அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என்பது சம்பளம் உயர்வுக்கான போராட்டம் மட்டுமா?

29 Jan 2019

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சனவரி 22, 2019 முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. பேச்சு வார்த்தையின் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராத தமிழக அரசு, கூட்டமைப்பு நிர்வாகிகளை இரவோடு இரவாக கைது செய்வது, சிறையில் அடைப்பது, பணியிடை நீக்கம் செய்வது, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது. 28 சனவரி அன்று மட்டும் 800 பேரை பிணையில் வர முடியாத பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 1000 க்கு மேற்பட்டவர்களுக்கு பணியிடை நீக்க ஆணை கொடுத்திருத்திருகிறது எடப்பாடி  பழனிச்சாமி அரசு. இது வன்மையாகக் கண்டிக்கதக்க செயல் ஆகும்.

அதிமுக ஆட்சி காலத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு இதே கோரிக்கைகளுக்காக 2 முறை போராட்டங்களை நடத்தி நீதிமன்ற தலையீடு காரணமாக கைவிட்டது. அப்போது அதிமுக அரசு ஒரு நபர் குழு அமைத்து கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறியது. இப்போது ஒரு நபர் குழு பரிந்துரைகளை வழங்கி இருக்கிற சூழலில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைகளை புறக்கணித்து வீதியில் இறங்கி இருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும், ஆளும் அதிமுக அரசு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை கண்டறிந்து பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதை விட ’அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள், அரசின் வருமானத்தில் 71% சம்பளம், ஓய்வூதியத்திற்காகவே செலவு செய்யப்படுகிறது’ என அவர்களின் சம்பள விவரங்களை நாளிதழ்களில் வெளியிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எதிராக பொது மக்களை திசை திருப்புவதை ஒரு உத்தியாக கையாண்டு வருகிறது.

போராடும் அரசு ஊழியர்கள் என்பவர் யார்?

தமிழ் நாட்டில் 2014 தேர்தலுக்கு பின்னான அதிமுக தலைமையிலான அரசு என்பது ஒரு செயல்படாத அரசாகவே இருந்து வருகிறது. அது சென்னை பெருவெள்ளமாக இருந்தாலும், வர்தா புயலானாலும், ஒக்கி புயலானாலும், கஜா புயலானாலும் அரசின் பிரதிநிதியாக மக்களின் துயர் துடைப்பு பணியில் களத்தில் நிற்பவர்கள் அரசு ஊழியர்கள் தான். பெருவெள்ளத்திற்கு பிறகு தொற்று நோய்களின் தாக்குதலில் இருந்து முற்றிலுமாக சென்னை மக்களை காப்பாற்றியவர்கள் நமது சுகாதாரத்துறை ஊழியர்கள்,துப்புரவு பணியாளர்கள்,மாநகராட்சி ஊழியர்கள். பெருவெள்ளத்தில் சிக்கிய மக்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியவர்கள் நமது அரசு போக்குவரத்து ஊழியர்கள். குடி நீர் உள்பட அனைத்திற்கும் மின்சாரத்தை சார்ந்து இருக்கிற இன்றைய சூழலில், கஜா புயலின் கொடூர தாக்குதலால் சிதைந்து போன காவிரி பாசனப்பகுதிக்கு இரவு பகலாக வேலை செய்து மின்சாரத்தை கொண்டு வந்து மக்கள் மீண்டெழ காரணமாக இருந்தவர்கள் நமது மின்சாரத்துறை ஊழியர்கள். கடந்த சில ஆண்டுகளாக, உள்ளாட்சி தேர்தலே நடக்காத சூழலில், மக்கள் பிரதிநிதிகளே இல்லாத நிலையில், போதிய நிதி ஒதுக்காத நிலையில், தமிழ் நாட்டின் நிர்வாகம் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பதும் இந்த அரசு ஊழியர்களால் தான். அரசு துறை பணிகள் என்பது குடி மக்களுக்கான சேவையாகும்.

அரசு பள்ளிகளின் தரம் குறைய யார் காரணம்?

அதே போல், ஒவ்வொரு முறையும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும் போது, ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள், ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பதில்லை என பரவலாக ஆட்சியாளர்களிடம் இருந்தே குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அரசு பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு முதன்மை காரணம் யார்? அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கொடுப்பது என்பது அரசின் கடமை என்ற கொள்கையை மாற்றியது யார்? பள்ளி கல்வி சேவையில் தனியாரை அனுமதிக்கும் கொள்கையை கொண்டு வந்தது யார்? அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல்,போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டது எதற்காக? இவை அனைத்தும் கல்வி சேவை என்பதை ஒழித்து லாபம் கொழிக்கும் ஒரு வியாபாரமாக மாற்ற நினைத்த உலக வர்த்தக நிறுவனத்தோடு போட்ட முதலாளிகளின் நலன் சார்ந்த கொள்கை முடிவால் வந்த விளைவு தானே? சிறிது சிறிதாக அரசு பள்ளிகளை தரமற்றதாக மாற்றி, அரசு பள்ளிகளை தவிர்த்து, மக்களே தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் நிலையை உருவாக்கி, குறைந்த மாணவர் சேர்க்கை என்ற காரணத்தை காட்டி அரசு பள்ளிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூடு விழா நடத்தி, பள்ளி கல்வியை முதலாளிகளின் கையில் ஒப்படைக்கும் முயற்சியால் வந்தது தானே?

போராட்டத்தில் 53 அரசு துறைகளைச் சார்ந்த கீழ் நிலை ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள்,ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ள போதும், இது வெறும் ஆசிரியர்களின் போராட்டமாக அதிக சம்பளம் வாங்குகிற அரசு ஊழியர்களின் போராட்டமாக மக்களிடம் திசை திருப்புகிற அதிமுக அரசின் முயற்சி எத்தனை அயோக்கியத்தனமானது?

புதிய ஓய்வூதிய திட்டம் என்பது என்ன?

அரசுத் துறையில் 33 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அரசே நிதி ஒதுக்கி, முழு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கிய நிலையை மாற்றி, பங்களிப்பு ஓய்வூதியம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை 2003 இல் இந்தியாவிலேயே முதலில் கொண்டு வந்தது தமிழக அரசு தான். இது மக்கள் நல அரசுகள் தன்னுடைய நிதியில் இருந்து ஊழியர்களுக்கு வழங்கிக்கொண்டு இருந்த சமூக பாதுகாப்பு திட்டமான ஓய்வூதிய திட்டத்தை ‘நிர்வாகச் செலவை கட்டுப்படுத்துதல்’ என்ற பெயரில் கைவிடச் செய்கிற ஒன்றாகும். இது உலகம் முழுக்க கடனுதவி என்ற பெயரில் அரசுகளை கட்டுப்படுத்துகிற உலக வங்கி போன்றவைகளின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறுகிற ஒரு நிகழ்வு போக்காகும்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில்(contributory pension scheme) ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிற 10% பணமும், 14% அரசின் பங்களிப்பும் ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஓய்வூதியத்திற்காக அரசு செய்த செலவில் பாதியை ஊழியர்கள் தலையில் கட்டி விட்டது அரசு. ஓய்வு பெரும் வயதில் சேர்ந்த பணத்தில் 60% ஊழியரிடம் கொடுக்கப்பட்டு, மீதி 40% பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும் என்கிறது புதிய திட்டம். பல ஆண்டுகளாக கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த, வயதான காலத்தில் சுயமரியாதையோடு பாதுகாப்பாக வாழ உதவுகிற, ஊழியர்களின் கோடிக்கணக்கான பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்பது நிதி மூலதன கும்பலுக்கு சேவை செய்யவதற்காகவே. மேலும், பங்கு சந்தை முதலீட்டில் இருந்து வருமானம் என்பது நிச்சயமில்லாதது. இதன் மூலம் ஓய்வு பெற்றவர்களின் வாழ்க்கை பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது இந்த புதிய ஓய்வூதிய திட்டம். இது லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரச்சினை. 2003 இல் இருந்து இன்று வரை புதிய ஓய்வூதிய திட்டத்தில் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 24,000 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்கிறார்கள். இத்தனை சிக்கல் நிறைந்த இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றுங்கள் என்று கோரிக்கை எழுப்புவது நியாயமான ஒன்று தானே? போக்குவரத்து ஊழியர்களின் கோடிக்கணக்கான ஓய்வூதியப் பணத்தை கருணையேயின்றி களவாடிய கொள்ளை கும்பல் அதிகாரத்தில் இருக்கும்போது தங்கள் சேமிப்பு பணம் என்ன ஆனது எனது ஊழியர்கள் கவலை கொள்வது இயல்புதானே?

தற்காலிக ஊழியர்களின் கோரிக்கைகள்

நிரந்தர ஊழியர்கள் செய்யக்கூடிய வேலைகளில் பல வருடங்களாக பணிபுரிந்து கொண்டு ஆனால், நிரந்தர ஊழியர்கள் பெறும் சம்பளத்திற்கு இணையான சம்பளம் கிடைக்காமல், பணிப் பாதுகாப்பும் அற்ற சூழலில் இருக்கின்ற சத்துணவு, ஊராட்சி செயலாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களின் சம்பளத்தை நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளமாக அடிப்படை சம்பளம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு அம்சங்களோடு மாற்றி அமைக்கவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 2004-2006 வரையில் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோருகிறார்கள். நிரந்தர பணிகளில் தற்காலிக ஊழியர்களை நியமிக்கக்கூடாது என சட்டம் இருந்தாலும் லாப நோக்கத்தில் செயல்படுகிற தனியார் முதலாளிகளைப் போல அரசே செயல்படுகிறது. இந்த தற்காலிக ஊழியர்களைக் காக்கவுமே இந்த போராட்டம்.

அரசாணை 56 & பணியாளர் சீரமைப்பு குழு

தமிழக அரசு துறையில் உள்ள பல்வேறு பணியிடங்கள் குறித்து ஆராய்ந்து, தேவையில்லாத பணியிடங்கள் எவை எவை என்று கண்டெடுத்து அவற்றை தனியாரிடம் ஒப்படைப்பது அதன் மூலம் அரசின் செலவினத்தை கட்டுப்படுத்துவது என்ற நோக்கத்தில் தமிழக அரசு அரசாணை 56 மூலம் ஓய்வு பெற்ற அதிகாரி ஆதிசேசய்யா, ஐ.ஏ.எஸ் தலைமையில் பணியாளர் சீரமைப்பு குழுவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நிரந்தர வேலையாக இருந்த சான்றிதழ் கொடுக்கும் கணினி சார்ந்த வேலைகள் (இ.சேவை),அலுவலக காவலாளி, துப்புரவு பணியாளர்கள் போன்ற பல்வேறு அரசுத்துறை வேலைகள் கடை நிலை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. எனவே, இந்தக் குழு வைக்கும் பரிந்துரை வாயிலாக ஏறக்குறைய 3 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை ஒழிக்கும் முயற்சி நடக்கிறது.

2011 ஆண்டு கணக்கெடுப்புப்படி அமெரிக்காவில் 1 லட்சம் மக்களுக்கு அரசு சேவை வழங்க 7,681 அரசு ஊழியர்கள் உள்ளனர். 8 கோடி மக்கள் தொகைக் கொண்ட தமிழ் நாட்டில் 1 லட்சம் பேருக்கு அரசு சேவை வழங்க வெறும் 1,500 பேர் தான் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் அரசு ஊழியர்கள் மீது உள்ள பணிச் சுமையையும், அரசு வழங்கும் சேவையின் தரத்தையுமே இது காட்டுகிறது.

தனியார் துறையில் பணிப்பாதுகாப்பும் சமூக பாதுகாப்பும் அற்ற சூழலில் ,வளரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தரமான சேவையை வழங்க, அரசுத்துறையில் மேலும் பணியிடங்களை அதிகரிப்பதை விடுத்து, இருக்கின்ற வேலைகளையும் ஒழிப்பது என்பது இன்றைய அரசு ஊழியர்களின் பிரச்சினை அல்ல, பாதுகாப்பான நிரந்திரமான அரசு வேலை கனவுகளோடு பள்ளிகளில், கல்லூரிகளில் படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களின், படித்து விட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்துகொண்டு இருக்கிற வேலையில்லா லட்சக்கணக்கான இளைஞர்களின் பிரச்சினை ஆகும்.  கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தரமான அரசு சேவையை பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு மறுக்கின்ற முயற்சியாகும்.

எதிர்கால தலைமுறையினருக்கான உத்திரவாதமுள்ள வேலைக்கான, குடிமக்களுக்கான தரமான அரசு சேவைக்கான போராட்டம் தான் இன்றைய ஜாக்டோ-ஜியோ போராட்டம்.

அரசு பள்ளிகளை மூடுதல்/இணைத்தலுக்கு எதிரான போராட்டம்

5000 அரசு பள்ளிகளை மூடுகிற முடிவை எதிர்த்தும் 3500 தொடக்கப்பள்ளிகளை உயர் நிலை/மேல் நிலைப் பள்ளிகளோடு இணைக்கிற முடிவை எதிர்த்தும் 3500 சத்துணவு மையங்களை மூடுவதை எதிர்த்தும் ஜாக்டோ-ஜியோ வின் போராட்டம் நடக்கிறது.

ஏற்கனவே மத்திய அரசு 1-7 வரை, 9-12 வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கான திட்டங்களை ஒரே திட்டமாக மாற்றி விட்டது. அதன் படி, 15 மாணவர்களுக்கு குறைவாக மாணவர் வருகை உள்ள பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி உதவியை இந்த வருடம் ஆரம்பத்தில் நிறுத்தி இருக்கிறது. எனவே, குறைந்த மாணவர் வருகை உள்ள பள்ளிகளை உயர் நிலை/மேல் நிலைப் பள்ளிகளோடு இணைக்கவோ அல்லது மூடி விடவோ தமிழக அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதே காரணத்திற்காக, சத்துணவு கூடங்களையும் மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், 15-100 வரை வருகைப் பதிவு உள்ள 25,000 பள்ளிகளும் எதிர்காலத்தில் நிதி உதவி மறுக்கப்படுகிற சூழல் வரலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர். இது ஒட்டு மொத்தமாக அரசு பள்ளிகளை ஒழித்து பள்ளிக் கல்வியை தனியார் வசம் ஒப்படைக்கிற முயற்சியாகும். மேலும் கடந்த 2011 ஆண்டில் கட்டாயக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதில்(Right of Children to Free and Compulsory Education Act) இருந்து, ஏறக்குறைய 3 லட்சம் மாணவர்கள் அரசின் நிதி உதவி மூலமாகவே தனியார் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு விட்டதாக தெரிகிறது.

பள்ளிக் கல்வியில் அரசின் இந்த மாற்றங்கள் கிராமப்புற,ஏழை எளிய மாணவர்களை குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வியை மறுக்கிற சமூக நீதிக்கு எதிரான பிரச்சினையாகும். தரமான பள்ளிக் கல்வியை அனைவருக்கும் மறுத்து கல்வியை வியாபார பண்டமாக மாற்றுகிற முயற்சியாகும்.

எனவே, ஜாக்டோ-ஜியோ போராட்டம் என்பது அரசு பள்ளிக் கல்வியை/ பள்ளிகளை காப்பாற்றும் போராட்டமாகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் பிரச்சினையாகும். கல்வித் துறையில் இருக்கிற ஆயிரக்கணக்கான அரசு ஆசிரியர் வேலைகளை ஒழிக்கிற வகையில் எதிர்கால இளைஞர்களின் நிரந்திர வேலை வாய்ப்புகளை ஒழிக்கிற முயற்சியாகும்.

அங்கவாடி மையங்களில் எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்புகள்

தாய்மொழிக் கல்வி தான் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது என உலகம் முழுக்க கல்வியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், மத்திய அரசிடம் இழந்துவிட்ட, தமிழகத்தின் கல்விக் கொள்கையை தீர்மானிக்கும் அதிகாரத்தை மீட்டெடுக்கும் துணிச்சல் அற்ற திராவிட கட்சிகள் இரு மொழிக்கொள்கை என்பதன் மூலம் ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவித்து விட்டன. இப்போது அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை ஆரம்பிப்பதில் வந்து நிற்கின்றன. அதற்கும் தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், இடை நிலை ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு போட்டுள்ளது. அதற்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. 1,075 ஆசிரியர் பணியிடங்கள் தொடக்க/ நடு நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்க, 1,909 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறியதை உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என விதி இருக்க, அதில் இருந்தும் விலக்கு பெற தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்து இருக்கிறது.

மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை எல்கேஜி,யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்க வேண்டும் இடை நிலை ஆசிரியர்களை மாற்றக் கூடாது எனக் கோரி ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடைபெறுகிறது.

ஆனால், இதையெல்லாம் மறைத்து விட்டு, ஆசிரியர்கள் பேராசை பிடித்தவர்கள் அதிக சம்பளத்திற்காக மட்டுமே சுய நலத்திற்காக போராடிக்கொண்டு இருப்பதாக திசை திருப்பிக்கொண்டு இருக்கிறது மோடி அரசின் அடிமையாக மாறிப் போன அதிமுக அரசு.

 யார் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள்?

அரசின் வருமானத்தில் 71% சதவீதம் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்குமே போய் விடுகிறது என பொய்யான பரப்புரையை அரசே செய்கிறது. உண்மையில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. 7 வது ஊதிய குழு பரிந்துரைப்படி குறைந்த பட்ச சம்பளம் ரூ.18,000 வழங்கப்பட வேண்டும். ஆனால், 2017 ஆண்டு தான், குறைந்த பட்ச சம்பளம் ரூ.6000 இல் இருந்து ரூ.15,700 ஆகவும், அதிக பட்ச சம்பளம் ரூ.77,000 இல் இருந்து ரூ.2,25,000 ஆக உயரும் என முதலமைச்சர் அறிவித்தார்.

ஓர் அரசு உயர் அதிகாரிக்கு கொடுக்கிற சம்பள உயர்வு என்பது 15 கடை நிலை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு சமமாகும்.

இங்கே ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஆளும் அதிமுக அரசால் கொச்சைப் படுத்தப்படுவதற்கு காரணம் இது கடை நிலை அரசு ஊழியர்களின் போராட்டமாக இருப்பதால் தான்.

தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறைக்கு என்ன காரணம்?

30-40 வருடம் அரசு துறைகளில் பணி, ஆசிரியர் பணி செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்க அரசிடம் நிதி வருமானம் இல்லை என அதிமுக அரசு திரும்ப திரும்ப கூறி வருகிறது.

2011-12 ஆண்டு வரை உபரி வருமானத்தில் இருந்த தமிழக அரசின் நிதி நிலைமை இவ்வளவு மோசமாக என்ன காரணம்?

2015 ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த கால கட்டத்தில் கொண்டு வரப்பட்ட 14 வது நிதி குழு பரிந்துரைகளை ஏற்ற காரணத்தால் தமிழக அரசு சந்தித்த நிதி இழப்பு மட்டும் 6000 கோடி. இது குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாக நடைமுறைக்கு வராத 1971 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இருந்து வரிப்பணத்தை பகிர்ந்தளிக்கும் நடைமுறையில் இருந்து மோடி அரசு 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கு அடிப்படையில் வரிப் பணத்தை பகிர்ந்தளிக்கும் முறைக்கு நிதிக் குழு மாறியதால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு. பெண்களுக்கு அதிக அளவில் கல்வி வாய்ப்பை வழங்கியதன் மூலமும் குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை முறையாக அமல்படுத்திய காரணத்தாலும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த ஒரே காரணத்தால் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய நிதி பங்கீட்டில் இருந்து ஏற்பட்ட மிக முக்கியமான இழப்பு இது.

2016 நவம்பர் 8 அன்று நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்திய மோடி அரசின் பண மதிப்பிழப்பும் அதனால் சிறு குறு தொழில்கள் சந்தித்த நெருக்கடியும் தமிழக அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பும் அடுத்த முக்கியமான ஒன்று.

70%:30% என்று மத்திய மாநில அரசின் நிதி உதவியோடு நடந்து வந்த பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கான நிதியை 60% : 40% என மோடி அரசு மாற்றியது

2015 சென்னை பெருவெள்ளம், வர்தா புயல்,கஜா புயல்,ஒக்கி புயல் என தொடர்ந்து தமிழகம் சந்தித்த இயற்கை பேரிடர்களும் அதற்கு போதிய நிதி உதவியை வழங்காத மோடி அரசும்

இப்படி மோடி அரசு கொண்டு வந்த பொருளாதார மாற்றங்கள் தமிழக அரசின் நிதி நிலையை புரட்டி போட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க பணம் இல்லை எனச் சொல்கிற அதிமுக அரசுக்கு,

நிதி வருமானம் இல்லாத சூழலில், பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 கொடுக்க எங்கே இருந்து நிதி வந்தது?

5 வருடமே பணி புரியும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிக சம்பளம், ஓய்வூதியம்,ஊதிய உயர்வு கொடுக்க எங்கே இருந்து நிதி வந்தது?

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் பணி தொடர்பாக மேலதிகாரிகளுக்கு பொறுப்பு கூறுகிறார்கள் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும், ஆனால், இந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் 5 வருடத்தில் என்ன சாதித்தார்கள் என யார் கண்காணிப்பது? தொகுதிக்கே வராத சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர்? இவர்களுக்கு எந்த அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்பட்டது?

அரசு ஊழியர்களின் 21 மாத சம்பள உயர்வு நிலுவைத் தொகையை மறுத்த தமிழக அரசுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதித் துறை அதிகாரிகளின் 33 மாத சம்பள நிலுவைத் தொகையை கொடுக்க எங்கே இருந்து நிதி வந்தது?

இவை எல்லவற்றிக்கும் மேலே, ‘சட்டியில் இருந்தால் தானே, அகப்பையில் வரும்’ என்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், இந்த சட்டியில் இருந்ததை யாரேல்லாம் சுரண்டினோம், எப்படியெல்லாம் சுரண்டினோம், எங்கேல்லாம் பதுக்கி வைத்திருக்கிறோம் என்பதெல்லாம் தெரியாதவரா நமது முதலமைச்சர் பழனிச்சாமி?

எனவே, நல்ல கல்வி தகுதி இருந்தும் நிரந்திர வேலையின்றி தவிக்கின்ற லட்சக்கணக்கான இளைஞர்களே, இன்றைய மாணவர்களே, ஐ.டி உள்ளிட்ட தனியார் துறை ஊழியர்களே, அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை ஒழித்து கட்டுகிற அனைவருக்கும் தரமான இலவச கல்வியை மறுக்கிற தமிழக அரசின் தனியார்மயக் கொள்கையே நாம் எதிர்க்க வேண்டிய ஒன்றாகும். இதே கோரிக்கைகளுக்கான போராடுகிற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்தை ஆதரித்து போராட்ட களத்தில் உடன் நிற்பதே நமது இன்றைய கடமையாகும். இதை விடுத்து தற்காலிக ஆசிரியர் பணி என்ற தமிழக அரசின் சூழ்ச்சி வலையில் விழுவது நாம் செய்கிற வரலாற்று பிழையாகும்.

தமிழக அரசே,

  • ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திகோரிக்கையை நிறைவேற்று!
  • கைது செய்தோரை உடனடியாக விடுதலை செய்!
  • பணியிடை நீக்க ஆணையை திரும்பப்பெறு!

பரிமளா,

தலைவர்,

ஐ.டி ஊழியர்கள் மன்றம்,தமிழ் நாடு(Forum for IT Employees-Tamilnadu)

9840713315, parimalafite@gmail.com

https://timesofindia.indiatimes.com/city/chennai/fund-crunch-may-force-government-to-close-down-3000-schools/articleshow/65790715.cms

https://thewire.in/economy/federalism-vs-14th-finance-commission

https://www.thenewsminute.com/article/why-tn-facing-huge-revenue-deficit-economists-weigh-74522

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW