மாவீரர்கள் நினைவுகளும் மாவீரர்கள் கனவும்

27 Nov 2023

காலம் உருண்டோடுகிறது. கடந்து வந்த பாதையை சீர்தூக்கிப் பார்த்து எதிர்காலத்திற்கான இலக்கை சுமந்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உரையோடு மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்ட  கடைசி ஆண்டு 2008 ஆகும்.

2023 கார்த்திகை திங்களோடு எதிர்காலத்திற்கான திட்டமிடலும் கடந்த காலத்தின் முன்னேற்றங்களையும் உள்ளடக்கிய சிந்தனை இன்றியே 14 மாவீரர் நாட்கள் கடந்துவிட்டன. இது 15 ஆவது ஆண்டு.

சந்தையே கடவுள். சந்தைக்கு வரும் பண்டங்களை வாங்கி நுகர்வதற்கே மனிதன். மனித வாழ்வின் இலட்சியமே நுகர்வுதான். இதற்கப்பால் தேசம், விடுதலை, புரட்சி, கொள்கை, ஈகம், உயிர்க்கொடை ஆகியவற்றை எல்லாம் கேலிக்குரியதாக மாற்றிவிட வேண்டும் என்று ஆளும்வகுப்புகள் மூயன்று வருகின்றன.  இந்த உலக ஒழுங்குக்கு ஊறு நேராதபடி விழுமியங்களைக் கட்டமைத்து சிந்தனையை வடிவமைக்க முயல்கின்றன.

இதற்கிடையேதான், தேச விடுதலைப் போராட்டங்கள் ஓயப்போவதில்லை என்று உலகுக்கு அறிவித்தபடி பாலத்தீனம் நெருப்பாற்றைக் கடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையேதான் விடுதலை வேள்விக்காக உயிரை உருக்கி ஊற்றிய மாவீரர்களை நாம் நினைவு கொள்கிறோம். அந்த நினைவுகளில் இருந்து ஊக்கம் பெற்று அவர்களது கனவை மெய்யாக்குவதற்கு உறுதியேற்க எண்ணுகிறோம்.

தமிழீழத்தின் பெயரால்தான் அவர்கள் உயிரைக் கொடுத்தனர். தமது தேசம் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று விரும்பினர். இங்கு தேசம் என்றால் மண்ணும்மக்களும்தான். மண்ணும்கூட மக்களைக் கொண்டிருப்பதாலே உயிர் பெறுகிறது. எனவே, அவர்கள் தேசத்தை முதன்மைப்படுத்தினார்கள் என்று சொன்னால் அவர்கள் மக்களை முதன்மைப்படுத்தினார்கள் என்பதே இறுதியிலும் இறுதியான விளக்கம். அவர்கள் தமது வாழ்க்கை, விருப்பு வெறுப்புகள், பாசப் பிணைப்புகள், காதல் இன்பங்கள் என எல்லாவற்றைவிடவும் மக்களை முதன்மைப்படுத்தினார்கள். அந்த மாவீரர்கள் நமக்கு இடும் கட்டளை என்றொன்று இருக்குமாயின் அது, ”மக்களை முதன்மைப்படுத்துங்கள், அவர்களின் விடுதலையை, வாழ்க்கையை, மகிழ்ச்சியை, தேவைகளை, எதிர்காலத்தை,  தலைநிமிர்வை, தன்மானத்தை முதன்மைப்படுத்துங்கள்.” என்பதே ஆகும்.

மக்களை முதன்மைப்படுத்தி அம்மக்களின் விடிவுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்று கருதப்படும் தமிழீழ விடுதலை இலட்சியத்தை முதன்மைப்படுத்தி கடந்து போன 15 ஆண்டுகளையும் அதற்கு முந்தைய காலங்களையும் சேர்த்தே சீர்தூக்கிப் பார்த்து அவர்கள் விட்டுச்சென்ற போராட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

பனிப்போர் காலத்தில் இப்போராட்டம் தொடங்கி பனிப்போருக்குப் பின்னான காலத்தில் வெற்றியின் உச்சத்தை தொட்டு பனிப்போருக்குப் பின் பின்னான காலத்தில் முள்ளிவாய்க்காலில் தோல்வியின் அதலபாதாளத்தைத் தொட்டிருக்கிறது. இந்த மூன்று வெவ்வேறு காலகட்டத்திலும் உயிர் கொடுத்திருக்கிறார்கள் போராளிகள்.    

ஒவ்வொரு காலகட்டமும் வெவ்வேறு உலக சூழலைக் கொண்டிருந்த காலம். களம் ஒன்றுதான். அது இலங்கை. ஆனால், வெற்றித் தோல்விகளை நிர்ணயித்ததில் அதிகம் பங்கு வகித்தது காலச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள்தாம்.

நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் வெடித்து, உருகி தரைமட்டமானதோடு தொடங்கிய படலத்தின் கடைசி துணைக்கதையாக முள்ளிவாய்க்காலில் இரட்டை கோபுரம் போலவே ஈழப் போராட்டமும் நொறுங்கி வீழ்ந்தது.

வானுயர்ந்த வெற்றிகளுக்குப் பின்னாலும் அதல்பாதாள தோல்விக்குப் பின்னாலும் களம் ஒன்றுதான், பகைவனும் மாறவில்லை, ஈகத்திலும் குறைவில்லை. ஆனால், தோல்விக்கும் இழப்புகளுக்கும் அழிவுக்கும் இட்டுச்சென்றது எது?

சின்னஞ் சிறிய தேசம் தன் சக்தியை மீறி ஈகங்களை செய்து பார்த்தும் வெற்றியின் நிழலில் இளைப்பாற முடியாமல் போனது ஏன்?

உலகளாவிய சூழலில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பிட்டு அதற்குப் பொருத்தமான வகையில் போராட்டப் பாதையை செப்பனிடுவதில் ஏற்பட்ட பிழை என்ன?

அத்தகைய பெருந்தோல்வியை சந்தித்து 15 ஆண்டுகள் உருண்டோடிய பின்னும் எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஒளிக் கீற்றை காண முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

உலகில் எந்தவொரு அரசின் ஆதரவும் இல்லாமல் தனித்துவிடப்பட்டதில் தோல்விக்கும் அழிவுக்குமான வரைபடம் உறுதிசெய்யப்பட்டு விட்டது. எதிரி வஞ்சகத்தாலும் உலக நாடுகளைத் தன் பக்கம் திரட்டிக் கொண்டதாலும் நாங்கள் தோற்றுப் போனோம் என்று சொல்லிக் கொள்வதில் ஏதேனும் பெருமையோ பயனோ உண்டா?  ஆனால், அதை சொல்லி ஆறுதல் அடைந்து கொண்டிருப்பவர்களாகத் தானே இருக்கிறோம்.

கொல்வதையும் துடைத்தழிப்பதையும் இனவழித்தலையும் கொள்கையாகவும் தர்மமாகவும் கொண்டு செயல்படுவதற்கு அப்பால் எதிரியிடம் இருந்து வேறு எதையாவது நாம் எதிர்ப்பார்க்க முடியுமா?

உலகமே கைவிட்டுவிட்டது எதிரும்புதிருமான, பூனையும் எலியுமான, பாம்பும் கீரியுமான நாடுகள் அனைத்தும் ஒன்றுகூடி எம்மை அழிப்பதற்கு ஆதரவு தந்துவிட்டன என்றும் சொல்லி அந்த நாடுகளை நாம் நொந்து கொண்டிருப்பதால் ஆகப் போவதென்ன? உலகத்தை குறை சொல்வதால் ஆகப் போவதென்ன?

இந்த 15 ஆண்டுகளில் சிங்களக் குடியேற்றங்கள், பெளத்த விகாரை நிறுவுவதல், சிங்கள படைமயமாக்கம் என தமிழர் தாயகத்தையும் உளவியலையும் சிதைப்பதன் மூலம் திட்டமிட்ட கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பை எதிரி நிகழ்த்திக் கொண்டிருக்கிறானே! 

மாவீரர்கள் தாயகக் கனவை சுமந்தார்கள். அந்த கனவை நினைவாக்கினால்மட்டுமே வரலாற்றில் மாவீரர்களின் நிலைத்தன்மையை உறுதிசெய்ய முடியும். எனவே, மாவீரர்களின் கனவாம் தமிழீழ இலட்சியத்தை வெல்வதற்கான வழித் தடம் என்ன?

வெற்றிக்கான பாதையைக் கண்டடையாமல் இலக்கை எட்ட முடியாது. பாதையைக் கண்டடைவதற்கு புதிய சிந்தனை வேண்டும்; புதிய கொள்கை வகுப்பு வேண்டும். 

கடந்த காலத்தின் வெற்றி தோல்விகளை மதிப்பிட்டு, சரி பிழைகளை ஆராய்ந்து இருபத்தியோராம் நூற்றாண்டின் மூன்றாம் பத்தாண்டிற்குப் பொருத்தமான வகையில் போராட்டப் பாதையை செப்பனிட்டாக வேண்டும்.

கொரோனாவுக்குப் பின்னான உலக ஒழுங்கில் ஏற்பட்டிருக்கும் புதிய நிலைமைகள், புதிய போட்டிகள், புதிய அணிசேர்க்கைகளை, புதிய வாய்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும். காலமும் சூழலும் உயரமும் பருமனும் கடலும் நிலமும் அமைவிடமும் அண்டை நாடும் உலக நாடுகளும் உலகளாவிய பெரும்போக்கும்  விதிக்கும் வரம்புகளைக் கருத்தில் எடுக்க வேண்டும்.

காணப்படும் நிலைமைகளில் இருந்து சாத்தியப்படக் கூடிய நட்பு சக்திகளை அடையாளம் காண வேண்டும்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கான நீதிகோருவதை அறவலிமையாக மாற்றிக் கொள்வதில் கொஞ்சமும் பின் வாங்கக் கூடாது.

ஐக்கிய முன்னணி ஒன்று இல்லையென்றால், வெளிநாட்டரசுகளை ஈழத் தமிழர்கள் கையாண்டு தமது நலன்களை உறுதிசெய்வதற்குப் பதிலாக வெளிநாட்டரசுகள் ஈழத் தமிழர்களின் பல்வேறு குழுக்களையும் கையாண்டு தமது காரியத்தை சாதித்துக் கொண்டு போய்விடுவார்கள். எனவே, வெளியாட்களை ஈழத் தமிழர்கள் கையாள வேண்டுமானால் ஈழத் தமிழர்கள் தமக்கிடையே கொள்கை அடிப்படையிலான ஐக்கிய முன்னணியைக் கட்டியாக வேண்டும். அதற்கு முதல் கட்டளை என்பது மாவீரர்களின் பெயரால் மக்களை முதன்மைப்படுத்துவதே ஆகும்.

விடுதலைக்கு வழிசமைக்கக் கூடிய உள்நாட்டு, பிராந்திய, உலகளாவிய கூட்டணியை உருவாக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தின் வெற்றி, தோல்வி சரியான கூட்டணியை அமைத்துக் கொள்வதில் தங்கியிருக்கிறது என்பதே முள்ளிவாய்க்கால் பல்கலைக்கழகம் ஒன்றரை இலட்சம் தமிழர்களின் உயிரைக் கட்டணமாக பெற்றுக்கொண்டு தமிழர்களுக்கு கற்றுத் தந்த ஞானமாகும்.

மாவீரர்களின் நினைவைப் போற்றுவதன் பொருள் என்ன வென்றால் அவர்களின் கனவை மெய்பிக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையை தழுவி புதிய கொள்கையை வகுத்து விடுதலைப் பாதையை செப்பனிட வேண்டும்.

நமக்குள் ஒன்றுபட்டு, உலகத்தை நம் பக்கம் திருப்பி, எதிரியை தனிமைப்படுத்தி,  தமிழீழத்தை வென்றெடுப்பதன் மூலம் நமது மக்களின் மகிழ்ச்சியையும் தலைநிமிர்வையும் மாண்பையும் எதிர்காலத்தையும் மீட்டெடுத்தால் மட்டுமே மாவீரர்கள் அழியாப் புகழோடு மக்களின் மனங்களில் வீற்றிருப்பார்கள்.

நாம் ஒவ்வொருவரும் மாவீரர்களின் கனவை மெய்ப்பிக்கப் பொறுப்பேற்போம்.

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!

உலகத் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாகம்!

நன்றி: ஒரு பேப்பர்

https://orupaper.vercel.app/posts/jcotu3a5hhaxml0
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW