சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020  ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்! – இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 02-08-2020

02 Aug 2020

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 ஆனது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம்- 2006 ஐ நீர்த்துப்போகச் செய்வதோடு, சூழலியல் பாதுகாப்பு சட்டம் 1986 ஐ கேள்விக்குள்ளாக்கியுள்ளது. முன்னதாக, 1990 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகமய, தாராளிய, தனியார்மய பொருளியல் கொள்கைகள் இங்கே பெயரளவில் நிலவிவந்த சனநாயக சட்டங்களை நீர்த்துப்போகச் செய்தன. அந்தப் பெரும்போக்கில் ஒரு பாய்ச்சலே இத்தகைய திருத்தங்களைக் கொண்ட வரைவுச் சட்டமாகும்.

மத்திய பாசக அரசானது, கொரோனா பேரிடர்கால சூழலைப் பயன்படுத்தி வரைவு மீதான கருத்துக்கேட்பு காலவரம்பைக் குறைத்து அறிவித்தது.  இதை எதிர்த்து சூழலியல் செயற்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மேலும் அறுபது நாளைக்கு காலக்கெடுவை நீட்டித்து  (ஆகஸ்ட் 11 ) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் இவ்வரைவை 22 தேசிய மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது. நாட்டில் சூழலியல் சீர்கேடுகள்  அதிகரித்துக்கொண்டுள்ள நிலையில், சூழலியல் பாதுகாப்பை உறுதிசெய்கிற வகையிலே சட்டங்களைக் கடுமையாக்குவதற்கு பதிலாக சூழலைக் கெடுக்கின்ற வகையிலே,இயற்கை வளத்தைக் கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக சட்டங்களைத் திருத்தத்தான் இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது. ’மூலவள நிர்வாகம்’ என்று கூறி, தனியார்மயத்தின் மூலமாக ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்க கும்பல்களுக்கு நிலவளம், நீர்வளம், பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் கனிமவளங்களை எந்தவிதத் தடையும் இல்லாமல், மிக எளிதாக கொள்ளையடிக்க வகைசெய்யும் நோக்கில்தான் இவ்வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 20 இலட்சம் கோடி ரூபாய்க்கான திட்ட அறிவிப்பின் போது அனைத்தையும் தனியார்மயமாக்கும் நோக்கத்தை வெளிப்படுத்தினார். 50 நிலக்கரி சுரங்கங்கள், 500 கனிம சுரங்கங்கள், 6 விமானப் போக்குவரத்து, மின் விநியோக கட்டமைப்பு, அணுசக்தி துறை, இரயில்வே வழித்தடங்கள் போன்றவற்றை உள்நாட்டு, வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் அறிவிப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் வேகமாக நடைமுறைப்படுத்த தடையாக இருக்கும் சட்டங்களை தளர்த்துவதன் பகுதியாகத்தான் இவ்வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, அதற்குப் பிறகான 2014 மற்றும் 2016 அறிவிப்பாணைகள் கட்டுப்பாடுகளை விதிக்காமல் விதிவிலக்கையே அதிகமாக்கியது. இதனாலேயே 84% திட்டங்களுக்கு அனுமதி கிடைத்தன, பாதுகாக்கப்பட்ட பகுதியிலேயே 400க்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. இவை காங்கிரசு ஆட்சிக் காலத்தில் நடந்தவை. கொரோனாவுக்காக ஊரடங்கு அமலில் இருக்கும்போது பாசக அரசு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய 191 திட்டங்களுக்கு அனுமதியை வழங்கியிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு விளைவிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு இந்த சட்ட வரைவு வழிவகுத்துவிடும்.

தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கையானது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு இனி சூழலியல் தாக்க அனுமதி தேவையில்லை என்கிறது. இந்த திருத்தமானது, திட்டம் குறித்த பொதுமக்களின் கவலைகளை அறவே ஒழித்துக்கட்டுகிறது.பொது மக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்கள் அவசியமில்லை என்கிறது. தேசிய, பாதுகாப்பு அல்லது கேந்திர முக்கியத்திவம் வாய்ந்த திட்டங்கள் என்ற பெயரில் மண்ணுக்கும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய ஆபத்தான திட்டங்களைக் கேள்வி கேட்பாரின்றி காரப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளலாம் என்றாகிவிடுகிறது.  திட்டத்தின் “வெளிப்படைத்தன்மை”  அம்சத்தை  தேசிய முக்கியத்துவத்தால் அரசு மாற்றீடு செய்கிறது.

இனி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டு, விளைநிலங்களைப் பிளந்துகொண்டு சாலை போடலாம். மேற்குத் தொடர்ச்சி மலையின் மரங்களை வெட்டித் தள்ளலாம். ஆறுகளுக்கு குறுக்கே நீர்மின் திட்டத்தை அமைத்து கேள்வி கேட்பாரின்றி காட்டையும் விலங்குகளையும்  மூழ்கடிக்கலாம்.  ஒரு நாட்டில் மூன்றில் ஒரு பங்காவது வனப்பகுதியாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் காற்றில் பறக்கவிடப்படும். காடு அழிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தாக்கங்களால் பெருந்தொற்றுகள் அதிகரிப்பதால் உலகம் நிலைதடுமாறியிருக்கும் இவ்வேளையிலும் இயற்கையின் மீதான சூறையாடலைத் தீவிரப்படுத்தும் வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய வரைவின்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, திட்டத்தால் அப்பகுதியின்  மண், நீர், காற்று, மனிதர்கள், காட்டுயிர்கள் மீது எந்தவித பாதிப்பும் ஏற்படாது என சூழலியல் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.  இதன்மூலமாக விசாகப்பட்டினம் எல்ஜி பாலிமர் தொழிற்சாலைகள் போல சூழலியல் அனுமதியின்றி விபத்தை ஏற்படுத்தலாம்.

புதிய திருத்தத்தின்படி, இனி தொழிற்சாலைகளின் சூழலியல் விதிமீறல்கள் குறித்து மக்கள் புகார் தெரிவிக்க வேண்டியதில்லை. மாறாக தொழிற்சாலை நிறுவனமோ அரசு பிரதிநிதிகளோ நிறுவனத்தின் சூழலியல் விதிமீறல் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் என்கிறது. அதாவது நிலக்கரி கனிமத்தை எடுக்கிற நிறுவனமானது, தாமாக முன்வந்து சுரங்கப் பணியால் இவ்வளவு பாதிப்பு வந்துவிட்டது எனக் கூறுமாம். மக்கள் இனி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பொருட்டு  நீதிமன்றம் செல்ல முடியாது. கிராமப் பஞ்சாயத்து, மலைவாழ் மக்கள் பஞ்சாயத்து போன்ற அமைப்புகளின் ஒப்புதல் இல்லாமலே எந்த நிலத்தை வேண்டுமானாலும் கையகப்படுத்தலாம்.

தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டுவந்த பல்வேறு ஆணையங்களையும் ஒரே மண்டல அலுவலரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பது, மதிப்பீட்டுக் குழுவின் தலைவரையும் உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிப்பது, ஏ மற்றும் பி2 பிரிவின்கீழ் வரும் அனைத்து திட்டங்களையும் மத்திய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டு வந்திருப்பது ஆகிய தேசிய இன மற்றும் மாநில உரிமைப்பறிப்பு அம்சங்கள் இவ்வரைவில் உள்ளன. ஏகாதிபத்திய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க ஏதுவாக மையப்படுத்தப்பட்ட ஒற்றை சாளர முறைக்குள் கொண்டு வருகிறது.

இத்துடன், இப்புதிய வரைவின்படி, சுரங்க குத்தகை காலம் 30 ஆண்டுகளில் இருந்து 50 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளமை போன்ற பெருநிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தங்கள் உள்ளன. வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தல், காற்று, நீர், நிலத்தடி நீர் மாசடைதல் போன்றவற்றின் விளைவாக விவசாயம் முற்றாக ஒழித்துக்கட்டப்படுவதற்கு இந்த வரைவு வழிவகுக்கும்.

மொத்தத்தில், இந்த வரைவானது மக்களுக்கும் இயற்கை வளங்கள் காக்கப்படுவதற்கும் சூழலியல் பாதுகாப்பிற்கும் கியாட்டோ ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுப் பொறுப்புடைமைக்கும் எதிரானது.  இவற்றிற்கெல்லாம் சட்டப்பூர்வ ஒப்புதல் வழங்குகிற வகையிலான இந்த வரைவு கடும்கண்டனத்திற்குரியது.

இந்த சட்டத்தின்மீது விமர்சனப்பூர்வ கருத்தைச் சொல்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். fridaysforfuture.in, letindiabreathe.in, thereisnoearthb.com  போன்ற இணையதளங்கள் இந்தச் சட்டவரைவை அம்பலப்படுத்தியதற்காக முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலோ இந்த வரைவை அம்பலப்படுத்தியொரு காணொளி வெளியிட்ட பெண்ணுக்கு பாசிசக் கும்பல் நேரடியான கொலை மிரட்டல் விடுகின்றது. இந்த சட்டவரைவின் உள்ளடக்கம் பாசிசக் கூறுகளைக் கொண்டிருப்பதோடு இந்த வரைவின் மீதான கருத்தைப் பெறும் கட்டத்திலிருந்தே மோடி – சங் பரிவார் ஏகபோக மூலதன சக்திகளின் பாசிச தாக்குதல் தொடங்கிவிட்டது.

பாசிச தாக்குதலை முறியடிப்போம்! இயற்கை, சுற்றுச்சூழல், தேச வளத்தைப் பாதுகாப்போம்!

 

மத்திய அரசே,

  • கொரோனா பேரிடர்கால நெருக்கடியைப் பயன்படுத்தி கார்ப்பரேட்களுக்கு நாட்டின் வளங்களை தாரை வார்க்காதே!
  • ’வளர்ச்சி’, சுயசார்பு என்ற பெயரில் அமெரிக்கக் மற்றும் பன்னாட்டு நிதிமூலதன சக்திகளின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றாதே!
  • தொழிலாளர்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தேசிய இனங்களின் வளங்களை சூறையாடாதே!
  • தேசவிரோத, மக்கள்விரோத சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020  ஐ உடனடியாக திரும்பப்பெறு!

 

தோழமையுடன்,

 

பாலன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

அரங்க. குணசேகரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

சாமிநாதன், கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு

துரை.சிங்கவேல், பொதுமையர் பரப்புரை மன்றம்

பொழிலன், தமிழக மக்கள் முன்னணி

சித்தானந்தம், சி.பி.ஐ.(எம் – எல்)

தமிழ்நேயன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

குணாளன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)

செல்வமணியன், தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி

டேவிட் செல்லப்பா, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி

மாந்தநேயன், தொழிலாளர் போராட்ட இயக்கம்

தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ), ரெட் ஸ்டார்

மணி, பாட்டாளிவர்க்க சமரன் அணி

மருதுபாண்டியன், சோசலிச மையம்

அருள்மொழி, மக்கள் விடுதலை முன்னணி

தமிழரசன், தமிழ்த்தேச குடியரசு இயக்கம்

பார்த்திபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

தங்க. குமரவேல், தமிழக மக்கள் விடுதலை இயக்கம்

பிரபாகரன், தமிழ்த்தேசப் பாதுகாப்பு இயக்கம்

பாரி, தமிழ்த்தேச இறையாண்மை

தொடர்பு எண்: 70100 84440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW