மதுரை மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி கிராமங்களில் வேதாந்தா நிறுவனத்தின் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி, அ.வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, நடுவளவு, சண்முகநாதபுரம், எட்டிமங்கலம், தெற்குளவு நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் 5000 ஏக்கரில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்திய ஒன்றிய அரசு ஏலம் விட்டுள்ளது.
18-11-2024 அன்று மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மக்கள் சார்பில் தமிழ்நாடு அரசு தலையிட பல்வேறு இயக்கங்கள் மனு அளித்துள்ளனர்.
தங்களுக்கு இதுவரை தெரியாது என மாவட்ட ஆட்சியர் பதிலளித்துள்ளார்.
20-11-2024 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் வந்த விளக்கத்தில் வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என பதிலளித்துள்ளனர்.
21-11-2024 அன்று தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி திமுக ஆட்சியில்தான் அரிட்டாபட்டி பல்லுயிர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்க அனுமதி வந்தால் தமிழ்நாடு அரசு நிராகரிக்கும் என அறிவித்துள்ளார்..
2018இல் அரிட்டாபட்டிபகுதிகளில் ஆய்வு நடத்திய போது சில மாதங்களுக்கு முன் மறைந்த சூழலியல் போராளி அரிட்டாபட்டி இரவிச்சந்திரன் ஒருங்கிணைப்பில் மக்கள் விரட்டியடித்த செய்தியும் ஒளிப்பதிவாக உள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரியாமல் ஏலம் விடுவதற்கு தமிழ்நாடு – மதுரை ஒன்றிய அரசின் சொத்தா? மேலூர் வட்டார உழவர் பெருங்குடி மக்கள், மதுரை மாவட்ட போராடும் மக்கள் இயக்கங்கள் ஒன்றிணைந்து நிற்போம். அனுமதிக்க மாட்டோம்.
21-11-2024 அன்று அரிட்டாபட்டியில் கூடி 11 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
23-11-2024 அன்று கூடும் கிராமசபைக் கூட்டங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்கள்.
கிராமங்களின் முக்கிய எதிர்ப்பாளர்கள், பல்வேறு இயக்கங்கள் இணைந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேச மக்கள் முன்னணியும் கூட்டமைப்பில் பங்கேற்கிறது.
மீத்தேன் – ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்ட வெற்றி காவிரிப்படுகையை விவசாயப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வைத்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டம் 17 உயிர்ப்பலி துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் இன்று வரை வேதாந்தாவின் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
பி.ஆர்.பியின் மேலூர் வட்டார கிரானைட் சுரங்கத்தை மூடவைத்தவர்கள். ஒத்தக்கடை யானை மலையை சுரண்டிக் கொழுக்க நினைத்தவர்களை விரட்டியடித்த வீரவரலாறு படைத்தவர்கள் நாங்கள்.
வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்திற்கும், ஒன்றிய மோடி அரசுக்கும் எச்சரிக்கிறோம்..மதுரை – மேலூர் வட்டார அரிட்டாபட்டியில் கால் வைக்காதே!
பல்லுயிர் மண்டலமாக, சமணர் படுகைகள் உள்ளிட்ட வரலாற்று பண்பாட்டுச் சின்னங்கள் நிறைந்ததாக உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஏரிகள், ஏராளமான நீர்ச்சுனைகள், தடுப்பனைகள் நிறைந்த விவசாயப் பகுதி…
வேதாந்தாவின் ஹிந்துஸ்தான் ஸின்க் நிறுவனம் விண்ணப்பம் வந்தால் தமிழ்நாடு அரசு நிராகரிக்கும் எனும் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
சுற்றுச் சூழலைக் காக்க, பல்லுயிர் பாதுகாப்பை காக்க, அழகர் கோவில், தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகை உள்ளிட்ட பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க மேலூர் வட்டார உழவர் பெருங்குடி மக்களுடன் கரம் கோர்ப்போம். டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு, மக்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பில் அனைத்து அமைப்புகளும் பங்கேற்போம். பன்னாட்டு வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை வலுப்படுத்துவோம்..வாரீர்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051