’சட்டவிரோத குடியேறிகள்’ என்னும் நிலை மாறுவது எப்போது? – செந்தில்

30 Jun 2023

இன்றைய உலக ஒழுங்கு போரையும் உள்நாட்டுக் கலகங்களையும் போராட்டங்களையும் தவிரிக்க முடியாதபடி உருவாக்கிக் கொண்டே இருப்பது போல் ஏதிலிகள் என்ற வகையினத்தையும் இடையறாது உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் உக்ரைன் மீதான வன்கவர் போரை இரசியா தொடங்கியது. இடதுசாரி சனநாயக முகாமில் இருந்து ஊற்றெடுத்திருக்க வேண்டிய ‘போர் எதிர்ப்பு இயக்கம்’ தோற்றம் பெறவேயில்லை. இரசியா தன்னைத் தற்காத்துக் கொள்ளவிருக்கும் உரிமையின் பெயராலும் அமெரிக்க – நேட்டோ எதிர்ப்பின் பெயராலும் போரை வேடிக்கை பார்த்து வருகிறார்கள் இடதுசாரிகள். ஆனால், 4 கோடியே 25 இலட்சம் மக்கள் தொகை கொண்ட உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 80 இலட்சம்  பேர் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் மாறிவிட்டனர். இந்த ஏதிலிகளின் பார்வையில் இருந்து இரசியாவின் ஆக்கிரமிப்புப் போரைக் காணத் தவறிவிட்டது உலகம். போர் உலகளாவிய பொருளியலில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியின் பெயரால் வல்லரசுகளும் அவர்களின் வட்டாரக் கூட்டாளிகளும் பேசிக் கொண்டிருக்கின்றன.

கிழக்கு ஐரோப்பா மட்டுமின்றி மேற்காசியாவும் ஆப்பிரிக்காவும் அமெரிக்கா – சீன இருமுனைப் போட்டியில் சூடேறிக் கிடக்கிறது. ஒரு சொட்டுக் குருதி சிந்தாமல் ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டத்தில் போரைத் தூண்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. போரினால் ஊற்றெடுக்கும் ஏதிலிகளோ மேற்கு ஐரோப்பா நோக்கி தஞ்சம் புகுகின்றனர். ஆனால், இன்றைய ஐரோப்பிய நாடுகள் ஏதிலிகளுக்கு கதவடைக்கத் தயங்குவதில்லை. படகில் வரும் ஏதிலிகளைத் தடுப்பதற்காக புதுச் சட்டம் இயற்றுகிறது இங்கிலாந்து. ஏதிலிகள் வருகையை எதிர்கொள்வதற்கு அவசர நிலைப் பிரகடனம் செய்கிறது இத்தாலி. இத்தனைக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஏதிலிகள் தொடர்பாக  1951 இலும் 1967 இலும் ஐநா கொண்டு வந்துள்ள பன்னாட்டு உடன்படிக்கைகளில் ஒப்பமிட்டவை.

இந்திய அரசோ அவ்விரு உடன்படிக்கைகளிலும் கையொப்பமிடவில்லை. அதேநேரத்தில், 1948 ஆண்டு நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளது. அப்பிரகடனத்தின் உறுப்பு 14 எந்தவொருவருக்கும் இன்னொரு நாட்டில் உயிருக்கு தஞ்சம் கேட்டுப் புகுவதற்கு இருக்கும் உரிமையை உறுதிசெய்கிறது. எனவே, அதன்படி ஏதிலிகள் தொடர்பில்  இந்திய அரசு கைவிரித்துக் கொள்ள முடியாது. ஆனால், இந்திய அரசு ஏதிலிகள் தொடர்பில் ஒரு தேசிய சட்டம் கூட இல்லாமல் தன்னை ’சனநாயகத்தின் தாய்’ என்று அறிவித்துக் கொள்கிறது!

அத்தகைய இந்திய நாட்டில் தஞ்சம் புகுந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதிலிகளாகவே வாழ்ந்துவரும் மக்கள் கூட்டமாக தமிழ் ஏதிலிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

’ஏதிலிகள் முகாம் என்பதற்குப் பதிலாக மறுவாழ்வு முகாம்’ என்று பெயர் பலகையை மாற்றிப் புளங்காகிதம் அடைகிறது தமிழ்நாடு அரசு.  ஒன்றிய அரசின் கணக்குப்படி ஈழத் தமிழர்கள் ஏதிலிகள் அல்ல, ’சட்டவிரோத குடியேறிகள்’ ஆவர். இந்திய அரசிடம் போராடி ’ஏதிலிகள்’ என்ற தகுநிலையை தமிழ் ஏதிலிகளுக்கு உரித்தாக முடியாத நிலையிலேயே தமிழ்நாடு அரசு இருக்கிறது.

அதேநேரத்தில், ஏதிலிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு நிதிஒதுக்கீடு செய்து வீடுகட்டிக் கொடுக்கும் பணி நடந்துவருவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக திண்டுக்கல்லில் சுமார் 321 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த மாவட்டங்களிலும் வீடு கொடுப்பது நடக்கவிருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம்  அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வந்ததில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றமிது. பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புக்கு வழங்கப்படும் உதவித்தொகையை தமிழ்நாடு அரசு விரிவாக்கியுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் ஏற்பாடுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதன்மூலம் சுயதொழில் செய்வதற்கு ஏதிலிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.  அரசு வேலைகளில் ஈழத் தமிழ் ஏதிலிகளுக்கு இடம் கொடுத்தால் அதை எடுத்துக்காட்டாக கொண்டு தனியாரும் ஏதிலிகளுக்கு வேலை கொடுக்க முன்வருவர். ஆனால், தமிழ்நாடு அரசு இதன் தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

மனிதனுக்கு உணவு, உடை, வீடு, வாழ்வுரிமை ஆகியவை அடிப்படை உரிமை என்பது போல்  தன்னுடைய உரிமைக்காக அமைப்பாகவும் போராடவும் உரிமை உண்டு. இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கான உறுப்பு 19 இவ்வுரிமையை உறுதிசெய்கிறது. ஆனால், அந்த உரிமை தமிழ் ஏதிலிகளுக்கு மறுக்கப்படுகிறது. காவல்துறை, உளவுப்பிரிவின் தலையீடும் ஆதிக்கமும் இன்றுவரை முகாம்களில் தொடர்ந்து வருகிறது. தமது உரிமைக்காகப்  பரப்புரை செய்யவோ தம்மை அமைப்பாக்கிக் கொள்ளவோ முடியாத நிலை நீடிக்கிறது. அப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் தமிழ்நாடு அரசின் உளவுத் துறையாலும் காவல் துறையாலும் கண்காணிக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் நடந்து வருகிறது.

சிறப்பு முகாம் என்ற பெயரில் ஏதிலிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் நிலை இன்றுவரை நீடிக்கிறது. ’எழுவர் விடுதலை இயக்கம்’ என்ற பெயரில் நடந்த மாபெரும் சட்டப் போராட்டத்திற்கும் மக்கள் போராட்டத்திற்கும் பிறகு சிறையில் இருந்து விடுதலைப் பெற்ற சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு ஈழத் தமிழரும் சிறப்பு முகாமில் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். சிறப்பு முகாம் கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னுக்கு நகர்த்த முடியவில்லை.

இறுதியாக ஈழத் தமிழ் ஏதிலிகளுக்கான குடியுரிமை கோரிக்கை. ’சட்டவிரோதக் குடியேறிகள்’ என்பதால் குடியுரிமைக் கொடுக்க முடியாது என்கிறது இந்திய ஒன்றிய அரசு. 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் சிங்களப் பெளத்த பேரினவாதத்தால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழரைக்  கணக்கில் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து இதற்கு எதிர்ப்பு எழுந்தபோதும் அதற்கு காது  கொடுக்க ஒன்றிய அரசு அணியமாகவில்லை.

ஏதிலி உரிமைகள் பற்றிய பரிந்துரைகளை வழங்குவதற்கென்று ஒரு குழுவை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. அந்தக் குழு ஏதிலிகள் குடியுரிமை தொடர்பில் அக்கறை கொண்ட குழுவாயினும் அதன் பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டியிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு இதில் எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை.

சூடான சோற்றை உண்ணத் துணிபவர் அதை நடுவில் இருந்து தொடங்காமல் விளிம்பில் இருந்து தொடங்க வேண்டும் என்றொரு எடுத்துக்காட்டு உண்டு. ’சட்டவிரோத குடியேறிகள்’ என்று இந்திய ஒன்றிய அரசு கதவடைக்கும் போது எங்கெங்கே பொத்தல்களைப் போட முடியும். பகுதிபகுதியாக மக்களை முகாம்களில் இருந்து  எப்படி வெளியே எடுக்க முடியும் என்று சிந்தித்தாக வேண்டும். அதில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய சில முன்னேற்றங்கள் உண்டு.

  1. 1-7-1987 க்கு முன்பு பிறந்தவர்கள் இந்திய குடியுரிமை சட்டம் 1955 இன் படி இந்தியக் குடிமக்கள் ஆவர்
  2.  1-7-1987 க்கு பின்பு இந்தியாவில் பிறந்த எந்தவொரு நபரும் பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியரானால் அவர் இந்தியக் குடிமகனாக கருதப்படுவார்.
  3. ஏதிலிகளில் கணிசமானோர் மலையகப் பின்புலம் கொண்டவர்கள். சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கையின்படி அவர்களுக்கு குடியுரிமைக் கோர வேண்டும்..
  4.  இன்னும் சிலர் மலையகப் பின்புலம் கொண்டவர்களாகவும் சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கைபடி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து ‘தாயகம் திரும்புதல்’ என்ற வகையில் பயணச் சீட்டுப் பெற்று இராமானுஜம் கப்பலிலோ அல்லது படகிலோ வந்து ஏதிலிகளாக முகாமில் இருப்போர்.

இப்படி பகுதிபகுதியாக இவர்களை அடையாளம் கண்டு இந்திய அரசிடம் இருந்து குடியுரிமையைப் பெற வேண்டும்.

திருச்சி கொட்டப்பட்டு முகாமைச் சேர்ந்த திருமிகு நளினி என்பவர் 1987 ஜூலை 1 க்கு முன்பு பிறந்தவர் என்ற அடிப்படையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு இந்திய அரசு கடவுச்சீட்டு வழங்க மறுத்துவிட்டது. பின்னர், அவர் மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகி கடவுச்சீட்டு வழங்குவதற்கான தீர்ப்பை  22-8-2022 ஆம் ஆண்டு பெற்றார். 

அதேபோல், சிவகங்கை மாவட்டம் சென்னல்குடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த திருமிகு நேயா டைட்டஸ் என்பவரது தந்தை சகாயநாதன் இலங்கை தமிழர், தாய் பச்சையம்மாள் இந்தியர் ஆவார். இவர் மேற்குறிப்பிட்ட இரண்டாவது வகையில் வருபவர் என்ற அளவில் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழியாக 05.04.2023 அன்று கடவுச்சீட்டுப் பெறுவதற்கான ஆணையைப் பெற்றார்.

இவ்விரண்டு வழக்கையும் நடத்தியவர் திருமிகு ரோமியோ ராய் ஆல்பிரடு ஆவர். அவரது தொடர் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

இவ்விருவரும் கடவுச்சீட்டுப் பெற்றாலும் முகாமிலேயே வாழ்ந்து வருகின்றனர். காரணம் தனியொரு ஆள் திடீரென்று முகாம் வாழ்க்கையில் இருந்து வெளியேறி புது வாழ்க்கையைத் தொடங்கிவிட முடியாது. இவர்களுக்கு முறையான மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்துகொடுத்து, பண உதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகள் செய்துதரப்பட வேண்டும். ஆனால், அப்படியான உதவிகளை தமிழ்நாடு அரசு இதுவரை செய்யவில்லை.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மேற்குறிப்பிட்ட நான்கு வகையினர்  யார்யார் இருக்கின்றார்கள் என்றொரு கணக்கெடுப்பை முகாம்களில் நடத்தினால் குடியுரிமைக் கோரிக்கையில் ஒரு சின்ன முன்னேற்றத்தைக் காண முடியும். இதற்கும் தமிழ்நாடு அரசு எவ்வித முன்னெடுப்பையும் செய்யவில்லை.

இதுதான் நம்முடைய நிலை. வரலாறு நம்மை இங்கே தான் விட்டிருக்கிறது.  மண்ணின் மைந்தர்களை அயலாரெனச் சொல்லி குடியுரிமையைப் பறிக்கக்கூடிய அரசியல் மெய்நிலை நிலவிக் கொண்டிருக்கும் தெற்காசியாவில்தான் நாம் ஏதிலியுரிமைக்காக போராட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நன்றி: உரிமை மின்னிதழ்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW