டிரம்பின் வர்த்தகப் போர் பின்னணியில்: மார்க்சிய பொருளியலாளர் மைக்கேல் ராபர்ட்ஸ் அவர்களுடன் ஒரு நேர்காணல்

22 May 2025

மார்க்சிய பொருளியலாளரான மைக்கேல் ராபர்ட்ஸ் இலண்டனின் நிதி மையமான City of London-இல் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் மற்றும் The Next Recession என்ற தளத்தில் பொருளாதார விவகாரங்களைப் பற்றி எழுதுகிறார். இவர் எழுதிய முக்கியமான நூல்கள்: The Long Depression: Marxism and the Global Crisis of Capitalism மற்றும் Capitalism in the 21st Century: Through the Prism of Value (Guglielmo Carchedi உடன் இணைந்து எழுதியது).

இந்த நேர்காணலில் (LINKS International Journal of Socialist Renewal இதழுக்காக Federico Fuentes நடத்தியது) மைக்கேல் ராபர்ட்ஸ், 2024 ஏப்ரல் 2 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வர்த்தக வரிகளைப் பற்றி  விளக்குகிறார். டிரம்ப் அந்த நாளை “விடுதலை நாள்” என கூறினார்; ஆனால் Wall Street Journal அதனை “வரலாற்றில் உள்ள மிக முட்டாள்தனமான வர்த்தகப் போர்” என்று விவரித்தது. ராபர்ட்ஸ், இந்த நடவடிக்கைகள் டிரம்பின் அமெரிக்க உலக ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் திட்டத்தில் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதையும், இதற்கான இடதுசாரி எதிர்வினை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறார்.

“வாசகர்கள் கவனத்திற்கு, இந்த நேர்காணலுக்கு பின் நடந்த  பல்வேறு வரிவிதிப்பு எதிர்வினைகள், மாற்றங்கள் இந்த நேர்காணலில் இடம்பெறவில்லை”

——-

டிரம்ப் அறிவித்துள்ள புதிய வர்த்தக வரிவிதிப்பின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் என்ன? அவை டிரம்ப் விரும்பும் விடயங்களை அடைய வாய்ப்புள்ளதா?

அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான டிரம்ப் விதித்துள்ள சுங்கக் கட்டண உயர்வுகள் கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரியதாகும்; இது நடப்பு  கட்டணத்தை விட  25% க்கும் அதிகம். இது வறிய “தெற்கு உலக” நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தும். மாறாக, வியட்நாம் போன்ற நாடுகள் 45% வரி  உயர்வையும், சீனா 59% உயர்வையும் எதிர்கொள்கின்றன. எந்தவொரு வர்த்தக  பற்றாக்குறைஉம் அமெரிக்காவுக்கு இல்லாத நாடுகளுக்கும் கூட 10% சுங்க வரி  உயர்வு விதிக்கப்படுகிறது.

டிரம்ப் நிர்வாகம் இந்த வரி உயர்வுகள் தேவையானவை, ஏனெனில் மற்ற நாடுகள் அநியாயமான வரிகள், மானியங்கள் மூலம் அமெரிக்க உற்பத்தியை “களவாடுகின்றன” எனக் கூறுகிறது. நோக்கம் என்னவெனில், வெளிநாட்டு உற்பத்தியாளர்களை அமெரிக்காவில் நேரடியாக முதலீடு செய்து விற்பனை செய்ய வைப்பதன் மூலம்  அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை குறையும். மேலும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு பதிலாக அமெரிக்க உற்பத்தியாளர்கள் உள்நாட்டில் தயாரித்து விற்க தயாராவார்கள்.  இதன் மூலம் “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்ற (Make America Great Again என்பது டிரம்ப்ன் வளர்ச்சிக்கான முழக்கம்)” முடியும்.

இது அனைத்தும் பொருளாதார ரீதியாக தவறான கோட்பாடு. அமெரிக்கா 1980களில் பிற நாடுகளுடன் பற்றாக்குறையை சந்திக்கத் தொடங்கியது, ஏனெனில் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த தொழிலாளர் செலவையும், புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, “தெற்கு உலக” மற்றும் கனடாவுக்கு தங்களது உற்பத்தியை மாற்றின. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை மெக்ஸிகோ, கனடா, சீனா போன்ற நாடுகளில் அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை. வியட்நாம் ஆண்டுக்கு மில்லியன் கணக்கான ஷூக்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது — அவை அங்குள்ள 59 நைகி (Nike) தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. டெஸ்லாவின் (Tesla) பெரும்பாலான எலக்ட்ரிக் கார்கள் சீனாவில் தயாரிக்கிறது. அமெரிக்காவில் உற்பத்தி செலவுகள் வெளிநாடுகளைக் காட்டிலும் அதிகம் — காரணம் தொழிலாளர் செலவுகள் மட்டுமல்ல; சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்டுவரும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தித் திறன்.

இந்த வரிவிதிப்பு  செய்யப்போகும் முக்கியமான விளைவுகள்:

அமெரிக்கா தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய இயலாது, அல்லது அவற்றின் விலை உயரும் — இதனால் அமெரிக்க நுகர்வோர் மற்றும் வணிகங்கள் பாதிக்கப்படுவர். எனவே அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்படும்.

அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு பதிலடி நடவடிக்கைகள் இருக்குமானால், அது அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

தொடரும் வர்த்தகப் போர் வளர்ச்சியைக் குறைக்கும், பணவீக்கத்தை அதிகரிக்கும் மற்றும் ஏற்கனவே தடுமாறும் நிலையில் உள்ள அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் மந்தநிலையில் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்க மூலதனதாரர்கள் டிரம்ப் அறிவித்த வரிவிதிப்புகளுக்கு ஆதரவளிக்கிறார்களா?

நிதி மற்றும் பெரிய நிறுவனத்தை சேர்ந்த ஆளும் வர்க்கம் அதிர்ச்சியடைந்துள்ளது. வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தில் சலுகைகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைக்குரிய ஆயுதமாகவே டிரம்ப் வரிவிதிப்பு உயர்வுகளைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் நம்பினர். அது ஒரு பகுதி மட்டும் உண்மையாகும். இப்போது அவர்கள் இந்த வரிவிதிப்புகள் நிரந்தரமாகவே இருந்து விடக்கூடும் என்பதைக் கண்டு உணர்ந்துள்ளனர். இதன் விளைவாக, அமெரிக்க பங்கு சந்தை கீழே விழுந்தது. “ அற்புதமான ஏழு Magnificent Seven (Apple, Microsoft, Google, Amazon,  Nvidia, Meta platform,Tesla,…)” எனப்படும் முன்னணி சமூக ஊடக மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலைகள் மேலும் வீழ்ந்தன, மேலும் அமெரிக்க டாலரும் வீழ்ச்சி கண்டது. பெரும்பான்மையான வெகுஜன பொருளாதார நிபுணர்கள்  டிரம்ப் அறிவித்த வரிவிதிப்புகளைக் கண்டிக்கின்றனர்.

இப்போது வரை, கருத்துக்கணிப்புகள் டிரம்பை எதிர்த்து இருந்தாலும், ஆளும் வர்க்கத்திடம் இருந்து அவருக்கு எதிரான எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம், அவர்கள் டிரம்ப் ஆதரவாளர்களைக் கண்டு (Trumpist factions) அச்சமடைந்துள்ளனர். ஜனநாயகக் கட்சி இதைப்பற்றி அமைதியாகவே இருக்கிறது, முதலீட்டு வங்கிகள் பேச மறுக்கின்றன, எண்ணெய் நிறுவனங்கள் ஒத்துழைப்பாகவே இருக்கின்றன. சீனாவையும், பிற நாடுகளையும் நோக்கி அமெரிக்காவின் வேளாண்மை ஏற்றுமதிகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகள் ஏற்படலாம் என்பதற்காக, அமெரிக்க விவசாயிகள் மட்டுமே கவலையுடன் கதறி வருகின்றனர். இங்கு, டிரம்ப் bailout package ஒன்றை வழங்க முடிவெடுத்துள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகியவற்றில் இருந்து வாகன இறக்குமதிகளுக்கு எதிராக வரிவிதிப்புகளைத் தவிர்த்துள்ளார் (ஏனெனில் அவை பெரும்பாலும் எல்லைக்கு அப்பால் அமெரிக்க நிறுவனங்களிலிருந்து வருகின்றன). தற்போது, ஆளும் வர்க்கம் நிலைதடுமாறிக் கொண்டே உள்ளது.

சீனாவுடன் வளர்ந்துவரும் மோதல்போக்கை முன்வைத்து, டிரம்ப் அறிவித்த வரிவிதிப்புகள் அவரது பரந்த வெளியுறவுக் கொள்கைகளில் எப்படிப்  பொருந்துகிறது ?

டிரம்பின் இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு  ஒரு திட்டமும் இருக்கிறது. உலகில் அமெரிக்கா தான் ஆதிக்க சக்தியாக தொடரவேண்டும் என்பதே அவரது நோக்கம் — ஆனால் டிரம்ப், ஜனநாயகக் கட்சி செய்தது போல உலகை காவல் காக்க விரும்பவில்லை. அவர் மாறாக, மன்றோ கொள்கைக்கு திரும்ப விரும்புகிறார். 1823 இல், அப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் மன்றோ (James Monroe) ― ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள்  லத்தீன் அமெரிக்காவிலிருந்து விலகி, மேற்கு நாடுகளை (North , South , Central America கைவிட்டாக வேண்டும் என்று வலியுறுத்தினார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், லத்தீன் அமெரிக்கா அமெரிக்காவின் “கொல்லைப்புறமாக” மாறியது. பின்னர் அமெரிக்கா தனது ஏகாதிபத்திய விருப்பங்களை பசிபிக் எல்லயைக் கடந்து , பிலிப்பைன்ஸுக்கு விரிவாக்கியது; மேலும் ஜப்பானை எதிர்கொண்டது — இது பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்கும், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் கலந்துகொள்ளுதலுக்கும் வழிவகுத்தது.

இன்றைய நிலையில், டிரம்ப் ஐரோப்பாவைப் புறக்கணித்து, ஐரோப்பா ரஷ்யாவை கையாளட்டும் என விரும்புகிறார்; இதேவேளை, இஸ்ரேல் மத்திய கிழக்கு பகுதிகளை கவனித்து, ஈரானை கையாளட்டும் என்பது அவரது யோசனை. இந்த திட்டத்தின் நோக்கம், அமெரிக்காவை சீன பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும், இறுதியில் “ஆட்சி மாற்றம்” ஒன்றைத் தூண்டுவதற்கும் முழு கவனம் செலுத்தச் செய்வதே. இதன் மூலம் சீனாவை, ஜப்பான் போலவே, அமெரிக்காவின் கையிலுள்ள பொம்மையாக மாற்ற விரும்புகிறார்.

துரதிருஷ்டவசமாக, இந்த “மன்றோ கொள்கை” டிரம்புக்கு வேலை செய்யும் நிலை இல்லை. ஏனெனில், சீனாவின் எழுச்சியை 60% வரிவிதிப்பு உயர்வுகளால் கூடத் தடுக்க முடியாத அளவிற்கு அது முன்னேறிவிட்டது.

கடந்த சில தசாப்தங்களாக, வர்த்தகத் தடைகளை அகற்றும் நோக்கில் செயல்பட்ட “உலகமயமாக்கலின் ”  முதன்மை ஊக்க சக்தியாக அமெரிக்கா இருந்தது. இப்போது இவ்வரிவிதிப்புகள் (tariffs) “உலகமயமாக்கலின் முடிவை” குறிக்கின்றனவா?

1990கள் மற்றும் 2000களில் உச்சத்தை அடைந்த உலகமயமாக்கல் அலை, 2008-09ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய மந்தநிலையால் (Great Recession) முடிவுக்கு வந்தது. 2010களில், உலக உள்நாட்டு உற்பத்தியின்  (GDP) ஓர் பங்காக  இருந்த உலக வர்த்தம் தேங்கிப் போனது, குறிப்பாக பொருட்களுக்கான வர்த்தகம் தேங்கிப் போனது. இப்போது டிரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்புகள் அந்த நிலையை மேலும் மோசமாக்கும்.

உலகமயமாக்கலின் தசாப்தங்களில், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை வெளிநாடுகளுக்கு மாற்றி, இலாபங்களை வரி ஏய்ப்பு செய்து பதித்து வைத்தன. மூலதனம் பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே வேகமாக கைமாறின — ஆனால் இது, அதே நேரத்தில், உலகத்தின் தெற்குப் நாடுகள் (Global South) மீது சுரண்டலை அதிகரித்தது. ஆனால் 2010களின் நீண்ட மந்தநிலையிலும், மேலும் 2020களுக்குள் இந்த மூலதன பரிமாற்றங்களும் மங்கிய நிலையில் உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தி தேக்கமடைந்தது.

டிரம்பின் வரிவிதிப்புகள் பொருளாதாரச் சந்தைத் துண்டிப்பை (decoupling) நோக்கி செல்கின்றனவெனில், தெற்குலக நாடுகள் (Global South) தன்னாட்சியான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை முன்நடத்தும் வாய்ப்பு உருவாகுமா?

சிலர் வாதிடுவதாவது, “துண்டிப்பு” (decoupling) — அதாவது, தெற்குலக நாடுகள், ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே  உள்ள வர்த்தகம் மற்றும் முதலீடுகள்  ஒப்பீட்டளவில் குறைக்கும் நடவடிக்கைகள் — மூலம், முக்கியமான தெற்கு நாடுகள் தங்கள் சொந்த முன்னேறிய தொழில்துறை அடிப்படையிலான வளர்ச்சித் திட்டங்களை (industrial strategies) முன்னெடுத்து, ஏகாதிபத்திய கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு முன்னேறலாம். ஆனால் இதில் முழுமையான நம்பிக்கை இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம்  கடந்த சில தசாப்தங்களில் பலவீனமடைந்துள்ளது, இதுவே டிரம்பின் எழுச்சிக்கு ஒரு பகுதி காரணமாகவும் இருக்கலாம். ஆனால் அமெரிக்கா இன்னும் ஆதிக்கம் செலுத்தும் நிதி சக்தியாக உள்ளது — அமெரிக்க டாலர் இன்னும் உலக நிதிச்சந்தையை ஆட்சி செய்கிறது. இது இன்னும் உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியாகவும் உள்ளது. மேலும், பெரும்பாலான ஏகாதிபத்திய நாடுகள் (பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்றவை) இன்னும் அமெரிக்காவின் பக்கம் உள்ளன.

மாறாக, BRICS நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) அரசியலிலும், பொருளாதார ரீதியிலும் வெகுவாக வேறுபட்டவை. இவர்களிடம் எந்தவொரு நிதி அல்லது இராணுவ ஆதிக்கமும் இல்லை. பெரும்பாலான நாடுகள் எதேச்சதிகார சர்வாதிகாரிகள்  (ரஷ்யா, சீனா, ஈரான், சவுதி அரேபியா), அல்லது பலவீனமான புதிய தாராளமய முதலாளித்துவ நாடுகள் (தென் ஆப்பிரிக்கா, இந்தியா) — இவை தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதிக்கவில்லை. ஏகாதிபத்தியத்திலிருந்து முற்றிலும் விலகி, தன்னாட்சி வாய்ந்த வளர்ச்சி பாதையை எடுத்துச் செல்ல வேண்டுமானால், முக்கிய பொருளாதாரத் துறைகள் பொதுத்துறையாக மாற்றப்பட வேண்டும், நாடாளுமன்றக் கட்டுப்பாட்டில் இருக்கும் திட்டமிட்ட முதலீடுகள் தேவை, தொழிலாளி வர்க்க ஜனநாயகம் மற்றும் சர்வதேச ஒருங்கிணைந்த வெளியுறவுக் கொள்கை தேவை. இவை தற்போது சீனாவிலும் கூட இல்லை. மாறாக, BRICS தலைவர்கள் இத்தகைய கொள்கைகளை தீவிரமாக எதிர்க்கின்றனர்.

டிரம்ப் தனது வரிவிதிப்புகளை “வேலைகளை மீண்டும் கொண்டு வருவது” மற்றும் “அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாப்பது” எனச் சித்திரித்துள்ளார். ஆனால் தொழிலாளி வர்க்க சக்திகள் இந்த வரிவிதிப்புகளுக்கும், உலகின் வடகிழக்கு அல்லது தெற்குப் பகுதிகளில் இருந்து எதிர்வினையாக வரும் பிற வரிவிதிப்புகளுக்கும் எதைச் செய்ய வேண்டும்?

பல அமெரிக்க தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த வரிவிதிப்புகளை ஆதரிக்கின்றனர் — இது வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் உள்ளூர் தொழில்துறைகளை மீண்டும் வளர்த்தெடுக்கும் என நம்புகிறார்கள். ஆனால் இது தவறான நம்பிக்கை. இந்த வரிவிதிப்புகள் அமெரிக்கா தன்னிச்சையான பொருள்கள் ஏற்றுமதிகளை குறைக்கும், பணவீக்கம் அதிகரிக்கும், பொருளியல் மந்தநிலைக்கு (recession) அழுத்தும். அத்துடன், டிரம்ப் செல்வந்தர்கள்  மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு பெரும் வரிவிலக்குகளை வழங்கும் திட்டத்தில் இருக்கிறார் — இதற்கு செலவழிக்க அரசு சேவைகள், மருத்துவக் காப்பீடு மற்றும் நலத்திட்டங்களை குறைப்பதற்காக திட்டமிடுகிறார்.

அமெரிக்க தொழிலாளர் தலைவர்கள், அனைத்து சேவை குறைப்புகளுக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டும், செல்வந்தர்கள், பெரிய நிறுவனங்களுக்கும் உயர் வரிகள் விதிக்கக் கோர வேண்டும். வங்கிகள் மற்றும் “மெக்னிபிசன்ட் செவன்ஸ்” (பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்) ஆகியவற்றை மக்கள் கட்டுப்பாட்டில் எடுக்கவும், வேலைவாய்ப்பும் உற்பத்தித்திறனும் மேம்படத் தேவையான ஓர் அரசு தலைமையிலான முதலீட்டு திட்டத்தை உருவாக்கவும் அழைப்பு விடுக்க வேண்டும். தொழிற்சங்கத் தலைவர்கள் தேசியவாதம், பாதுகாப்புவாதம் மற்றும் குடியுரிமை எதிர்ப்பைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் — மற்றும் பிற நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கங்களுடன் கூட்டு கொள்கைகளும் உருவாக்க முனைவதுதான் அவசியம்.

தெற்குலகில், தொழிலாளர்கள் மட்டுமன்றி தொழிலாளர் தலைவர்களும் இந்த வரிவிதிப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் — மேலும், தங்கள் நாடுகளின் பொருளாதாரங்களின் மீது மூலதனவாத கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அவர்கள், உலகத் திசைகளில் உள்ள தொழிலாளர் இயக்கங்களுடன் இணைந்து, சுதந்திர வர்த்தகத்திற்கான ஒப்பந்தங்கள், அடக்குமுறையுள்ள கடன்களுக்கு  முடிவுகட்டுவது, மற்றும் பல நாடுகளைப் பாதிக்கத் தொடங்கிவிட்ட உலக வெப்பமயமாதலை எதிர்க்க பயனுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்க, கூட்டு கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பு – ராதா

குறிப்பு: பேட்டியின் ஆங்கில மூலம்

https://links.org.au/behind-trumps-spiralling-tariff-war-interview-marxist-economist-michael-roberts

நன்றி: https://links.org.au/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW