பெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமை-பட்டினிக்கு தள்ளப்படுவர் – அவர்களை காப்பாற்ற வேண்டும்’ – ரகுராம் ராஜன், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி

21 Apr 2020

எதிர்பாராத வருவாயிழப்பு மற்றும் சேமிப்பிழப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இப்போதைக்குத் தேவையான உணவு தானியங்கள் இருந்தாலும் கூட, அடுத்த நடவு பருவத்திற்கு விதைகள் மற்றும் உரங்களை வாங்க விவசாயிகளுக்குப் பணம் தேவை. கடைக்காரர்கள் மீண்டும் விற்பனைப்பொருட்களை வாங்க முதலீட்டுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?” என்று முன்னால் ரிசர்வ் வங்கியின் ஆளுநரான ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்களான அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி ஆகியோர் உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

 

மக்களுக்காக அரசு ஒதுக்கும் நிதியோ அல்லது உணவு தானியங்களோ பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சேராமல் சில இடைத்தரகர்கள் கைகளில் சென்று சேர்ந்துவிடுமோ’ என்கிற அச்சம் மக்களுக்கு எப்போதும் இருந்து வருவது உண்டு. ஆனால் தொற்றுநோய் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்களின் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் ஆபத்தில் உள்ளபோது இது போன்ற கவலைகள் முக்கியமானவையல்ல.

 

நாடு முழுவதும் அல்லது பகுதியளவில் இந்த ஊரடங்கானது தொடரும் என்பது தெளிவாகத் தெரியும் இந்த சூழலில் இப்போதிருக்கும் மிகப் பெரிய கவலை என்னவென்றால், வேலையிழப்பு காரணமாக ஏராளமான மக்கள் அவர்களின் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையான வறுமைக்கு அல்லது பட்டினிக்கு ஆளாவார்கள் என்பதே ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவுகளைப் பெரிய அளவில் அம்மக்கள் மீறும் அபாயத்தை  நாம் காண நேர்கிறது. இந்த நேரத்தில்  நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் ஒரு சமூகமாக, பாதிக்கப்பட்ட அம்மக்களுக்குப் பாதுகாப்புடன் கூடிய நலவாழ்வினை உறுதிப்படுத்துவதே ஆகும்.

 

இதைச் செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இந்திய அரசிடம் உள்ளன; இந்திய இந்திய உணவு கழகம் (Food Corporation of India) உணவுப் பங்குகள் 2020 மார்ச் மாதத்தில் 77 லட்சம் டன்களாக இருந்தன, இது முந்தைய ஆண்டை விட மிக அதிகமாகும். இது இந்தியாவுக்குத் தேவையான அளவாக அறிவுறுத்தப்பட்டுள்ள அளவைவிட  மூன்று மடங்கு அதிகமாகும். ரபி பயிர் (வசந்த காலத்தில் இந்தியாவில் அறுவடை செய்யப்படும் பயிர்)  வருவதால் இது அடுத்த வாரங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற அவசரக்காலத்தில் சேமிப்பில் உள்ள உணவு தானியங்களை மக்களுக்குக் கொடுப்பது மிகமுக்கியமானதாகும். எந்த ஒரு அமைப்பும் இந்த உணவுப்பொருட்களைப் பகிர்ந்தளிப்பதை அரசுக்கு நட்டமாக எண்ணக்கூடாது.

 

உண்மையில் அரசாங்கம் ஏற்கனவே இந்த தானியங்களைப்  பயன்படுத்த விருப்பம் காட்டியுள்ளது. வரும் மூன்று மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் நபருக்கு 5 கிலோ வழங்குவதாக பொது விநியோக திட்டம் மூலம் (Public Distribution System) அறிவித்திருந்தாலும், மூன்று மாதங்கள் என்பது போதுமானதாக இருக்காது. ஏனென்றால்  ஊரடங்கு விரைவில் முடிவடைந்தாலும், பொருளாதாரத்தை மீண்டும் செயல்முறைக்குக் கொண்டுவர சில காலம் எடுக்கும். மிக முக்கியமாக, ஏழைகளில் கணிசமான பகுதியினர் ரேஷன் அட்டை இல்லாமல், புதுப்பிக்கப்படாமல் அல்லது நிராகரிக்கப்பட்டு என எதாவது ஒரு காரணத்தால் பொது விநியோக திட்டம் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, சிறிய மாநிலமான ஜார்க்கண்டில் கூட, ரேஷன் அட்டைகளுக்கான 7 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதைச் சமாளிக்கச் சரியான தீர்வு தற்காலிக ரேஷன் அட்டைகளை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ரேஷன் அட்டை பெற விரும்பும் அனைவருக்கும் எந்த பாரபட்சமுமின்றி வழங்க வேண்டும். இது போல வழங்குவதால், தேவைப்படாத சிலருக்கு அதிகமாகப் பொருள் சேர உதவினாலும் இதனால் ஏற்படும் பலன் ஒப்பிடமுடியாதது.

 

முதலாவதாக, யாரும் பட்டினியோடு இல்லை என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் எல்லா வழியையும் பயன்படுத்த வேண்டும். மேலே குறிப்பிட்டதுபோல பொது விநியோக திட்டம்தை விரிவுபடுத்த வேண்டும். புலம்பெயர்ந்தோர் மற்றும் வீட்டிலிருந்து விலகி இருக்கும் மற்றவர்களுக்கு பொது சிற்றுண்டிச்சாலைகளை (Public Canteens) அமைத்தல், பள்ளி மாணவர்களுக்கு மத்திய உணவுக்குச் சமமான தொகையை இப்போது வீட்டில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு அனுப்புதல் (சில மாநிலங்களில் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறார்கள்), மற்றும் அரசாங்கத்தின் பார்வைக்கு வராத மிகவும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு உதவி செய்ய உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்துதல் போன்ற எல்லா வழிமுறைகளையும் கையாள வேண்டும்.

 

இரண்டாவதாக, பட்டினியைப் பற்றிக் கவலைப்படுவது நமக்கிருக்கும் கவலைகளில் ஒன்றாகும். இப்போதைக்குத் தேவையான உணவுப்பொருள்  பாதுகாக்கப்பட்டிருந்தாலும், எதிர்பாராத வருமானம் மற்றும் சேமிப்பு இழப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அடுத்த நடவு பருவத்திற்கு விதைகள் மற்றும் உரங்களை வாங்க விவசாயிகளுக்குப் பணம் தேவை; கடைக்காரர்கள் மீண்டும் தங்கள் அலமாரிகளை எவ்வாறு நிரப்புவார்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்; ஏற்கனவே செலுத்த வேண்டிய கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவார்கள் என்று பலர் கவலைப்பட வேண்டும். ஒரு சமூகமாக, இந்த கவலைகளை நம்மால் புறக்கணிக்க முடியாது.

 

அரசாங்கம் விவசாயிகள்  உட்பட சிலதரப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த உதவியானது மிகச்சிறிய அளவிலான மக்களை உள்ளடக்கியதாகவும் தேவைக்கு மிகக்குறைவானதாகவும் உள்ளது. இந்த உதவிகளை நிலமுள்ள விவசாயிகளுக்கு மட்டும் கொடுக்காமல் நிலமற்ற தொழிலாளர்களுக்கும் கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் மூலம்  வழங்கப்பட்டுவந்த உதவியானது ஊரடங்கினால் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நிலமற்ற உழைக்கும் மக்களையும் உதவித்திட்டத்திற்குள் உள்ளடக்குவது அவசியமானது. அதுமட்டுமல்லாமல் நகர்ப்புற ஏழைகளுக்கும் உதவி வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற உதவித்திட்டங்களை அமல்படுத்துகையில் எல்லாத்தரப்பு மக்களையும் அது உள்ளடக்கியுள்ளதா என்பதையே முதன்மையாகக் கருதவேண்டும். முன்னால் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கூறுவது போல 2019ம் ஆண்டுவரை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் பதிவுசெய்துள்ளவர்கள், ஜான் ஆரோக்யா(Jan Arogya) மற்றும் உஜ்வாலா  (Ujjwala) திட்டத்தில் பதிவுசெய்துள்ளவர்கள் ஆகியோரை ஏழைகளாகக் கணக்கிற்கொண்டு அவர்களுடைய Jan Dhan வங்கிக்கணக்குகளில்  5000 ரூபாய் வழங்குவது முதல்கட்டமாக ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்கும். இங்கும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டியது இந்த நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் இந்த திட்டங்களில் மூலம் பயனடையமாட்டார்கள். அரசின் இந்த தரவுகள் முழுமையானதாக இல்லை. ரோஹினி பாண்டே, கார்த்திக் முரளிதரன் மற்றும் பிறரின் சமீபத்திய ஆய்வின் மூலம் இந்த திட்டங்கள் ஏழை மக்களைச் சென்று சேர்வதற்குத் தடையாக ஏராளமான நிர்வாகக்கோளாறுகள் இருப்பதை நம்மால் உறுதிசெய்யமுடியும். ஆகையால், ஏழைகளைத் தவறவிடக்கூடாது என்ற உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, தீவிர பற்றாக்குறையால் பாதிக்கப்படுபவர்களைச் சென்றடையப் பயனுள்ள வழிகளைக் கண்டறிய மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் பயன்படுத்தக்கூடிய நிதியைக்  கிடைக்கச் செய்ய வேண்டும்.

 

மிகவும் துணிச்சலான மற்றும் சவால் நிறைந்த  நடவடிக்கை தேவைப்படும் ஒரு காலத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். அரசு வரவிருக்கும் மாதங்களில் நிதி ஆதாரங்களுக்கான அபரிமிதமான தேவையைப் புத்திசாலித்தனமாகச் செலவழிக்க வேண்டும், ஆனால் அதற்காக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதைத் தவிர்ப்பது அல்லது தேவையான உதவியைச் செய்யாமல் போவது  நிச்சயம் அழிவுக்கு வழிவகுக்கும்.

– ரகுராம் ராஜன், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி

 

தமிழில்; ராதா

 

https://indianexpress.com/article/opinion/coronavirus-india-lockdown-economy-amartya-sen-raghuram-rajan-abhijit-banerjee-6364521/

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW