வாஜ்பாய் – அத்வானி இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சி’யைக் கொண்டுவந்தனர், மோடி – ஷா இஸ்லாமியர்களை வடிகட்டும் திருத்தங்களைச் சேர்த்தனர்…

27 Dec 2019

இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சியும் குடியுரிமை சட்டதிருத்தமும் குடியுரிமை சட்டத்தின் பகுதிகள் தான். அவை வாஜ்பாய்-அத்வானியால் 2003இலும், மோடி-ஷாவால் 2019இலும் சேர்க்கப்பட்டன.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தேர்தல் பரப்புரையின் போது பேசிய மோடி பின்வருமாறு கூறினார்:

அது(என்.ஆர்.சி) காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது விமர்சகர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா? நாங்கள் அதை பாராளுமன்றத்தில் கொண்டு வரவில்லை, மந்திரி சபையில் அது கொண்டுவரப்படவில்லை. அதற்கான விதிகளோ ஒழுங்குமுறைகளோ கூட ஏற்படுத்தப்படவில்லை.”

அசாம் என்.ஆர்.சியைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தாரென்றால், அவர் காங்கிரசை குற்றம் சாட்டுவது சரிதான். 1951 தேசிய குடிமக்கள் பதிவேடும், அதனை மேம்படுத்துவத்துவதாக உறுதியளித்த அசாம் ஒப்பந்தமும்(Assam Accord), நன்மைக்கோ அல்லது தீமைக்கோ, முந்தைய காங்கிரஸ்  அரசாங்கங்கள் விட்டுச் சென்றவை தான்.

ஆனால் அவர் இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சி பற்றி குறிப்பிட்டாரென்றால், 1955 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை திருத்தியதன் மூலம் 2003 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் அரசால் கொண்டு வரப்பட்டது.

2003 ஆம் ஆண்டு திருத்தத்தின்படி, இந்திய அரசு தனது குடிமக்களைக் கணக்கிட்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு(National Population Registry) அல்லது என்.பி.ஆரினை உருவாக்கலாம். அதன் பிறகு அரசு கணக்கிடப்பட்ட மக்களின் குடியுரிமையை சரி பார்க்கும். அது முடிந்த பிறகு, சரிபார்க்கப்பட்ட குடிமக்கள், “இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேடு” என்ற மற்றொரு ஆவணத்தின் அங்கம் ஆவார்கள்.

இன்னும் ஒரு வருடம் கழித்து, நாம் என்.ஆர்.சி அல்ல என்.ஆர்.ஐ.சி(இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேடு) பற்றி பேசிக் கொண்டிருக்கலாம்.

என்.பி.ஆர் – உள்ளீடு; என்.ஆர்.ஐ.சி – வெளியீடு

என்.பி.ஆர் முதல் படி, குடியுரிமை சரிபார்த்தல் இரண்டாம் படி, என்.ஆர்.ஐ.சி மூன்றாம் படி.

ஒரே அமைப்பின்கீழ் வருவதைத் தவிர்த்து என்.பி.ஆர்-என்.ஆர்.ஐ.சிக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் வேறு எந்தவித தொடர்பும் இல்லை.

என்.பி.ஆர்க்கான பணி ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆம், முதல் என்.பி.ஆர் பணி காங்கிரஸ் ஆட்சியின் போது 2010-11 இல் நடைபெற்று 2015 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த படியான என்.பி.ஆரில் இடம்பெற்றிருந்த குடிமக்களின் குடியுரிமையை சரி பார்க்கும் என்.ஆர்.ஐ.சியை மன்மோகன் சிங் அரசு செயல்படுத்தவில்லை.

சொல்லப்போனால், நரேந்திர மோடி அரசாங்கம் இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.ஐ.சி பணியை மேற்கொள்ளத் தேவையில்லை. ஆனால், முதல் படியான என்.பி.ஆர் வரும் ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு தொடங்கி செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்பணி கண்டிப்பாக நடைபெறும் என மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இப்பணிக்கு “முன்னுரிமை கொடுக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அரசுக்கு இது பற்றி சிந்திக்க இன்னும் நேரம் உள்ளது.

என்.ஆர்.ஐ.சி முறையாக அறிவிக்கப்படவில்லையெனினும், அதற்கான  செயல்முறைகள் உருவாக்கப்படவில்லை எனினும், மோடி அரசு என்.ஆர்.ஐ.சியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களுக்கான உள்துறை அமைச்சர், ஜி. கிஷன் ரெட்டி தெளிவாகக் கூறியுள்ளார்.

ஏன் உங்கள் பாஸ்போர்ட் உங்களை இந்தியக் குடிமகனாக்காது

என்.பி.ஆர் கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறிய மாறுதல், இந்த அரசு அனைவரது குடியுரிமையையும் சரிபார்க்கத் தீவிரமாக உள்ளதை தெளிவாகக் காட்டுகிறது.

2010-11 என்.பி.ஆர் போல இல்லாமல் இந்த முறை உங்கள் தாய்-தந்தை இருவரது பிறந்த வருடம் மற்றும் இடம்  ஆகியவை உங்களிடம் கேட்கப்படும்.

இந்தியக் குடியுரிமைச் சட்டங்களைப் பொருத்த வரையில், இந்த சிறிய மாறுதல் எல்லாவற்றையும் மாற்றிவிடும்.

1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தைப் பொறுத்த வரை, நீங்கள் 26 ஜனவரி 1950 முதல் 1 ஜூலை 1987க்குள் பிறந்திருந்தால் நீங்கள் இந்தியக் குடிமகன் ஆவீர்கள். வேறு எந்தக் கேள்வியும் கேட்கப்படமாட்டாது. நீங்கள் பிறந்த தேதி மற்றும் இடத்தை நிரூபித்தால் போதும்.

ஆனால் நீங்கள் 2 ஜூலை 1987க்கும் 2 டிசம்பர் 2004க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருந்தால் உங்கள் பெற்றோரில் ஒருவராவது பிறப்பால் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், மோடி அரசு உங்கள் பெற்றோரில் ஒருவரது குடியுரிமையையாவது நிரூபிக்கக் கோரும். அது முடியவில்லையெனில், நீங்கள் குடியுரிமையற்றவராக அறிவிக்கப்படலாம் –  நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தாலும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் பொருட்படுத்தப்படாது.

நீங்கள் 3 டிசம்பர் 2004 அன்றோ, அதற்குப் பின்போ பிறந்திருந்தால், நீங்கள் மேலும் சிக்கலை எதிர்கொள்ளலாம். அப்படிப்பட்ட சூழலில், உங்கள் பெற்றோரில் ஒருவராவது, அவர் பிறப்பின் போது “சட்டவிரோதக் குடியேறி” என்று நிரூபிக்கப்பட்டால், நீங்கள் இந்தியக் குடிமகனல்ல – நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தாலோ, இந்திய பாஸ்போர்டோ, வாக்காளர் அட்டை வைத்திருப்பதோ பொருட்டல்ல.

இவ்விதிமுறைகள், நீங்கள் 2 ஜூலை 1987க்குப் பிறகு பிறந்திருந்தால் மோடி அரசு உங்கள் பெற்றோரது குடியுரிமையை சரிபார்க்கும் என்பது தெளிவாகிறது.

அதனால்தான் இம்முறை என்.பி.ஆர் அனைவரது பெற்றோரின் பிறந்த தேதியையும் இடத்தையும் கேட்கப் போகிறது.

நீங்கள் 1987இல் பிறந்திருந்தால், இப்போது உங்களுக்கு 32 வயது இருக்கும். இந்தியாவின் சராசரி வயது 28, அதாவது இந்தியாவின் பாதி மக்கள் தொகை 28 வயது அல்லது அதற்கும் கீழ். அதனால் நீங்கள் 1987க்கு முன்னர் பிறந்திருந்தாலும், உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் குடியுரிமையை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பீர்கள். இவ்வழியில், கிட்டத்தட்ட அனைத்து இந்தியக் குடும்பங்களும் தங்களது குடியுரிமையை குடும்ப வரைபடம், பூர்வீகம் உள்ளிட்டவற்றோடு தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டி இருக்கும்.

என்.பி.ஆர் பணி முடிந்ததும் மோடி அரசு என்.ஆர்.ஐ.சி பணியை தொடங்க முடிவு செய்யலாம் (மன்மோகன் சிங் அரசு அதனைச் செய்யவில்லை). ஞாயிரன்று பிரதமர் மோடி என்.ஆர்.ஐ.சி செயல்படுத்தப்படுத்தப்படாது எனக் கூறவில்லை, இன்னும் தொடங்கப்படவில்லை என்று தான் கூறினார். ஏனென்றால், அது பற்றிய முறையான அறிவிப்பு என்.பி.ஆர் முடியும் வரை காத்திருக்கலாம்.

ஒரு வேளை என்.ஆர்.ஐ.சி நடைபெற்றால், இவ்வரசு என்.பி.ஆர் தகவல்களைப் பயன்படுத்தி 2 ஜூலை 1987 அன்றோ அதற்குப் பின்னரோ பிறந்தவர்களுடைய பெற்றோரது குடியுரிமையை சரிபார்க்கலாம். உள்துறை அமைச்சகம் பின்வரும் ட்வீட்டை நீக்கியதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை:

அத்வானியால் கற்பனை செய்யப்பட்ட என்.ஆர்.ஐ.சி

மோடி அரசு என்.ஆர்.ஐ.சி செயல்படுத்தப்பட வேண்டுமா என்பது பற்றியும், அதற்கான விதிமுறைகள் பற்றியும் முடிவெடுக்கவில்லை எனக் கூறுகிறது. ஆனால், அதற்கான விதிகள் அனைத்து 2003-04 ஆம் ஆண்டில், எல்.கே.அத்வானி உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்த காலத்திலேயே தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன.

இவ்விதிகள், “குடியுரிமை (குடிமக்கள் பதிவீடு மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கீடு) விதிகள், 2003” என அழைக்கப்படுகின்றன. மோடி அரசு இவ்விதிகளைத் திருத்தினாலொழிய இதன்படியே இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.ஐ.சி செயல்படுத்தப்படும்.

அவர்கள் ஒவ்வொரு குடிமகனையும் என்.பி.ஆரில் பதிவு செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள், மாநில அரசுகளும் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

”மக்கள் தொகை பதிவேட்டிலிருந்து சரிபார்க்கப்பட்ட பின் மக்களின் விவரங்கள் இந்தியக் குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டில் சேமிக்கப்படும்”, என அவ்விதிகள் கூறுகின்றன.

இச்சரிபார்த்தல் எவ்வாறு நடைபெறும்? அதன் பொழிப்புரை கீழே:

படி 1: உள்ளூர் பதிவாளர் ஒவ்வொரு தனிநபர் மற்றும் குடும்பத்தின் விவரங்களைச் சரி பார்ப்பார். உங்கள் குடியுரிமையின் மேல் அவருக்கு ”சந்தேகம்” இருந்தால், அவர் உங்களது பெயரை ”தக்க காரணத்துடன் மேல் விசாரணைக்கு” குறித்து வைப்பார்.

”சரி பார்க்கும் பணி முடிந்ததும் குறிப்பிட்ட தனியான அமைப்பின் மூலம் தெரியப்படுத்தப்படும்”, உங்கள் பெயர் “சந்தேகத்திற்கிடமானவர்” என குறிக்கப்பட்டுள்ளது என.

படி 2: உங்களுக்கும் ”சந்தேகத்திற்கிடமானவர்” என குறிக்கப்பட்ட உங்கள் குடும்பத்தினருக்கும் என்.ஆர்.ஐ.சியில், ”உங்களை சேர்க்கவா வேண்டாமா என இறுதி முடிவு எடுக்கப்படும் முன், தாலுகா அல்லது துணை மாவட்ட பதிவாளரிடம் முறையிட ஒரு வாய்ப்பு வழங்கப்படும்”.

நீங்கள் சேர்க்கப்படவில்லை எனில் நம்பிக்கை இழக்க வேண்டாம். நீங்கள் “சட்டவிரோதக் குடியேறி”யாக அறிவிக்கப்படுவதற்கு முன் பல கட்டங்களை இன்னும் தாண்ட வேண்டும்.

படி 3: தாலுகா அல்லது துணை மாவட்ட பதிப்பாளர் தங்களது கண்டுபிடிப்புகளை, பெயர் குறிக்கப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் இறுதி செய்ய வேண்டும்.

மூன்று மாத பதட்டத்துக்குப் பிறகு, அவர்களுக்கு மேலும் நேரம் தேவை என நீங்கள் அறியலாம் – விதிகள் அதற்கு வழிவகுக்கின்றன.

படி 4: தாலுகா அல்லது துணை மாவட்ட பதிப்பாளர் இறுதி முடிவெடுத்தபின், உங்கள் தாலுகா அல்லது துணை மாவட்டத்திற்கான உள்ளூர் இந்தியக் குடிமக்கள் பதிவேட்டை (எல்.ஆர்.ஐ.சி) வெளியிடலாம்.

அதில் உங்கள் பெயர் இருந்தால் உற்சாகமடைய வேண்டாம், ஏனெனில் நீங்கள் இன்னும் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.

எல்.ஆர்.ஐ.சி வெளியடப்பட்ட பிறகு, உங்கள் அப்பதிவேட்டில் இருப்பதை எவர் வேண்டுமானால் எதிர்த்து முறையிடலாம். உங்கள் அண்டை வீட்டார் நீங்கள் ஒரு சட்டவிரோத குடியேறி என சந்தேகித்து, நீங்கள் “சந்தேகத்திற்கிடமானவர்” என தாலுகா அல்லது துணை மாவட்ட பதிப்பாளரிடம் ஆட்சேபணை தெரிவிக்கலாம். நீங்கள் உங்கள் குடியுரிமையை மீண்டும் நீருபிக்க வேண்டும்.

உங்கள் பெயர் எல்.ஆர்.ஐ.சி பதிவேட்டில் இல்லையெனில், நீங்கள் முறையிடலாம். ஆவணங்கள் உள்ளனவா? உங்கள் முறையீட்டையோ அல்லது உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் குடியுரிமை மீதான ஆட்சேபணையையோ 30 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும்.

படி 5: இறுதியாக, “துணை மாவட்ட அல்லது தாலுகா பதிவாளர் சமர்பிக்கப்பட்ட ஆட்சேபணைகளை கணக்கில் எடுத்திக்கொண்டு அதற்குரிய பணியினை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்”. அது முடிந்த பிறகு, மாவட்ட இந்தியக் குடிமக்களின் பதிவேட்டின் (டி.ஆர்.ஐ.சி) இறுதிப் பட்டியலை வெளியிடலாம்.

இன்னும் உங்களுக்கு ஆட்சேபணைகள் இருந்தால் டி.ஆர்.ஐ.சிக்கு சென்று உங்களை சேர்க்கவோ அல்லது வேறொருவரை வெளியேற்றவோ முறையிடலாம். அதற்கு 30 நாட்கள் அவகாசம் உண்டு. அதன் பின்னர், 90 நாட்களுக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

அதற்குப் பிறகு இப்பட்டியல் இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேட்டுக்கு (என்.ஆர்.ஐ.சி) அப்பட்டியல் செல்லும்.

அவ்வளவு தான். மாநில அளவில் வேறு எதுவும் நடைபெறாது. நீங்கள் இன்னும் பட்டியலில் இடம் பெறவில்லையெனில் நீதிமன்றங்களை நாடலாம்.

டார்ஜீலிங் கோர்கா மக்கள் வங்காளதேசத்திலிருந்து வந்தார்களா?

இதுபோன்ற பணி இப்பொழுதுதான் அசாமில் நடந்து முடிந்தது. இது போன்ற பணி, ஆனால் அதே பணி அல்ல. அசாம் என்.ஆர்.சி 1951 ஆம் ஆண்டின் மேம்படுத்தலாகும். மேலும், நீங்கள் அசாமிற்குள் 31 மார்ச் 1971க்கு முன்னர் நுழைந்திருந்தால் உங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் தேவையில்லை. வாஜ்பாய் முன்மொழிந்த இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சிக்கும் 1951 அல்லது 1971 அசாம் என்.ஆர்.சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

2 ஜூலை 1987 அன்று அல்லது அதற்கு பிறந்தவர்களுக்கு மட்டுமேயானாலும், தங்கள் பெற்றோரின் குடியுரிமையை நிரூபிக்கும் பணி இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சியை போன்றதே.

இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின் போதிருந்தே பல பா.ஜ.க தலைவர்கள் இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சி பற்றி பேசி வந்துள்ளனர். முக்கியமாக பா.ஜ.க தலைவரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இது பற்றி பேசியுள்ளார். பிரதமர் மோடி கூட டைம்ஸ் நவ் இதழுக்கு அளித்த பேட்டியில்  தனது கருத்தின்படி, இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சி அவசியம் எனக் கூறியுள்ளார்.

அசாமில் சுமார் 40 இலட்சம் பேர் வரைவு என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த 40 இலட்சம் பேரின் முறையீட்டை சரி பார்க்கும் இரண்டாவது முறை நடந்தது. இறுதியில், 19 இலட்சம் பேர் ஆகஸ்டு 2019 இல் இடம் பெறவில்லை. இவர்களில் கிட்டத்தட்ட 1 இலட்சம் இந்து கோர்கா மக்களும் அடக்கம்.

ஏப்ரல் 2019இல் டார்ஜீலிங்கில் நடைபெற்ற தேர்தல் பேரணி ஒன்றில் பேசிய அமித் ஷா, ”கோர்கா மக்கள் என்.ஆர்.சியால் பாதிக்கப்படுவீர்கள் என டிடி(மம்தா பானர்ஜி) பயமுறுத்துகிறார். என்னைவிட உண்மையான இந்தியர்கள் யாராவது உண்டென்றால் அது கோர்கா மக்கள் தான். நாங்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளோம். கோர்கா மக்கள் பயப்படத் தேவையில்லை.

https://twitter.com/free_thinker/status/1207956699073507328?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1207956699073507328&ref_url=https%3A%2F%2Ftheprint.in%2Fopinion%2Fvajpayee-advani-imagined-an-all-india-nrc-and-modi-shah-added-a-muslim-filter%2F339366%2F

இப்போது சி.ஏ.பி சட்டமாகிவிட்ட பிறகு, மோடி அரசு அது இந்தியக் குடிமக்கள் பற்றியதல்ல என வலியுறுத்துகிறது. ஆனால், அசாமிலும் மேற்கு வங்கத்திலும் உள்ள கோர்கா மக்கள் ஏற்கெனவே இந்தியக் குடிமக்கள் எனில், சி.ஏ.பி சட்டத்தைக் காரணம் காட்டி, அவர்கள் என்.ஆர்.சி குறித்து பயப்பட ஏதுமில்லை என அமித் ஷா ஏன் தெரிவிக்க வேண்டும்.

வடகிழக்கு இந்தியாவின் கோர்கா மக்கள் வங்காள்தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து குடியேறினரா?

அமித் ஷா அவர்கள் ஆவணங்கள் எதுவும் காட்டத் தேவையில்லை என ஏற்கெனவே தெரிவித்து விட்டதால் அவர்கள் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.

https://twitter.com/free_thinker/status/1207958337817460742?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1207958337817460742&ref_url=https%3A%2F%2Ftheprint.in%2Fopinion%2Fvajpayee-advani-imagined-an-all-india-nrc-and-modi-shah-added-a-muslim-filter%2F339366%2F

தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்கள், ”அகதிகளாகவும்”, ”ஊடுவியர்களாகவும்” மதத்தின் பெயரால் பிரிக்கப்படுவார்கள்.

மண்ணைச் சேரா இஸ்லாமியர்கள்

சி.ஏ.ஏ அமல்படுத்தப்பட்ட பிறகு, தங்களது பெற்றோர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால், தங்கள் குடியுரிமையை நிறுவ முடியாத இஸ்லாமியர்களே எஞ்சி இருப்பார்கள்.

”இந்துஸ்தான் மண்ணைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், இந்தியத் தாயின் பிள்ளைகளை முன்னோர்களாகக் கொண்டவர்களுக்கும் சி.ஏ.ஏ அல்லது என்.ஆர்.சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்தியா முழுமைக்கான என்.ஆர்.ஐ.சி நடைபெற்றால், பட்டியலில் இடம் பெறாத இஸ்லாமியர்களிடம் இவ்வாறு சொல்லப்படலாம்: நீங்கள் இந்துஸ்தான் மண்ணைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் இல்லை. உங்கள் முன்னோர்கள் இந்தியத் தாயின் பிள்ளைகள் இல்லை. உங்கள் தரப்பை நீங்கள் நிரூபிக்க, நீங்கள் முறையிடலாம். ஆனால் நீங்கள் அதில் தோற்கவும் செய்யலாம்.

இம்மண்ணைச் சேராத இஸ்லாமியர்களுக்கு என்ன நடக்கும்? அவர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படலாம். மும்பை மிரர் பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி,  சட்டவிரோதக் குடியேறிகளை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம்கள் அமைப்பதற்கான நிலத்தை அலையாளம் காணுமாறு கடந்த ஜூலை மாதம் மோடி அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கடந்த ஞாயிரன்று பேசிய பிரதமர் மோடி, தடுப்பு முகாம்கள் ”நகர்ப்புற நக்சல்களின்” கற்பனை என்றார். அப்படியென்றால், ”ஊடுருவல்காரர்களை” அமித் ஷா கூறியது போல வங்காள விரிகுடாவில் எறிவதுதான் ஒரே வழி போல.

சி.ஏ.பி சட்டமான பிறகு, மீண்டும் மீண்டும் சி.ஏ.ஏக்கும் என்.ஆர்.சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சொல்லப்பட்டு வந்துள்ளோம். உண்மையில், அவை ஒரே சட்டத்தின் (1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம்) பிரிக்க முடியாத பகுதிகள் தான். இந்தியா முழுமைக்குமான என்.ஆர்.சி  இச்சட்டத்தில் வாஜ்பாய்-அத்வானி அரசால் 2003 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. மதத்தின் அடிப்படையில் அகதிகளை சட்டபூர்வமாக்கும் திருத்தம் மோடி-ஷாவால் 2019 ஆண்டு சேர்க்கப்பட்டது.

தனித்தனியாக பார்த்தாலும், இவை இரண்டும் விபரீதமான யோசனைகள். அவை இரண்டுமே நீக்கப்பட வேண்டும்.

1955 ஆ ஆண்டின் குடியுரிமைச் சட்டத்துடன் இணைத்துப் பார்த்தால், குடியுரிமையை நிரூபிக்க அரசு முடிவு செய்யும் ஆவணங்கள் இல்லாத இந்திய முஸ்லிம்களை நாடற்றவர்களாக்கும் மோசமான ஆயுதமாக இவை மாறும். ஆதாரங்களைக் காட்ட வேண்டிய சுமை இந்திய முஸ்லிம்களிடம் மட்டுமே இருக்கும்.

 

தமிழில்; பாலாஜி

Vajpayee-Advani imagined an all-India NRC and Modi-Shah added a Muslim filterhttps://theprint.in/opinion/vajpayee-advani-imagined-an-all-india-nrc-and-modi-shah-added-a-muslim-filter/339366/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW