தேசியக் கல்விக் கொள்கைக்கு அவசர ஒப்புதல் தருவதா? கல்விப்பறிப்புக் கொள்கையை அமலாக்காதே!

29 Jul 2020

–  தமிழ்த்தேச மக்கள் முன்னனியின் கண்டன அறிக்கை

நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கொரோனா பேரிடர்  காலத்தில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் மோடியின் அமைச்சரவை இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவால் இரண்டாண்டுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட வரைவை நாடெங்கும் உள்ள கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தீவிரமான மாற்றங்களைக் கோரின. சுமார் 2 இலட்சம் கருத்துகள் மனித வளத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கை வரைவை வங்க கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று இயக்கங்கள் நடந்துகொண்டிருந்தன. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்திற்கு கூட உட்படுத்தாமல் இக்கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இந்தக் கல்விக் கொள்கை இந்திய பெருமூலதன சக்திகளுக்கு சேவை செய்யும் வகையில் உலகளாவிய அறிவுசார் போட்டிக்காக ஒரு சிறு தொகுதியினரைத் தயார் செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்டதாகும். பல்வேறு வகையான ஏற்றத்தாழ்வு காரணமாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சூழலில் அந்த ஏற்றத்தாழ்வை மேலும் அதிகமாக்கக் கூடிய மாற்றங்களை இந்த கல்விக் கொள்கை கொண்டுள்ளது. இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் முதலில் கல்வி வாய்ப்பைப் பரவலாக்க வேண்டும் என்ற சனநாயக கண்ணோட்டமின்றி தரப்படுத்தலை இலக்காக்கி கல்வித்துறையை சீரழிக்கப் போகும் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கிவிட்டார்கள். தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் உயர்கல்வி நோக்கிச் செல்வோரின் விழுக்காடு உலகத் தரத்திற்கு ஒப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் பாசக செல்வாக்கு பெற்று பலகாலம் ஆட்சி செய்த மாநிலங்களில் இப்படியான வளர்ச்சி இல்லை. ஆனால், நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வந்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் சக்திகள் அம்பானி-அதானி-வேதாந்தா போன்றோர்களின் சொத்துக்கணக்கைப் பெருக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டு தேசிய கல்விக் கொள்கையை இவ்வாண்டில் இருந்து அமலாக்கப் போகின்றனர்.

தரப்படுத்தல் என்ற பெயரில் குழந்தைப் பருவத்திலேயே பாகுபாட்டை ஏற்படுத்தி மறைமுகமாக காவி-பார்ப்பனியக் கருத்துகளை கல்விக் கொள்கையாக திணிக்கின்றது மேலும் கல்வியைப் பொதுப்பட்டியலில் வைத்தப்படியே கல்வி தொடர்பான முழு அதிகாரத்தையும் பிரதமர் அலுலகத்தில் குவித்துக்கொள்ளும்படி மையப்படுத்தும் பாலர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வி பண்டமாக்கப்பட்டு பன்னாட்டு – உள்நாட்டு மூலதனம் வீங்கிப் பெருக்கும்படி தனியார்மயமாக்கும் கல்விப்பறிப்புக் கொள்கை ஒன்றுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது நடுவண் அரசு.

இக்கல்விக் கொள்கையை அமலாக்குவது, வாழ்நாளெல்லாம் மாடாய் உழைத்து தம் பிள்ளைகளின் எதிர்காலத்தையே தன் வாழ்வின் இலட்சியமாய் கருதி அதற்கு   கல்வியை மட்டுமே ஒற்றை நம்பிக்கையாய் கருதிக் கொண்டிருக்கும் கோடானு கோடி மக்களின் தலைமுறை தாண்டிய கனவுகளில் நெருப்பள்ளி போடுவதற்கு ஒப்புவதாகும். எனவே, நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் தேசியக் கல்விக் கொள்கையை வரும் கல்வியாண்டில் அமலாக்கக் கூடாதென வலியுறுத்துகிறேன்.

 

பாலன்,

பொதுச்செயலாளர்,

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

7010084440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW