இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்?

14 Nov 2018

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வேகமாக சரிந்து வருவது நாட்டின் தலைப்புச் செய்தியாகி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி

‘உலக அளவில் நிலவி வரும் காரணங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான பல்வேறு நாடுகளின் நாணய மதிப்பு சரிவடைந்துள்ளது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பும்  சரிவடைந்துள்ளது. மற்ற நாடுகளின் நாணயத்தை ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு மோசமில்லை’’ என்கிறார்.

கடந்த 2013 ஆம் ஆண்டில், இந்தியாவின் நாணய மதிப்பு சரிந்தபோதும் (டாலருக்கு நிகாராக), இதுபோன்றுதான் “உலக அளவில் நிலவி வரும் காரணம்” என மன்மோகன்சிங் அரசு விளக்கமளித்தது. பொருளற்ற சொற்ஜாலங்களின் மூலமாக எவ்வளவுதான் நெருக்கடியை பூசி மெழுகினாலும் விளைவுகள் தவிர்க்க இயலாதவை!

ரூபாய் மதிப்புச் சரிவு என்பது தவிர்க்கவே முடியாத முதலாளித்துவ நெருக்கடியின்  புறநிலை வெளிப்பாடுகளில் ஒன்று என்பதே “உலக அளவில் நிலவிவரும் காரணம்” ஆகும்! இந்த எதார்த்த உண்மையை நாம் உணர்ந்து கொள்வதற்கு முதலாளித்துவத்தின் பணப் பொருளாதார வரலாற்றையும், எவ்வாறு அது தற்போதைய நெருக்கடிகளுக்குத் தொடர்புடையதாக உள்ளது என்பதையும் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

I

உழைப்பு சக்தி – சரக்கு – தங்கம்

மனிதனின் “உழைப்பு சக்தி” உற்பத்தி பொருளுக்கு (சரக்கிற்கு) மதிப்பை படைக்கிறது. இந்த மதிப்புகளது பருமன் உழைப்பு நேரத்தால் நிர்ணயக்கப்படுகிறது. எட்டு மணி நேர மனித உழைப்புசக்தி  செலவிடப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட நூறு மீட்டர் துணிக்கு எட்டு மணி நேர உழைப்பு சக்தியால் செய்யப்பட்ட ஒரு சட்டை சமமாகிறது. பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இவ்வாறு சந்தையில் ஆயிரக்கணக்கான சரக்குகள் பரிமாற்றத்திற்கு வரும்பொழுது  அனைத்து  சரக்குகளும் (துணியானாலும், சட்டை யானாலும், செருப்பானாலும்) தங்கம் எனும் பொது சமதையின் மூலமாக தங்களது மதிப்புகளை தெரிவித்துக் கொள்கின்றன முன்பு கால்நடைகள் பயன்படுத்தப்பட்டன). மனித உழைப்பின் நேரடி அவதாரமான  எல்லா சரக்குகளும் தங்களது மதிப்புகளை சர்வப் பொதுவாக தங்கத்தில் வெளியிடுகின்றன. தங்கமானது கருத்தளவில் சரக்குகளின் மதிப்பளவைகள் ஆகிறது. அதாவது 20மீட்டர் துணி =1 டன் இரும்பு = 1 சட்டை =அரை கிராம் தங்கம்.

இவ்வாறு சரக்குகளின் விலைகள்/மதிப்புகள் (மனித உழைப்பு சக்தி) தங்க அளவுகளாக மாற்றப்படுகிறது. தங்கம் என்கிற பண வடிவமானது, எல்லா உழைப்பின் உற்பத்திப் பொருட்களையும் சந்தையில் பண்டமாற்றம் செய்வதற்கு சர்வப் பொது சமதையாக உள்ளது. அதாவது சர்வப் பொது மதிப்பு வடிவமாகிறது. இதன் அர்த்தமானது ஒரு டன் இரும்பு உற்பத்தியில் அடங்கியுள்ள உழைப்பு, ஒரு சட்டையில் அடங்கியுள்ள உழைப்பு  அரை கிராம் தங்கத்தின் மூலமாக விலையாக தெரிவிக்கப்படுகிறது. தொடக்கத்தில் இவ்வாறு தங்கம் எனும் உயர்நிலை உலோகமானது பணமாக செயல்படத் தொடங்கியது. பின்பு அரை கிராம் தங்கமானது (எடையாக), பல்வேறு ஈவுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு டாலர், பவுண்ட் என அரசால் சட்டபூர்வ பெயர் வழங்கப்பட்டது. அதாவது தங்க அளவுகள் நாணயத்தின் பெயர்களில் சட்டப்பூர்வ செல்லுபடி வடிவத்தால் தெரிவிக்கப்பட்டன. அதேநேரம் சரக்குகளின் சுற்றோட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட  நாணயங்களின் தேய்மான பண்பானது, அதன் எடையில் இருந்து விலகி குழப்பத்தை ஏற்படுத்தியது,  ஆகவே எடை அளவுக்கு பதிலாக முழுக்க முழுக்க சின்னமாக பணத்தை சுற்றோட்டத்திற்கு விடுகிற முயற்சி தொடங்கியது. 1694 ஆம் ஆண்டில் இங்கிலாந்து வங்கி (Bank of England) முதல் முதலாக இதைத் தொடங்கிவைத்தது.

 

மார்க்சே பண மதிப்பு கோட்ப்பாட்டை முதல் முதலாக தெட்டத் தெளிவாக விளக்கியவர் ஆவார். மார்க்சின் காலத்திற்கு பின்பு முதலாளித்துவம் ஏகபோகமாக வளர்ச்சியடைந்தது, சந்தைப் போட்டிக்காக உலகை, மறு பங்கீடு செய்துகொள்கிற இரு பெரும் உலகப் போர்கள், அதன் சமூக கொந்தளிப்புகள், அவை  ஏற்படுத்திய புரட்சிகள், முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் சரிவிற்கும்-மீட்சிக்குமான வரலாறாகியது. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய முதலாளித்துவ மீட்சி காலமான 1950-78 மற்றும் 1990-2008 காலக்கட்டம் நீங்கலாக முதலாளித்துவ பொருளாதார அமைப்பு வேகமாக கரைபுரளத் தொடங்கியுள்ளது. அதன் தடை மதிலை எட்டிவிட்டது!

 

II

தங்கம் – டாலர்- சேமவைப்பு

19 ஆம் நூற்றாண்டு வரை, சரக்கு பரிவர்த்தனையின் ஊடகமாக செயல்பட்டு வந்த காகிதப் பணத்திற்கு தங்கமே சேம வைப்பாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் முதல் பாதியில் இதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.1944 ஆம் ஆண்டில் பிரடன் யூட்ஸ் மாநாட்டில் தங்கத்திற்கு நிகராக அமெரிக்க டாலர் சமப்படுத்தப்பட்டது. உலக முதலாளித்துவ சக்திகளின் பதிலி (Proxy) அரசாக எழுச்சி பெற்ற அமெரிக்கா தனது ராணுவப் பொருளாதார பலத்தால் இதை சாதித்தது. சேமவைப்பை பொறுத்தவரை, தங்கம் மட்டும் அல்லாமல் அயல்நாட்டு நாணயம், பத்திரம் ஆகியவை சேம வைப்பாக பயன்படுத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது.

உலகளவில் அமெரிக்கா மட்டுமே அதிக சதவீதத்தில்(76%) தங்கத்தை சேமவைப்பாக வைத்துள்ளது. அடுத்ததாக ஜெர்மனி, பிரான்சு ஆகிய நாடுகள் அதிகமாக தங்கத்தை சேம வைப்பாக வைத்துள்ளன (சுமார் 65%) இந்தியா,சீனா போன்ற நாடுகள்  குறைவான தங்கத்தை சேமவைப்பாக வைத்துள்ளன. காரணம், தனது சேமவைப்பை சந்தைக்கு முதலீடு செய்து, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமாக சேம வைப்பை சமாளிக்கின்றன.

தற்போது தாராளமய சூழலில், மூன்றாம் உலக நாடுகள் மீதான வளர்ந்த நாடுகளின் அந்நிய முதலீடுகள் (அரசுக் கடனோ, தனியார் கடனோ, பத்திரமோ), நாடுகளின் சேமவைப்பை கட்டுப்படுத்துகிறது, அந்நாடுகளின் நாணய மதிப்பை தீர்மானிக்கிறது. உலக வர்த்தகமானது  64 % டாலரில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உலக சந்தையில் அதிக ஏற்றுமதி செய்கிற நாடுகள் அதிகமாக டாலரை ஈட்ட முடியும். இதேபோன்று,அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதன் வழியே அந்நிய நாணயங்களை ஈர்க்க முடியும். இவை இரண்டுமே மூன்றாம் உலக நாடுகளின் சேமவைப்பை பாதுகாப்பதற்குமுன் உள்ள பிரதான வழிகள். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் தொழில்நுட்ப உற்பத்தி திறணின்மையும், தேசிய முதலாளித்துவ சக்திகளின் தரகு தன்மையும் உலக வர்த்தகத்தில் போட்டி போட இயலவில்லை. ஆக, இரண்டாம் வழி சாத்தியமற்றது. முதல் வழியைப் பொறுத்தவரை அதுவும் ஏகாதிபத்தியத்திய மண்டலத்தை சார்ந்தவையாக உள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் நாணய மதிப்பு சரிவிற்கு “உலகில் நிலவி வரும் காரணங்களின் இதுவும் ஒன்று  என ஜெட்லியால் இக்கூற்றை தவறியும் கூற இயலாது!

III

சேம வைப்பு – உலக நாடுகளின் காகித பணமதிபிழப்பு – அமெரிக்க அரசின் கடன்

மூன்றாம் உலக நாடுகளில் ஏகாதிபத்திய மூலதன ஊடருவலும்,மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி பொருளாதாரமும் அதன் சேமவைப்பும் நேர் விகிதத்தில் உள்ளன. இறக்குமதி அதிகரிப்பும், அரசுகளின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பும், சேம வைப்பிற்கு எதிர் விகிதத்தில் உள்ளன. அதாவது ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுக்கட்டவோ, ராணுவ செலவீனங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதாலோ, தண்ட வட்டிக் கடனாலோ, மூலதன வெளியேற்றத்தாலோ நாடுகளின் சேமவைப்பு வேகமாக கரைகிறது. உள்நாட்டு வேண்டலும் தேவையும் ஈடுகட்டாதபோது, பணம் மதிப்பிழக்கிறது.ஒரு கட்டத்தில் வெற்றுத் தாளாகிறது. அண்மையில் வெனிசுலா நாட்டில் இதுதான் நடந்தது.

இந்தியாவில் 1991 ஆம் ஆண்டில் இத்தகைய நெருக்கடிதான் ஏற்பட்டது. ஏற்றுமதியை விட அதிக இறக்குமதி (இந்திய ஏற்றுமதி சந்தையான சோவியத் தகர்வு இந்தியாவின் ஏற்றுமதியை பாதித்தது, ஈராக் குவைத் யுத்தத்தால் ஏற்பட்ட எண்ணெய் விலையேற்றம் இறக்குமதி செலவை அதிகரிக்கவைத்தது) அன்றை கால சூழலின் அரசியல் உறுதியற்ற நிலையால் அந்நிய முதலீடுகளின் வெளியேற்றம் ஆகிய காரணங்கள் இந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டது. அத்தகைய நிலையில், பன்னாட்டு நிதியகத்தின் இருந்து உடனடியாக 2.2 பில்லியன் டாலர் கடன் பெற்று மூழ்குகிற கப்பல் மீட்கப்பட்டது. அதற்காக தனது 67 டன் தங்கத்தை பன்னாட்டு நிதியகத்திடம் அடமானம் வைத்தது இந்திய அரசு. இதற்கு அடுத்து சில நாட்களிலேயே அன்றைய பிரதமரான சந்திர சேகர் அரசு கவிழ்ந்தது. அடுத்து ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் அரசானது (அரசின் செலவீனங்களை குறைப்பது, மானியங்களை வெட்டுவது போன்ற) பன்னாட்டு  நிதியகத்தின் நிபந்தனைகளை  ஏற்றுக் இந்திய சந்தையை தாராளமயக் கொள்கைக்கு திறந்துவிட்டது.

தற்போதைய சிக்கலுக்கு வருவோம்.டாலருக்கு நிகராக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் நாணய சரிவிற்கு எவ்வாறு அமெரிக்க பொருளாதார நெருக்கடி காரணமாக உள்ளது, அதை சரிக்கட்ட அமெரிக்கா மேற்கொள்கிற முயற்சிகள் எவ்வாறு ஏனைய நாடுகளை பாதிக்கிறது என்பதை சற்று நெருங்கிப் பார்ப்போம்.

IV

அமெரிக்க அரசின் கடன்- நிதிப் பற்றாக்குறை – இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரிவு

கடந்த 2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 82.4  விழுக்காடு பொதுக் கடனாக இருந்தது. இது 1970 களில் 70  விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தது. தற்போது 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க பெடரல் அரசின் கடனானது 20 ட்ரில்லியன் டாலர் ஆகும். இது அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 105 விழுக்காடு ஆகும். அமெரிக்க அரசின் கடன் அதிகரிப்பு வீதமானது அதன் வருவாயை விட அதிகரித்து மீளமுடியாத நெருக்கடியில் சிக்கி வருகிறது. மேலும், புதிய கடனும் தர இயலாத நிலை ஏற்படுகிறது.  அரசின் கடன்கள். ஏற்றுமதி இறக்குமதியில் ஏற்படுகிற நிதிப்பற்றாக்குறைகள், ராணுவ தளவாடங்கள் செலவு அதிகரிப்பு ஆகியவை அமெரிக்க அரசின் கடன் சுமைகளை அதிகரிக்க வைக்கின்றன. முரண்பாடான முதலாளித்துவ பணப் பொருளாதார கட்டமைப்பை மாற்ற இயலாத அமெரிக்க பெடரல் வங்கி, சிக்கலை தீர்க்க தற்காலிக வழிகளை முயன்று மேலும் இடியாப்ப சிக்கலுக்குள் சிக்கிக்கொள்கிறது. தனது கடன் சுமையை கட்டுப்படுத்த கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

  • முதல் வழி, அரசின் கடன் நெருக்கடியைக் கட்டுக்குள் கொண்டுவர அது டாலரின் மதிப்பைத் தானாகவே குறைக்க வேண்டும் (Devaluing).
  • இரண்டாவது வழி, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டிவீதத்தை உயர்த்துவது. இதன் மூலம் தனது நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்ய முயலுகிறது. முதலீடுகளை மீண்டும் தனது வங்கிக்குள் ஈர்க்கிறது. இது அமெரிக்க அரசின் மரபான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

அதேநேரத்தில் பெடரல் வங்கிகளின் வட்டி வீத உயர்வானது மூன்றாம் உலக நாடுகளில் சுற்றோட்டத்தில் இருந்த முதலீடுகளையும் ஈர்ப்பதால், அந்நாடுகளில் இருந்து மூலதனமும் வெளியேறுகிறது. இந்த முதலீடுகளால் பூசி மெழுகப்பட்டிருந்த இந்நாநாடுகளின் சேமவைப்பு திடுமென குறைகிறது.

டாலருக்கு நிகரான, இந்தியாவின் ரூபாய், தென் ஆப்பிரிக்காவின் ராண்ட், இந்தோனேசியாவின் ருபியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் நாணய மதிப்பு சரிவதற்கு, அண்மையில் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டிவீத உயர்வு அறிவிப்பும் ஒரு காரணமாகியது.

கடந்த அரை நூற்றாண்டில் ஒரு அமெரிக்கடாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு   15 மடங்கு சரிந்துள்ளது. வளர்ந்த முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளில் இவ்வளவு அதிக பெருக்குவீதத்தில் தங்களது நாணயத்தை மாற்றிக் கொள்ளவில்லை. மூன்றாம் உலக நாடுகளின் நாணயம் எவ்வாறு வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் நாணயத்திற்கு முன்பாக பலவீனமாக உள்ளது என்பதற்கு இதுவொன்றே சான்று.

ஏகாதிபத்திய சகாப்த்தத்தில் நாடுகளுக்கு இடையிலான தடையற்ற மூலதன நுழைவும் வெளியேற்றமும் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் பொருளாதார சுயாதினத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறது. மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளோ, ‘சந்தையே தன்னைத்தானே  சரிசெய்து கொள்ளும்’ என்றும் இந்திய நிதியமைச்சர் போல ‘சில காரணங்களால்  இது நிகழ்கிறது’ எனவும் விஷயம் தட்டி கழிக்கப்படுகிறது. ஏதோ ஒரு கட்டத்தில் உள்நாட்டு நாணய வீழ்ச்சி மீட்ச்சியடையும் என பகல் கனவு காண்கிறது. மக்களின் மேல் அதன் சுமையை தோள் மாற்றுகிறது.

1980 களின் இறுதியில் தாராளமய கொள்கைகளுக்கு கதவை திறந்துவிட்ட இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள், ஏகாதிபத்திய மூலதன முதலீடுகளின் குவிமையமாகின. இதனால் அதிவேக வளர்ச்சியில் செல்கிற நாடுகள் என துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி கருதப்பட்டது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டோம், அதி வேக வளர்ச்சியில் நாடு செல்கிறது, ஏகாதிபத்திய நாடுகளிடம் இணக்க சூழல் ஆகியவற்றால் மூன்றால் உலக அரசுகள் பெருமிதம் கொண்டன. இப்போக்கு தோற்ற மயக்கத்தை வழங்கியது. ஆனால் ஆட்ட விதிகள் மாறின. தற்போது 2008 க்கு பின்னான உலக பொருளாதார நெருக்கடி நிலையில், ஏகாதிபத்திய நாடுகளின் மூலதன ஊடுருவல் வந்த வேகத்தில் திரும்பச்செல்கிறது. தேக்கமடைந்துள்ளது. வளர்ச்சி வீதம் சரிந்தது. வேலை வாய்ப்புகள் குறைந்தன..மறுபக்கம் அரசின் வருவாய்க்கும் செலவுக்குமான பிளவு அதிகரித்து, அரசுகள் நிதிப்பற்றாக்குறையில் சிக்கிக் கொள்கின்றன. அதேநேரம், அமெரிக்க அரசு நிதிப் பற்றாக்குறையில் சிக்கிக் கொண்டால் அதன் நாணயம் மதிப்பை இழப்பதில்லை. மாறாக, மூன்றாம் உலக நாடுகள் சிக்கிக் கொண்டால், அதன் நாணயமானது, மதிப்பை இழக்கின்றன. அண்மையில், துருக்கியின் நிதிச்சுமை அதிகரிப்பும் அந்நாட்டு நாணயமான லிரா மதிப்பிழந்ததும் இதற்கொரு சிறந்த உதாரணம்

 

v

இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரிவு – உழைக்கும் மக்களின் சுமை

.நாட்டின் நாணய மதிப்பின் சரிவு இறக்குமதி பொருளில் விலையை பலமடங்கு உயர்ந்துகின்றன. உதாரணாமாக நாணய மதிப்பு 5 விழுக்காடு சரிந்தால், அயல்நாட்டில் இருந்து  இறக்குமதி செய்யப்படுகிற கச்சா எண்ணைக்கு 5 விழுக்காடு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் 5 விழுக்காட்டிற்கு விலையை உயந்துகின்றன. மாறாக மக்களின் கூலியோ ஒரு ரூபாய்  கூட உயர்வதில்லை. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது, போக்குவரத்து செலவும் அதிகரிப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் ஏறிவருகிறது. இந்த மொத்த நெருக்கடியின் விளைவானது இறுதியில் மக்களின் தோள்மேல் மாற்றப்படுவதால், உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமை மென் மேலும் மோசமாகிறது. விலைவாசி உயர்விற்கு ஏற்ப கூலி உயராததாலும், மூன்றாம் உலக அரசுகளின் அரசியல் பொருளாதார  சுயாதீனமற்ற  பண்பாலும், ஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப் பிடியில் மக்கள் வாழ்வு சின்னா பின்னமாக்கப்படுகின்றது.

VI

உழைக்கும் மக்களும் முதலாளித்துவ பணப் பொருளாதார நெருக்கடியும்

தற்போதைய நாணய மதிப்பு சரிவு, வங்கிக் கடன் அதிகரிப்பு, வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி ஆகியவை தற்செயலான சிக்கல்கள் அல்ல. சந்தை தன்னைத் தாமே மறு ஒழுங்கு செய்துகொள்ளும் என்ற முதலாளித்துவ அறிவுஜீவிகளின் கூச்சலை போல சிலகாலம் கழித்து நிலைமை சரியாகப் போவதில்லை. முதலாளித்துவ பொருளாதார அமைப்பு அதன் சொந்த முரண்பாடுகளால் சீட்டுக் கட்டுப் போல சரிவதைத்தான் இந்த சிக்கல்கள் வெளிப்படுத்துக்கின்றன. தற்போதைய முதலாளித்துவ பணப் பொருளாதார நெருக்கடியானது வங்கி நெருக்கடி, மற்றும் அரசுக் கடன் நெருக்கடிகளாக வெளிப்படுகின்றன. முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை பொறுத்தவரை சந்தையின்  உடனடி உபரி லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட குறுகிய கால முதலீடுகளையும் , ஊக வணிக முதலீடுகளை மேற்கொள்வதால் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது

உதாரணமாக  குறைவான வட்டி வீதத்தில் நுகர்வுப் பொருட்களுக்கான வங்கிக் கடன் முதலீடுகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்  வங்கிகளை மென் மேலும் பலவீனப் படுத்தி வருகின்றன. மறுபுறம் ராணுவ செலவீடுகளுக்கான அரசின் நிதிச் செலவுகள், வட்டி, ஏற்றுமதி சரிவுகள், நாணய மதிப்பு சரிவுகள் அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கவைக்கின்றன.

இவ்வாறு அரசின் கடன் நெருக்கடியும்  தனியார் கடன் நெருக்கடியும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிச் செல்கிறது. முன்பு வங்கிகள் நெருக்கடிகளுக்கு உள்ளாகின. அரசோ, மக்களின் வரிப்பணத்தை வங்கிகளுக்கு மறுமூலதனமாக வழங்கி வங்கிகளை மீட்டன. கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகளில் இதைப் பார்த்தோம். தற்போது இந்நெருக்கடிகள் அரசின் கடன் நெருக்கடியாக வெடிக்கத் தொடங்குகிறது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது, கார்ப்பரேட் வாரக் கடன் சுமையானது  இந்திய வங்கிகளை பலவீனப்படுத்தியுள்ளன. போலவே அரசின் நிதிப்பற்றாக்குறையும் 18 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த  ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக இந்தளவில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதை சரிக்கட்டத்தான் ரிசர்வ் வங்கியின் தொகுப்பு நிதியில் இருந்து சுமார் 1.5 லட்சம் கோடியை  மோடி அரசு கேட்கிறது என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.மறுமுனையில் நாணய மதிப்பு சரிவு, முதலீடுகளின் வெளியேற்றம் மற்றும் இறக்குமதி அதிகரிப்பால்  425 பில்லியன் டாலராக இருந்த சேமவைப்புத் தொகை 405 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டின் சூழ்நிலைகள் மீண்டும் உருவாகியுள்ளதை இது வெளிப்படுத்துகிறது.

இறக்குமதி குறைப்பு மற்றும் மூலதன ஈர்ப்பு நடவடிக்கையால் மட்டுமே இந்நெருக்கடியில் இருந்து இந்தியா தற்காலிகமாக மீள வாய்ப்புள்ளது, அதேநேரம் அமெரிக்காவின் தற்காப்புவாதம், மற்றும் வலது தேசியவாதத்தின் எழுச்சி, சந்தைக் குறைவு ஆகியவை தாராளமயத்தின் உறுதித் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதால், கடந்த காலம் போல, ஏகாதிபத்திய மூலதன முதலீடுகள் மேற்கொண்டு உபரி லாபத்தை பெருக்கிகொள்கிற பொற்காலம் காலவதியாகிவிட்டது.

இந்தியாவின் மோடி அரசோ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து வெற்றுக் கவர்ச்சிவாத அறிவிப்புகளை மேற்கொண்டும், நகரங்களின் பெயர்ப் பலகைகளை மாற்றிக் கொண்டும், வல்லபபாய் பட்டேல் சிலை, அயோத்தி கோயில், ராமர் சிலை, சிவாஜி சிலை என அடுக்கடுக்காக, இந்துத்துவ வகுப்புவாதச் செயற்திட்டங்களை, சட்டப்பூர்வ வன்முறையின் மூலமாகத்  திணித்து, மக்களின் வர்க்க உணர்வுகளை மடைமாற்ற முயல்கிறது.  மறுமுனையில் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, அதிகரிக்கிற விலைவாசி, மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகின்றன. ஏகாதிபத்தியத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடு வேகமாக கொதிநிலையை எட்டிவருகிறது!

1930 களில் இது போன்று மேற்குலகில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளை மடைமாற்றியே பாசிச சக்திகளும், நாசிச சக்திகளும் ஆட்சிக்கு வந்தன.  தற்போது அதுபோன்றோதொரு நிலைமை மீண்டும் வருவதற்கான அறிகுறியாக உலகெங்கிலும் வலது தேசியவாத சக்திகளின் கரங்கள்  வலுப்பெறுகிறது. போலவே ,வேகமாக மாறிவருகிற புரட்சிகர புறவய நிலைமைகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சமூகப் புரட்சிக்கும் வாசலை திறக்கிறது.

–    அருண் நெடுஞ்சழியன்

விரிவான கட்டுரை காண்க: https://wp.me/pa5Qnr-o5

ஆதாரம்:

மூலதனம்-கார்ல் மார்க்ஸ்

https://peoplesdemocracy.in/2017/1015_pd/structural-changes-within-imperialism

https://peoplesdemocracy.in/2018/0923_pd/indian-economy-tailspin

https://www.marxists.org/archive/mandel/1982/xx/moncrisis.html

https://isreview.org/issue/73/explaining-crisis

http://www.globaltimes.cn/content/1125392.shtml

https://www.fxempire.com/education/article/countrys-gold-reserve-affect-economy-396969

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW