2024 மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் பாசகவின் இலக்கும் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களின் இலக்கும் – செந்தில்

15 Mar 2024

”கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெறும் என்பதை இப்போதே எழுதிக் கொடுத்துவிடுகிறேன்” என்று பாசக தலைவர் அண்ணாமலை அடித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

இன்னொருபுறம் தன்னை ஒரு வலதுசாரி சிந்தனையாளராக அறிவித்துக் கொண்டு பேசும் நடிகை கஸ்தூரி, “ திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். இந்த தேர்தல் திமுகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சி யார்? என்பதை தீர்மானிக்கப் போகும் தேர்தல்” என்று ஒரு கருத்தை சொன்னார்.  இது கவனிக்கத் தக்க கூற்றாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிட்டால் திமுக கூட்டணி குத்துக்கல் போல் மாறாமல் இருக்கிறது. பாசக – அதிமுக கூட்டணி உடைந்து அக்கட்சிகள் தனித்தனியாக நிற்கின்றன. தமிழ்நாட்டில் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது என்பது பொதுவான மதிப்பீடாக இருக்கிறது. இது பாசகவுக்கும் தெரியும். அவர்களும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் வேலை செய்யவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாசகவின் இலக்கு அல்லது அண்ணாமலையின் குறி என்பது அதிமுக, நாதக வை பின்னுக்குத் தள்ளி  ஒரு சில தொகுதிகளிலாவது தாங்கள் இரண்டாவது பெரிய கட்சி என்ற இடத்தைப் பிடிப்பதே ஆகும்.

இந்த இலக்கை குறிவைத்துதான் தேசிய புலனாய்வு முகமையைப் பயன்படுத்தி நாதக வை மிரட்டிப் பார்த்தார்கள். நாதகவிடம் இருந்து விவசாயி சின்னம் பறிக்கப்பட்டது. அதேபோல அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கும் குழப்பம் விளைவிக்க முயல்கிறது தேர்தல் ஆணையம்.

இன்னொருபுறம் கூட்டணிக்கு வரும் அனைவரையும் தாமரைச் சின்னத்தில் போட்டியிடச் சொல்கிறார் அண்ணாமலை. டி.டி.வி. யுடன் இழுபறியானதற்கு காரணமே தாமரை சின்னத்தில் போட்டியிடச் சொன்னதுதான் என்று செய்திகள் வந்தன. பாமகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு பாமகவுக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் அண்ணாமலை என்று செய்திகள் வருகின்றன.

தமக்கு போட்டியாளர்களாக இருப்பவர்களின் சின்னத்திற்கு குழப்பம் ஏற்படுத்துவதும் தமது சின்னத்தில் எல்லோரையும் போட்டியிடச் சொல்வதும் ஒரே நோக்கத்தின் இருவேறு பக்கங்கள் ஆகும். மொத்தத்தில் பாஜகவின் குறி என்பது தமது வாக்கு விழுக்காட்டை உயர்த்திக் காட்டுவது, தான் தமிழகத்தில் முக்கியமான இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய கட்சி என்று காட்டுவதுதான்.  

அதற்கு ஏற்றாற்போல் இந்தியா டுடே, புதிய தலைமுறை கருத்துக் கணிப்புகள் பாசக சுமார் 20% வரை வாக்குகள் பெறும் என்று காட்டுகின்றன. தமிழருவி மணியன், கஸ்தூரி போன்றவர்களும் பாசக சுமார் 20% வாக்குகள் பெறும் என்று ஆரூடம் சொல்கிறார்கள். மொத்தத்தில் பாசக 20% ஐ ஒட்டி வாக்குகள் பெறும் என்ற கருத்துருவாக்கம் நடந்துவருகிறது.

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு திமுக கூட்டணி உழைக்க வேண்டும். இன்னொருபுறம் மேற்கு மாவட்டங்களில் பாஜகவுக்கு தமது வாக்குகளை இழந்துவிடாமல்  அதிமுக தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சியும்கூட தமது வாக்கு வங்கியைப் பாஜகவிடம் இழந்துவிடாமல் தக்க வைத்துக் கொள்வதில் முனைப்புக் காட்ட வேண்டும்.

தேர்தல் கட்சிகளுக்கு வெளியே செயல்படும் இயக்கங்கள், சிவில் சமூக ஆற்றல்கள் என்ன செய்ய வேண்டும்? பாசக தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில் பாசக என்ன இலக்கை வைத்து தேர்தலை சந்திக்கிறதோ அந்த இலக்கைக் குழப்ப வேண்டும். பாசகவை கட்டுப்பணம்கூட திரும்பப் பெற முடியாத வகையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

பாசக எப்படியும் தோற்றுவிடும் என்ற மெய்யான மதிப்பீடு ஒருபுறம். தமிழ்நாட்டில் என்ன நடந்தால் என்ன? வட இந்தியாவில் பெறும் வாக்குகளைக் கொண்டு பாசக வெற்றி பெற்றுவிடும் என்பது இன்னொருபுறம் நிலவும் தவறான மதிப்பீடு. இவ்விரண்டில் ஒன்றோ அல்லது இரண்டும் சேர்ந்தோ ஒருவித செயலின்மையை, ஊக்கமின்மையைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்துள்ளது.

பாசக ஏன் வாக்கு விழுக்காட்டை அதிகரிக்க நினைக்கிறது? தான் ஒரு எதிர்க்கட்சி என்ற தகுதியைப் பெற விரும்புவதேன்? ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு முதலில் எதிர்க்கட்சியாக மாற வேண்டும். அதாவது எதிர்க்கட்சி என்பது ஒரு படிநிலை, அடுத்த படி என்பது ஆளுங்கட்சியாவது. அந்த காரணத்திற்காகத் தான் பாஜக தமது வாக்கு விழுக்காட்டை உயர்த்தி எதிர்க்கட்சியாக திட்டமிடுகிறது.

பாசக அப்படியொரு வலுவான கட்சியாக நிலைப்பெறும் இடத்து அவர்கள் பல்வேறு பயனற்ற பிரச்சனைகளை அரசியல் களத்திற்கு கொண்டு வந்து காலத்தை வீணடிப்பர். அறநிலையத்துறை எதிர்ப்பு, கால்டுவெல் எதிர்ப்பு, மதமாற்ற எதிர்ப்பு, கோவை மாவட்டத்தை பிற மாவட்டங்களுக்கு எதிராக நிறுத்துதல், வள்ளலாருக்கும் வள்ளுவருக்கும் காவி சாயம் அடித்தல், பெரியார் எதிர்ப்பு, கலவரத்தை தூண்டுவது, வெறுப்பு அரசியல், பொய்களைப் பரப்புதல் என தமிழ்நாட்டின் அரசியலைக் குழப்பி விடுவார்கள்; நாமும் அதற்குப் பின்னால் ஒடி அவர்களுக்குப்  பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பல்வேறு வகைப்பட்ட உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பாசகவின் இருப்பே பெரும் தடையாக இருக்கிறது. பாசக தமிழ்நாடில் ஒரு சக்தியே இல்லை என்ற நிலையை உருவாக்கினால் நம்முடைய மெய்யான சனநாயக கோரிக்கைகளுக்கான இயக்கங்கள் முன்னுக்கு செல்ல முடியும்.

தேர்தலில் பாசகவுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்ற பரப்புரையை பாசக குறிவைக்கும் சில தொகுதிகளில் ஏனும் முன்னெடுக்க வேண்டும். பணப் பலம், அதிகார பலம், ஊடகப் பலத்துடன் தமிழ்நாட்டில் கால் பதிக்கத் துடிக்கும் பாசகவுக்கு நல்லதொரு பாடம் புகட்டும் களமாக தேர்தல் களம் அமையும். அத்தனை பலங்களையும் மக்களுடைய நலனை முன்னிறுத்தி சனநாயகத்தின் பெயரால் நாம் முன்னெடுக்கும் பரப்புரை எதிர்கொள்ள முடியும்.

தேர்தல் களத்தில் போட்டியிடும் அதிமுகவையும் நாதகவையும் பாசக தனக்குப் போட்டியாக நினைக்கிறது. ஆனால், இவர்களைப் போல் அன்றி பதவி அரசியலுக்கு வெளியே நின்று கொண்டு பாசகவை ஒரு கை பார்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய பல்வேறு ஆற்றல்கள் உள்ளன. அந்த ஆற்றல்கள்தான் பாசகவின் வாக்குகளைக் கலைக்க வல்ல எதிர்க்கட்சி ஆகும், உண்மையான போட்டிமாகும்..

பல்வேறு காரணங்களால் சிதறிக் கிடக்கும் இயக்க, சிவில் சமூக ஆற்றல்கள் ஒருங்கு குவிக்கப்பட்டால் பாசகவுக்கு சவால் விடக்கூடிய ஆற்றலாக, பாசகவுக்கு போகக்கூடிய வாக்குகளைக் கலைக்கக் கூடிய ஆற்றலாக செயல்பட முடியும்.

காசு கொடுத்து கட்சிக்கு ஆளெடுத்து, கூட்டங்களுக்கு ஆள்திரட்டி ஊடகங்களை மிரட்டி, உருட்டி, ஐ.டி. அணி வழியாக மிகைப்படுத்தப்பட்ட பரப்புரைகளைச் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களின் உண்மையான வலு என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும். மேலும் பாசகவின் வாக்கு விழுக்காடு அடிமட்டத்திற்குப் போனால் கட்சியின் மீது நம்பிக்கை இழந்து பலரும் வெளியேறுவர். பாசக என்ற கூடாரம் காலியாகும். அது நமது சனநாயக இயக்கத்திற்கு கட்டாயம் துணை செய்யும்.

இந்த தேர்தலில் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களின் இலக்கு என்பது தமிழ்நாடு – புதுச்சேரி இணைந்த 40 தொகுதிகளிலும் பாசக கூட்டணியைத் தோற்கடிப்பது, பாசக கூட்டணியைக் கட்டுப்பணம் கூட பெறமுடியாமல் செய்வது, அவர்களது வாக்கு விழுக்காட்டை ஒற்றை இலக்கத்திற்குள் முடக்குவதே ஆகும்.

இளைதாக முள்மரம் கொள்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து. ( குறள் 879 )

முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும். காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும். தொடக்க நிலையிலேயே பகையை வேரறுக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

நன்றி : அறம் இணையதளம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW