கொரோனா புதிய அலை, முழுமுடக்கம் தேவையற்றது, உள்ளூரளவிலான கட்டுப்பாடுகளை அமலாக்கு!

20 Apr 2021

நாடெங்கும் கொரோனா புதிய அலை ஒரு மருத்துவ நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உயிர்க்காற்று, ரெம்டெசிவர், தடுப்பூசி, படுக்கைகள் பற்றாக்குறை என அரசின் தயாரிப்பின்மை மிக அப்பட்டமாக தெரிகிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை  ஒழுங்குபடுத்துவதில் அரசு காட்டிய அலட்சியம் பெருந்தொற்றின் தீவிரப் பரவலாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

அவகாசம் இருந்தபோது மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்த தவறிவிட்டு தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியவுடன் பொத்தானை அழுத்துவது போல் ’முழுமுடக்கம்’ என்கின்றன அரசுகள். தன் தவறுகளுக்கு பொறுப்பேற்காமல் மக்களைக் குற்றவாளிகள் ஆக்கியுள்ள அரசுகள், ’தீர்வு காண்கிறோம்’ என்ற பெயரில் மக்களின் மீதே அந்த சுமையை ஏற்றுகின்றன. கடந்தகால ஊரடங்கின் கொடுமையான விளைவுகளை மக்கள் இப்போதுதான் சந்தித்து வருகின்றனர். கையிருப்பு கரைந்துவிட்டது, கடன் வாய்ப்புகள் வற்றிவிட்டன, செலவுச்சுமை தாங்க முடியாமல் மக்கள் திணறிவரும் வேளையில் இரக்கமற்ற முழுமுடக்கத்தை முன்னுக்கு கொண்டு வந்துள்ளன அரசுகள்.

தமிழகத்தில் இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்கு, தில்லியில் ஆறுநாள் முழு ஊரடங்கு, மகாராஷ்டிரத்தில் இரவு ஊரடங்கு என அடுத்த அடுத்த மாநிலங்கள் ஊரடங்கை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளன. இது நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மாறாக வாழ்வாதாரத்தின் மீது பெருந்தாக்குதலாக அமைந்து வாழ்வாதாரப் பேரிடராக வடிவம் எடுத்துவிடும். ஏற்கெனவே, மாதந்தோறும் வறிய குடும்பங்களுக்கு குறைந்தது 6000 ரூ கொடுக்கச் சொன்ன கோரிக்கையை புறந்தள்ளியது மோடி அரசு. ”ஊரடங்கும் போடுவோம், சரிந்துவிழும் வாழ்க்கையைத் தாங்கிப் பிடிக்கவும் மாட்டோம்” என்றால் மக்கள் எங்கேதான் போவார்கள்?

”ஊரடங்குப் போடுவதை” தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக்காமல், உள்ளூரவிலான கட்டுப்பாடுகள், மக்கள் ஒத்துழைப்புடன் கூடிய பங்கேற்பு, விழிப்புணர்வை மக்கள்மயமாக்குதல் ஆகியவற்றின் மூலம் எதிர்கொள்ள அரசு முன்வர வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று வந்த நாள்முதல் தொற்றுப் பரவல், தடுப்புமுறை, சிகிச்சைமுறை குறித்து கேள்வி எழுப்பினால், அதற்கு பதிலளிக்க மறுக்கிறது அரசு. அதன் மீதான உரையாடல் அரசு ஆதரவு அறிவியல் ஆணவப் போக்காளர்களுக்கும்  அறிவியல் எதிர்ப்பு அராஜகவாதிகளுக்கும் இடையிலான ஒன்றாக கட்டமைக்கப்பட்டு ’மக்கள் முட்டாள்களாக’ சித்திரிக்கப்படுகின்றனர். கோவேக்சின் தடுப்பூசி மூன்றாவது கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையிலான சந்தைப் போட்டியில் அம்பலமானது. தடுப்பூசிப் போட்ட பிறகான பக்கவிளைவுகள் பற்றிய உருப்படியான அறிவுறுத்தல் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மிக முக்கியமாக, நகைச்சுவை நடிகர் திரு விவேக்கின் மரணம் தடுப்பூசி குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. இரத்தம் உறைதல், மாரடைப்பு, கொரோனா அறிகுறிகள் என புதிய புதிய பக்க விளைவுகள் மற்றும் அவை மரணம் வரை போவதும் நடந்துவருகிறது. இது குறித்த வெளிப்படையான ஆய்வுகள், அறிவுப்புகள் மற்றும் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தல் நடக்கவில்லை. அதுமட்டுமின்றி, இப்படி குழப்பங்கள் நிலவும் வேளையில் ஆடு, மாடுகளைப் போல் மக்களைக் கட்டாயப்படுத்தி ஊசிப் போடுவது நடந்துவருகிறது. தடுப்பூசி போடாதவர்களுக்கு அரசு மையங்களில் சக்கரை மாத்திரை மறுக்கப்படுகிறது, பொதுவிநியோகத் திட்டத்தில் உணவுப் பொருட்கள் கொடுக்கக் கூடாது, வீட்டைவிட்டு வெளியே வர அனுமதிக்கக் கூடாது என்று வந்துகொண்டிருக்கும் கருத்துகள் அச்சமூட்டுகின்றன. மக்களை அச்சுறுத்தி, கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடுவது கூடாது. மக்களிடம் இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தடுப்பூசிப் போட்டுக்கொள்வோருக்கு உரிய மருத்துவக் கண்காணிப்பு தர வேண்டும், தடுப்பூசி போட்டப் பின்பான திடீர் சாவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும், பக்க விளைவுகள் மற்றும் சாவுகளுக்கு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் எழுந்துவந்துள்ளன. இவற்றை தமிழக அரசு உடனடியாக கருத்தில் கொண்டு கொள்கை முடிவெடுக்க வேண்டும்.

தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர், பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றை மாநில அரசே நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகள் சுதந்திரமாக முடிவெடுத்து செயல்படுவதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டைப் போடக்கூடாது. மாநில அரசுகள் கேட்கும் நிதியை மத்திய அரசு உடனடியாக கொடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆங்கில மருத்துவத்துடன் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி போன்ற மருத்துவ முறைகளையும் அரசு கைக்கொண்டது. ஆனால், இப்போது தொற்று தீவிரம் அடைந்திருக்கும் நிலையிலும் தடுப்பூசியை மட்டும் அரசு ஒற்றை தீர்வாக முன் வைத்துக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளின்வழி இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அரசு முன்வர வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று மக்கள்மயமாகி வரும்நிலையில் அதை தடுப்பதற்கான கல்வியும் நடவடிக்கைகளும் மக்கள்மயமாவதுதான் இப்போதையப் பிரச்சனைக்கு தீர்வுதரும். தொடக்கம் முதலே மக்களை முட்டாளாக கருதும் அணுகுமுறை, மருத்துவப் பேரிடரை சட்ட ஒழுங்கு சிக்கலாக்கி சாத்தான்குளக் கோரக் கொலைகளுக்கு வழிவகுத்தமை, மேலிருந்து கீழ்நோக்கிய அதிகாரவர்க்க அணுகுமுறை, கொரோனா ஊரடங்கை மைய அதிகாரக் குவிப்புக்குப் பயன்படுத்திக் கொண்ட மோடியின் சர்வாதிகாரப் போக்கு, மருந்து சந்தையைக் கைப்பற்றுவதற்கு நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி அதில் மோடி அரசின் நிறுவனச் சார்பு என இந்திய சமூக அரசியல் பண்பாட்டு நிலைமைகளுக்கே உரித்தான குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வருகின்றன.  உள்ளூர் அளவிலான தன்னார்வலக் குழுக்களை உருவாக்கி விழிப்புணர்வை மக்கள்மயமாக்கி, மக்களின் ஒத்துழைப்புடனும் பங்கேற்புடனும் இந்த அலையை எதிர்கொள்வது அவசியம் ஏனெனில் இந்தப் பிரச்சனை இப்போதைய அலையுடன் முடியப்போவதில்லை. அடுத்தடுத்த அலைகள் வரக்கூடும்!

சீனா, இஸ்ரேல் போன்ற பிரம்மாண்டமான மருத்துவக் கட்டமைப்பு, பிரம்மாண்டமான செயலாக்கம் நம் நாட்டில் இல்லை. கியூபாவைப் போல் மக்கள் பங்கேற்புடன் எத்தகைய நலவாழ்வு நெருக்கடியையும் எதிர்கொள்ளும் மரபும் இங்கே வளர்த்தெடுக்கப்படவில்லை. ஸ்கேண்டிநேவியன் நாடுகளைப் போல் எத்தகைய பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொள்ளும் துணிவும், பழக்கமும் நம்முடைய சமூக யதார்தத்தில் இல்லை. எனவே, நமக்கே உரித்தான சிக்கல்களோடுதான் நாம் இதை எதிர்கொண்டாக வேண்டியுள்ளது. இதில் ஒரு வழிமுறையைக் கண்டறிந்து நாம் தேர்ச்சி அடைந்து கொள்வதற்கு நிச்சயமாக காலம் எடுக்கும். எனவே, அரசு ’எடுத்தோம், கவிழ்த்தோம்’ பாணியில் விசயங்களை அணுகாமல், ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் மக்கள் பங்கேற்புடன் கூடிய ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.

நோய் தொற்றுப் பரவல், மருந்து , மாத்திரை, தடுப்பூசி, செவிலியர், மருத்துவர், நலவாழ்வுப் பணியாளர் இருப்பு, நலவாழ்வுக் கட்டமைப்பின் தாங்குதிறன், பெருந்தொற்று அல்லாத பிற நோய்களுக்கான தடைபடாத சிகிச்சை, மக்கள் வாழ்வாதாரம், தொழில்துறை நிலை, பொருளாதாரம்  ஆகிய அனைத்தையும் கருத்திலெடுத்த ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறைதான் இச்சூழலை ஒரு சமூகமாக நாம் எதிர்கொள்வதற்கு தேவைப்படுவதாகும். எனவே, கொரோனா புதிய அலையைக் கட்டுக்குள் கொண்டுவர முழுமுடக்கத்தை திரும்ப பெற்று, உள்ளூரவிலான கட்டுப்பாடுகள், ஒருங்கிணைந்த மருத்துவமுறை, மக்கள் பங்கேற்பு ஆகியவற்றைக் கைக்கொள்ள வேண்டும் எனத் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

– பாலன்,

பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW