திலீபன் சிலையகற்றம் – அநுர மீதான மயக்கத்தை மாற்றட்டும்!

05 Oct 2026

செந்தில் சிறப்பு பேட்டி

தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு ஈழத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் செம்மொழி மனித பொதுக்குழுக்கி முதலில் நீதி கேட்கட்டும் என்று தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அறிவார்ந்த கருத்தியல் தளத்தில் தீவிரமாக பணியாற்றி வருபவரும், தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான செந்தில் உரிமை மின்னிததழுக்கு மின்னஞ்சல் ஊடாக வழங்கிய சிறப்புச் செவ்வியில் தெரிவித்துள்ளார் அவரது பதில்களை உலகத் தமிழர்களுக்கு முழுமையாகத் தருகின்றோம்.

  1. கடந்த செப்டம்பர் 27 அன்று நல்லூரில் வைக்கப்பட்டிருந்த திலீபனது வெண்கலச் சிலை உணர்த்துவது என்ன?

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 63 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதை முன்னிட்டு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் சிறிலங்கா தொடர்பில் வெளியிட்டுள்ள எழுத்துவடிவ அறிக்கையில், சிறிலங்காவில் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் நினைவுகூரப்படும் நிகழ்வுகள் கடும் கண்காணிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒருபக்கம் நினைவேந்தல் நிகழ்வுக்கான வெளி அதிகமாகியுள்ளது என்ற தோற்றத்தை பன்னாட்டு அரங்கில் ஏற்படுத்தியுள்ள அநுர அரசு இன்னொருபுறம் சிலை அகற்றுவதையும் செய்து கொண்டிருக்கிறது.
முன்பு சந்திரிகா காலத்திலும் பின்பு இராசபக்சே காலத்திலும் அகற்றப்பட்ட திலீபனது நினைவுச் சின்னம் இப்போது அநுர காலத்திலும் அகற்றப்படுவது சிறிலங்கா ஆட்சியாளர்களின் இனவாத தொடர்ச்சியைக் காட்டிநிற்கின்றது.
12 நாள் பட்டினிக் கிடந்து உயிர் நீத்த திலீபனது ஈகம் செய்த சாதனை என்ன? இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறது என்று ஈழத் தமிழர்கள் அக்காலகட்டத்தில் நம்பிக் கொண்டிருந்தனர். இந்திய அரசு மீது ஈழத் தமிழர்கள் கொண்டிருந்த மயக்கத்தை கலைத்து ஈழத் தமிழர்களைப் போராடச் செய்வதற்கு திலீபனது உயிர்க் கொடை வழிவகுத்தது.
”உங்கள் தலைவர்களுக்கு நாங்கள் சிலை வைப்போம், நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்க மாட்டோம்” என்றெல்லாம் சொல்லி தமிழர்களிடம் குறிப்பாக வடக்கு வாழ் தமிழர்களிடம் வாக்குகளைப் பெற்று நான்கு இடங்களை வென்றுள்ளார் அநுர.
ஜேவிபி மீது தமிழர்களில் ஒரு பகுதியினர் கொண்டிருக்கும் மயக்கதை இந்த திலீபன் சிலை அகற்ற நிகழ்வு கலைத்துப் போடட்டும்.

  1. ஈஸ்டர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் 15 பேருக்கு சுமார் 200 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியாக அமையுமா?

ஈஸ்டர் குண்டு வெடிப்பு ஒரு சிலரது மனப்பிறழ்வோ தனித்த பயங்கரவாத நிகழ்வோ அன்று. சிறிலங்கா அரசியல் வரலாற்று தொடர்ச்சியில் ஏரணம் குன்றாமல் நடந்தேறிய குருதி தோய்ந்த படுகொலை அரசியலின் பகுதியாகும்.
ஈஸ்டர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் இசுலாமிய கடும்போக்காளர்கள். கொல்லப்பட்டவர்கள் சிங்களக் கத்தோலிக்கர்கள். ஆனால், அந்த சிங்களவர்கள் மிக அண்மைக் காலம் வரை தமிழ் மொழிப் பேசிக் கொண்டிருந்தவர்கள், தமிழினப் பின்புலம் கொண்டவர்கள்.
முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்குப் பின்பு சிங்கள பெளத்த பேரினாதவாதத்தால் பலிபீடத்தில் ஏற்றப்பட்டவர்கள் இசுலாமியர்கள் ஆவர். அதுவரை காலமும் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதே பேரினவாதத்தின் முதற்பெரும் குறியாக இருந்தது. அதற்குப் பின்னர், இசுலாமியர்களை அடக்கி வைக்க நினைத்தது பேரினவாதம்.
2009 இல் இருந்து 2019 வரையான பத்தாண்டு காலத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக இனவாதப் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. 2050 வாக்கில் இசுலாமியர்கள் சிறிலங்காவில் பெரும்பான்மை ஆகிவிடுவர்” என்று பேராசிரியர் படாளி சம்பிக ரனவக தன்னுடைய நூல் ஒன்றில் எழுதினார். அதை முழுவீச்சில் பரப்பியது பெளத்த மகாசங்கம். இசுலாமியர் வெறுப்புப் பரப்புரைக்கு சிங்கள ஊடகங்கள் துணை போயின. இராசபக்சேக்கள் இசுலாமியர்களை முடக்குவதில் முழு முனைப்புக் காட்டினர். இசுலாமியர்களின் பெரும் ஆதரவுடன்தான் இராசபக்சே ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு இரணில் – சிறிசேனா குழுவினர் 2015 இல் ஆட்சிக்கு வந்தனர்.
இத்தகைய அரசியல் பின்புலத்தில்தான், ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்தது. அப்படி நடக்கப் போகிறதென்று இந்திய அரசு எச்சரித்தது. அது சிறிலங்கா அரசின் புலனாய்வு பிரிவின் திட்டமிடலோடு இராணுவ, காவல் துறை உயர் அதிகாரிகளின் வலைப்பின்னலோடு நடத்தப்பட்ட தாக்குதல் என்பதற்கு சான்றுகள் பல வெளிவந்துள்ளன. புலனாய்வுத் துறை தலைவர் சுரேஷ் சாலே இன்னும் விசாரணையில்தான் இருக்கிறார். இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் கோத்தபய இராசபக்சே இருந்தார். இதன் மூலமாகவே அவர் அதிபர் பதவிக்கு வந்தார்.
அரசியல் வகையில் இத்தாக்குதல் இசுலாமியர்களை ஒடுக்கி நசுக்குவதற்கு வழிவகுத்தது.
ஈஸ்டர் குண்டு வெடிப்பும் இனப் பரிமாணத்திற்கு வெளியே நடந்த ஒன்றல்ல, அதற்கான பொறுப்புக்கூறலும் இனச் சிக்கலின் பகுதியாக பாவித்து உறுதிசெய்யப்பட வேண்டும்.
24 பேர் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் 15 பேருக்கு 200 ஆண்டு சிறைத் தண்டனை என்பதே இதில் தொடர்புடைய உள்நாட்டு, வெளிநாட்டு ஆற்றல்கள் நீதியின் முன்பு கொண்டுவரப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. இதுவொரு கண் துடைப்பு தீர்ப்புதான். இப்படி தண்டனைப் பெற்றவர்களும்கூட சில ஆண்டுகளில் மன்னிக்கப்பட்டு வெளியே வந்துவிடுவார்கள்.
முழுமையான உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் தமிழ், சிங்கள, இசுலாமியரையும் வெளிநாட்டவர் இருவரையும் உள்ளடக்கிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
இருநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் நீதி பரிபாலனம் நடைபெற்றது போன்ற தோற்றம் காட்டும் சிங்கள ஆட்சியாளர்கள், 477 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட செம்மணிப் புதைக்குழி விவகாரத்தில் சும்மா இருப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. உலகிற்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

  1. தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு ஈழத் தமிழர்கள் பொருட்டு செய்ய வேண்டியதென்ன?

பன்னாட்டுப் புலனாய்வு, பொதுவாக்கெடுப்பு ஆகியவற்றை ஒரு வாய்ப்பாடு போல் சில கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் எழுதி வைத்துள்ளன.

தவெக போல் வெகுசனவாத கட்சியும் இவற்றை அவ்வப்போது உள் அரங்குகளிலும் தமது ஏடுகளிலும் மாநாடுகளிலும் அழுத்தம் அதிகமானால் சட்டப்பேரவை தீர்மானங்களிலும் சொல்லிச் செல்வார்கள். ஆனால், அதனால் பலனுண்டு என்றாலும் அது அடுத்தக்கட்டத்திற்குப் போவதற்கு உதவப் போவதில்லை.
சானல் 4 காணொளிகள் வெளியாகிய காலப்பகுதியில் திமுக – காங்கிரசு எதிர்ப்பு அரசியலின் பகுதியாக ஜெயலலிதா தலைமையிலானஅதிமுக, இனவழிப்பு என்றும் பன்னாட்டுப் புலனாய்வு என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது.

அனைத்து கட்சிகளை அத்தீர்மானத்தை ஆதரித்தன. ஆனால், இன்று எந்தவொரு கட்சியும் தமிழின அழிப்பு என்பதைக்கூட அழுத்தம் திருத்தமாகச் சொல்வதில்லை. எனவே, தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு முள்ளிவாய்க்கால் இனவழிப்பு என்பதை மீள் நினைவுப்படுத்தும் வகையில் ஒரு தீர்மானத்தை மீண்டும் சட்டப்பேரவையில் இயற்ற வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழக அரசு சார்பாக கடைபிடிக்க வைப்பது மிக முக்கியமான கோரிக்கையாகும். அதன் மூலம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மக்கள்மயமாக்கிவிட முடியும். அதற்கு இப்போதிருந்தே திட்டமிட்டு லாபி செய்ய வேண்டும்.
இப்போது நடைபெற்றுவரும் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மட்டுமின்றி தமிழ்நாட்டுக் கட்சிகள் குரலெழுப்ப வேண்டும். எனவே, ஈழத் தமிழ்ப் பிரதிநிதிகள் கூட்டாட்சி, பொதுவாக்கெடுப்பு போன்ற அரசியல் தீர்வை வலியுறுத்தி, அவ்வப்போது வந்து தமக்குள் போட்டிப்போட்டு கொண்டு கோரிக்கை மனுக்களைக் கொடுப்பதைவிடவும் உடனடி கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க வைப்பதுதான் முக்கியம். எடுத்துக்காட்டாக, செம்மணி புதைக்குழி தொடர்பிலும், காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்திற்கு ஆதரவாகவும் தையிட்டியில் பெளத்த ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் திலீபன் நினைவுச்சிலை அகற்றத்தைக் கண்டித்தும் குரல் கொடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்கால் பல்கலைக்கழகத்தில் பெரும்விலை கொடுத்து பாடம் கற்றுள்ள ஈழத் தமிழர்களுக்கு தெரியாதது என்று எதுவும் இருக்க முடியாது. அவர்களுக்கு நாயையும் தெரியும், நரியையும் தெரியும், பசுவையும் தெரியும், புலியையும் தெரியும். தவெக உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கட்சிகளை துல்லியமாக எடைபோட தெரிந்திருக்கும்.
எனவே இதுவொரு கடினமான காலம் தான். இதில் ஈட்டக் கூடியதென்ன என்று திட்டமிட்டு அதற்காகப் பாடுபட வேண்டியது ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் புலத்திலும் உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்களின் கடமையே ஆகும்.

  1. தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஏதிலிகளுக்கு குடியுரிமை எப்போது?

ஈழ ஏதிலிகளுக்கு குடியுரிமை ஒருபுறம் இருக்கட்டும். அது இந்திய அரசின் கைகளில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஏதிலிகளுக்கான உரிமை இல்லை என்பது தான் மிகப்பெரிய அவமானம்.
முதலில் ஈழத் தமிழர்கள் ஏதிலிகளாக அறிந்தேற்கப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாடு கருணை காட்ட வேண்டிய அவசியமில்லை. அந்த நாடகங்களை இனியும் நடத்திக் கொண்டிருக்காமல் கனடாவிலும் இங்கிலாந்திலும் பிரான்சிலும் இருக்கும் அரசுகள் ஏதிலிகளுக்கு உறுதிப்படுத்தும் பன்னாட்டு உரிமைகளை மதித்து தமிழ்நாடு அரசு நடந்தால் போதும்.
அதற்கு பொருள் என்ன? நீங்கள் வீடு கட்டிக் கொடுப்பதைவிடவும் முக்கியமானது சிறப்பு முகாமை கலைப்பதாகும்.
க்யூ பிராஞ்ச பிடியில் இருந்தும் தமிழ்நாட்டு அரசு அதிகாரிகளின் கெடுபிடியில் இருந்தும் ஈழ ஏதிலிகளை விடுவிக்கும் துணிவு கொண்ட ஒரு கட்சி தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. ஈழ ஏதிலிகள் குற்றவாளி அல்ல, கண்ணியமாக நடத்தப்படுவதற்கான உரிமை படைத்தவர்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

நன்றி – உரிமை மின்னிதழ்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW