வட இந்தியாவில் காவிமயமாகி வரும் அரசு இயந்திரம் – தோழர் லோகேஷ்

08 May 2025

2014க்குப் பின்னர் இந்தியாவில் — குறிப்பாக வடஇந்திய மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத் போன்ற பகுதிகளில் — இசுலாமிய சமூகம் மதம் மற்றும் அரசியல் பெயரால் ஒடுக்குமுறை, பாகுபாடு மற்றும் அரசியல் புறக்கணிப்பு போன்றவற்றிற்கு உள்ளாகி இருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த மோதல்களின் மையத்தில், காவி-கார்ப்பரேட் கொள்கையை முன்னிறுத்தும்  பாசக, மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்பை சிதைக்கும் பணியை நடத்திக் கொண்டிருக்கின்றது .

2023-24ல் ஹோலி, ராமநவமி, ரமலான் போன்ற மத நிகழ்வுகளின் போது , அரசு இயந்திரம் குறிப்பாக காவல்துறை நடந்து கொண்ட விதமே இதற்கு சான்றுகளாக உள்ளன.

உத்தரபிரதேசத்தில், 2023 ஆம் ஆண்டில் ஹோலி கொண்டாட்டத்தின்போது 10 மசூதிகளை தார் பாய்க்களால் மூடும் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது பாசக அரசு .

இந்து மத ஊர்வலங்களின் பாதையில் உள்ள மசூதிகளை “சமூக ஒற்றுமை” என்ற பெயரில் மறைத்ததுடன், இசுலாமியர்கள் தொழுகை நேரத்தை மாற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டது.

மேலும், ஹோலியில் ஒருவர் மீது  ஒருவர் வண்ணம் பூசுவதால் தொந்தரவு ஏதும் ஏற்படாமல் இருக்க எச்சரிக்கை நடவடிக்கையாக இசுலாமியர்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே தங்குமாறு அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறியது போன்றவை மதபாகுபாட்டை சட்டப்பூர்வமாக மற்றும் மிக வெளிப்படையான இசுலாமியர்கள் மீதான தாக்குதலாக இருக்கிறது.

சம்பல் நக ரகாவல் கண்காணிப்பாளர் போன்றோரின் “ஒற்றுமை” பேச்சுக்கள், உண்மையில் இசுலாமியர்களின் மதச்சுதந்திரங்களைக் குறைப்பதற்கான முக்கியமான காரணியாக செயல்பட்டன.

இதேபோன்று, 2024 ரமலான் கொண்டாட்டத்திற்கு முன்னர், வீதிகளில் தொழுகை செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. தொழுகைக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள் மட்டும் இசுலாமியர்களைக் கட்டுப்படுத்தியதுடன், ட்ரோன், சிசிடிவி மூலம் கண்காணிப்பு, ஒலிபெருக்கி பயன்பாட்டில் கட்டுப்பாடு போன்றவை சட்டத்தின் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும், மீரட் காவல்துறை, வீதியில் தொழுகை நடத்தினால் கடவுச் சீட்டு ரத்து, இந்தியக் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்று மிரட்டியது. இது, இசுலாமியர்களின் அன்றாட வாழ்வியல் உரிமைகளை (எ.கா., பயணம், வேலை) நேரடியாக பாதிக்கும் தன்மை கொண்டது.

சம்மு காசுமீரில் ஈத்கா மைதானம், ஜாமியா மசூதி உள்ளிட்ட முக்கிய மத இடங்களில் ரமலான் தொழுகையை தடை செய்தது போன்றவை காசுமீரியர்களின்மத-அரசியல் உரிமைகளை ஒடுக்கும் ஆளும் பாசக அரசின் திட்டமிட்ட உத்தியாகும். 370-வது பிரிவு நீக்கம் (2019)க்குப் பிந்தைய காலகட்டத்தில், “கட்டுமான வேலை நடக்கிறது” என்ற போலி அறிவிப்புகளால் மசூதிகளின் வரலாற்று பங்கை அழிக்கும் முயற்சியும் தொடர்கிறது. மத இடங்களை “பாதுகாப்பு” என்ற பெயரில் அரசியல்மயமாக்கி, காசுமீரின் கூட்டு அடையாளத்தை சிதைப்பதே பாசக அரசின் முக்கிய நோக்கமாகும்.

இந்த கட்டுப்பாடுகளுக்கு எல்லாம் ஆளும் பாசக அரசு,    “சட்டஒழுங்கு” மற்றும் “சமூக நல்லிணக்கம்” பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. உதாரணமாக, ஹோலி, ராமநவமி போன்ற இந்து திருவிழாக்களில் பொது இடங்களைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை. மாறாக, ஈத், ஜும் ஆ தொழுகை போன்ற இசுலாமிய சடங்குகள் மீது மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படுகிறது .

இதுபோன்ற அரசு அறிவிப்புகள், சட்டங்கள் மதஒற்றுமை என்பதைவிட, கட்டாய ஒற்றுமையை ஏற்படுத்தும் அரசியல் காரணிகளாக செயல்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாசகவின் இந்துத்துவ அரசியலின் நேரடி உத்திகளே . 2014க்குப்பின், அயோத்தி பாபர்  மசூதி-ராமர் கோவில் வழக்கு, மதராசாக்கள் மீதான தாக்குதல்கள், காசுமீருக்கான சிறப்புத் தகுதி பிரிவு 370 ரத்து , இசுலாமிய சமூகத்தை பொது சமூகத்தில் இருந்து வெளியேற்றும் திட்டங்களாக உள்ளன. மேலும், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத் போன்ற பாசக ஆட்சியிலுள்ள மாநிலங்களில், இசுலாமிய தொழிலாளர்கள், வணிகர்கள் மீதான தாக்குதல்கள் (எ.கா., கோமாதா சட்டத்தின் பெயரில் இழிவுபடுத்தல்), மசூதிகள் நிதித் துண்டிப்பு, இசுலாமிய பெண்களுக்கு எதிரான ஹிஜாப் தடை முயற்சிகள் போன்றவை இந்த ஒடுக்குமுறையின் அடையாளங்கள் ஆகும்.

இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கட்டமைப்பு, இசுலாமிய சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியுள்ளது. “பொது ஒழுங்கு” மற்றும் “தேசிய பாதுகாப்பு” போன்ற சொற்கள், மத அடிப்படையிலானபாகுபாடுகளுக்கு சட்டப்பூர்வமான மூடுமந்திரமாக மாறிவிட்டன. இந்தியாவின் சமூக-அரசியல் இயல்பு, மதச்சார்பற்ற நிலையில் இருந்து மத அடிப்படைவாதத்திற்கு மாறுவதற்கான அபாயங்களை இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW