பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 1

01 Jan 2026

1994 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைதீபம் ஏற்றுவோம் என ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் அறைகூவல் விடுக்கும். ஆனால் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. எனவே இன்று வேறொரு முழக்கத்தைக் கையிலெடுத்துள்ளன. முருகனின் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தின் உச்சியில் ஆடு, கோழிகளைப் பலியிட்டு மலையின் புனிதத்தைக் கெடுக்க இசுலாமியர்கள் முனைவதாகவும் இந்துக்கள் அதைத் தடுத்து நிறுத்த அணிதிரள்வோம் என்ற புதிய முழக்கத்தை இந்த ஆண்டு துவக்கம் முதல் இந்து அமைப்புகள் அனைத்தும் முன்னெடுத்துள்ளன.

திருப்பரங்குன்ற மலையைச் சிக்கந்தர் மலை என்று இசுலாமியர்கள் பெயர் மாற்றி, அங்கு உயிர்பலியைச் செய்து, புனித மலையை இழிவுபடுத்துவதை எதிர்த்து ‘திருப்பரங்குன்றம் காப்போம்’ என்ற முழக்கத்தைவைத்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருவதையடுத்து திருப்பரங்குன்றத்தில் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவைக் குறித்தும் அதன் வழிபாடு குறித்தும் கடும்விமர்சனங்களை அவ்வமைப்புகள் எழுப்பத் தொடங்கின. மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்றவேண்டும் என்றும் இது அயோத்திராமர் கோயில் போன்ற திட்டத்தின் தொடக்கம் என்றும் வெளிப்படையாகப் பேசி மத மோதலுக்கான காரணிகளைத் தொடங்கிவைத்தார் பாரதிய சனதா தலைவர்களில் ஒருவரான  திரு. எச். ராஜா என்று நல்லிணக்கம் பேசுவோர் குற்றம் சாட்டினர்.

டிசம்பர் முதல்வாரம் மேலூர், வல்லாளபட்டியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மக்கள் (இந்துக்கள்) நேர்த்தியின் நிமித்தம் ஆடு பலியிட மலைக்கு ஏற முற்பட, மலையடிவாரத்தில் காவல்துறையால் தடுத்து காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களைத் திரும்பி ஊர் செல்ல உத்தரவிடப்பட்டது. அவர்கள் திரும்பிச் செல்லாமல் திருப்பரங்குன்றத்தில் 42 ஆம் நம்பர் எனப்படும் துளுவ வேளாளர் திருமண மண்டம் ஒன்றில் வேறு வழி இல்லாமல் ‘கந்தூரி வழிபாட்டை’ நிறைவேற்றினார்கள். வரலாற்றில் முதல்தடவை பலியிடத் தடைவிதிக்கப்பட்டது அன்றுதான்.

மீண்டும் டிசம்பர் 25, 2024 இல் இராசபாளையத்திலிருந்து ஓர் இசுலாமிய குடும்பம் மற்றும் இந்துக்கள் உள்ளிட்ட சிலர் சிக்கந்தருக்கு ஆடு பலியிட மலையேறும்போது கைது செய்யப்பட்டனர். புதிதாகத் தோன்றிய இத்தடையைக் கண்டித்து பாரம்பரிய வழிபாட்டு உரிமையை மீட்போம் எனும் முழக்கத்துடன் ஆடு பலியிடும் சடங்கினைச் செய்ய இசுலாமிய அமைப்பினருடன் ஜாமாத் நிர்வாகம் முயன்றபோது ஊடகங்களில் செய்தி பரபரப்பானது. இச்செய்தியின் பின்னர் அதற்காகக் காத்திருந்ததுபோல் இந்து அமைப்பினர் மலையின் புனிதத்தைக் கெடுப்பதாகப் பிரச்சினையைக் கிளப்பினர். தர்காவில் நடக்கும் வழிபாட்டுச் சடங்குகள் இசுலாமிய வழிபாட்டு முறையே கிடையாது என்றும் இது திட்டமிட்ட இந்துமதத்தின் மீதான தாக்குதல் என்றும் அவ்வமைப்புகள் பேசத்தொடங்கின.

தர்காக்களில் நடப்பதென்ன?

தமிழகத்தில் எங்கும் நீக்கமற தர்காக்கள் காணக்கிடக்கின்றன. இசுலாமியர்களில் இறைநேசர்கள் என்ற நிலைக்கு உயர்ந்தவர்கள் அவுலியாக்களாகச் சொல்லப்படுகிறார்கள். அவர்கள் அடக்கம் செய்யப்படுகின்ற தலங்கள் அந்த இறைநேசர்களின் பெயரால் தர்காக்கள் என அழைக்கப்படுகின்றன. தூய இசுலாமியவாதிகளால் விலக்கப்பட்ட இந்த அவுலியாக்கள் ஆகப்பெரும்பான்மையினராக சூஃபி மெய்ஞானிகளாகவே இருந்துள்ளனர் என்று அறியமுடிகிறது. மறுமையில் அல்ல, இம்மையிலும் கடவுளை அடையமுடியும் என்றும் அதற்கான சான்றுகளை குரானில் சில வசனங்களையும் எடுத்தியம்பும் வழக்கம் இந்தச் சூஃபிகளிடம் உண்டு. தென்னக சூஃபிக்கள் தமிழர்களிடையே இருந்த வழிபாட்டுடன் முரண்கொள்ளாது அதனைத் தம்வயப்படுத்தினர். எனவே இசுலாத்தின் இந்த வழிபாடு பிரபலமடைந்தது. இசுலாத்துடன் உறவையும் முரணையும் கொண்டுள்ளது இந்த அவுலியா வழிபாடுகள். இன்னும் சரியாகச் சொன்னால் தமிழ்ச்சித்தர்கள் மரபினைப் போலவே இந்த அவுலியாக்களின் சிந்தனைகளும் நடைமுறைகளும் இருக்கின்றன. சூஃபி தத்துவம் வேதாந்த சிந்தனைகளுடனும் அத்வைதத்துடனும் தத்துவரீதியாக இணைந்துள்ளன என தத்துவவியலாளர்கள் விளக்கினாலும் அவுலியா வழிபாட்டு நிகழ்வுகளோ தொன்மைத் தமிழரின் இறைவழிபாட்டுடன்தான் ஒன்றிப்போகின்றன.

இந்த சூஃபி ஞானிகளால்தான் இந்தியாவில் பெரிய அளவில் இசுலாம் பரவியதாகத் தெரிவிக்கிறார் வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர். வட இந்தியாவில் இருந்து இசுலாம் பரவியதற்கு முன்பு அரபு வணிகர்களோடு வந்திறங்கிய மதப்பரப்புரையாளர்கள் கேரளா தொடங்கி நாட்டின் பிற பகுதிகளுக்கு இசுலாத்தைப் பரப்பியதாக அறியமுடிகிறது.

தமிழகத்தின் தர்காக்களில் நடக்கும் சடங்குகள் பெரும்பாலும் ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். தமிழகத்துக்கே உரித்தான வழிபாட்டு மரபுகளைப் பின்பற்றியே அவை காணப்படுகின்றன. அவற்றில் நாட்டார் மரபுகளும் சமண மரபுகளும் கலந்துள்ளன. எனவே இசுலாமியர் அல்லாதவர்களும் இந்த தர்கா வழிபாட்டுடன் இலகுவாகக் கலந்துவிடுகின்றனர்.

அவுலியாவுக்காக மொட்டையடிப்பது, காது குத்துவது, பிள்ளைவரம் கேட்டு குழந்தை பிறந்தால் அந்த அவுலியாவின் பெயரைச்சூட்டுவது, அன்னதானமிடுவது, விரதமிருப்பது, தீமிப்பது, பாதங்களை பாறைகளில் செதுக்கிப் பெயரெழுதுவது, நேர்ந்து கொண்ட அம்சங்கள் நிறைவேறிவிட்டால் ஆடு, கோழி பலியிட்டு சமைத்து விருந்தளிப்பது, அவுலியாவின் பெயரைச்சூட்டுவது, ஆடு, கோழிகளை தர்காவுக்கு நேர்ந்துவிடுவது உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்வுகள் வெகு இயல்பாக தமிழகம் எங்கும் காணக்கிடைக்கும் காட்சிகளாகும். இசுலாமியர்களுக்கு இணையாக இந்துகளும் இதில் மேலே குறிப்பிட்ட சடங்குகளைச் செய்கிறார்கள். இச்சடங்குகள் பெரும்பாலும் ஐயனார் மற்றும் கருப்பசாமிகளுக்கு நடைபெறும் வழிபாட்டுச் சடங்குகளுடன் இரண்டறக் கலந்துள்ளன.

பிராமண சமூகத்திலிருந்து இசுலாத்துக்கு மாறி அவுலியா நிலைக்கு உயர்ந்து மரணித்தவர்களுக்கான தர்காக்களும் தமிழகத்தில் உண்டு. இதில் பிராமணப் பெண்களும் உண்டு.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்தவர் மீனாட்சிசுந்தரம் ஐயர். இசையிலும், தமிழிலும் புலமை பெற்றவர். இஸ்லாம் சமயத்தைத் தழுவி மீனா நூர்தீன் என்ற பெயர் பெற்றார். அவுலியா நிலைக்கு உயர்ந்த இவரது அடக்கத் தலம் மதுரை தெற்கு வெளி வீதியில் மீனா நூர்தீன் வலி தர்கா என்ற பெயரில் உள்ளது. இவர் வழி வந்த பிராமணர்கள் பலர் இந்த தர்கா விழாவில் இன்றளவும் பங்கேற்கின்றனர்.

பாபாசேக் அலாவுதீன் என்பவருக்கும், தஸ்தகீர் என்ற அவரது சீடருக்கும், பிராமண சாதியிலிருந்து இசுலாத்தை ஏற்று ஹபீஸ் அம்மா என்று பெயர் சூட்டியவருக்கும் சேர்த்து நாகபட்டினத்திற்கும் வேளாங்கண்ணிக்கும் செல்லும் வழியில் ஒரு தர்கா உள்ளது. இதற்கு பாப்பா கோயில் தர்கா என்று பெயர். இந்துக்களும் இசுலாமியர்களும் இங்கு திரளாக வருவது இன்றளவிலுமான நடைமுறை.

தர்மபுரிக்கும் சேலத்திற்கும் இடையில் தொப்பூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள தர்காவிற்கு ஹாவாலிக் தர்கா எனப் பெயர். இந்த தர்காவில் பிராமணப் பெண் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இசுலாத்தை அந்தப் பெண் தழுவினாலும் புலால் உண்ணும் பழக்கம் அற்றவராக இருந்ததால் இந்த தர்காவில் இன்றும் புலால் உணவுப்பொருட்கள் படைப்பதில்லை. இங்கு நேர்த்திக்கடன் செய்ய வருவோரும் அசைவ உணவை விலக்கி விரதமிருந்தே வருகின்றனர். இந்துக்களுக்கு முதலில் உணவு பரிமாறிய பிறகே இஸ்லாமியர்களுக்கு இங்கு உணவு பரிமாறப்படுகிறது.

தஞ்சை நகரின் கிழக்குப்பகுதியில் பழைய மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தர்காவிற்கு பாப்பாத்தியம்மன் தர்கா என்று பெயர். இங்கு இசுலாத்தை தழுவிய பிராமணப் பெண் ஒருவரும், அவருக்கு இசுலாத்தை சொல்லிக் கொடுத்த அவுலியா ஒருவரும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இங்கும் இந்துக்கள் சந்தனக்கூடு விழாவில் திரளாகப் பங்கேற்கின்றனர்.

உள்ளூர் வழிபாட்டு மரபுடன் இசுலாம் முரண்பாட்டைக் கைக்கொள்ளமால் தன்வயப்படுத்தியுள்ளதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

இத்தர்காக்களில் அதிக அளவில் இந்துகளும் வழிபாட்டில் பங்குகொள்வது அறிந்த செய்தியே. குழந்தைகள் ஏதோ ஒன்றுக்கு பயந்ததன் விளைவாக ஏற்படும் துயரங்களைத் தீர்ப்பதற்காக மந்திரித்தல், சாம்பல் பூசுதல், தீபம் ஏற்றுதல், விரதமிருப்பது, தங்கியிருப்பது, மொட்டையடிப்பது, நோய்நொடி தீர்ந்தால், குழந்தைவரம் கிடைத்தால் அவுலியாவின் பெயரைச்சூட்டுவது உயிர்ப்பலி கொடுப்பதாக நேர்ந்து கொள்வது ஆகியவற்றை இசுலாமியர்கள் அல்லாத இந்துகளும் பெருநம்பிக்கையுடன் செய்துவருகிறார்கள். சிக்கந்தர் என்ற பெயர் கொண்ட இந்துக்கள் மதுரையில் ஏராளமாக உள்ளனர். “மீன்பிடித் துறைமுகத்துக்குப் போனீங்கன்னா நாகூர் ஆண்டவர் பேர்ல படகுகளைப் பார்க்கலாம். ஆனால் அதெல்லாம் முஸ்லிம்களோடதுன்னு நினைச்சிறாதீங்க. அதெல்லாம் எங்க ஆளுங்களோடது என்று கூறும் சென்னை ஆல்காட் குப்பத்தில் வசிக்கும் மனோகரன், நாகூர் ஆண்டவர் பற்றி அருமையாகப் பாடுவார்” என்கிறார் கோம்பை எஸ். அன்வர்.

குன்றுகளும் தர்காக்களும்

சைவர்கள் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் எனச் சொல்லிவருவதால் குன்றுகள் இருக்கும் இடங்களில் இருக்கும் தர்காக்கள் சைவக்கோயில்களை இடித்தோ அல்லது ஆக்கிரமித்தோ அல்லது முரண்பாட்டுக்காகவோ கட்டப்பட்டிருக்கின்றன என்று இந்து அமைப்புகள் கூறிவிடுகின்றன.

பொதிகைமலை, பழனிமலை, திருச்சி மலைக்கோட்டை, பிரான்மலை, நார்த்தாமலை, கீழவளவு, மாங்குளம், திருப்பரங்குன்றம், வேலூர் விளாம்பாக்கம் மலை உள்ளிட்ட தமிழகம் தழுவிய பல குன்றுகளில் தர்காக்கள் அமைந்துள்ளன. இந்த குன்றுகள் தொன்மையான சமணத்தடயங்களைக் கொண்டவையாக அறியப்பட்டுள்ளன. சமணத்துறவிகளுக்கான நினைவுக் கற்படுக்கைகளுடன் தானமளிப்புக்கான எழுத்துப்பொறிப்புகள் தமிழி முதல் வட்டெழுத்துவரை காணப்படுகின்றன. பல குன்றுகளில் இருந்த சமணத்தலங்கள் சைவத்தலங்களாக மாற்றப்பட்டுள்ளன. சைவ-வைணவக் கோயில்களும் தர்காக்களும் அருகருகே அமைந்துள்ளன. அவுலியாக்களின் அடக்கத்தலங்கள் சமணத்துறவிகளுக்கான நினைவுக் கற்படுக்கைகள் போன்று பாறையிடுக்கில் அமைக்கப்பட்டுள்ளன.

மிக முக்கியமாக கவனம் குறிக்கவேண்டிய செய்திகள் பல இதில் உள்ளன. இங்கு காதுகுத்தி, மொட்டையடித்து, உயிர்ப்பலி கொடுத்து வருவதோடு பாறைகளில் பாதங்களைச் செதுக்கி வழிபாடு செய்யும் வழக்கமும் காணப்படுகின்றன. இன்றைய இசுலாமியர்கள் இப்பாத நேர்த்தி வழிபாட்டை உயிர்ப்புடன் செய்துவருவதைக் காணமுடிகிறது. இவ்வழிபாடு தொல் சமணத்துக்குரிய அடிதொழுதல் என்னும் பாதவழிபாட்டுடன் தொடர்புடையது. இதை இசுலாமியர்கள் செய்துவருவது சமணத்துக்கும் இசுலாமியர்களுக்கும் உள்ள வழிபாட்டு உறவின் எச்சத்தைக் குறிக்கிறது.

தமிழகத்தில் சிதிலமடைந்த, கைவிடப்பட்ட பழமையான சமணக்கோயில்களில் தாமரை மலர்போன்ற பீடத்தின் மேல் பாதங்கள் செதுக்கப்பட்ட சிற்பங்களே வணங்கப்பட்டு வந்துள்ளன. சில கோயில்கள் பாதக்கோயில்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளன. அருகக் கடவுள் நடக்கும்போது அவரது பாதங்களை தாமரை மலர்கள் தாங்கும் என்பர். இதையே குறள் ‘மலர்மிசை ஏகினான்’ என்கிறது. இன்றைக்கு இந்தப் பாத வழிபாட்டை எச்சமாக வைத்திருப்பவர்கள் இசுலாமியர்களே என்னும் செய்தி வியப்பைத் தருகிறது. சமணத்துக்கும் இசுலாமியர்களுக்குமான உறவையும் சொல்லிச் செல்கிறது.

குன்றுகளில் தர்காக்களும் வழிபாடுகளும்

சிவகங்கை மாவட்டம், பிரான்மலை உச்சியில் உள்ள தர்காவின் வழிப்பாதை எங்கும் இசுலாமியர்கள் பாதம் செதுக்கி, காதுகுத்தி, மொட்டையடித்து வழிபடுகிறார்கள்.

பழனிமலையின் பின்பக்கத்தில் பழனிபாபா என்ற அவுலியாவுக்கு சிறிதுகாலம் இதே வழிபாட்டு முறை இருந்து இன்று தடுக்கப்பட்டுள்ளது. அங்கே முதலில் வணங்கவேண்டிய முருகன் பாதம் என்ற பகுதிவரை இசுலாமியர்கள் வழிபடுகிறார்கள்.

விளாம்பாக்கம் (வேலூர் மாவட்டம்) மலையை உள்ளூர் மக்கள் பஞ்சபாண்டவர் மலை என அழைக்க இசுலாமியர்கள் பாதம் மலை என அழைக்கிறார்கள். தர்கா வழிபாட்டின் அத்தனை  அம்சங்களுடன் இங்கு விழாக்கள் நடக்கின்றன.

தமிழ் எழுத்தியல் வரலாற்றில் தொன்மையைப் பறைசாற்றிய எழுத்துப்பொறிப்பைக் கொண்ட மாங்குளம் – மீனாட்சிபுரம் பாறையில் இரட்டைக்கல் அவுலியா என்ற ஒருவருக்கு மேற்கண்ட வழிபாடுகள் நடக்கின்றன.

திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரக்கணக்கான பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. காதுகுத்து, மொட்டையடிப்பு உள்ளிட்ட அனைத்தும் நடக்கின்றன.

கீழவளவு பாறைக்குன்றில் சர்க்கரை பீர் ஒலியுல்லா தர்காவிலும் இதே வழிபாடுகளே நடக்கின்றன.

புதுக்கோட்டை நார்த்தாமலையில் உள்ள தர்காவில் இதே வழிபாடுகள் நடக்கின்றன.

பொதிகைமலையில் கௌதலிநாயகம் தர்காவிலும் இதே நடைமுறைகளே உள்ளன.

திருச்சி மலைக்கோட்டை பாறைச்சரிவில் நத்தர் ஷா எனும் அவுலியா தர்கா இருக்கிறது. சமண தீர்த்தங்கரர் சிலை அருகே செதுக்கப்பட்டுள்ள பாதம் நத்தர் ஷா-வுடையது என நம்புகிறார்கள் இசுலாமியர்கள்.

மேற்கண்ட மலைகள் சமணத் தடங்களைக் கொண்டவை. அருகே இருக்கும் சைவ – வைணவக் கோயில்கள் சமணத் தலங்களைத் திருத்தி அமைக்கப்பட்டவை என்பது தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்களின் ஆய்வு முடிவு. அத்தலங்களின் அருகேயே தர்காக்கள் அமைந்துள்ளன. அவுலியாக்களின் அடக்கத்தலங்கள் சமணத்துறவிகளின் நினைவுக்கற்படுக்கை போன்று பாறையிடுக்கில் அமைந்தள்ளன என்பது சமணத்துடன் இசுலாத்துக்கு குறிப்பாக சூஃபி ஞானிகளுடன் இணைந்துள்ளன.

மதப்பூசல்கள், இடப்பெயர்வு காலச்சூழல் மாற்றங்களினால் சமணத்திலிருந்து இசுலாத்துக்கு மாறிய பின்பும் சமண வழிபாட்டு அம்சங்களை எச்சங்களாகக் கொண்டிருப்பதையும் குன்றுகள், தியானம், துறவு போன்று அம்சங்களுடன் இணையும் சூஃபி வழிபாட்டுடன் இலகுவாக இசுலாமியர்கள் கலந்துவிடுகின்றனர். ஐயனார் வழிபாட்டில் ஆடு, கோழி பலியிடுதல் தவிர்க்கப்பட்டிருந்தாலும் ஒரு சமரச ஏற்பாடாக பலி ஏற்கும் துணைத் தெய்வங்களை நிறுவி உயிர்ப்பலி கொடுக்கப்படுவதுபோலவே தர்கா வழிபாட்டிலும் உயிர்ப்பலி செய்யப்படுகிறது. முற்றிலும் உள்ளூர் வழிபாடே தர்காவில் மிஞ்சி நிற்கிறது.

காலங்கள் கடந்தாலும் சமணர்களின் மொழியாளுமை முஸ்லிம்களிடையே பரவிக்கிடக்கின்றன. சோறு, ஆணம், களரி, கிளை, தொழுகை, நோன்பு, பெருநாள், பள்ளி என்பவை சமணர்களிடமிருந்து வந்தவை. தொழுகைப் பள்ளியே சமணர்களின் சில தொண்டுகளை நிறைவேற்றும் இடமாகவும் இருந்தது. வணங்கவும் வாழவும் பயன்படுத்திய பள்ளியைக் கல்விக்கூடமாகவும் மருத்துவப் பணிக்காகவும் அன்னமிடும் இடமாகவும் அஞ்சினன் புகலிடமாகவும் கொண்டிருந்தார்கள். இறைவனை வணங்கும் இடத்தைப் பள்ளிவாசல் என அழைக்கும் முஸ்லிம்கள் அங்கேயே பள்ளிக்கூடம் – மதரஸா நடத்துகிறார்கள் எனச் சொல்கிறார் தாழை மதியவன்.

( மானுடம் திங்களிதழில் வெளிவந்த கட்டுரை 4 தொடர் கட்டுரையாக வெளியிடப்படுகிறது. மானுடம் இதழ் குழுவுக்கு நன்றி)

  • தோழர் காளிங்கன்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW