டு ஓராண்டு முடிய இன்னும் 20 நாட்கள் உள்ளன. கெளரியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் வரை கூட உமர் காலித் உயிருடன் விட்டுவைக்கப்படுவாரோ என்ற பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஏனெனில், ஆர்.எஸ்.எஸ். ஸின் கொலைத் திட்டங்கள் நேரந் தவறாமல் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.
பன்சாரே, தபோல்கர் ஆகியோரது கொலைப் பின்னணியில் இருப்பது சனாதன சன்ஸ்தி என்ற சங் பரிவார் அமைப்பு என்பது புலனாய்வில் தெரியவந்தது. ” இவ்வமைப்பை தடை செய்வது அவ்வளவு எளிதல்ல, மாவட்டத்திற்கொரு பெயரில் பதிவு செய்துள்ளனர்” என்கிறது மராட்டிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு(ATS). சனாதன சன்ஸ்தியைத் தடைசெய்யக் கோரி மத்திய உள்துறைக்கு அனுப்பிய கோப்பு உறங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வமைப்பு உறங்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான்கு நாட்களுக்குமுன் மும்பையில் வைபவ் ரெளத் என்ற இவ்வமைப்பைச் சேர்ந்தவரின் வீட்டில் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை ஆகஸ்ட் 15 சுதந்திர நாளை முன்னிட்டு குண்டு வைப்பதற்காக திட்டமிடப்பட்டது என்று புலனாய்வில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், தலைமை அமைச்சர் மோடி, ‘எதிர்கட்சிகளைக் கூட்டுச் சேரவிடாமல் சிதறடித்து தேர்தலில் மாபெரும் வெற்றிபெறும் பா.ச.க. என்று நம்பிக்கையோடு முழங்குகிறார். நேற்று நாட்டின் தலைநகரத்தின் மையத்தில் சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் மீறி குண்டு சத்தம் கேட்டுள்ளது. எதுவும் எந்நேரமும் நடக்கலாம் என்ற வகையில் பீதியூட்டும் சர்வாதிகார ஆட்சியைக் காவி-கார்ப்பரேட் கூட்டணி நடத்திவருகிறது.
பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் இத்தாலியில் தலையெடுத்தது பாசிசம். முசோலினி பாசிஸ்ட் கட்சியைத் தொடங்கினான். சீருடை அணிந்த அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்வரை கம்பால்தான் தம் எதிரிகளான கம்யூனிஸ்ட்களைத் தாக்கினர். ஆனால், ஆட்சிக்கு வந்தப் பிறகு கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகத் துப்பாக்கியைப் பயன்படுத்தினர். சீருடை அணியும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் இருப்பதும் அவர்களின் துப்பாக்கிக் கலாச்சாரமும் முசோலினியின் நாட்களை நினைவுக் கொண்டு வருகின்றன.
உத்தர பிரதேசத்தின் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், குஜராத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித்தைப் போன்ற ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர்கள் தம் உயிருக்கு விடப்படும் சவாலை ஏற்றப்படி பாசிச கூறுகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்த்து நிற்கின்றனர். ஆனாலும், உமர் காலித்களை தீர்த்துக்கட்டியே ஆக வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். குறிவைப்பதற்கான காரணங்களைக் கண்டாக வேண்டும்.
உமர் காலித் ’பகத்சிங் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தைச்’(BASO) சேர்ந்தவர். சுரண்டல் ஒழிக்கப்பட்ட வேண்டும் என்பதன் இந்தியக் குறியீடான பகத் சிங்கின் மரபையும் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதன் குறியீடான அம்பேத்கரின் மரபையும் ஒருசேர உயர்த்திப் பிடிப்பது காவிக் கும்பலுக்கு கிலியூட்டுகிறது. ”நானும் இந்துதான். நான் ஒரு சிவ பக்தன்.” என்று தாராளவாதிகள் போல் இவர்கள் பம்முவதில்லை. ”பொருள்முதல்வாதிகளாகிய நாங்கள் அஞ்சுவதில்லை” ( We, materials are fearless) என்று மாவோ சொன்னதைப்போல் பகுத்தறிவாளர்களாகவே இவர்கள் வலம்வருவது ஆர்.எஸ்.எஸ்.ஸின் தூக்கம் கெடுக்கிறது. மோடியின் ஆட்சி காவி ஆட்சி என்பதோடு இவர்கள் நிறுத்திக் கொள்வதில்லை. காவி-கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சி என்று துல்லியப்படுத்துகின்றனர். பார்ப்பனிய இந்துத்துவ பாசிஸ்ட்கள் என்று இந்த ஆட்சியை நிர்வாணப்படுத்துவதால் ஆர்.எஸ்.எஸ். பதற்றம் கொள்கிறது. ” மாநில உரிமைகள் – தேச ஒற்றுமை ” என்று இவர்கள் முனைமழுங்கிய அம்பெய்வதில்லை. ”இந்தியா தேசமல்ல ஓர் ஒன்றியம், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு” என்று கூர்தீட்டிய ஈட்டியாய் பாய்வதால் ஆர்.எஸ்.எஸ். அலறுகிறது. மத்தியப் புலனாய்வு துறையைக் கொண்டு கையாள்வதற்கேற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் இவர்கள் மேல் இல்லை. வேறு வழியின்றி ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கியைத் தெரிவு செய்கிறது.
நேற்றைக்கு உமர் காலித் அரசமைப்பு மன்றத்தில் ’வெறுப்புக்கெதிராக ஒன்றுபட்டோர்’ என்ற பதாகையின் கீழ் ’அச்சத்தில் இருந்து விடுதலையாவதை’ நோக்கி என்ற தலைப்பில் நடக்கவிருந்த கருத்தரங்கில் பேசுவதற்காக அங்கே போயிருந்தார். வழக்கறிஞர்கள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் தவிர வேறு யாரெல்லாம் அங்கு வந்திருந்தனர்? என்பதைப் பார்த்தாலே ஆர்.எஸ்.எஸ். ஸின் கொலைப் பட்டியலில் உமர் காலித் இருப்பதில் வியப்பேதும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.
ஐதராபாத் பல்கலைக் கழகத்தில் நிலவும் சாதியடிப்படையிலான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடியவர்; 2016 சனவரி 17 அன்று இதை அம்பலப்படுத்திய வண்ணம் தன் உயிரை மாய்த்துக் கொண்டு நட்சத்திரங்களில் சங்கமித்துப் போன ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமூலா அங்கு உரையாற்ற இருந்தார்.
2016 அக்டோபர் 15 இலிருந்து காணாமலடிக்கப்பட்ட ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நஜீப் அகமதுவின் தாய் பாத்திமா நஜீம் அங்கு பேச இருந்தார்.
2017 செப்டம்பரில் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சில்ண்டர் இல்லாத நிலையில் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக முயன்றதைத் தவிர வேறெந்த குற்றமும் செய்யாதவர்; அதனாலேயே முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் நிர்வாகப் பிரச்சனைகளுக்கானப் பலிகடாவாக்கப்பட்டு எட்டு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டவர்; சிறையில் இருந்து பிணையில் வந்த பிறகு அச்சம் தவிர்த்து யோகி ஆதித்திய நாத் அரசுக்கு எதிராகப் பேசியதால் இவரது குடும்பத்தின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டது. தன்னுடைய அண்ணனுடன் இருக்கும் போது அடையாளம் தெரியாத இருவர் இவரது அண்ணனைத் துப்பாக்கியால் சுட்டனர். இத்தனை இன்னல்களுக்கும் ஆளானவர் மருத்துவர் கஃபீல் கான். அவரும் அச்சத்தில் இருந்து விடுதலை ஆவதை நோக்கிப் பேச வந்திருந்தார்.
ஈகைப் பெருநாளுக்காகப் பொருட்களை வாங்கிக் கொண்டு தன் சொந்த ஊரான அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்திற்கு தன் இரண்டு சகோதர்களுடன் ரயிலில் போய்க் கொண்டிருந்த 17 வயது இளைஞன் ஜூனைத் மாட்டிறைச்சி வைத்திருந்தான் என்ற ஐயத்தின் பெயரால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் ஊரே கூடிநின்று வேடிக்கைப் பார்க்க, காவி குண்டர்களால் 2017 ஜூன் 23 அன்று அடித்தே கொல்லப்பட்டார். அவரது தாய் பாத்திமா அங்கு வந்திருந்தார்.
2018 ஜூன் 18 அன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹப்பூர் மாவட்டத்தில் பசுப் பாதுகாப்புக் குண்டர்கள் குவாசிம்மையும் சமயதினையும் தாக்கினர். குவாசிம் கொல்லப்பட்டார். சமயதின் சாகவில்லை. அந்த சமயதின் அச்சத்தில் இருந்து விடுதலையாவதை நோக்கிய கூட்டத்தில் பேச வந்திருந்தார்.
2017 ஜூன் 29 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் அசாரிபாக் மாவட்டத்தைச் சேர்த்த முகமது அலிமுதீன் பசு பாதுகாப்புக் குண்டர்களால் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற பெயரில் கிரிடி மாவட்டத்தில் அடித்தே கொல்லப்பட்டார். அவரது மனைவி மரியம் அக்கூட்டத்தில் பேச வந்திருந்தார்.
இந்தப் பட்டியலில் இவர்தான் மிகவும் தனித்துவமானவர் – யஷ்பால் சக்சேனா. இவரது மகன் அன்கிட் சக்சேனா ஓர் இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்தக் காரணத்தால் அப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் இவர் கண்முன்னே கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். பஜ்ரங் தளம் இதைப் பயன்படுத்தி இந்து-முஸ்லிம் கலவரத்தைத் தூண்ட விரும்பியது. ஆனால், தனக்கு இஸ்லாமிய சமூகம் மீது எவ்வித வெறுப்பும் இல்லை என்றார் யஷ்பால் சக்சேனா. அவர் வெறுப்புக்கு எதிராக ஒன்றுபட்டோரின் மேடையில் பேச வந்திருந்தார்.
ரோஹித் வெமுலா மறையவில்லை. அவர் அவரது தாய் ராதிகா வெமுலாவின் உருவில் அடக்குமுறையாளர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார். நஜீம் காணாமலடிப்பட்டாலும் அவர் தாயின் வடிவில் வருகிறான். அடக்குமுறையால் உறவை இழந்த அன்னையர்களும் தந்தையர்களும் சகோதரர்களும் நண்பர்களும் மனைவியரும் அஞ்சி ஓடிவிடுவதில்லை. அவர்கள் நீதியின் பதாகையை ஏந்தியப்படி வருகின்றனர். ஆதிக்கத்திற்கு எதிராக அவர்கள் ஒன்றுபட்டு வருகின்றனர். ஒடுக்கப்பட்டிருப்போரின் ஒற்றுமைதான் ஒடுக்குமுறையாளர்களை நடுநடுங்கச் செய்கிறது.
உமர் காலித், கெளரி லங்கேஷ் போன்றோர் தலித்துகள், பழங்குடிகள், மதச் சிறுபான்மையினர், சனநாயகப் பற்றாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினர், தேசிய இனங்கள் ஆகிய ஒடுக்கப்பட்டோரின் ஒற்றுமை குறித்துக் கொண்டிருக்கும் கண்ணோட்டம்தான் காவி-கார்ப்பரேட் கூட்டணியை நடுங்கச் செய்கிறது.
இந்த தத்துவார்த்த போரில் ஆர்.எஸ்.எஸ். வெறுப்பை கக்கியபடி அச்சத்தை மறைத்துக் கொண்டு துப்பாக்கியை ஏந்தி திரிகிறது. எப்படியும் வெற்றிக் கொண்டுவிடலாம் என்று அது நம்புகிறது. இன்னொருபுறம் வெறுப்புக்கு எதிராக ஒன்றுபட்டோராக அச்சத்தில் இருந்து விடுதலை அடைவதை நோக்கி உமர் காலித்தும் ஜிக்னேஷும் சந்திரசேகர் ஆசாத்தும் ராதிகா வெமுலாவும் பாத்திமா நஜீமும் இணைந்து நிற்கின்றனர். யஷ்பால் சக்சேனாவிடம் தோற்றுப் போனதைப்போல் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் இக்கோடிக்கணக்கான மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும்வரை இந்தப் போர் தொடரும்.
- செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம், tsk.irtt@gmail.com
சிறப்பான கட்டுரை. இந்திய இரண்டாம் விடுதலைப் போரின் போராளிகள் ஒன்றாக கூடுவதை கலவரமாக்கவே ஆர் எஸ் எஸ் திட்டம்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல உமர் காலிதையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்து வந்தனர் இரண்டு திட்டங்களும் நிறைவேற்ற முடியவில்லை. எனவே அவர்கள் இன்னும் தீவிரமாக முயற்சி செய்யலாம். டெல்லி காவல்துறை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கீழ் வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ராஜ் நாத் சிங் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.