இனக்கொலை குற்றவாளி மகிந்த இராசபக்சேவே திரும்பிப் போ! இந்திய அரசே, தமிழினத்தை அழிக்கும் சிங்கள அரசுடன் கூடிக் குலாவுதா? – கண்டன ஆர்ப்பாட்டம் – ஊடகச் செய்தி

09 Feb 2020

 

நாள்: 7-2-2020, வெள்ளி மாலை 3:30 மணி,

இடம்: வள்ளுவர் கோட்டம்

இனக்கொலை குற்றவாளி இலங்கை பிரதமர் மகிந்த இராசபக்சே பிப்ரவரி 7 முதல் 11 வரையான ஐந்துநாள் பயணமாக இந்தியா வருகிறார். ஈழத்தில் இன அழிப்புப் போரில் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்களுக்கு நீதி வேண்டி இலங்கை அரசு மீது பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும், அரசியல் தீர்வு காண ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசுடன் நட்புப் பாராட்டி இன அழிப்புப் போருக்கு துணைநின்ற இந்திய அரசு, இன்றுவரை இலங்கையை இனஅழிப்புக் குற்றத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டுள்ளது. மகிந்தவின் வருகையை எதிர்த்தும் இந்திய – இலங்கை நட்புறவைக் கண்டித்தும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன், தமிழ்த்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த தோழர் அருண்பாரதி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் மகிழன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செய்தி தொடர்பாளர் அப்துல் கரீம், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன், தமிழர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் சுந்தரமூர்த்தி, இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர் சேகர், சோசலிச மையத்தைச் சேர்ந்த தோழர் மருதுபாண்டியன் உள்ளிட்ட சுமார் 70 பேர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்திய – இலங்கை இனக்கொலை கூட்டணியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

2015 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசு தானே முன்வந்து இணை உபயம் செய்து ஒப்புக்கொண்ட 30/1, 34/1, 40/L.1 தீர்மானங்களின்படியான கடமைகளைச் செய்யத் தவறியுள்ளது. காணாமற்போனோருக்கான அலுவலகம் கண் துடைப்பிற்காகவே திறந்து வைக்கப்பட்டு, ஐ.நா. வில் கணக்கு காட்டப்பட்டு வந்தது.கடந்த சனவரி 20 அன்று இலங்கை அதிபர் கோத்தபய இராசபக்சே, ’போரில் காணாமல் போன எவரும் உயிருடன் இல்லை’ என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். காணாமற் போனோர் உறவுகளுக்கு மரணச் சான்றிதழ் கொடுத்துவிட்டு மாதந்தோறும் ஆறாயிரம் ரூபாய் இழப்பீடு கொடுத்து கணக்கை முடிப்பதாகச் சொல்கிறார்.

காணாமலாக்கப்பட்டோர் போர் முடிந்த பிறகு இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், அதில் 50 பேர் வரை சிறுவர்களும் உண்டு. பதினொரு ஆண்டுகளாக அவர்தம் உறவுகள் போராடி வருகின்றனர். இவர்கள் உயிருடன் இல்லை என்றால் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதே பொருள். இதை சொல்லியிருப்பது அன்றைக்கு பாதுகாப்புத் துறை செயலராக இருந்த கோத்தபய இராசபக்சே! இது அவரே வழங்கும் ஒப்புதல் வாக்குமூலமாகும். எனவே, காணாலாக்கப்பட்டோர் யாரால், எப்போது, எப்படி கொல்லப்பட்டார்கள் என்ற உண்மை வெளிவர வேண்டும் என்றால் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும்.

கடந்த மாதம் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்புத் துறை செயலாளர் அஜித் தோவல் இலங்கை இராணுவம் கருவிகள் வாங்குவதற்கு 50 மில்லியன் டாலர் கொடுப்பதாக சொல்லியுள்ளார். போர் முடிந்த இந்த பத்தாண்டுகளில் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான இன அழிப்பை செய்து வருகிறது இலங்கை அரசு. இராணுவக் குடியேற்றங்களின் வழியாகவும் வளர்ச்சித் திட்டங்களின் வழியாகவும் தமிழர்களின் நிலம் கபளீகரம் செய்யப்படுகிறது. கிழக்கு பகுதி முஸ்லிம்களின் மீது சிங்களப் பெளத்தத்தின் பேரினவாத சக்திகளின் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ளது. இத்தகைய இன அழிப்பு இராணுவத்திற்கு இந்திய அரசு நிதி உதவி வழங்குவது தமிழின அழிப்புக்கு துணைப் போவதாகும். இது தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு எதிரானது. இது தமிழக மக்களுக்கு இழைக்கும் துரோகம். இதை இவ்வார்ப்பாட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்திய அரசு இலங்கையுடனான அரசியல், பொருளியல், பண்பாட்டு உறவுகளைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின்படி இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்புக் குற்றங்கள் மீதானப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்த வேண்டும் என்பதையும் அரசியல் தீர்வு காண ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும் பன்னாட்டு அரங்கில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இவ்வார்ப்பாட்டத்தின் வழியாக கோருகிறோம்.

 

தோழமையுடன்

 

தி.செந்தில்குமார்,

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

9419 31499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW