மக்களவைத் தேர்தல் முடிவுகள் – மிகைப்படுத்தல்களுக்கு அப்பால் – 1
எல்லாத் தரப்பினருக்கும் வெற்றியா? - செந்தில்
மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மோடி 3.0 தொடங்கிவிட்டது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது பாசக. எதிர்க்கட்சி தலைவராகிவிட்டார் ராகுல் காந்தி. வெற்றி – தோல்வி பற்றிய வரையறை மாறிவிட்டதாகவும் இது அனைத்துத் தரப்புக்கும் வெற்றி என்றும் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்ற முழக்கம் எடுபட்டுள்ளது என்றும் மோடி – அமித் ஷாவுக்கு இதுவொரு தோல்வி என்றும் மோடியின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை உத்தரபிரதேசம் புறக்கணித்துவிட்டது என்றும் பன்ஸ்வாராவில் மோடி பேசிய வெறுப்புப் பேச்சு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றும் இராமர் கோயில் பரப்புரைகள் பைசாபாத்தில்கூட செல்லுபடியாகவில்லை என்றும் பல்வேறு மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன.
பாசக ஆட்சி அமைத்துவிட்டது. காங்கிரசு 97 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது. சிவசேனா, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரசு என இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தேர்தல் முடிவுகள் ஒரு மீட்சியாக அமைந்துள்ளன. எனவே, இது எல்லோருக்கும் வெற்றியை வழங்கி, அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
சமமான போட்டி, சமமான வாய்ப்புகள் இன்றி நடத்தப்பட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி இத்தனை இடங்களைப் பெற்றிருப்பது பெறுமதியானதே. சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் பாசக இத்தனை இடங்களைப் பெற்றிருக்க முடியாது என்ற கூற்று சரியானதுதான். அற அடிப்படையில் பார்த்தால் பாசக தோற்றுவிட்டது என்று சொல்ல முடியும். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் ஆட்சி அமைப்பதற்கான மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை. இப்போது நடந்திருப்பதும் அதுவே.
ஒரு சமூகம் மிக உறுதியாக நின்று இந்த ஆட்சியை நிராகரித்திருக்கிறது என்று நாம் அறுதியிட்ட சொல்ல முடியுமென்றால் அது இசுலாமிய சமூகம்தான். அவர்களைப் பொறுத்தவரை அவர்களால் மூன்று முறை நிராகரிக்கப்பட்ட ஒருவர் , மீண்டும் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். இசுலாமியர்களுக்கு எதிரான இனவழிப்பை நிகழ்த்திய குற்றவாளிகள் இருவரை – மோடி – அமித் ஷா வை இந்நாட்டு மக்கள் மூன்றுமுறை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் என்று இசுலாமிய மக்கள் நம்பிக்கை இழந்து போவர்.
தம் சொந்த குடிமக்களை அயலார், ஊடுருவல்காரர்கள், அதிகமான பிள்ளை பெறுபவர்கள் என்றெல்லாம் வசைபாடிய ஒருவர், மீண்டும் தலைமை அமைச்சராக முடிசூடிக் கொண்டுள்ளார். பாசக பெரும்பான்மை இழந்திருப்பதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதும் இசுலாமிய மக்களை ஓரளவுக்கு ஆசுவாசப்படுத்தியிருக்கக் கூடும்.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் மாட்டிறைச்சி வன்கும்பல் அடித்து கொலைகள், மசூதி இடிப்புகள், இசுலாமியர்களின் வீடுகள், கடைகளைத் தாக்குதல் என இசுலாமியருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது குறித்த கவலை மேலோங்கியுள்ளது. ஜூன் 4 முதல் ஜூன் 28 க்குள் ஆறு வன்கும்பல் அடித்துகொலை நிகழ்வுகள் வெளியே தெரிய வந்துள்ளன.
மற்றுமொரு அச்சம் சூழ் ஐந்து ஆண்டுகளுக்குள் இசுலாமியர்கள் தள்ளிவிடப்பட்டுள்ளனர் என்பதை மோடி 3.0 வின் முதல் மாதம் காட்டி நிற்கிறது.
ஜூலை 5 ஆம் நாள் ஸ்டேன் சாமியின் நினைவு நாள். அவர் பாசக அரசின் அடக்குமுறை சட்டங்களால் தலோஜா சிறையில் கொல்லப்பட்டவர். புகழ்ப்பெற்ற பீமா கோரேகான் வழக்கில் அவரைப் போலவே கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்டு சிறைவாசத்திற்குப் பின்னும் பிணைக் கிடைக்காதோர் உள்ளனர். காசுமீரைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ், மாணவ செயற்பாட்டாளர்களான உமர் காலித், சர்ஜில் இமாம் போன்றோர், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தலைவர்களான பேராசிரியர் கோயா, அபு பக்கர் போன்றோர், திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, ஆம் ஆத்மியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போன்ற ஆளும்வர்க்கக் கட்சியினர் என எண்ணற்றோர் ஊபா, பொதுப் பாதுகாப்புச் சட்டம், பணபரிமாற்றத் தடை சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்குமாயின் இவர்களுக்குப் பிணை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கும்.
மாதக்கணக்கில் போராடி நூற்றுக்கணக்கில் உயிர் ஈகம் செய்து விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதை சட்டமாக்கக் கோரிய உழவர்கள், மீண்டும் போராட்டத்திற்கு அணியமாகி வருகின்றனர். அவர்களைப் பொருத்தவரை இக்கோரிக்கையை வென்றெடுப்பதற்கு மற்றொரு போராட்டக் களத்தை உருவாக்கப் போகிறார்கள். எனவே, இந்த தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு மனநிறைவைக் கொடுத்திருக்காது. இதுபோல், நீட், ஜி.எஸ்.டி. என்.ஆர்.சி. சிஏஏ உள்ளிட்ட பற்பல கோரிக்கைகளுக்காக நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டங்கள் தொடர்ந்தாக வேண்டும். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வலுவான எதிர்க்கட்சி இருப்பதும் மக்கள் மன்றத்தில் பாசக செல்வாக்கு இழந்திருப்பதும் இப்போராட்டங்களின் நியாயத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு சாதகமான நிலைமைகள் இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. அந்த அளவில் இம்முடிவுகள் ஆறுதல் தரக்கூடியவை.
அதேநேரத்தில், இந்த தேர்தலின் மையக் கேள்வி என்பது மோடியின் ஆட்சி தொடரலாமா? கூடாதா? என்பதுதான். அப்படி தொடர்ந்தால், இந்நாடு பேரழிவை சந்திக்கக் கூடும் என்பதே மக்கள் முன் வைக்கப்பட்ட எச்சரிக்கை மணி. இதற்கு தேர்தல் முடிவுகளின் வழியாக மக்கள் கொடுத்திருக்கும் பதில் – மோடி 3.0 !
இந்த உண்மையை உள்ளது உள்ளபடி ஏற்று இந்த தோல்விக்கான காரணங்களை பகுத்துப் பார்த்து முன் செல்ல வேண்டும்.”விடுதலைப் புலிகள் போரில் தோற்கவில்லை, முப்பது நாடுகள் ஒன்றுகூடி எதிர்த்துப் போரிட்டன என்று காரணம் சொல்லிக் கொண்டு இன்றுவரை தோல்விக்கான காரணங்களை சிந்திக்காதார்களாக இருப்பது போல் ஆகிவிடும்.
பாசகவும் இந்தியா கூட்டணியும்
’400 இடங்களை வெல்வோம்’ என்று கொக்கரித்தவர்களுக்கு இம்முடிவு ஓர் ஏமாற்றம் என்று மதிப்பிடப்படுகிறது. ஆனால், அரசு இயந்திரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாசகவுக்கு கள நிலைமை பற்றி முற்றிலும் தவறான மதிப்பீடு இருப்பதற்கு வாய்ப்பில்லை. பெரும்பான்மை பெறுவதே பெரும்பாடாக இருக்கும் என்பதை அவர்கள் கட்டாயம் அறிந்து வைத்திருப்பர். ஆனால், பெரும்பான்மை பெறாதவிடத்தும் அதிகபட்ச இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் திட்டமிட்டிருப்பர்.
பாசக தேர்தல் களத்தின் ஒவ்வொரு முனையிலும் கடும் சவாலாக இருந்தது. இசுலாமியருக்கு எதிரான வெறுப்புப் பேச்சைக் கட்டவிழ்த்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் சின்னங்களை முடக்கி, தேர்தல் அறிக்கைகள் குறித்து பொய்யையும் புரட்டையும் பேசி, தமக்கேற்றாற் போல் தேர்தல் கால அட்டவணையைத் திட்டமிட்டு, கருத்துகணிப்புகளில் பொய்யான சித்திரத்தைக் காட்டி, எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை சட்டங்களை ஏவி, காங்கிரசின் வங்கிக் கணக்கை முடக்கி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் பணத்தைச் சுருட்டிக் கொண்டு, அதிகம் அதிகம் புதிய வேட்பாளர்களை நிறுத்தி, சாதி, மத, இன உணர்ச்சிகளை தூண்டிவிட்டு, அரை நூற்றாண்டுக்கு முன்னால் போடப்பட்ட கச்சத்தீவு உடன்படிக்கையைக் கிளறி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காசுமீரைக் கைப்பற்றுவோம், அணு குண்டுக்கு அஞ்சோம் என அதிரடியாகப் பேசி – இப்படி பல்வேறு உத்திகளைக் கையாண்டு கடினமான நிலைமையிலும் தமது இழப்புகளை எவ்வளவுக்கு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைத்தனர். எனவே, பாசகவைப் பொருத்தவரை அதன் மூளையாக செயல்பட்டவர்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் அதிகம் வியப்பளித்திருக்காது.
பெரும் பொருளாதார நெருக்கடி, வரலாறு காணாத வேலையின்மை, விலைவாசி உயர்வு, உழவர் போராட்டம், கொரோனா மரணங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள், வன்முறைகள், மாநில உரிமை மீறல், மாநிலக் கட்சிகளை உடைப்பது என எல்லா முனைகளிலும் தோற்றுப்போன ஆட்சி, பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் மக்களால் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என்பது கருதிப் பார்க்க வேண்டிய உண்மையாகும்.
மறுபுறத்தில், இந்தியா கூட்டணியோ இத்தேர்தலை வாழ்வா? சாவா? தேர்தலாக கருதி வினையாற்றவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் போன்றோரைக் கூட்டணியில் தக்க வைக்க முடியவில்லை. மராட்டியத்தில் பிரகாஷ் அம்பேதகரை கூட்டணிக்குள் கொண்டுவர முடியவில்லை. வங்காளத்தில் கேரளத்தில் கர்நாடகாவில் என பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணியாகத் தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை. மக்களின் முன்பு கூட்டணிக்கான ஒரு தலைவரையும் கொள்கையையும் முன்வைக்கவில்லை. மோடியின் ஆட்சி மீது அதிருப்தி கொண்டோர் முன் தன்னை ஒரு வலுவான எதிர்க்கட்சியாக முன்னிறுத்திக் கொள்ள தவறிவிட்டனர். எனவே, காணப்படும் சாதகமான நிலைமையில் செயல்பட்டு அதை தமது வெற்றிக்கான மூலதனமாக மாற்றத் தவறிவிட்டது இந்தியா கூட்டணி. அதன் மூலம், மற்றுமொரு ஐந்தாண்டிற்கு மூச்சுத் திணறும் ஆட்சிக்குள் மக்களைத் தள்ளிவிட்டுள்ளனர்.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாசகவிற்கு பெரும்பான்மை இல்லை. மோடி 2.0 காலத்தின் மிருகப் பெரும்பான்மையும் கோவிட் காலமும் சேர்ந்து மோசமான சட்டத்திருத்தங்களை தன் விருப்பம் போல் செய்து முடிக்க முடிந்தது. ஆனால், மோடி 3.0 வைப் பொருத்தவரை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளை எதிர்க்கொண்டாக வேண்டிய நிலை பாசகவுக்கு ஏற்பட்டுள்ளது. இது மிக முக்கியமான முன்னேற்றம்தான். மோடி வெல்லப்பட முடியாதவர் என்று கட்டமைப்பட்ட கதையாடலில் பொத்தல் விழுந்துவிட்டது. இது சனநாயக ஆற்றல்களுக்கு வழங்கியிருக்கக் கூடிய உளவியல் ஊக்கமும் பெறுமதியானதும் இனிவரும் காலத்தில் போராட்டத்தைத் தொடர்வதற்கு பெரிதும் உதவக் கூடியது. அதே நேரத்தில், ஆட்சி அதிகாரம் மோடி – ஷா கும்பலிடம் இருப்பதால் இவையாவும் அளவு மாற்றமே அன்றி பண்பு மாற்றம் இல்லை.
”பாசிச அபாயம் தொடர்கிறது” என்ற அளவில் தேர்தல் கொடுத்திருந்த நல்வாய்ப்பில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போன தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான காரணங்களை சீர்தூக்கிப் பார்த்து வருங்காலத்தை திட்டமிட வேண்டியுள்ளது. மேலும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நீதித்துறை, ஊடகம் உள்ளிட்ட இன்ன பிற துறைகளிலும் மக்கள் மன்றத்திலும் போராட்டக் களங்களிலும் வெளிப்பட வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணியை அசைக்கும் வகையிலும் பாசிச பாசக ஆட்சியைப் பலமிழக்கச் செய்யும் வகையிலும் இடதுசாரி சனநாயக ஆற்றல்கள் நுட்பமான திட்டமிடலுடனும் ஊக்கமுடனும் செயல்பட வேண்டும்.
நன்றி சாளரம்