கஷ்மீர்: மீண்டும் வேண்டாம் அரசியல் விளையாட்டுகள்!

19 Nov 2024

பத்தாண்டு கால இடைவெளிக்கு பிறகு ஜம்மு கஷ்மீரின் 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதிகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் பிரவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்கிய ஒன்றிய பாஜக அரசாங்கம் மாநிலத்தை ஜம்மு கஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. (லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது) அதற்கு முன்னரே மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) – பாஜக கூட்டணி இடையே பிளவுகள் ஏற்பட்டதால் ஜூன் 19, 2018 அன்று ஆட்சி கவிழ்ந்து ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஆறு வருடங்கள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஒன்றியத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஆட்சி நடைபெற்று வந்தது.

அக்டோபர் 4 அன்று வெளியான முடிவுகளில் ஜம்மு கஷ்மீர் தேசிய மாநாடு கட்சி (என்.சி.) – காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி ஆறு தொகுதிகளையும் கைப்பற்றின. ஜம்மு பிரதேசத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி மொத்தம் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த முறை பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைத்த மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி வெறும் மூன்று இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. ஜம்மு கஷ்மீர் பீப்பிள்ஸ் கான்பரன்ஸ், ஆம் ஆத்மி, சிபிஐ (எம்) ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. ஏழு சுயேட்சைகளும் இத்தேர்தலில் வெற்றி பெற்றனர். தடை செய்யப்பட்ட் ஜம்மு கஷ்மீர் ஜமாத்தே இஸ்லாமி சார்பாக பல தொகுதிகளில் சுயேட்சைகளாக போட்டியிட்ட எவரும் வெற்றி பெறவில்லை.

ஜம்மு கஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் முழுமையான கால அளவு (2009 – 2015) முதல் அமைச்சராக பதவி வகித்த கடைசி நபர் என்று பெயர் பெற்ற உமர் அப்துல்லாஹ் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக அக்டோபர் 16 அன்று பதவியேற்றார். ஜம்மு கஷ்மீருக்கான சிறப்பு தகுதிகளை மீட்டுத் தருவோம், மீண்டும் மாநில அந்நதஸ்தை பெற அழுத்தம் கொடுப்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப ஆளுநர் உரையில் அதனை இடம் பெறச் செய்த அரசாங்கம், அதனை வலியுறுத்தி முதலாவது சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானமும் நிறைவேற்றியது.

நவம்பர் 6, 2024 அன்று துணை முதல் அமைச்சர் சுரேந்திர சௌத்திரியால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானத்தில் ‘ஜம்மு கஷ்மீர் மக்களின் அடையாளம், கலாசாரம், மற்றும் உரிமைகளை பாதுகாக்கும்  சிறப்பு தகுதி மற்றும் அரசியல் சாசன உறுதிமொழிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் இந்த சட்டமன்றம், அவை தன்னிச்சையாக நீக்கப்பட்டது குறித்த தனது கவலையையும் வெளிப்படுத்துகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசாங்கம் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

எதிர்பார்த்தது போல் பாஜக இத்தீர்மானத்தை எதிர்த்த போதும் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய செயல்திட்டத்தில் ஒன்றாகும். ஜம்மு கஷ்மீருக்கான சிறப்பு தகுதிகளை நீக்கிய வெற்றிக் களிப்பில் இருக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக கூட்டணி அதனை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, தீர்மானத்தை ஆதரித்ததற்காக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார் பிரதமர் மோடி. 370வது பிரிவின் நீக்கத்தில் முக்கிய பங்கு வகித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திரா காந்தி திரும்பி வந்தாலும் கூட 370வது பிரிவை பாஜக திரும்பக் கொண்டு வராது’ என்று தனக்கே உரிய பாணியில் கூறினார். 370வது பிரிவை முழுமையாக ஆதரித்த கட்சிகளுடன் ஒன்றியத்திலும் மாநிலத்திலும் கூட்டணி வைத்திருந்ததை வசதியாக மறைத்துவிட்டு தற்போது வார்த்தை அம்புகளை வீசி வருகின்றனர்.

இதனிடையே அரசாங்கம் தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முன்னரே பிடிபி கட்சியின் வஹீத் பாரா, சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே சிறப்பு தகுதி குறித்த தீர்மானத்தை கொண்டு வந்தார். ‘புகைப்படங்களுக்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம்’ என்று முதலமைச்சர் உமர் அப்துல்லாஹ் அதனை கடுமையாக விமர்சித்தார். சட்டமன்ற விதிகளுக்கு முரணாக தான் கொண்டு வந்த தீர்மானம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை வஹீத் நன்றாகவே உணர்ந்திருப்பார். எனினும் மக்கள் மன்றத்தில் சாய்ந்து விட்ட கட்சியின் செல்வாக்கை உயர்த்த இதனை செய்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. வஹீத்தின் செயலை கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி வெகுவாக பாராட்டினார்.

அரசாங்கம் கொண்டு வந்த தீர்மானத்தின் வார்த்தை பிரயோகங்களில் அதிருப்தி கொண்ட பிடிபி, பீப்பிள்ஸ் கான்பரன்ஸ் உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது தீர்மானத்தை கொண்டு வந்தன. ‘பிரிவுகள் 370 மற்றும் 35ஏ நீக்கத்துடன் இந்திய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட ஜம்மு கஷ்மீர் மறுகட்டமைப்பு சட்டம் ஆகிய அரசியல் சாசனத்திற்கு எதிரான தன்னிச்சையான நடவடிக்கைகளை இத்தீர்மானம் வன்மையாக கண்டிக்கிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டமன்றத்திற்குள் ‘370 மற்றும் 35ஏ ஆகியவற்றை மீண்டும் கொண்டு வருவதை நாங்கள் கோருகிறோம். அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க’ என்ற பதாகையை ஏந்தி வந்தார் அவாமி இத்திஹாத் கட்சியின் உறுப்பினர் குர்ஷித் அகமது. இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் கைகலப்பிலும் ஈடுபட்டு பதாகையை கிழித்தெறிந்தனர். மூன்று பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

சிறப்பு தகுதிகளை மீண்டும் பெறுவதற்கான கோரிக்கை, அதனை ஒட்டி நடைபெற்ற சில நாடகங்கள், கைகலப்புகள் என ஜம்மு கஷ்மீர் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது. சிறப்பு தகுதி மற்றும் மாநில அந்தஸ்து ஆகிய மக்களின் கோரிக்கைகளையே மக்கள் பிரதிநதிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நடவடிக்கைகளை ஆரம்பத்தில் ஆதரித்த ஜம்மு மற்றும் லடாக பகுதி மக்களும் இது தங்களின் நிலம், கலாசாரம், வணிகம், வாழ்வாதாரம் என அனைத்தையும் பறிப்பதை உணர்ந்த பின் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

சிறப்பு தகுதிகள் நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று விதிக்கப்பட்ட கெடுவை தொடர்ந்தே ஒன்றிய அரசு அங்கு தேர்தலை நடத்தியது. விரைவாக மாநில அந்தஸ்தை வழங்குவோம் என்று நீதிமன்றத்தில் வாக்குறுதி வழங்கிய ஒன்றிய அரசு அதற்கான காலக்கெடு எதையும் வழங்கவில்லை. நீதிமன்றமும் அதனை கோரவில்லை. எனவே மக்கள் பிரதிநிதிகளே அவர்களின் பிரதான நம்பிக்கையாக உள்ளனர்.

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களையே ஆளுநர்களை கொண்டு நெருக்கடிகள் கொடுக்கும் ஒன்றிய அரசு யூனியன் பிரதேசத்தை என்ன மரியாதையில் நடத்தும் என்பதை அறிந்திருந்தாலும் மக்கள் உரிமைகளுக்காக மக்கள் பிரதிநிதிகள் வலிமையான குரல் எழுப்ப வேண்டும் என்பதே ஜம்மு கஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த காலத்தில் ஒன்றிய அரசாங்கங்களுடன் நெருக்கம் பாராட்டிய மாநில தலைவர்கள் மக்கள் உரிமைகளை இரண்டாவது இடத்திற்கு தள்ளினார்கள் என்பதே கசப்பான உண்மை. இந்தியாவுடன் ஜம்மு கஷ்மீரின் இணைப்பு அம்மக்களின் ஒப்புதலுடனே நடத்த வேண்டும், அதாவது ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார் இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுண்ட்பேட்டன். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

ஜம்மு கஷ்மீரில் இருந்த அரசியல் தலைவர்கள் இந்தியாவுடனான இணைப்பை ஏற்றுக் கொண்டனர். அக்டோபர் 1948இல் தேசிய மாநாடு கட்சி தான் நடத்திய சிறப்பு கூட்டத்தில் இந்தியாவுடனான ஜம்மு கஷ்மீரின் இணைப்பை உறுதிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘கஷ்மீரின் அரசியல், பொருளாதார, சமூக, மற்றும் கலாசார நலன்கள், இந்தியாவுடன், இந்தியாவுடன் மட்டுமே இணைவதை கோருகிறது என்று நான் கருதுகிறேன்’ என்று அக்கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லாஹ் கூறினார்.

‘காந்தி, நேரு என்ற இரு ஒளிரும் நட்சத்திரங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாகவே நாங்கள் இந்தியாவுடன் இணைந்துள்ளோம் என்பதை மீண்டும் மீண்டும் கூறுகிறேன்’ என்று ஜூலை 1951இல் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் ஷேக் அப்துல்லாஹ் குறிப்பிட்டிருந்தார். இருந்த போதும் இருபது வருடங்களுக்கும் அதிகமான சிறைவாசத்தை அவர் அனுபவித்தார். அவர் சிறையில் இருந்த நாட்களில் அவரின் கட்சியினர் பொதுவாக்கெடுப்பை கோரும் இயக்கத்தை நடத்திய போதும் அது நடைபெறவில்லை.  அவர் மகன் ஃபரூக் அப்துல்லாஹ்வை முன்னிலைப்படுத்தினார் இந்திரா காந்தி. ஆனால் எதிர்கட்சி தலைவர்களின் கூட்டத்தை நடத்தியதற்காக கோபம் கொண்ட இந்திரா காந்தி, ஆளுநர் ஜக்மோகனை கொண்டு ஃபரூக் அப்துல்லாஹ்வின் ஆட்சியை கவிழ்த்தார்.

1995இல் கஷ்மீருக்கான தன்னாட்சியை பொறுத்த வரை வானமே எல்லை என்று குறிப்பிட்டார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். மாநில தன்னாட்சியை முக்கிய வாக்குறுதியாக வைத்து தேர்தலை சந்தித்த ஃபரூக் அப்துல்லாஹ், நவம்பர் 29, 1996இல் மாநில தன்னாட்சி குழுவை அமைத்தார். பாதுகாப்பு, வெளிவிவகாரம், மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறைகளை தவிர்த்து ஏனைய துறைகள் மாநில கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும் (1952 டெல்லி உடன்படிக்கையில் இது கூறப்பட்டிருந்தது), அரசியல் சாசனத்தில் தற்காலிக பிரிவாக உள்ள பிரிவு 370யை சிறப்பு பிரிவாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இக்கமிட்டி தனது அறிக்கையை ஏப்ரல் 1999இல் சமர்ப்பித்தது.

ஜூன் 2000இல் இக்கோரிக்கைகளை முன்வைக்கும் தீர்மானம் மாநில சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. 2002 தேர்தலை முன்வைத்தே ஃபரூக் இதனை செய்தாரே தவிர, இதனை வலிமையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கவில்லை.

ஃபரூக் அப்துல்லாஹ்வின் மகன் உமர் அப்துல்லாஹ்வை முன்னிலைப்படுத்தியவர் அடல் பிகாரி வாஜ்பாய். அவரின் அரசாங்கத்தில் இள வயது அமைச்சர் என்ற சிறப்பையும் பெற்றார் உமர். தங்களுக்கு சாதகமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் மாநில அரசுக்கு உமரை கொண்டு சென்ற வாஜ்பாய், தந்தையை டெல்லிக்கு கொண்டு வந்தார். முஃப்தி முகம்மது சயீதுடன் கூட்டணி அமைத்த நரேந்திர மோடி, அவர் மரணத்திற்கு பின் அவரின் மகள் மெஹ்பூபாவுடன் கூட்டணி அரசாங்கத்தை தொடர்ந்தார். டெல்லியுடன் தலைவர்கள் கொண்ட நெருக்கம் இத்தலைவர்களுக்கு சில நன்மைகளை வழங்கினாலும் ஜம்மு கஷ்மீர் மக்களுக்கு பெரிய நலன்கள் எதையும் வழங்கவில்லை.

இனியும் தங்களின் சுய நலன்களுக்காக ஒன்றிய தலைவர்களுடன் கைகோர்த்து மக்களை நடுவீதியில் விட்டுவிடாமல் நியாயமான கோரிக்கைகளுக்கு இத்தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். 1986இல் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஃபரூக் அப்துல்லாஹ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதை ஜனாதிபதி கியானி ஜெய்ல் சிங்யிடம் தெரிவித்த போது, ‘இது ஃபரூக் அப்துல்லாஹ்வின் முடிவின் தொடக்கமாகும்’ என்று அவர் கூறினார். பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் (தேசிய கட்சியுடன்) உறவில் இருப்பது அவர்களின் அரசியல் தற்கொலைக்கு சமம் என்பதே அவரின் கருத்தாகும். தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தவர்கள் தற்போது கூட்டணி வைத்திருப்பவர்கள் இதனை நன்கு உணர்ந்திருப்பார்கள்.

தீர்மானம் நிறைவேற்றியதுடன் தங்களின் காரியம் முடிந்துவிட்டது என்று ஒதுங்கி விடாமல் ஜம்மு கஷ்மீர் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு துணை நிற்பதுடன் அவற்றை முன்னின்றும் நடத்த வேண்டிய கடமை அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. அம்மக்களின் கோஷங்களும் வலிகளும் அவமானப்படுத்தப்படும் சூழலில் அவர்களின் வரலாற்றை அறியும் கடமை நமக்கும் இருக்கிறது.

     – ரியாஸ்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW