CAA , NRC – அசாம், கர்நாடகம் போன்று இந்தியா முழுவதும் தடுப்பு முகாம்கள்
அசாமில், கிட்டத்தட்ட 20 இலட்சம் மக்களுடைய குடியுரிமை நீக்கப்படலாம் என அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய அரசு தடுப்பு முகாம்களை கட்டமைத்து வருகின்றது.
கடந்த ஆகஸ்டில் இந்தியா வடகிழக்கு மாநிலமான அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலை வெளியிட்ட போது, ஏறக்குறைய 19 இலட்சம் மக்கள் அப்பட்டியலில் இடம் பெறவில்லை.
பட்டியலில் இடம் பெறாதவர்கள் தாங்கள் குடிமக்கள்தான் என்று நிரூபிக்க முறையீடு செய்ய வேண்டும். இவர்கள் நாடற்றவர்களாக்கப்படலாம் என ஐ.நா மற்றும் பல்வேறு சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.
இப்பட்டியலானது அசாமில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியின் பகுதியாகும்.
இவர்கள் அருகிலுள்ள இஸ்லாமிய பெரும்பான்மை நாடான வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என இந்திய அரசு கூறுகிறது.
ஆனால், இப்பட்டியல் பல பத்தாண்டுகளாக இங்கு முறையாக வாழ்ந்து வந்த இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பட்டியலில் இடம்பெற வேண்டி விண்ணப்பிப்பவர்கள் பத்தாண்டுகள் பின்னோக்கிக் காட்டும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் ஆவணங்கள் பராமரிக்கும் பழக்கம் அரிதாகவே காணப்படுகிறது. தடுப்பு முகாம்களை கட்டும் தொழிலாளிகள் உட்பட பலர் தேசியக் குடியுரிமைப் பட்டியலின் கடுமையான விதிகளால் சிக்கியுள்ளனர்.
“எங்களிடம் பிறப்புச் சான்றிதழ் எதுவும் இல்லை”, என கோல்புரா கிராமத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுவரும் முகாமில் பணிபுரியும் தொழிலாளி மாலதி ஹஜோங் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த செய்தி அறிக்கைகளின்படி, திட்டமிடப்பட்ட 10 தடுப்பு முகாம்களில் கோல்புராவும் ஒன்று.
3000 மக்களைக் அடைக்கும் நோக்கோடு உருவாக்கப்படும் கோல்புரா முகாம் 7 கால்பந்து மைதானங்களின் பரப்பளவு கொண்டது.
உயர்ந்த மதிற்சுவர்களும் பாதுகாப்புப் படையினருக்கு காவற்கோபுரங்களும், முகாமின் மையப்பகுதியில் ஒரு பள்ளியும் மருத்துவமனையும் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
என்.ஆர்.சி மூலமாக மோடி அரசு அசாமின் கணிசமான இஸ்லாமிய சமூகத்தினரை குறிவைப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் அரசோ, என்.ஆர்.சி வெகுவாக தாமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி கண்டிப்பான காலக் கொடுவை நிர்ணயித்த இந்திய உச்சி நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றுவதாகக் கூறுகிறது.
பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு எந்த உரிமையும் பறிக்கப்படாது எனக் கூறும் அரசுத் துறையைச் சேர்ந்தவர்கள், அவ்வாறு இடம் பெறாதவர்கள் அந்தந்த பகுதிகளில் அமையப்பெறும் “வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயங்களில்” அடுத்த 120 நாட்களுக்குள் முறையிடலாம் எனவும் கூறுகின்றனர். அம்முறையீடு தோல்வி அடைந்தால், அவர்கள் அசாம் உயர்நீதிமன்றத்திலும் பின்னர் இறுதியாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரலாம். அனைத்து மட்டங்களிலான முறையீடுகளும் தோல்வியடையும் மக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
என்.ஆர்.சி பட்டியலிலிருந்து பல இந்துக்களும் இடம் பெறவில்லை என்பது வெட்ட வெளிச்சமான பிறகு, பாரதிய ஜனதாக் கட்சியின் அசாம் மாநில பிரிவு தனது கண்டனத்தைத் தெரிவித்தது.
முறையான குடிமக்களைப் பாதுகாக்க அரசு சட்டமியற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த மதத்தைச் சேர்ந்த குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தைக் கொண்டுவரும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இச்சட்டத்தில் இஸ்லாமியக் குடியேறிகள் சேர்க்கப்படவில்லை.
இப்பட்டியலால் இந்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க்(ஆர்.எஸ்.எஸ்) அமைப்பு உண்மையான குடிமக்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவித்தது. ஆர்.எஸ்.எஸ்சும் பி.ஜெ.பியும் நெருங்கிய தொடர்புடைய அமைப்புகள்.
India builds detention camps for up to 1.9m people ‘stripped of citizenship’ in Assam
https://www.independent.co.uk/news/world/asia/assam-india-detention-camps-bangladesh-nrc-list-a9099251.html
தமிழில்; பாலாஜி
கடந்த ஜுன் மாதம், மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும், தடுப்பு முகாம்களைக் கட்டமைக்குமாறு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. இந்தியாவில் அசாம் உள்ளிட்ட இடங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த தடுப்பு முகாம்கள் மனிதத்தன்மையற்ற வகையில் இயங்குகின்றன என சமூக செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் உச்ச நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கையொட்டியே இந்த சுற்றறிக்கை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டது என முன்வைக்கப்பட்டாலும், அசாமில் நடந்து முடிந்துள்ள என்.ஆர்.சி பட்டியல் தயாரிப்பை ஒட்டியே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக எண்ணத் தோன்றுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரங்களிலும் சரி அதற்குப் பின்னரும் சரி என்.ஆர்.சி குறிப்பாக மேற்கு வங்காளத்திலும், பின்னர் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் எனக் கூறியே வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம், மஹாராஷ்டிராவில் அப்போதைய பா.ஜ.க அரசு, தடுப்பு முகாம் அமைப்பதற்கான வேலைகளை தொடங்கிவிட்டத்தாக செய்திகள் வலம் வந்தன. அதிக அளவு புலம் பெயர் தொழிலாளர்களைக் கொண்ட மும்பை மாநகரில் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறிய வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களை தடுத்து வைப்பதற்காகவே இம்முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கர்நாடக மாநில பா.ஜ.க அரசோ, ஒரு படி மேலே போய், பெங்களூரு அருகே நெலமங்களா என்னும் இடத்தில் தடுப்பு முகாம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு விட்டதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது. மேலும் 35 முகாம்கள் கட்டுள்ளதாகவும், 866 பேரை அயல்நாட்டவர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளது. இவர்களை வெகுசீக்கிரம் முகாம்களில் அடைக்கும் திட்டமுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ் – ஜெ.டி.(எஸ்) கூட்டணி ஆட்சியின் போதே இம்முகாம் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கி விட்டது. மேலும், அசாமைப் போலவே, கர்நாடகத்திலும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு 2014க்கு முன்னர் குடியேறிய இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி மற்றும் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதா கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி லோக் சபாவிலும் டிசம்பர் 11 ஆம் தேதி இராஜ்ய சபாவிலும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாம் மாநில என்.ஆர்.சி பட்டியலிலிருட்ந்து விடுபட்ட இஸ்லாமியர் அல்லாதவர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கிட இந்திய அரசால் முடியும். இஸ்லாமியர்களோ, பல தலைமுறைகளாக அசாமில் வாழ்ந்திருந்தாலும், என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறாதவர்களெனில் தடுப்பு முகாம்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இத்தகைய பாரபட்சமான சட்ட திருத்தத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் மாணவர்களும் பொது மக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் கட்டட்ற்ற காவல் துறையினரின் வன்முறையால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடக அரசு அசாம் மாநிலத்தைப் போலவே என்.ஆர்.சி கணக்கெடுப்பை அடுத்த மாதம் முதலே துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.