தமிழீழ மக்களே! சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர்
திரு பா. அரியநேத்திரனுக்கு வாக்களித்திடுக!

12 Sep 2024

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் செய்தியறிக்கை

இன்று செப்டம்பர் 11  காலை 11:30 மணி அளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் தா.செ.மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் வந்தியதேவன்,  தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் குமரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் சென்னை மாவட்டக் குழு உறுப்பினர் ராஜா, மதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அந்தரி தாஸ்  ஆகியோர் கலந்து கொண்டனர். ஊடகச் சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையைக் கீழே காண்க. 

இலங்கைத் தீவில் வரும் செப்டம்பர் 21ஆம் நாள் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு சார்பாகப் பொது வேட்பாளராக திரு பா.அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறார்.   

முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்து ஆண்டுகள் 15 உருண்டோடி விட்டன. இனவழிப்புக்கு உள்ளான மக்களுக்குக் குற்றவியல் நீதியும் ஈடுசெய் நீதியும் கிட்டிவிடவில்லை.  

தமிழ்நாடு சட்டப் பேரவை, இலங்கை வட மாகாண சபை, கனடாவின் பிரம்டன் நகரசபை, பிரான்சில் நான்கு மாநகர சபைகள், வட அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை நீங்கலாக உலகின் வேறெந்த இறைமையுள்ள அரசுகளும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இனவழிப்பு என்று அறிந்தேற்கவில்லை. 

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பொறுப்புக்கூறலையும் மீளிணக்கத்தையும் வலியுறுத்தித் தீர்மானங்கள் வந்ததன் மூலம் அவை பன்னாட்டு மன்றத்தில் பேசுபொருளாக இருந்தாலும் இந்நாள் வரை ஒரேயொருவர் கூட நீதியின்முன் நிறுத்தப்படவில்லை. 

வடக்கு கிழக்கில் படைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அரசியல் கைதிகள் இன்னும் முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்ட 19,000க்கும் மேற்பட்டோருக்கு  நீதி கிட்டவில்லை.  

தொல்லியல் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் என்ற பெயரில் தமிழர் நிலங்களைப் பறிப்பதும் சிங்கள பெளத்தமயமாக்குவதும் தொடர்ந்து வருகிறது. சிங்களக் குடியேற்றங்களும் குறைந்தபாடில்லை. கொல்லப்பட்டவர்களை நினைவுகூரவும் நெருக்கடி… தமிழர் தாயகத்தைப் பறித்து சிங்களர்களைக் குடியேற்றி, பெளத்த விகாரைகளை எழுப்பித் தமிழர் என்ற தேசிய தகுநிலைக்கான அடிப்படைகளை இல்லாதொழிக்கும் நோக்கில் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பு( Structural Genocide) நடந்து வருகிறது. 

இந்த 15 ஆண்டுகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கேட்கும் போராட்டம், கேப்பாப்புலவு போராட்டம், தையிட்டியில் பெளத்த விகாரை நிறுவதற்கு எதிரான போராட்டம் என முத்தாய்ப்பான போராட்டங்களை தமிழ் மக்கள் நடத்திக் காட்டியுள்ளனர். எழுக தமிழ் இயக்கம், பொட்டுவில் முதல் பொலிகண்டி வரையான நடைப்பயண இயக்கம் என தமது அரசியல் வேணவாக்களை வெளிப்படுத்தும் எழுச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர். 

”சிங்கள பெளத்தப் பேரினவாதமும் இலங்கைத் தீவில் மேலாதிக்கம் செய்ய நினைக்கும் வெளிநாட்டு அரசுகளும் ஈழத் தமிழர்கள்  விடுதலை கேட்கவில்லை, நீதி கேட்கவில்லை, அது பழைய கதை, வளர்ச்சி, வேலைவாய்ப்பையே வேண்டி நிற்கின்றனர்”  என்று பேசி வருகின்றனர்.  

இல்லை!  

தமிழ் மக்க்ள் தாம் ஒரு தனித்த தேசிய இனம், வடக்கு கிழக்கு தமது தாயகம், தமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதில் இருந்து விலகிப் போகவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கான வழிமுறையாகவே அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார். தமிழ் மக்களின் இருப்பையும் விருப்பையும் காட்டி நிற்கும் குறியீடாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திரு அரியநேத்திரன் களம் கண்டுள்ளார். 

தமிழ் மக்கள் பொதுசபை என்ற குடிமைச் சமூக அமைப்பும் தமிழீழத்தைச் சேர்ந்த 7 கட்சிகளும் இணைந்து தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளருக்கானத் தேர்தல் அறிக்கையில் இவ்வமைப்பு தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. 

இரணில் விக்ரசிங்கே, சஜித் பிரேமதாசா, அனுரகுமார திசநாயக்கா, நமல் இராசபக்சே, சரத் பொன்சேகா போன்ற  சிங்கள வேட்பாளர்கள் இலங்கைத் தீவு

எதிர்கொண்டிருக்கும் பொருளியல் நெருக்கடியை முதன்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பேரினவாதம்தான் 25,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள போர்ச் செலவுக்கு இட்டுச் சென்று பொருளியல் நெருக்கடிக்கு வழிகோலியது. தமது மொத்தச் செலவினங்களில் 40% படைக்கு செலவிடுகிறது சிறிலங்கா அரசு. எந்தவொரு சிங்கள வேட்பாளரும் தமிழின அழிப்பு என்ற உண்மையை அறிந்தேற்கவில்லை,  நீதிக்கு உறுதி கொடுக்கவில்லை, கூட்டாட்சிப் பற்றியும் வாக்குறுதி தரவில்லை. 

இந்நிலையில்,இனச்சிக்கலை சனநாயக வழியில் தீர்க்காமல் இலங்கைத் தீவுக்கு மீட்சியில்லை என்பதை இடித்துரைக்கவே இப்பொதுவேட்பாளர். 

தமிழர்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட தேசிய இனமாக ஏற்க வேண்டும், இலங்கைத் தீவு பன்மைத் தேசிய அரசாக கட்டமைக்கப் பட வேண்டும், ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் ஏற்க முடியாது, தமிழ் மக்கள் தமது தெரிவை வெளிப்படுத்த பன்னாட்டு ஏற்பாடு வேண்டும், சிறிலங்கா அரசு நடத்திய இனவழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டுப்  புலனாய்வு நடத்தப்பட வேண்டும், தமிழ்க் கடலில் தமிழ் மீனவர்களுக்குக் கடல் இறைமை, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த இப்போதைய  வடக்கு கிழக்கு   மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும், குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லிம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு தயாராக உள்ளது, மலையகத் தமிழரின் இனவுரிமை மீட்புக்குத் தோள் கொடுப்பது, தமிழர் தாயகத்தில் தற்சார்பான பொருளியல் கட்டமைப்பு உருவாக்குதவதற்கு உரிமை வேண்டும், நிரந்தரத் தீர்வை எட்டும் வரை  இனவழிப்பில் இருந்து ஈழத் தமிழர்களைக் காத்திடப் பன்னாட்டுச் சமூகத்தின் மேற்பார்வையில் சிறப்பு இடைக்காலப் பொறியமைவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டைப் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கை பிரகடனப்படுத்தியுள்ளது. 

இந்நிலைப்பாட்டோடு உடன்படுவோர் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கை கேட்கிறது.  

இந்நிலைப்பாடு இனவழிப்புக்கு உள்ளாகி, உருக்குலைந்து கிடக்கும் தமிழ் மக்களின் மீட்சிக்கு வழிவகுக்கும் என்பதால் இதன் பெயரால் தமிழ் மக்கள் திரு பா.அரியேந்திரன் அவர்களுக்கு சங்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

ஒருமித்த உணர்வில் பொது வேட்பாளருக்கு சங்குச் சின்னத்தில்  தமிழர்கள் போடும் வாக்குகள், தமிழர்களை அழிக்கத் துடிக்கும் சிங்களத்திற்கும் தமிழர்களைக் கிள்ளுக் கீரையாய்க் கையாளத் துடிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டரசுகளுக்கும் தமது  அடங்காத விடுதலைத் தாகத்தை உரத்து முழங்கும் சங்க நாதமாகும்.  

தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் என முழங்கட்டும் சங்கு!                                                                                                                                                                                

                                                                                              தோழமையுடன் 

கொளத்தூர் தா.செ.மணி, 

ஒருங்கிணைப்பாளர், 

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு 

           தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் 

RELATED POST
1 comments
  1. வணக்கம் அன்பான உறவுகளே என்னுடைய கேள்வி எங்களுடைய தலைவர் மாமா தன்னை படுகொலை செய்யப்பார்த்தார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பழைய பொறுப்பாளர் சம்பந்தன் அவர்கள் அறிவித்திருந்தார் அதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேர்ந்து பயணிக்கும் இவர்களை எவ்வாறு தமிழர்களாகிய நாம் ஏற்பது இன்று தமிழர்களுடைய பலத்தை தேர்வு மூலம் காட்ட வேண்டும் என்று இவர்களுக்கு வாக்களித்தால் நாளை சிங்கள தேசத்துடன் இணைந்து தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு தமிழீழக் கொள்கையை பாடையில் ஏற்றுவார்கள் வெளிநாடுகளில் வந்து எமது நாட்டில் தமிழின அழிப்பு நடக்கப்பட்டது என்பதை இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐநா பொதுக்கூட்டங்களில் அறிவிக்கவில்லை இவர்கள் மீது நம்பிக்கை வைத்தா வாக்களிக்க சொல்கிறீர்கள் சிங்கள தேசத்தின் தேர்தல் எமக்கு தேவையில்லை இதை புறக்கணிப்பதன் ஊடாக சர்வதேசத்திற்கு தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களை என்றும் ஏற்க மாட்டார்கள் என்ற செய்தியை சர்வதேசத்துக்கு கூறலாம் இதுவே தமிழர்கள் செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயம் தமிழர்கள் இந்த தேர்தலை எதிர்கொண்டால் சிங்கள தேசம் சர்வதேச நாடுகளுக்கு தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் தமிழர்கள் எமது தேர்தலை அங்கீகரித்து சரி சமமாக எங்களுடன் போட்டி போடுகிறார்கள் தமிழர்கள் எமது அரசியல் யாப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற புலிகள் ஆதரவு தமிழர்களே தமிழீழத்தை வேண்டுகிறார்கள் இலங்கையில் இன அழிப்பு நடக்கவில்லை சிங்களவர்களும் தமிழர்களும் ஒரு தேச மக்களாக வாழ்கிறார்கள் பயங்கரவாதிகளான புலிகளை தான் நாங்கள் அழித்தோம் என்ற செய்தியை சிங்கள பயங்கரவாத அரசு சர்வதேசத்துக்கு கூறும் மானத் தமிழன் சிங்கள ஒற்றை ஆட்சியை ஏற்பார்களா? தேர்தலை எதிர்கொண்டால் ஒற்றை ஆட்சியை தமிழர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று சர்வதேசம் கணிக்கும், ஆகையால் உறுதியாக தமிழர்கள் சிங்கள தேர்தலை புறக்கணிக்க வேண்டும்
    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW