ஈகி முத்துக்குமாரும் குடியுரிமை திருத்தச்சட்டமும் (CAA) – தமிழ்நாட்டு சங்கிகளுக்கு ஒரு சொல்!

04 Feb 2020

-ஜனவரி 29 – 11’ஆம் ஆண்டு நினைவு கட்டுரை

தமிழக இளைஞர்கள் பலரும் மராட்டியத்தில் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் சித்தாந்த செல்வாக்கில் மாட்டிக் கொண்டுள்ளனர்.  அதன் பல்வேறு கிளை அமைப்புகளில் உறுப்பினர்களாகவும் ஆகியுள்ளனர். இவ்வமைப்புகளைப் பொதுவாக சங் பரிவார அமைப்புகள் என்று அழைப்பதுண்டு. அதன் உறுப்பினர்களை சங்கிகள் என்று கிண்டலாக சொல்வதுண்டு.

பா.ச.க.வில் உறுப்பினராய் இருக்கும் பலரும் மத்தியில் பா.ச.க. ஆட்சியில் இருப்பதால் பதவி நலனுக்காகவும் இணைந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழல், வாரிசு அரசியல், ஏகாதிபத்திய சார்பு, கொள்கை சமரசங்கள், இரட்டை நிலைப்பாடு, போலித்தனங்கள் ஆகியவற்றால் சலிப்புற்ற ஒரு புதிய தலைமுறையும்கூட பா.ச.க. வின் கொள்கைகள் பற்றிய போதிய தெளிவில்லாமல் கண்மூடித்தனமாக அக்கட்சியை ஆதரிக்கின்றது. ஒரே வரியில் சொல்வதானால், கொள்ளிக்கட்டையில் தலைசொரியத் துணிகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். இன் இணைய அணியைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியப் பெயர்களை வைத்துக் கொண்டும் பொய்யான முகநூல் பக்கங்களின் வழியாகவும் குடியுரிமை திருத்தச் சட்டத் திருத்தத்தை குற்றாய்வு செய்து எழுதப்படும் பதிவுகளை எதிர்த்து முகநூலில் பதிவிடுகின்றனர். அதில் அவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை உமிழ்ந்து தள்ளுகின்றனர்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கன் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வரக்கூடிய ஏதிலிகளிடம் இஸ்லாமியர் – இஸ்லாமியர் அல்லாதோர் எனப் பாகுபாடு காட்டக்கூடாது என்பதுதான் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதற்கான மையக் காரணம்.

இந்து சமயம் என்று சொல்லப்படுகின்ற சமயத்தைச் சேர்ந்தவர்களாக கருதிக் கொள்ளும் அவர்கள், ’இந்து’ என்பது ஓர் அரசியல் அடையாளமாக திணிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்து சமயத்தைக் கடைபிடிப்பவர் வேறு சமயத்திற்கு மாறலாம், சமயத்தையும் கடவுளையும் மறுக்கலாம். இவை மாறக்கூடியது. தமிழர் என்ற அரசியல் அடையாளமோ தமிழ்நாட்டில் நிலைப்பெற்றிருக்கும் ஒருவரது வாழ்வின் யதார்த்தம். மக்களை ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதன் மூலம் ஒரு சமூகமாக்குகிறது தமிழ். அது மனித உறவுகளுக்கு கருவியாக இருப்பது மட்டுமின்றி ஒரு சமூகத்தின் அறிவினதும் பண்பாட்டினதும் கொள்கலனாக இருக்கிறது.  ஆகவேதான், மொழியடிப்படையில் இணைக்கப்பட்ட மக்கள் கூட்டம் ஒரு தேசிய சமூகமாக நிலைப்பெறுவது இயல்பானதாக அமைந்துவிடுகின்றது. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சென்றதற்கு காரணம் உருது மொழிபேசும் இஸ்லாமியர்கள் வங்க மொழிப் பேசும் இஸ்லாமியர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதால்தான். சில காலமே நீடித்த மதவழிப்பட்ட தேசியம் உடைந்து மொழிவழியிலான வங்கதேசம் உருவானது. இந்திய தேசியம் என்பதன் பெயரால் நம்முடைய சனநாயக உரிமை மறுக்கப்படுவதோடு நமது வளங்கள் சூறையாடப்படுகின்றன, வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. நமது பண்பாடு சிதைக்கப்படுகிறது. கார்ப்பரேட்டுகளின் வேட்டைக் காடாய் தமிழகம் மாற்றப்படுகிறது. இந்துத்துவ தேசியம் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டிற்கும் இந்திய தேசியத்தைவிடவும் பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதளவும் ஐயம் வேண்டாம்.

ஆனாலும், ஆர்.எஸ்.எஸ். இன் பொய் புரட்டுகளால் சமய வெறியூட்டப்பட்ட அந்த சங் பரிவார இளைஞர்கள் இவற்றுக்கெல்லாம் காது கொடுக்க மறுக்கின்றனர். நெருப்பு சுட்டப் பின் புரியக்கூடும். பட்ட பின் தெளியக் கூடும். அதுவரை ’இந்து’ என்ற அரசியல் அடையாளத்தை உயர்த்திப் பிடிக்க அவர்களுக்கு இருக்கும் உரிமையை மறுக்க முடியாது. இருப்பினும் அது எப்படி சனநாயகத்திற்கும் தமிழர்தம் பண்பாட்டுச் செழுமைக்கும் எதிரானது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் பாகிஸ்தானை எதிரியாக அவர்கள் பார்க்கின்றனர், இந்தியாவைவிடவும் ஆறு மடங்கு சிறிய நாடான பாகிஸ்தானின் மக்களை அளவின்றி வெறுக்கின்றனர். எனவே, பாகிஸ்தான் அரசால் பாதிப்புக்குள்ளாகி இந்தியாவிற்குள் தஞ்சம் புகும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடிந்த அவர்களால் அதே அரசால் பாதிப்புக்கு உள்ளாகி வரக் கூடிய அகமதியர், சியா போன்ற இஸ்லாமியப் பிரிவுகளைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என்கின்றனர். இந்தியா திறந்த வீடா?, உலகில் உள்ள இஸ்லாமியர்கள் எல்லோரும் இங்கு வந்தால் குடியுரிமை கொடுப்பதா? என்றெல்லாம் கேட்கின்றனர்.

2009 சனவரி 29 அன்று சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்தார். அப்போது ஈழத்தில் சிங்களப் பெளத்தப் பேரினவாத அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போர் என்ற் பெயரில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருந்தது. குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பினி பெண்கள், பெண்கள் என எவ்வித வேறுபாடு இன்றியும் வகைதொகையின்றியும் தமிழர்கள் கொல்லப்பட்டு கொண்டிருந்தனர். மக்கள் மீது வான் வழியில் குண்டு வீசப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே அப்படி கொல்லப்பட்டுக் கொண்டிருந்தோருக்கு தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ உதவிகள்கூட செய்ய முடியாத நிலையில் நாம் இருந்தோம். ’போரை நிறுத்து’ என்ற கோரிக்கையை ஒரே குரலில் தமிழகம் எழுப்பிக் கொண்டிருந்தது. அப்போது அக்கோரிக்கையை வலியுறுத்தித்தான் முத்துக்குமார் தீக்குளித்தார். தனது மரண சாசனமாக ஒரு கடித்தத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு எழுதியிருந்தார் முத்துக்குமார். அந்த கடிதத்தின் முடிவில் பதினான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதில் 12,13 ஆவது கோரிக்கைகள் பின்வருமாறு:

  1. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
  2. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களதம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

சிங்களப் பேரினவாத அரசின் இராணுவம், அங்குள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆதரவோடு தமிழினத்தின் மீது நடத்திக் கொண்டிருந்த இன அழிப்புப் போரைத் தடுக்கப் புறப்பட்டு தன்னையே தீக்கிரையாக்கி கொண்ட இளைஞன் மேற்படி கோரிக்கைகளை தனது மரண சாசனத்தில்  முன்வைத்திருப்பது அவரிடம் சிங்கள மக்களைப் பகையினமாகப் பார்க்கும் கண்ணோட்டம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. அந்த அரசையும், ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்தே தமிழீழப் போராட்டம் நடத்தப்படுகிறது என்ற புரிதல் இருக்கிறது. இதற்கு அவருடைய இடதுசாரி அரசியல் பின்புலம் உதவியுள்ளது. அதே நேரத்தில். அத்தகைய பரந்த கண்ணோட்டத்திற்கான கூறுகள் தமிழர்களின் வரலாற்றில் இருப்பதையும் காண முடிகின்றது. இதன் பொருள், தமிழர்களில் எல்லோரும் சாதி,சமய,இன வெறியைக் கடந்தவர்கள் என்று சொல்வதல்ல. இவற்றைக் கடந்து சிந்திக்கக் கூடிய ஒரு பண்பாட்டு மரபு தமிழர்களிடம் உள்ளது என்பதே ஆகும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக, ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பூங்குன்றனார் பாடல் வரியும் பாரதியின் பன்னாட்டுலகியப் பாடல்களும் அமைகின்றன.

ஆகவே, இந்துத்துவ அரசியலுக்கு ஆட்பட்டு தம்மை இந்து என்று கருதிக் கொள்பவர்களும்கூட ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையும் தம்எதிரியாக கருதுவது சரியா? இந்தியாவுக்கு ஏதிலிகளாக வருவோரை இஸ்லாமியர்? இஸ்லாமியர் அல்லாதோர்? என்று பாகுபாடு காட்டுவது சரியா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்துத்துவம் என்ற அரசியலை ஏற்றுக் கொள்வதால் தன் கையால் தன் கண்களைக் குத்திக் கொள்ளும் வேலையைச் செய்கிறார்கள் என்பதைவிடவும் அடிப்படை மனிதநேயத்தையும் நற்சிந்தனைகளையும் இழந்துவிடுகின்றனர் என்பதே மிகுந்த கவலைக்குரியது. இது தமிழர்கள் வளர்த்தெடுக்க வேண்டிய பண்பாட்டுச் செழுமை மிக்க சிந்தனை மரபுக்கு முற்றிலும் எதிரானது என்பதை தமிழ்நாட்டு சங்கிகள் புரிந்து கொள்ளட்டும்.

– செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW