இராஜேந்திர பிரசாத் முதல் பிரணாப் முகர்ஜி வரை – குடை சாய்ந்த இந்தியக் குடியரசு

07 Jun 2018

கடந்த 2010 ஆம் ஆண்டின் காங்கிரஸ் மாநாட்டில்,ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தீவிரவாத தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்த பிரணாப் முகர்ஜி,இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பு உரை ஆற்ற உள்ளார்!

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்துடன் மேடையை பகிர்ந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொள்ளாத,மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் விமர்சிக்கிற, இந்து பெரும்பான்மைவாத  அடிப்படைவாத அரசியல் கருத்தியலை பிரச்சார நடைமுறையாக கொண்ட ஆர் எஸ் எஸ் எனும் அரை ரகசிய அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தாளியாக,ஜனநாயகக் குடியரசின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர் கலந்துகொண்டு  சிறப்புரை ஆற்ற உள்ளார்!

அரசியல் சாசனத்தை காப்பேன் என உறுதிபூண்டு பதவிப்பிரமாணம்  செய்து கொண்டமுன்னாள் குடியரசுத் தலைவர் அரசியல் சாசனத்தை குழிதோண்டி புதைப்பதை லட்சியமாகக் கொண்ட ஆர் எஸ் எஸ் தலைமையோடு தோளோடு தோள் சேர்ந்து உரையாற்ற உள்ளார்!

இது ஏதோ தற்செயலாகவோ,விநோதமாகவோ நடைபெறுகிற நிகழ்வல்ல!காங்கிரஸ் கட்சியின் வரலாறு நெடுகிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சித்தாந்த ஊடருவல் அல்லது ஆர் எஸ் எஸ் சித்தாந்த சார்புநிலையால் பீடிக்கப்பட்டு வந்துள்ளது தெளிவாகும்.அதுவே தற்போதும் வெளிப்படுகிறது

இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் இராஜேந்திர  பிரசாத்  பொறுப்பில் இருக்கும் போதே  சோம்நாதர் கோயில் புணரமைக்கப்பட்ட விழாவில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். காரர்களோடு குதூகலித்ததோடு மதச்சார்பற்ற இந்தியக் குடியரசின் முதல் அத்தியாயம் எழுதப்பட்டது.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும்,சித்தாந்தவாதியுமான எம் ஜி வைத்தியா இதை சரியாகவே தனது நேர்க்காணலில்(the hindu,7.6.18)கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“1963 ஆம் ஆண்டின் குடியரசு தின விழாவில்,அன்றைய பிரதமர் நேருவின் அழைப்பின் பேரில் 3000 ஆர் எஸ் எஸ் தொண்டர்கள்,சீருடையுடன் அணிவகுப்பு நடத்தினர். 1965 ஆம் ஆண்டின் இந்திய பாகிஸ்தான் போரின் போது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் ஆர் எஸ் எஸ் தலைவர்களின் ஆலோசனைகளை கேட்டுக்கொண்டார்”என்கிறார்

ஆர் எஸ் எஸ் அமைப்பின் மீதான ராகுல் காந்தியின் தீவிர விமர்சனமானது,இஸ்லாமிய கிருத்துவ சிறுபான்மை மதத்தவர்களின் ஆதரவை  வாக்கு வங்கி தேர்தல் அரசியலில் அறுவடை செய்கிற தற்காலிக உத்தியில் ஒன்றாகும்.தனது தேர்தல் பிரச்சாரங்களை இந்துக் கோவில் வழிபாட்டில் இருந்து தொடங்குகிற ராகுல் காந்தி,தன்னை  இந்து மத சார்புடையவனாக  காட்டிக்  கொள்வதிலும் அக்கறையுடன் செயல்படுகிறார்.

இந்திய தேசியமானது பழம் பெருமைவாதிகளுக்கும்,நவீன ஜனநாயக ஆதரவாளர்களுக்குமான இடைவிடாத போட்டியே என்பார் அய்ஜாஸ் அஹமத்.இன்று இந்த போட்டியில் பழமைவாதிகள்,ஜனநாயகக் குடியரசு விரோதிகள் ஜனநாயக நிறுவனங்களை அழித்து துடைத்து முன்னேறுவதில்  வெற்றி பெற்று வருகிறார்கள்.பழமைவாதிகளின் இந்த முன்னேற்றம் வெட்ட வெளிச்சமாக அனைத்து அரங்குகளிலும் வெளிப்பட்டு வருகிறது.நீதி,நிர்வாகம்,ஊடக கருத்துருவாக்கம் என  அனைத்து சிவில் சமூக நிறுவனங்களிலும்  இந்துப் பெரும்பான்மைவாத  தேசியவாதம் ஊடுருவி,செல்வாக்கு பெற்று வருகிறது.

இந்தியாவில்,முதலாளித்துவ குடியரசு என்பது வெறும் அரசியல் வடிவத்தில் மட்டுமே நீடிப்பதால்,நேருவின் மச்சசார்பற்ற குடியரசு மேற்கூடானது,ஆர் எஸ் எஸ் பாஜகவின் ஒரு சிறு காலடி நகர்விற்கு தாக்குப் பிடிக்கமுடியாமல் நொறுங்கி விழுகிறது என்பதை ஒவ்வொரு நொடியிலும் கண்டுவருகிறோம்.

 

  • அருண் நெடுஞ்சழியன்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW