மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்த வலியுறுத்தி ஜூன் 2 இல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு!

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மாவோ சிந்தனை) அறிக்கை
மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்த வலியுறுத்தியும் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி விசாரணை வேண்டியும் சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்-எல்) விடுதலை இணைந்து முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மாவோ சிந்தனை) ஆதரவு தெரிவிக்கிறது.
நடவடிக்கை காகர் என்ற பெயரில் பழங்குடிகளுக்கு எதிரான ஒரு போரை மோடி அரசு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் இடது சனநாயக ஆற்றல்கள் இணைந்து முன்னெடுக்கும் இவ்வார்ப்பாட்டம் முக்கியத்துவம் உடையதும் வரவேற்கத்தக்கதும் மென்மேலும் வளர்த்தெடுக்க வேண்டியதும் ஆகும்.
இப்போதைய உடனடி தேவை என்பது ஒன்றிய அரசுக்கும் போராடும் பழங்குடிகளுக்கும் இடையிலான மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருவதே ஆகும். மாவோயிஸ்டுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்திருக்கும்போது அதை பொருட்படுத்தாமல் முழுநீள அழித்தொழிப்புக்கு மோடி அரசு முயன்று வருகிறது. இம்மோதல் தொடருமானால், அது ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களும் மாவோயிஸ்டுகளும் கொல்லப்படுவதில் போய் முடிந்துவிடும். எனவே, மோதல் தவிர்ப்புக்கும் அமைதி சூழலுக்குமான முயற்சிகளை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும்.
மேற்படி நான்கு அமைப்புகளைக் கடந்து மோடி அரசின் இந்நடவடிக்கையைக் கண்டித்து பேச்சுவார்த்தையை வலியுறுத்தும் வேறு பல இடதுசாரி மற்றும் சனநாயக ஆற்றல்கள் நாடாளுமன்றத்தில் உள்ளன. அவர்களையும் இம்முயற்சியில் இணைத்துக் கொண்டு மாவோயிஸ்டுகளோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதை வலியுறுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்றை அமைத்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மாவோயிஸ்ட்டுகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தைக் குழுவாக இது செயல்பட முன்வர வேண்டும்.
பழங்குடிகள் மீது மோடி அரசு நடத்திவரும் இந்த போர் என்பது மத்திய பிரதேசம், மராட்டியம், தெலங்கானா, ஓடிசா ஆகிய மாநிலங்களின் எல்லையோர பகுதிகளையும் சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களையும் உள்ளடக்கிய கனிம வளம் நிறைந்த காடு, மலைகள் கார்ப்பரேட்களின் வேட்டை காடாக மாற்றப்படும் சூழலைத்தான் உருவாக்கும். பழங்குடிகள் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள போராடத் தொடங்கி கனிம வளங்களையும் இயற்கையையும் கார்ப்பரேட்களிடமிருந்து காப்பதற்கான போராக அது வளர்ந்துள்ளது. அவ்வகையில் அவர்கள் ஓர் இயற்கை அரணாக அங்கே இருந்து வருகிறார்கள்.
ஆயுத போராட்டத்தின் மீது மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பது ஓர் அரசியல் நிலைப்பாடு. நாமும் அந்த அரசியல் வழி திறனாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம். ஆனால், பழங்குடிகள் வேறு மாவோயிஸ்டுகள் வேறு என்று பேசுவது ஹமாஸ் வேறு பாலஸ்தீனர்கள் வேறு என்று சொல்வது போன்றதாகும். இது ஏற்புடையதல்ல.
மேலும், பழங்குடிகள் மீதான இந்த போரை நிறுத்தக் கோருவது என்பது பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். கார்ப்பரேட் ஏகபோக ஆற்றல்கள் இந்த நாட்டின் கனிம வளங்களைக் கொள்ளையிடுவதற்கு தடையாக பழங்குடிகள் போராடி வருகின்றனர். பாசிச பாசக அரசு பழங்குடிகளின் இந்த போராட்டத்தை இரத்த சகதியில் மூழ்கடிப்பதன் மூலம் கார்ப்பரேட்களுக்கு எதிரான தடைகளை அப்புறப்படுத்த முயல்கிறது. பாசிச எதிர்ப்பு என்பது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை எதிர்ப்பது மட்டுமல்ல, கார்ப்பரேட் சிறுகும்பலின் ஏகபோக நலன்களை எதிர்ப்பதும்தான்.
உண்மையில், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பச்சை வேட்டை நடவடிக்கை என்பது காங்கிரசு ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதே ஆகும். ஆனால், காங்கிரசு கட்சிக்குள் மாவோயிஸ்டுகளை நசுக்க வேண்டும் என்ற போக்கு இருந்தது போல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற போக்கும் இருந்தது. பழங்குடிகள் மீது வான் வழித் தாக்குதல் நடத்த வேண்டும் என்று மன்மோகன் சிங் அரசின் உள்துறை அமைச்சகம் சொன்ன போது, அப்போதைய படை தளபதி வீ.கே. சிங் அதை ஏற்க மறுத்துவிட்டார். இன்றிருப்பது போல் படைத் துறை, நீதித் துறை, ஊடகம் என யாவும் ஆட்சியாளர்களின் முழுக் கட்டுப்பாட்டில் போய்விட வில்லை.
பாசிச பாசகவின் இந்த காகர் நடவடிக்கையை மேற்சொன்ன வேறுபாட்டோடு பொருத்திப் பார்த்து மதிப்பீடு செய்ய வேண்டும். 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளுக்குள் மாவோயிஸ்டுகளை முடித்துக்கட்டுவோம் என்று அமித் ஷா கொக்கரிக்கிறார். ஆனால், இந்த கொக்கரிப்பும் திட்டமிடலும் இப்போது தொடங்கவில்லை.
இந்த நடவடிக்கைக்கான தொடக்கமாகத்தான் பீமா கோரேகான் சதி வழக்குப் புனையப்பட்டு வரவர ராவ், ஸ்டேன் சுவாமி, சுதா பரத்வாஜ் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர்; சிலர் மூச்சடைக்கப்பட்டனர்; பலரும் வாயடைக்கப்பட்டனர். இந்த முன் தயாரிப்புகளுடன்தான் பழங்குடிகள் மீதான இந்த இரத்த வெறியாட்டம் நடைபெற்று வருகிறது.
’அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்’ என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ள போதும் அதற்கு செவிக்கொடுக்க மறுக்கிறது மோடி அரசு. அப்படி எதுவும் நடந்துவிடுவதற்கு முன்பு முழுமையான துடைத்தழிப்பை நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில்தான் இந்த படுகொலைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, பாசிச மோடி அரசு பழங்குடிகளுக்கு எதிராக தொடுத்திருக்கும் இந்த போரை நிறுத்தப் போராடுவது என்பது பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி என்ற புரிதலோடு “போரை நிறுத்து” என்று முழங்குவோம்.
ஜூன் 2 அன்று சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, சிபிஐ(எம்-எல்) விடுதலை ஆகியோர் ஒருங்கிணைக்கும் ஆர்ப்பாட்டத்தில் பாசிச எதிர்ப்பில் அக்கறையுள்ள சனநாயக ஆற்றல்கள் அனைவரும் ஊக்கமுடன் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மாவோ சிந்தனை ) சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்
பாலன்
பொதுச்செயலாளர்
த.க.க (மா-லெ-மாவோ சிந்தனை)