ஒரு அடக்குமுறை சட்டமும் மனித உரிமை போராளியும்- யூ ஏ பி ஏ மற்றும் குர்ரம் பர்வேஸ்

04 Sep 2023

குர்ரம் பர்வேஸின் கைதும் காவலும் இன்று மனித உரிமைப் பாதுகாவலர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் ஆபத்தையும், UAPA போன்ற அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தும் அபாயத்தையும் காட்டுகின்றது.

எதேச்சதிகார ஆட்சி பன்மைத்துவத்தையும், தனிநபர்கள் மற்றும் கூட்டு இயக்கங்களையும், சுதந்திரத்தையும் அச்சுறுத்துவதோடு, அதிகாரப் பகிர்வினை சிதைத்து கடுமையான சட்டங்களை அமுல்படுத்துகிறது. இத்தகைய ஆட்சி அச்சுறுத்தல் மற்றும் வெறுப்பினை அடிப்படையாகக் கொண்டு, வெளிப்படைத்தன்மையற்ற முறையிலும், அதிகாரக் குவிப்பில் ஈடுபட்டும், இராணுவமயமாக்கலை அதிகப்படுத்தியும், சமூகத்தில் நிலவும் பிளவுகளை ஆயுதமாக்கியும் இயங்கும். மக்களுக்கான அவர்களின் அரசாங்கத்தில்  சமூக மற்றும் அரசியல் வன்முறைகளும் ஆயுதமேந்திய போராளிக் குழுக்களும் கும்பல் வெறியாட்டங்களும் நிறைந்திருக்கும்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஜனரஞ்சகம்,  பெரும்பான்மைவாதம் மற்றும் தேசியவாதத்தைப் பயன்படுத்தி மதம், சட்டம் மற்றும் அரசியலை ஆயுதமயமாக்குவதன் மூலம் இந்து தேசியவாதிகளை கட்டுப்பாடற்ற வல்லாதிக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் காஷ்மீரிலும் நாடு முழுவதிலும் ஒரு அவசரநிலை உருவாகியிருக்கிறது. முஸ்லீம்களுக்கு எதிரான இனப்பாகுபாடு மற்றும் இஸ்லாமிய வெறுப்பானது, சமூக  எதிர்ப்பிற்கெதிரான முடிவற்ற அரச விரோதத்திற்கு இட்டுச் செல்கிறது. மோடி தலைமையிலான அரசின் “சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு” எதிரான மறுசீரமைப்பு நடவடிக்கைகள், காஷ்மீரில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியான பொதுக்கூட்டங்கள், கூட்டியக்கங்கள்  மற்றும் ஒருங்கிணைப்புகள்  ஆகிய உரிமைகளுக்கு முரணாக உள்ளது. சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக முஸ்லிம்கள், மேலும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள், அறிஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அரசியல் ரீதியாக முடக்குவதற்கென்றே  சிறப்பு “பயங்கரவாத எதிர்ப்பு”ச் சட்டங்கள் மற்றும் கருவிகள்  பயன்படுத்தப்படுகின்றன.

1967 ல் உருவாக்கப்பட்டு பின்னர் 1969, 1972, 1986, 2004, 2008 மற்றும் 2012 களில் திருத்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், (UAPA), 2019 இல் மோடி அரசாங்கத்தால் விரிவுபடுத்தப்பட்டது. இந்த சட்டம்  பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தனிநபர் மற்றும் அமைப்புகளைக் கையாள்வது  தொடர்பான நடவடிக்கைகள் குறித்த  சிறப்பு நடைமுறைகளை வகுக்கிறது. இந்த சட்டம் காலனித்துவத்திற்குப் பிந்தைய இந்தியாவில் அடிக்கடி மறுசீரமைக்கு உட்படுத்த பட்டபோதும் , ​​தற்போதைய பா.ஜ.க அரசாங்கம் அதை தீவிரமாக  பயன்படுத்தி வருகிறது.

இந்த சட்டம் ஒரு நபரை “பயங்கரவாதி” என்று அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய நீதி மற்றும் சட்ட  விசாரணையை மறுக்கும் உரிமையை அரசாங்கத்திற்கு  வழங்குகிறது, இது முன்னர் இயக்கங்களுக்கு எதிராக மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது . 2021ல் உச்ச நீதிமன்றம்   குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடி விசாரணைக்கான உரிமை மீறப்பட்டால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என்று தீர்ப்பளித்தது.  மேலும் 2023ல், ஒரு சட்டவிரோத அமைப்பில் உறுப்பினராக இருப்பதே  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ்  குற்றம் செய்ததற்கு  சமம் எனவும்  ஆணையிட்டது.

இந்த சட்டம் ஒருவரை கைது செய்யவும் காவலில் வைக்கவும் கட்டற்ற அதிகாரத்தையும் சட்ட பலத்தையும் வழங்குகிறது.மேலும் இந்த சட்டம் வலுவான ஆதாரம் ஏதுமின்றி யூகத்தின் அடிப்படையில் ஒருவர் மீது குற்றம் சுமத்த அதிகாரமளிக்கிறது. மேலும் சில சமயங்களில், தன் மீது சுமத்தப்பட்ட  குற்றத்தை பொய்யென   நிரூபிபக்கும் சுமையை குற்றம் சாட்டப்பட்டவர் மீதே இச்சட்டம் சுமத்துகிறது. இது சர்வதேச உடன்படிக்கையின்  அடிப்படையிலான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் படி ஒருவர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்பட வேண்டுமென்கிற அடிப்படையான, எந்த சூழலிலும்  மறுக்கக் கூடாத, உரிமையை மீறுகிறது. இச்சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையோ அல்லது  மரண தண்டனையோ விதிக்கபடலாம்.

கடந்த 2008 ஆம் ஆண்டின் தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) என்பது தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதிக்கும் செயல்களையும் குற்றங்களையும்  விசாரிப்பதற்கான இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு ஆகும். மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த 2014 முதல் 2020 வரை 10,552 பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைப்பது கடினமாக உள்ளது,அதே சமயம் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்களது விகிதம் வெறும் 2% தான் என்பதே அதன்  அத்துமீறலுக்கு சான்றளிக்கிறது. மேலும் இச்சட்டத்தின் கீழான வழக்குகளில் சில, பொய்யாக பொருத்தப்பட்ட கணினி ஆதாரங்களின் அடிப்படையில் பதியப்பட்டவை என்றும், தகவல்களைப் பெறுவதற்காக கொடூரமான விசாரணை முறைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றசாட்டுகள் உள்ளன.

இந்தச் சட்டம் காஷ்மீரி முஸ்லிம்கள் , சிறுபான்மையினர் மற்றும்  ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது கடுமையாக பயன்படுத்தபடுகிறது. ஆனால் வெளிப்படையாகவே வெறுப்புப் பேச்சு, பயங்கரவாதம் மற்றும் வன்முறை போன்ற செயல்களில் ஈடுபட்ட இந்து தேசியவாதிகளின் வழக்குகளில் இந்த சட்டம் உபயோகிக்கப்படுவது இல்லை.

 இந்த சட்டத்தால் பாதிக்கபட்டவர்களில் 2021 இல் சிறை காவலில் இறந்த கிறிஸ்துவ பாதிரியார் மற்றும் மனித உரிமை ஆர்வலரான  ஸ்டான் சுவாமி, மனித உரிமை செயல்பாட்டாளரான  கௌதம் நவ்லகா; மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சமூக ஆர்வலர் சுதா பரத்வாஜ்; எல்கர் பரிஷத் வழக்கில் ஈடுபட்டிருந்த தலித் மற்றும் ஆதிவாசி மனித உரிமை பாதுகாவலர்கள்; மற்றும்  முஸ்லிம் ஆர்வலர் உமர் காலித் ஆகியோர் அடங்குவர். காஷ்மீரில் முஸ்லிம் செயல்பாட்டாளர்களான மனித உரிமைப் பாதுகாவலர் குர்ரம் பர்வேஸ் பத்திரிகையாளர் இர்பான் மெஹ்ராஜ் மற்றும் அரசியல் தலைவர் யாசின் மாலிக் ஆகியோர்களை இந்த சட்டம் குறிவைத்தது.

ஆகஸ்ட் 5, 2019 க்கு பிந்தைய காஷ்மீர்

பாரதிய ஜனதா கட்சி தனது  தீவிர சட்டம் மற்றும் கொள்கைகளால் காஷ்மீரில் இந்திய காலனித்துவத்தை  மேலும் வலுப்படுத்தும் விதமாக அதன்  நீண்டகால வாக்குறுதியான இந்தியாவை ஒரு இந்து தேசிய நாடாக “ஒருங்கிணைக்க”  முயல்கிறது. ஆகஸ்ட் 5, 2019 அன்று, காஷ்மீரின் சுயாட்சியானது இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதாலும், 35A பிரிவு  திரும்பப்பெறப்பட்டதாலும் பறிக்கப்பட்டது. 

அரசுப் படைகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது, குடிமக்களின் நடமாட்டத்தையும், ஒத்துழையாமையையும் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, இணைய கண்காணிப்பு, தகவல் தொடர்பு  மீதான கட்டுப்பாடு ஆகியவற்றை அதிகப்படுத்தி  மக்களை அவர்களின் விருப்பமின்றி ஆள்கிறது.கைது உத்தரவின்றி பொது மக்கள் கைது செய்யப்பட்டனர். 639 க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்க மாநில மனித உரிமை ஆணையம் கலைக்கப்பட்டதோடு  அதற்கு மாற்றாக எந்த அமைப்பும் நிறுவப்படவில்லை.

மே 2020ல் இந்திய அரசாங்கம் காஷ்மீரில் காஷ்மீர் அல்லாதவர்கள்  நிரந்தரக் குடியுரிமையை பெறுவதற்கான  சட்டத் தடைகளை நீக்கி அதன் அரசியல் பரப்பை மறுசீரமைக்க முயல்கிறது. இந்த  மறுசீரமைப்பு,  உள்நாட்டு, அன்னிய அடக்குமுறைகள் மற்றும் சுரண்டல்களுக்கெதிரான காஷ்மீரிகளின் சுயநிர்ணயத்திற்கு ஆபத்து விளைவிக்கிறது. கடந்த மார்ச் 2022 இல் இந்தியாவின் உள்துறை அமைச்சகம்,  ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து வரும் ‘பயங்கரவாத’ அச்சுறுத்தலைக் கணக்கில் கொண்டு, அப்படி அதிகரித்திருப்பதற்கான எவ்வித ஆதாரத்தையும் வெளியிடாமல், ஆயுதமேந்திய இந்து போராளிகளை உள்ளடக்கிய கிராம பாதுகாப்பு குழுக்களுக்கு அனுமதி அளித்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் காஷ்மீரில் பல பத்தாண்டுகளாக  நீடித்து வரும்  அரசியல் வன்முறை உரிமைகளுடன் கூடிய வாழ்க்கையை சாத்தியமற்றதாக்கியுள்ளது. காணாமலாக்கப்படுதல், பாலின மற்றும் பாலியல் வன்முறைகள், இடப்பெயர்வுகள், சித்திரவதைகள், சட்டத்திற்கு அப்பாற்பட்ட மரணதண்டனைகள், உளவியல் நடவடிக்கைகள்  மற்றும் அறியப்படாத, அடையாளம் காணப்படாத  இடங்களில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு பிணக்குழிகள் ஆகியவற்றிற்கு காஷ்மீர் சாட்சியாக உள்ளது .

அதிகாரப் பாதுகாப்பு சட்டங்கள் – ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA, 1990), இப்போது காலாவதியான ஜம்மு காஷ்மீர் சர்ச்சை  பகுதிகள் சட்டம் (1992) மேலும் ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (PSA, 1978, திருத்தம்  2012) ஆகியவை உட்பட – நடைமுறை தடுப்புச் சட்டங்கள்  அரசுப் படைகளுக்கு கட்டற்ற சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. காஷ்மீரில் உள்ள பலர் தங்களை இந்திய ஆக்கிரமிப்பின் கீழ்  கூட்டுத் சிறைக்கு ஒத்த சூழல்களில் வாழ்வதாக உணர்கின்றனர்.

தன்னிச்சை கைதுகள் 

தேசியப் பாதுகாப்பினையும் இறையாண்மையையும் காக்க, தடுப்புக் காவல் தேவைப்படுகிறதென, காஷ்மீர் மீதான அதன் ‘விதிவிலக்கு’ அணுகுமுறையை அரசு நியாயப்படுத்துகிறது. காஷ்மீரில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம்(UAPA), ஜாமீன் வழங்கப்படுவதைத்  தடுக்கவும், சிவில் சமூக எதிர்ப்பை மெளனமாக்கவும், சமூக இயக்கங்களின் செயல்பாட்டினையும் மக்களின் உணர்ச்சிகளான துக்கம், எதிர்ப்பு மற்றும் இரங்கல் ஆகியவற்றின் வெளிப்பாடுகளையும், மனித உரிமைப்  பணிகளையும் ஊடக செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்திற்க்கு  மாற்றாக தனிநபர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்ய சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்  அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் ஆக மாற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.இந்தச் சட்டம் சிறுவர்களுக்கு எதிராகவும், இறுதி ஊர்வலத்தில் கோஷமிடும் பொதுமக்கள்களுக்கு எதிராகவும்  வழக்குப் பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது. 2014ல் இந்த சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 45 லிருந்து 2019ல் 255 வழக்குகளாக அதிகரித்துள்ளது.

குர்ரம் பர்வேஸ் நவம்பர் 22, 2021 அன்று  தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார். முதல் தகவல் அறிக்கை  நவம்பர் 6, 2021 தேதியிலும்  குற்றப்பத்திரிகை மே 13, 2022 லும் பதியப்பட்டது. மேலும் குற்றப்பத்திரிகையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120B மற்றும் 121A ஆகியவையும்; சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவுகள் 13, 18, 18B, 38 மற்றும் 39 ஆகியவையும்; ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8 உம் குறிப்பிடபட்டுள்ளது. குற்றத்தின் மீதான ஆதாரங்கள் யூகமானவையாகவும்  சூழ்நிலை சார்ந்தவையாகவும்  இருப்பதோடு அறிக்கைகளின்படி பர்வேஸிடமிருந்து எந்த வாக்குமூலமும்  பெறப்பட வில்லை.

அரசாங்கம் பர்வேஸ் மீது “சதி திட்டம் தீட்டுதல்”, “அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்க சதி செய்தல்”, மேலும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக  அரசு  அடையாளம் காணும் ஒரு அமைப்புக்கு ஆள் சேர்ப்பது போன்ற குற்ற சாட்டுகளை  சுமத்துகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளால் அவருக்கு ஜாமீன் பெறுவது கடினமாக அமைகிறது. சிறைக் காவலில் இருந்தபோது, ​​மார்ச் 22, 2023 அன்று பர்வேஸ் இரண்டாவது வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார்.  அதற்கான குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்க்கு முன்னதாக பர்வேஸ் 2016 செப்டம்பரில் ஜெனிவா செல்ல அனுமதி மறுக்கப்பட்டு 76 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

பர்வேஸை குறிவைத்து  கைது செய்தது மற்றும் அவருக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள்  ஆகியவை இன்று மனித உரிமைப் பாதுகாவலர்கள்  எதிர்கொள்ளும் பெரும் அபாயங்களையும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களின் எல்லையற்ற அதிகாரத்தின் மூலம்  அவர்களை கட்டுப்படுத்தும்   சாத்தியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் பரவேஸின் மீது தேசிய புலனாய்வு அமைப்பு, விசாரணை என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்தியதாகவும், ராணுவத் துருப்புக்களின் இடம் மற்றும் நடமாட்டத்தையும் ராணுவ முகாம்கள் பற்றிய ஆவணங்களையும்  சேகரித்ததாகவும் , அரசு படை வீரர்கள் (மனித உரிமைக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்) பற்றிய தகவல்களை சேகரித்தாகவும் குற்றம் சாட்டுகிறது.

தேசிய புலனாய்வு அமைப்பு பர்வேஸ்  தகவல்களை சேகரிப்பதற்காக  லஞ்சம் கொடுத்ததாகக் கூறுகிறது; மேலும் நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும்  நபர்களை சந்தித்ததாகவும்; காஷ்மீரின் ஹுரியத் உறுப்பினர்களுடனும் பாகிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களுடனும் தொடர்பு கொண்டதாகவும்; ஜூலை 2016 இல் புர்ஹான் வானியின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டதாகவும் கூறுகிறது (புர்ஹான் வானியின் மரணம் காஷ்மீர் முழுவதும் மிகப்பெரிய சமூகப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது என்பதை குறிப்பிடவில்லை).

பர்வேஸ் மீதான குற்றச்சாட்டுகள், அரசுப் படைகளால் நிகழ்த்தப்படும்  அட்டூழியங்கள் குறித்து அறிய தேவையான ஒரு  மனித உரிமைப் பாதுகாவலரின் பணிகளான பல்வேறு பயணங்கள் மேற்கொள்ளுதல் விசாரணை செய்தல் மற்றும் படைகளை கண்காணித்தல் போன்றவற்றை  தவறாகச் சித்தரிக்கிறது. காஷ்மீரில் மனித உரிமைகள் தொடர்பான அவரது பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதற்காக பர்வேஸ் துன்புறுத்தப்படுவதாகவும், மிரட்டப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்துள்ளன. மேலும் மிகப்பெரும் மனதிடத்தை கொண்ட மனித உரிமை காவலரான பர்வேஸ் தனது  காலை  2004 ஆம் ஆண்டு தேர்தல் கண்காணிப்பு முயற்சியின் போது கண்ணிவெடி விபத்தில் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பர்வேஸ் அங்கம் வகித்த அமைப்புகளும் அதன் செயல்பாடுகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. அதில் பிரபல வழக்கறிஞர் பர்வேஸ் இம்ரோஸால் நிறுவப்பட்ட ஜம்மு காஷ்மீர் சிவில் சொசைட்டி கூட்டணி, காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம்; காணாமல் போனவர்களுக்கு எதிரான ஆசிய கூட்டமைப்பு; மற்றும் காஷ்மீரில் மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் ஆகியவை அடங்கும்.

எனது மதிப்புமிக்க சக ஊழியரான குர்ரம் பர்வேஸ், அரசின் சிறைக் காவலில் இருக்கிறார், அவருடைய ஜாமின் விசாரணை நிலுவையில் உள்ளது . பர்வேஸுக்கு எதிரான வழக்கு, முஸ்லீம்-காஷ்மீர் மீதான அரசின் அடக்குமுறையையும், இந்தியாவின் ஜனநாயகம் உள்ளிருந்து அழிந்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது. அவரது சிறைவாசம் அரசின் தன்னிச்சையான தடுப்புக்காவலாக இருக்கலாம்.

சர்வதேச மனித உரிமை பிரகடனமான  அதிகாரம்  9 , ” எவரும் தன்னிச்சையான கைது, சிறை காவல்  அல்லது நாடுகடத்தலுக்கு உட்படுத்தப்படக்கூடாது ” என்று குறிப்பிடுகிறது. பாரபட்சமற்ற நீதி முறைகள் மற்றும் நியாயமான விசாரணை போன்ற சட்டப் பாதுகாப்பு இல்லாமல் ஒரு தனிநபரை அரசு கைது செய்வது மற்றும் எந்தவொரு சட்ட அடிப்படையுமின்றி ஒருவரின் தனிமனித சுதந்திரத்தைப் பறித்து காவலில்   தடுத்து வைக்கப்படுவது  போன்றவை சட்ட விரோத தன்னிச்சைக் கைதில் அடங்கும்.

இந்திய அரசின் அடக்குமுறைச் சட்டங்களின் பயன்பாடு தேசிய தூய்மைவாதத்தை  இயல்பாக்குவதோடு சமூக அழிவிற்கான புதிய வடிவங்களை மேம்படுத்துகிறது. சட்டரீதியான அடக்குமுறை தவிர்க்க முடியாதது எனவும் தேசியப் பாதுகாப்பிற்கு அவசியமானது எனவும்  முன்வைக்கப்படுகிறது. மேலும் காஷ்மீரி முஸ்லிம்களின்  தடுப்புக்காவல் தேசியவாத நிர்வாகத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நன்மை என்ற பெயரில் அடக்குமுறை ஆட்சி புனிதப்படுத்தப்படுகிறது, இதனால் காஷ்மீரில் (மற்றும் இந்தியாவில்) வாழும் எண்ணற்ற முஸ்லிம்கள் மற்றும் அவர்கள் உடன்நிற்பவர்களின் அன்றாட வாழ்க்கை அச்சுறுத்தலுக்கும்  வன்முறைகளுக்கும் உள்ளாகிறது. இந்து தேசியவாதிகள் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் இத்தருணத்தில், இந்தியாவின் G20 தலைமை​​ மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சர்வதேச கவனமோ எதிர்வினைகளோ பெறாமல் தொடர்வதைக் காட்டுகிறது.

இது அங்கனா பி. சட்டர்ஜி அவர்கள் “தி ஒயர்” மின்னிதழுக்கு ஜூன் 16 2023 அன்று எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

அங்கனா பி. சட்டர்ஜி,  அரசியல் சிக்கல்கள், பாலினம் மற்றும் மக்கள் உரிமைகள் முன்னெடுப்பு, இனம் மற்றும் பாலின மையம்,கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி யின் இணை தலைவராக உள்ளார்அவரை   @ChatterjiAngana ல்  பின் தொடரலாம்.

மொழிபெயர்ப்பு: சர்ஜோன்

https://thewire.in/law/khurram-parvez-uapa-india-kashmir-law

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW